"உன் அம்மாகிட்ட போய்ச் சொல்லு. குழந்தைக்கு எல்லாம் சரியாயிடும்"* - பெரியவா
அண்டி வரும் அடியவர்களின் துயர் தீர்க்கவே அவதாரம் செய்த நம் காஞ்சி மஹான் பக்தர்கள் படும் கஷ்டங்களை நீக்கி அவர்களுக்கு நல்வாழ்வளித்து என்றும் அருள் செய்வார். அப்படி அம்மஹானின் அருள் பெற்றவர்களில் குறிப்பிட வேண்டியவர்கள் சென்னையில் வசிக்கும் திரு.சுந்தரேசன், அவர் துணைவியார் பத்மாவதி அம்மாள் ஆகியோர். இந்த உத்தம தம்பதிகளின் உன்னத பக்திக்கு பெரியவாள் செய்த அருள் இதோ. இது நடந்து சுமார் 70 வருடங்கள் ஆகிவிட்டாலும் அதை இப்போது நினைத்தாலும் பத்மாவதி அம்மாள் கண்ணீர் வடிப்பதே பெரியவாளின் எல்லையில்லா அன்பிற்கு சாட்சி.
பத்மாவதி அம்மாள் கருவுற்றிருந்தார். மாதமான சமயத்தில் ஒருநாள் வீட்டில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துவிட வயிற்றில் அடிபட்டு விட்டது. வயிற்றில் அடிபட்டதால் குழந்தைக்கு என்ன ஆகுமோ என அனைவரும் மிகவும் கலக்கமுற்றனர். அந்தக் கவலைக்கு ஏற்ப அன்னையின் வயிறு முழுவதும் கருப்பு நிறமாகி கருரத்தம் கட்டியது போல் ஆகிவிட்டது. வருந்தியவர்களின் கவலை பெரியதாகும்படி ஆண் குழந்தையும் பிறந்து, பிறந்த குழந்தைக்கு தலையில் அழுகியதுபோல் கொழ கொழ என்று சீழ் வழிந்து கொண்டிருந்தது. தந்தை சுந்தரேசன் Railway-யில் பணி புரிந்ததால் உடனே Railway ஆஸ்பத்திரியில் காட்ட அவர்கள் வியாதியின் தீவிரம் பற்றி சொல்லி உடனே பொது மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். அங்கு அவர்களும் பார்த்து விட்டு உடனே குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்ப அவர்கள் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து 15 நாட்கள் தாயைக் கூட பார்க்க அனுமதிக்காமல் தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆறுமாதம் வரை ஆஸ்பத்திரியில் இருந்து வைத்தியம் செய்து குழந்தைக்கு தலையில் பெரியதாய் கட்டுப் போட்டு வீட்டிற்கு கொண்டு வந்தனர். எனினும் நிலைமை கவலை அளிப்பதாகவே இருந்தது. அந்தச் சமயத்தில் குழந்தையைப் பார்க்க வந்த பத்மாவதியின் சகோதரி குழந்தையை உடனே காஞ்சிபுரம் எடுத்துச் சென்று கருணாமூர்த்தியான பெரியவா பாதத்தில் ஒப்படைத்து வேண்டிக் கொள்ளும்படி வற்புறுத்தினார்.
பெற்றோரும் உடனே டாக்ஸி வைத்துக் கொண்டு காஞ்சீபுரத்திலுள்ள ஸ்ரீமடம் செல்ல அங்கும் காத்திருந்தது சோதனை. மடத்தின் கதவு மூடியிருந்தது, காரணம், மடத்தின் அருகில் யாரோ காலமாகியிருந்ததால் அந்த உடலை அப்புறப்படுத்தும் வரை ஸ்ரீமடத்தைத் திறக்க முடியாது என்று தெரிவிக்க ஒரு வழியாய் மாலை வரை குழந்தையுடன் காத்திருந்தனர். மாலை ஸ்ரீமடத்தின் கதவு திறக்கப்பட்டதும் பெற்றோர் விரைந்து சென்று நடமாடும் தெய்வத்தைக் கண்டு குழந்தையை பாதத்தில் கிடத்தி நடந்த விவரத்தைச் சொல்லி கதறினர். கருணை மலையான பெரியவாளும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றி அபயம் தந்து அருளினார்.
தெய்வத்தின் கடைவிழிபட்ட நிம்மதியில் வீடு திரும்பினார்கள் சுந்தரேசன் தம்பதியர். பிறகு சில நாட்கள் கடந்தபின் ஒருநாள் குழந்தையின் அண்ணன் சீனிவாசன் காஞ்சி சென்று பெரியவாளை தரிசித்தார். குளத்தில் ஸ்நானம் செய்து கொண்டிருந்த பெரியவா சீனிவாசனைக் கூப்பிட்டு தன் தலையைத் தடவிக் கொண்டே "உன் அம்மாகிட்ட போய்ச் சொல்லு. குழந்தைக்கு எல்லாம் சரியாயிடும்" என்று சொல்லி ஆசீர்வதித்தார்.
சீனிவாசன் மகிழ்ச்சியுடன் வீடு வந்து தாயாரிடம் சொல்ல, நடந்தது அதிசயம். குழந்தையின் தலை கெட்டியாகி சீழ்வடிவது நின்று படிப்படியாய் நிலைமை சரியாகி குழந்தை தாய்க்கு பிள்ளையாய் ஆனது. மகிழ்ச்சிக் கடலில் மிதந்த பெற்றோரின் நிலையை விவரிக்கவும் வேண்டுமோ!
இப்படி காலகாலனான பரமேஸ்வரனின் அவதாரமான பெரியவா அருளால் மறுவாழ்வு பெற்ற நாகராஜன் இன்று காஞ்சியில் உள்ள பெரிய வேத பண்டிதரின் பெண்ணை மணந்து, உத்தியோகம் பார்த்துக் கொண்டு ஆண், பெண் என்று இரு பிள்ளைகளுக்கு தந்தையாக வியாசர்பாடியில் அமோகமாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இதுதான் கண்கண்ட தெய்வமான நம் காஞ்சி மஹானின் அருள் விளையாட்டு. இதுபோல் பல ஆயிரம் திருவிளையாடல் செய்தவர், செய்பவர் நம் பெரியவா.

No comments:
Post a Comment