Saturday, 3 January 2026

பஞ்ச சபைகள் (03): வெள்ளி சபை


 பஞ்ச சபைகள் (03): வெள்ளி சபை

-----------------------------------------------------------------
மதுரை
பூலோக கயிலாயம் என அழைக்கப்படுவது மதுரை ஆலவாய் நாதன் ஆலயம். ஆலம் உண்ட சிவனின் பெயர் தாங்கி ஆலவாய் நாதன் ஆலயம் என அன்றே உருவானது.
காசி போல அதுவும் காலத்தால் பழமையான சிவாலயம். அது எப்படிபட்ட சிறப்புமிக்க ஆலயம் என்பதை கந்த புராணம் கூறுகின்றது. கந்த புராணம் என்பது முருகபெருமான் அவதரித்தார் சூரனை கொன்றார் என்பதோடு முடிந்துவிடுவது அல்ல, புராணங்களிலே மகா பெரியது அதுதான். குமார சங்கீதை, சூத சங்கீதை, பிரம்ம சங்கீதை, விஷ்ணு சங்கீதை, சங்கர சங்கீதை, சூரிய சங்கீதை என பல பிரிவுகளை கொண்டது.
சங்கர சங்கீதை என்பது சிவபெருமான் தேவிமுன் சொன்ன போதனையாகும். அதனை தாயின் மடியில் இருந்த முருகபெருமான் கேட்டு அதை அகத்தியருக்கு மொழிந்தார். அதனால் அது அகத்திய சங்கிதை என்றுமாயிற்று. இந்த அகத்திய சங்கிதைதான் ஆலவாய் நாதன் ஆலயத்தின் சிறப்பை அழகாக எடுத்துரைகின்றது. ஏகப்பட்ட நூல்கள் அதை சொன்னாலும் அகத்திய சங்கிதை சொல்லும் நுணுக்கம் ஆழமானது.
அது சொல்கின்றது, பாண்டிய நாட்டின் முகம் என சொல்லபடும் இடம் மதுரை, அந்த மதுரையில் அன்னையின் யோக பீடமாக, உமாதேவியின் பீடமாக அமைத்திருப்பது இந்த ஆலயம். மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூவகையிலும் மகா உயர்ந்த ஆலயம் இது. திருவாலவாய்க்கு ஒப்பான ஒரு தலமும், பொற்றாமரை தாடாகத்துக்கு நிகரான ஒரு தீர்த்தமும், சோம சுந்தர பெருமான் எனும் சிவலிங்கம் போல் ஒரு மூர்த்தியும் முவுலகில் இல்லை
கையாயம், கேதாரம், ஸ்ரீசைலம், கோகர்ணம், திருகாளத்தி, திருவாலங்காடு, காஞ்சி, திருவண்ணாமலை, விருத்தாச்சலம், சிதம்பரம், திருவெண்காடு, திருவாரூர், வேதாரண்யம், மதுரை, ராமேஸ்வரம், திருநெல்வேலி என மகா முக்கியமான சிவாலயங்கள் மொத்தம் பதினாறு.
இதில் காசி, சிதம்பரம், திருகாளத்தி, மதுரை என நான்கு மகாசிறந்த தலம்ம் இந்த நான்கில் முதன்மையானது மதுரை ஆலவாய் நாதன் ஆலயம். காசியில் இறந்தால் முக்தி, சிதம்பரம் தரிசித்தால் முக்தி, திருக்காளத்தியில் பணிந்தால் முக்தி, மதுரை எனும் பெயரை கேட்டாலே முக்தி. சிவபெருமான் முதன் முதலில் படைத்து குடியேறிய தலம் என மதுரை ஆலவாய் நாதன் ஆலயமே அறியப்படுகின்றது.
அஷ்வமேவ யாகம் முதல் எல்லா யாகங்களையும் செய்த பலனும், எல்லா கொடைகள் செய்த பலனும், புண்ணிய நதிகள் அனைத்திலும் நீராடிய பலனும் இங்கு தரிசித்தால் கிடைக்கும்.
