சிவ தொண்டு சிறிய அளவில் நாம் தெரியாமல் செய்தாலும் அதனால் கிடைக்கும் புண்ணியம்
அநியாய வட்டிக்கு பணத்தை கொடுத்தும் பொருட்களை அடகு பிடித்தும் வாழ்ந்து வந்தான். அவனிடம் ஈவு இறக்கம் என்பதையே எதிர்பார்க்க முடியாது.
சரியான நேரத்தில் கடனை திருப்பி கொடுக்காதவர்களை அவமானப்படுத்துவது, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்வது என்பது போன்ற அவனது நடவடிக்கைகளால் பாதிப்பட்டவர்கள் அந்த ஊரில் ஏராளம். இதன் காரணமாக பலரின் சாபத்துக்கும் அவன் ஆளானான்.
கோவிலுக்கு அவன் அடிக்கடி சென்று வந்தாலும் அங்கு அவனுக்கும் அவன் செல்வத்திற்கும் கிடைக்கும் மரியாதைக்காகவே அவன் சென்று வந்தானேயன்றி பக்தியின் காரணமாக அல்ல.
இந்நிலையில் அவனுக்கு திருமணமாகி அவன் மனைவி கருவுற்றிருந்த நேரம்.
பிரசவம் எப்போது வேண்டுமானாலும் நிகழும் என்கிற நிலை. அவன் மலையென குவித்த பாபத்தின் காரணமாகவும் ஏழைகளை வயிறு எரியச் செய்ததின் காரணமாகவும் அவனது குலம் தழைக்காது போய் அவனது மனைவிக்கு குழந்தை கருவில் தங்காது கலைந்து போகவேண்டும் என்கிற விதி இருந்தது.
இந்நிலையில் ஒரு நாள் தனது வட்டிக்கடையில் அமர்ந்து வழக்கம் போல கணக்குபார்த்துக்
கொண்டிருந்தபோது அவன் மனைவிக்கு பிரசவ வலி வந்துவிட்டதாக தகவல் வந்தது. உடனே அவனது வீடு நோக்கி விரைந்தான்.
விதிப்படி கருவில் இருக்கும் குழந்தையின் உயிரை கவர எமகிங்கரர்கள் அவன் இல்லம் விரைந்தார்கள்.
இவன் வீட்டுக்கு செல்லும் வழியில், சிவாலயம் ஒன்று இருந்தது. அந்த ஆலயம் குடமுழுக்கிற்காக தயாராகி கொண்டிருந்தது.
எனவே ஊர்மக்களில் சிலர் ஆளாளுக்கு ஒவ்வொரு பணியை செய்துகொண்டிருந்தனர். ஒரு சிலர் கோவிலை பெருக்கி சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.
ஒரு சிலர் தோரணம் கட்டிகொண்டிருந்தனர். ஒரு சிலர் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
கோவிலுக்கு பின்னே இருக்கும் ஒரு சிறிய குறுகலான பாதையில் சென்றால் வீட்டுக்கு சீக்கிரம் சென்றுவிடலாம் என்பதால் இவன் வேகமாக அந்த குறுகலான பாதையில் சென்றுகொண்டிருந்தான்.
அப்போது ஏணியில் நின்றபடி கோவில் மதில் சுவற்றை ஒருவர் வெள்ளையடித்துக் கொண்டிருந்தார். அவரது சுண்ணாம்பு மட்டை கீழே விழுந்துவிட, அந்தப் பக்கம் சென்ற இவனை அழைத்து, “ஐயா தர்மப் பிரபு, கொஞ்சம் அந்த மட்டையை எடுத்து கொடுங்களேன்…. கீழே விழுந்துவிட்டது” என்று கூற, ‘தர்மபிரபு’ என்கிற வார்த்தையால் மனம்குளிர்ந்த இவன் குனிந்து அந்த மட்டையை எடுத்து ஏணியில் சில படிகள் ஏறி அவரிடம் கொடுத்துவிட்டு திரும்பவும் தன் வழி நோக்கி நடக்கலானான்.
இந்நிலையில் குழந்தையின் உயிரை கவர இவனது வீட்டிற்கு வெளியே காத்திருந்த எமகிங்கரர்கள் தயாரான தருணம், திடீரென சிவலோகத்திலிருந்து பூதகணங்கள் இருவர் அங்கு தோன்றி எமகிங்கரர்களை தடுத்தனர்.
“குடமுழுக்கிற்காக தயாராகும் சிவாலயத்திற்கு வண்ணம் தீட்டிக்கொண்டிருந்த ஒரு அடியவருக்கு இவர் மிகச் சிறிய உதவி ஒன்றை செய்துள்ளார்.
அதன் மூலம் அந்த சிவபுண்ணியத்தில் லட்சத்தில் ஒரு பங்கு இவருக்கு சேர்ந்துவிட்டது. இவரது குழந்தையின் உயிரை கவரக்கூடாது என்பது ஈசனின் ஆணை.
மேலும் அருகிலிருந்து சுகப் பிரசவத்திற்கு ஆவன செய்யும்படி எம்பெருமான் கட்டளையிட்டுள்ளார். எனவே நீங்கள் போகலாம்” என்று கூறி எமகிங்கரர்களை தடுத்து விடுகின்றனர்.
எமகிங்கரர்களும் ஈசனின் கட்டளை என்பதால் திரும்ப சென்றுவிடுகின்றனர்.
தன் குழந்தைக்கு நிகழவிருந்த ஆபத்து சிவனடியார்களுக்கு சிறிய உதவியின் மூலம் தவிர்க்கப்பட்டதை விரைவில் தனது ஜோதிடர் மூலம் தெரிந்துகொள்ளும் அந்த கருமி அதன் பிறகு மனம் மாறி தனது செல்வங்களை நற்காரியங்களுக்கு செலவு செய்து வரலானான்.
அவனுக்கு பிறந்த குழந்தையும் பக்தியும் ஆன்மீகமும் கொண்டு வளர்ந்து அவன் குலம் தழைக்க உதவியது.
தெரியாமல் செய்த சிவ தொண்டிற்க்கே தக்க சமயத்தில் உயிர்காக்கும் புண்ணியம் எனில் நாம் மனமுருகி சிவ தொண்டு செய்து நம் சந்ததிற்க்கு புண்ணியத்தை சேர்ப்போம்
சிவாய நம.

No comments:
Post a Comment