Thursday, 8 January 2026

சிந்திக்க சில சிறுகதைகள்!

 


சிந்திக்க சில சிறுகதைகள்!

1. மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து ,''மழை வருமா?'' எனக் கேட்டான். ''வராது''என்றான் அமைச்சன். வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் மழை வரும் என எச்சரித்தான். 'அதைப் பொருட்படுத்த்தாமல் போன மன்னன் வேட்டை ஆடிக் கொண்டிருந்த போது கடும் மழை வந்து நன்றாய் நனைந்து போனான்.
திரும்பும் வழியில் குடியானவனைச் சந்தித்து, ''மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?'' எனக் கேட்டான். அவனோ, 'மன்னா! எனக்குத் தெரியாது. ஆனால் என் கழுதைக்குத் தெரியும். மழை வரும் முன் அது தன் காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்!' என்றான். உடனே மன்னன் அமைச்சரை பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினான்.
இக்கதையை ஆபிரகாம் லிங்கன் கூறி விட்டு சொன்னார், 'அதில் தான் மன்னன் ஒரு தவறு செய்து விட்டான். என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன.'
2. ஒரு பிச்சைக்காரன், ''சோறு போடவில்லை என்றால் அடுத்த கிராமத்தில் செய்த மாதிரி செய்து விடுவேன்", என்று ஒரு ஊரில் உள்ளவர்களை மிரட்டி பிச்சை வாங்கி வந்தான். அவன் என்ன செய்து விடுவானோ என்று அஞ்சி அனைவரும் அவனுக்கு அன்னமிட்டு வந்தனர். ஒரு தைரியமுள்ள பெண்மணி மட்டும் ஒரு நாள் துணிந்து கேட்டாள். 'அடுத்த கிராமத்தில் அப்படி என்ன தான் செய்தாய்? பிச்சைக்காரன் சொன்னானாம். ''துண்டை உதறித் தோளில்போட்டுக் கொண்டு வேறு ஊர் தேடிப் போய் விடுவேன்.'
3. ரஞ்சித் சிங் என்ற அரசன் பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த ஒரு கல் அவன் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது. வீரர்கள் உடனே நாலாபுறமும் சென்று ஒரு கிழவியைப் பிடித்து வந்தார்கள். கிழவி சொன்னாள், ''அரசே என் மகன் சாப்பிட்டு மூன்று நாள் ஆகிறது. அவனுக்காக பழம் பறிக்க கல்லை விட்டு எறிந்தேன். அது தவறி உங்கள் மேல் பட்டு விட்டது. இதைக் கேட்ட அரசர் மந்திரியிடம் உடனே கிழவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னார். எல்லோருக்கும் ஆச்சரியம். காரணம் கேட்க அவர் சொன்னார். 'உணர்ச்சியே இல்லாத மரம் தன் மீது கல்லை விட்டு எறிந்ததற்கு புசிக்க பழங்களைத் தருகிறது. ஆறறிவு படைத்த - அதுவும் மன்னனாக இருக்கும் நான் தண்டனையா கொடுப்பது?'
4.ஒரு சமயம் ஸ்பெயினில் இருந்து இளைஞர் ஒருவர் தூதுவராக பக்கத்து நாட்டுக்கு அனுப்பப்பட்டார். அவரைக் கண்ட அந்நாட்டு அரசர், 'ஸ்பெயினில் பெரிய மனிதர்கள் இல்லை போலும்! அதனால்தான் தாடி கூட முளைக்காத ஒரு சிறுவனை அனுப்பியுள்ளார்கள்' என்று சொன்னார் கிண்டலுடன். அதற்கு அந்த இளைஞர், 'அரசே, அறிவு என்பது தாடியில் இருப்பது என்பது எங்கள் மன்னருக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் எனக்குப் பதிலாக ஒரு வெள்ளாட்டையே அனுப்பியிருப்பார்!' என்று பதிலடி கொடுத்தார்.