என்ன பாதகம் செய்திருந்தாலும் அது இங்கே தீரும் எனும் அளவு பரிகார தலம், மற்ற 15 தலங்களில் ஒருமாதம் இருந்த விரத பலனை இங்கு ஒரே நாளில் அடையலாம்.
இங்கு கடைபிடிக்கப்படும் ஒரு அஷ்டமி விரதம் மற்ற ஆலயங்களில் ஆறுமாதம் செய்யப்படும் விரத பலனை தரும். மற்ற ஆலயங்களில் ஒரு வருடம் காக்கப்படும் விரத பலன் மதுரையில் ஒரே ஒரு சிவராத்திரி விரத பலனாக கிடைத்துவிடும். அந்த பொற்றாமரை தீர்த்தம் சிவனால் உருவாக்கபட்டது, ஆதி தீர்த்தம் ஞான தீர்த்தம் என அதற்கு பெயர் பின்னாளில் பொற்றாமரை தீர்த்தமாயிற்று, அங்கு நீராடினால் தன் வினை, முன்னோர் வினை என எல்லா சாபங்களும் கர்மங்களும் நீங்கும். சிவனின் தலைமுடியின் கங்கை நீர் துளியால் உருவான தீர்த்தம் என்பதால் எக்காலமும் அது புனிதமானது, எல்லா வினையும் தீர்த்து புனிதமளிப்பது. அந்த சோமசுந்தர பெருமான் நாமத்தை கேட்டாலே பிறவி வினை நீங்கும், தரிசித்த மாத்திரம் 100 பிறவி பிணி நீங்கும், அங்கு பயணம் செய்ய தொடங்கினாலே கர்மவினையெல்லாம் கழியும். அங்கு ஒரு மலர் சாற்றினால் நூறு பொன்னால் ஆன மலர்களால் பகவான் ஏற்றுகொள்வார். அங்கு ருத்ர மந்திரம் ஜெபித்தால் ராஜசூய யாகம் செய்த பலன் கிட்டும். அங்கு அபிஷேகம் செய்தால் கோடி பலன் உண்டு, தூபமிட்டால் பெரும் புண்ணியம் யுகம் தாண்டிவரும், சிவாலயங்களில் தலை சிறந்ததும் பூலோக கயிலாயமும், பிரார்த்தனை உடனே பலன் கொடுக்கும் இடமும் அதுதான். தலம், தீர்த்தம், மூர்த்தி என மூன்றிலும் சிறந்தது அந்த ஆலவாய் நாதன் ஆலயமே"
இப்படி அந்த ஆலவாய் நாதனின் பெருமை கந்த புராணத்தில் சொல்லப்பட்டு அகத்திய சங்கிதையில் எல்லோருக்கும் உரைக்கப்பட்டிருக்கின்றது. யுகங்களை தாண்டியதும் ஆதியிலே முதலில் சிவனால் உருவாக்கபட்டதுமான அந்த சிவாலயம் பிரம்மன் விஷ்ணு என பெரிய தெய்வங்களாலும், இந்திரன் முதலான தேவர்களாலும் வணங்கபட்டது. 64 திருவிளையாடல் அங்குதான் நடந்தது. எம்பெருமான் வேறு எந்த ஆலயத்துக்கும் அச்சிறப்பை கொடுக்கவில்லை. அகத்தியர் முதல் எல்லா ரிஷிகளும் வணங்கினார்கள், பின் நாயன்மார்கள் வணங்கினார்கள், காலமெல்லாம் அது காக்கப்பட்டே வந்தது.