5. கொடைவள்ளல் ஹாத்தீம் தாயிடம் கேட்கப்பட்டது, 'தங்களைக் காட்டிலும் உயர்ந்த மனிதரை தாங்கள் பார்த்தது உண்டா?''
ஹாத்தீம் தாய் சொன்னார், 'உண்டு. ஒரு நாள் நாற்பது ஒட்டகங்களை அடித்து விருந்து வைத்தேன். அன்று பாலைவனத்தில் ஒருவன் விறகுச் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து
அவனிடம் விருந்துக்கு வராத காரணம் கேட்டேன். அவன் சொன்னான், 'எவன் தன் சொந்தக் கைகளினால் உழைத்து உண்கிறானோ, அவன் பிறர் தரும் விருந்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கமாட்டான்! 'அந்த ஏழை தான் என்னைக் காட்டிலும் உயர்ந்தவன்.'
6. ஒரு சாமியாரின் செருப்பு அறுந்து விட்டது. செருப்பு தைப்பவனிடம் சென்று அதை உடனே தைத்து கொடுக்கச் சொன்னார் சாமியார்.
'இப்போது இருட்டி விட்டது. நாளை காலை வந்தால் தைத்துத் தருகிறேன்!' என்றான் அவன்.
'இப்போதே தைத்துக் கொடுக்க வேண்டும். இல்லாவிடில் உன் வாய் அடைத்துப் போகும்படி சாபம் கொடுப்பேன்!' என்று பயமுறுத்தினார் சாமியார். 'உமக்கு அவ்வளவு சக்தி இருந்தால் அறுந்து போன செருப்பை சாபம் போட்டு ஒட்டி வைத்துக் கொள்வது தானே?'' என்று சொல்லி விட்டு அமைதியாக எழுந்து போனான் செருப்பு தைப்பவன்.
7. ஒருவன் மது குடித்துக் கொண்டிருந்தான். அந்த வழியாகப் போன நண்பன் அவனிடம் வந்து, 'என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய்? இது மெல்லக் கொல்லும் நஞ்சு,' என்றான். 'பரவாயில்லை! எனக்கொன்றும் அவ்வளவு அவசரமில்லை' என்று பதில் சொன்னான் குடிகாரன்.
8. வியாபாரத்தில் இழப்பு அடைந்த வியாபாரி ஒருவர் தன் மகனை அழைத்து அது பற்றி யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று சொன்னார். மகன் காரணம் கேட்டான். வியாபாரி சொன்னார், 'இரு துன்பங்களை ஒரே நேரத்தில் அனுபவிக்க நான் விரும்பவில்லை. பொருள் இழப்பு ஒன்று; இரண்டாவது, நமது துன்பத்தைக் கேட்டு உறவினர் அடையும் மகிழ்ச்சி!'
9. ஒரு தகப்பனும் மகனும் குற்றவாளியாக மன்னன் முன் நிறுத்தப்பட்டனர். இருவருக்கும் நூறு கசை அடி கொடுக்க மன்னன் உத்தரவிட்டான். முதலில் தகப்பனுக்கு நூறு கசை அடி கொடுக்கப்பட்டது. அவனோ நூறு கசை அடி வாங்கியும் சிறிது கூட கலங்கவில்லை. அடுத்தது மகன் முறை. முதல் அடி மகனுக்கு விழுந்ததுமே தகப்பன் அழத் துவங்கி விட்டார். ஆச்சரியத்துடன் காரணத்தை மன்னன் கேட்டபோது தகப்பன் சொன்னான், ''மன்னா, என் உடம்பில் அடி விழுந்த போது என்னால் அதைத் தாங்க முடிந்தது. ஆனால் இப்போது அடி விழுவது என் நெஞ்சில்!'

No comments:

Post a Comment

சனி தோஷம் நீக்கி நற்பலன் அருளும் அவிநாசி "நல்ல சனீஸ்வரன்" - ஒரு ஆன்மீக தரிசனம்!

  ·  சனி தோஷம் நீக்கி நற்பலன் அருளும் அவிநாசி "நல்ல சனீஸ்வரன்" - ஒரு ஆன்மீக தரிசனம்! ஓம் நமச்சிவாய! கொங்கு நாட்டுத் தேவாரத் தலங்க...