சமணத்தால் அது அழிய இருந்தபோது திருஞான சம்பந்த பெருமான் அதை மீட்டெடுத்தார். காலம் தோறும் அது தன்னை காட்டி தன் சக்தியினை காட்டியே வந்தது. சுல்தான்கள் ஆட்சியில் கல்யானை கரும்பு தின்ன அவன் அலறி ஒடிய சம்பவம் நடந்தது. பின் குமரகுருபரரை காசிக்கு அனுப்பி காசி ஆலயத்தை அவ்வாலயமே மீட்டது அன்னை சிறுமியாக வந்து குமரகுருபரருக்கு முத்துமாலை அணிவித்த நிகழ்வு அப்போதுதான் நடந்தது. அன்னையின் அருள் எக்காலமும் அங்கு உண்டு. சிவன் அந்த சக்தியின் மூலமாக பரிணமிக்கின்றார்.
இந்த மகா சிறப்பு மிக்க மதுரையில்தான் வெள்ளி அம்பலம் எனும் சபை, வெள்ளி சபை அமைந்துள்ளது. எல்லா சிவாலயம் போலவே இங்கும் முன்பு வெள்ளி சபை ஆலயம் விட்டு தொலைவில்தான் இருந்தது மாபெரும் காலம் கொண்ட இந்த தலத்தில் ஏகபட்ட மாறுதல்கள் வந்தன, அழிவதும் பின் எழுவதுமாக இருந்ததால் அதன் அமைப்பு அடிக்கடி மாறிற்று. இன்றிருக்கும் ஆலயம் போல் அன்று அது இல்லை, இந்த வெள்ளியம்பலம் என்பது வெளியில்தான் இருந்தது. இன்று அதன் நினைவாக வெள்ளியம்பல வீதி என்றொரு வீதி மட்டுமே எஞ்சி இருக்கின்றது. அந்த வீதியில் இருந்த வெள்ளி சபைதான் பிற்காலத்தில் ஆலயத்துக்குள் மாற்றப்பட்டது.
இப்போது ஆலவாய் நாதன் சன்னதிக்கு செல்லும்வழியில் இருக்கும் வெள்ளியம்பலம் அப்படி வந்ததே, ஆனால் அது ஆதியில் அமைந்திருந்த இடம் வேறு. இப்போது மதுரை ஆலயத்தினுள்ளே அந்த வெள்ளியம்பலம் அமைக்கபட்டு, அங்கேதான் வெள்ளி சபை என அது வணங்கவும் படுகின்றது.
இந்த வெள்ளிசபையின் தாத்பரியம் என்ன? ஏன் வெள்ளி என்பதை சொல்லி வைத்தார்கள்?
சித்திரம் எனும் ஓவியம், அதை அடுத்து தாமிரம், அதை அடுத்து வெள்ளி என அடுத்தகட்டடத்தை குறிப்பால் சொன்னார்கள் சித்தர்கள். அதாவது மூன்றாம் படிநிலை இது என்பதை தெளிவாக சொன்னார்கள். வெள்ளி என்பது சுக்கிரனுக்குரிய உலோகம் என்பது ஜாதகம், ஜாதகமெல்லாம் ஞானக்குறியீடு என்பதால் சுக்கிரன் என்பது படைப்பின் மூலமாகின்றது. அதனாலே மானுட குலத்தின் மூலத்தை சுக்கிலம் என்றார்கள்.
ஆம், இந்த சபை படைப்பு தத்துவத்தை குறிப்பது, அதனாலே பஞ்ச சபைகளில் இது மட்டும் தனக்கு ஈடாக மீனாட்சி எனும் சக்தி வடிவத்தை தன்னோடு பிரசித்தியாக அமைத்து பின்னாளில் ஆலவாய் நாதன் எனும் பெயரே பின்னடைந்து அது மீனாட்சி ஆலயமாகவே நிலைத்தது. இதன் பொருள் சிவனும் சக்தியும் சேர்ந்துதான் படைப்பை செய்கின்றார்கள். சிவன் இல்லையேல் சக்தியில்லை சக்தி இல்லையேல் சிவமில்லை. இருவரும் சேர்ந்து செய்வதே படைப்பு தொழில். அந்த படைப்பு தொழிலின் தத்துவத்தை சொல்லி நிற்கும் சபை இது.
அணு முதல் மானிட பிண்டம் வரை இந்த தத்துவம் உண்டு, அசையும் சக்தி ஒன்று அசையா பெரும் சக்தி ஒன்று இந்த இரண்டையும் தாஙுகும் வெளி ஒன்று. இங்கிருந்துதான் படைப்பு தொடங்குகின்றது. அணுகரு இணைவு அல்லது பிளவில் என்ன நடக்கின்றது? ஒரு அணுவினை ஏதோ ஒன்று நியூட்ரான் என தாக்க கரு பிளந்து பிரமாண்ட சக்தி தோன்றுகின்றது இது அணுவெடிப்பு. இரு அணுக்கள் இணையும் போது புது அணு தோன்றுகின்றது என்கின்றது விஞ்ஞானம். அப்படியே ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோனிதமும் சேரும் போது அங்கே உயிர் படைக்கப்படுகின்றது.
இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் அணுவுக்குள் இருக்கும் இயக்கம் மானுடன் சுக்கிலத்திலும் உண்டு, இன்னும் வானத்து பிரபஞ்சங்களிலும் உண்டு.
பிரபஞ்சவியல் என்ன சொல்கின்றது? ஒரு சக்தி இந்த கோள்களை இயக்குகின்றது. எல்லாம் பெருவெடிப்பில் இருந்து தோன்றின, ஒன்றில் இருந்து ஒன்று தோன்றிற்று, கடைசியில் எல்லாம் ஒரு இடத்தில் கருந்துளையில் சங்கமித்து ஒரே பெரிய தொகுப்பாகும் அது சூனியநிலை. பின் அதிலிருந்து பெருவெடிப்பு ஏற்பட்டு எல்லாம் மீண்டும் தோன்றும் அந்த பெரும் பிண்டத்தை ஒரு சக்தி உடைத்து போட்டு இயக்குகின்றது அதனாலே பிரபஞ்சம் இயங்குகின்றது. இந்த இயக்கு சக்தியினை தேவியாகவும், அசையா சக்தியினை சிவமாகவும் சொல்லி இந்த இரு சக்திகள் இணைவாலே உலகத்தில் எல்லாமே படைக்கபட்டு இயக்கபடுகின்றது என சொன்ன மதம் நமது மதம்.
அந்த தத்துவம்தான் இங்கே வெள்ளி அம்பலமாக சிவனை நிறுத்தியிருக்கின்றது. இங்குதான் பதஞ்சலி முனிவருக்கு சிவன் நடன கோலம் காட்டினார், வெள்ளியாக ஜொலித்து ஆடி காட்டினார்.
"அடியாரெம்பொருட்டு வெள்ளியம்பால்த்தாடல் போற்றி
பொடிபடிந் தடந்தோள் போற்றி
கடியவிழ் மலர் பொன் கூந்தல் கயல்விழி பாக போற்றி
நெய்தற் பரமானந்த நிருத்தனே போற்றி"
என அவர் பாடிய காட்சி அதுதான்....
அந்த வெள்ளி அம்பலத்தின் சிறப்பு சிவன் இடது காலை ஊன்றி வலது காலில் நிற்பது, பதஞ்சலி முனிவருக்கு சிவன் காட்சி கொடுத்த கோலத்தைவிட இது மாறுபட்டது. ஆம், மற்ற தலங்களில் வலது காலை ஊன்றி இடதுகாலை தூக்கி நிற்கும் பெருமான், இங்கு மட்டும் இடதுகாலை ஊன்றி வலதுகாலை உயர்த்தி நிற்பார். இதற்கு ஒரு வரலாறும் சொல்லபடுகின்றது, பாண்டிய மன்னன் ராஜசேகர பாண்டியன் என்பவன் ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் தேறியிருந்தான் அதில் நடனமும் ஒன்று.பக்தியின் உச்சத்தில் இருந்த அவன் நடனத்தின் கடினத்தை உணர்ந்து, பகவான் ஒரே பாதத்தில் ஆடுகின்றாரே கால் வலிக்குமே என கலங்கியபோது பெருமான் கால் மாற்றி நின்று ஆடினார். அவன் மனம் குளிர அப்படி இடது காலை ஊன்றி வ்லதுகாலை தூக்கி ஆடினார் அதனால் இன்றளவும் அங்கே வலதுகாலை மாற்றி ஆடிய காட்சியிலே எம்பெருமான் நிற்கின்றார்.
"என்று மிப்படியே யிந்தத் திருநடனம் யாருங் காண
நின்றருள் செய்ய வேண்டு நிருமலமாக வெள்ளி
மன்றவ வடியேன் வேண்டும் வரமிது என்று தாழ்ந்தனன்
அன்றுதொட் டின்று மெங்கோ னந்தநட நிலையின்ருன்"
என திருவிளையாடற் புராணம் அந்த காட்சியினை சொல்கின்றது....
இதற்கு ராஜசேகர பாண்டிய மன்னனின் பக்தி, குழந்தை தனமான கள்ளம் கபடில்லாத, தானும் இறைவனாரும் ஒன்றே என உணர்ந்த அப்பழுக்கற்ற பக்தி காரணம் என்றாலும் பகவான் சொன்ன விஷயம், குறிப்பால் காட்டிய விஷயம் இரண்டு உண்டு.
முதலாவது இறைவன் அர்த்த நாரீஸ்வர, ஒரு பக்கம் பெண்ணுக்கு கொடுத்தவர் அது இடபாகம். இடதுபாகம் காட்டி ஆடிய கோலத்தில் நின்று மாறி வலதுகாலை உயர்த்தியது என்பது ஆண்பெண் சக்தி, தானும் அன்னையும் இணைந்து நிற்கும் சக்தியே படைப்பு கோலம் என்பதை காட்டுவது. ஆண் படைப்புக்கு மூலம், பெண் படைப்பின் காரணம் என்பதை காட்டுவது.
இன்னொரு காட்சி யோகமயமானது, இடபக்க மூச்சை சந்திரகலை என்றும் வடபக்க மூச்சை சூரிய கலை என்றும் சொல்வது யோக மரபு, இந்த இரு மூச்சும் கலந்தால்தான் சுழுமுனை நாடி துலங்கி சக்கரங்களை துலக்கி ஞானநிலை நோக்கி இயக்கும். இந்த சூரியகலை சந்திரகலை மூச்சு தத்துவத்தை இங்கே சூசகமாக காலை மாற்றி நின்று இரு மூச்சு தத்துவத்தை சூரிய கலை சந்திரகலையோடு கூடி சுழுமுனை நாடி துலங்கும் ரகசியத்தை போதிக்கின்றார் எம்பெருமான்.
யோகத்தில் சிறக்கும் ஒருவன் புது மனிதனாகின்றான் புது படைப்பாகின்றான் என்பது இதன் தத்துவம். ஆம், இந்த படைப்பு தத்துவத்தை சொல்வதே இந்த ஆலயம், உலகம் சிவனாலும் அன்னையாலும் படைக்கப்பட்டு இயக்கப்படுகின்றது என்பதை சொல்லும் இந்த சபை, அப்படியே இங்கு வந்து வழிபடுபவன் புது படைப்பாகின்றான் என்பதையும் சொல்கின்றது.
இப்போது அகத்திய சங்கிதை சொல்லும் போதனையினை காணுங்கள் இரண்டும் அப்படியே பொருந்துவதை அறியலாம். ஆம், இது படைப்பை அருளும் ஆலயம், புதுவாழ்வும் புது இயக்கமும் தரும் அற்புத ஆலயம், அந்த தாத்பரியம்தான் வெள்ளி அம்பலமாக நிற்கின்றது. வெள்ளி என்பது சுத்தமான ஒன்றை குறிப்பது, எது நல்லது எது தள்ளவேண்டியது என்பதன் அறிகுறியாக வெளியினைத்தான் சொல்வார்கள். வெள்ளி என்றால் பவித்திரம் என்பார்கள். மகா தூய்மையானதை குறிப்பது வெள்ளி. தூய்மையானது எல்லாமே வெள்ளி நிறம் அல்லது வெண்ணிறம், பனிசிகரம், மேகம், வெள்ளோளி, என எல்லாமும் வெண்ணிறம் கொண்டது. படைக்கும் பொருள் எல்லாமும் தொடக்கத்தில் தூய்மையானது இயற்கையின் தத்துவம் அது, மழை முதல் மனிதன் வரை எல்லாமே தொடக்கத்தில் பரிசுத்தமானது.
இந்த ஆலயம் படைப்பின் தத்துவத்தை சொல்கின்றது. வாழ்வில் என்ன மாசுபட்டாலும் கர்மவினையால் சரிந்துபோனாலும் இந்த சபையில் வணங்கினால் மீண்டும் புதுப்படைப்பாக மாறுவான் என்பதை சொல்கின்றது. ஆன்மீக நிலையில் மறுபடி பிறப்பதை, அதாவது சித்திரம் தாமிரம் தாண்டி உறுதியாகி மறுபிறப்பு மறுவாழ்வு பெறுவதை சொல்லும் கோலம் இது.
சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான சத்யோஜாத முகத்தை காட்டும் தத்துவம் இது, இதுதான் படைப்புக்கு சொல்லப்படும் முகம். இங்கே சிவபெருமான் சந்தியா தாண்டவம் ஆடுகின்றார். சந்தியா என்றால் சந்திப்பொழுது என பொருள். இரு பொழுதுகள் இணையும் தருணத்தை சந்திப்பொழுது என்பார்கள். இரு தெருக்கள் இணைந்தால் சந்தி, இருவர் ஒருவரை ஒருவர் பார்த்தால் சந்திப்பு. அப்படி சந்தியா நடனம் என்பது இரு சக்தி இணையும் நடனம், இரு சக்திகள் இணையும் போது அங்கே புது படைப்பொன்று நிகழும். சாந்தி முகூர்த்தம் எனும் பெயரின் மூலம் சந்தி முகூர்த்தம் என்பதே.
சந்தியா நடனத்தின் தத்துவம் இதுதான், படைப்புக்கான இயக்கம் அது அதைத்தான் வெள்ளி அம்பலத்தில் சொல்கின்றார் சிவன். ஆன்மீக மொழியில் ஒருவன் புதுபடைப்பாக பிறந்துவிட்டான் என்பதை சொல்லும் அடையாளம் அது. இந்த தலம் எல்லா வகை அருளையும் அருளும், முதலாவது எல்லா படைப்பையும் தரும். அது உயிர்சார்ந்த உடல் சார்ந்த விஷயம் என்றாலும் கிடைக்கும்.
முக்கியமாக கலைகள், கவிகள் இன்னும் இதர படைப்பு திறன்களை வளர்க்கும், அந்த ஆலயத்தில்தான் அழியா தமிழ்சங்கமும் இலக்கியங்களும் எல்லாமும் வளர்ந்தன‌. இன்றும் அற்புதமான கல் காவியமாக எழுந்து நிற்பது மதுரை ஆலயம்தான்.
ஒளவை, கபிலர், நக்கீரர், வள்ளுவர் என காலத்தால் அசைக்கமுடியா படைப்புக்களெல்லாம் அங்கிருந்தான் வந்தன‌. எல்லா வகை படைப்புக்களும் தரும் சபை அது. அப்படியே ஆன்மீக வாழ்வில் பெரும் பெரும் திருப்பம் தந்து ஒருவனை அற்புதமான யோகியாக்கும் முழு அடியாராக்கும் ஆலயமும் அதுதான்.
நின்ற்சீர் நெடுமாறன் எனும் கூன் பாண்டியன் முதல் ஏகபட்ட அடியார்களை சொல்லமுடியும். இப்படி படைப்பினை தரும் ஆலயம், எல்லா வகையிலும் உங்களை புதுபடைப்பாக தரும் ஆலயம் அது. அந்த வெள்ளிசபையில் சிவபெருமான் வலதுகாலை தூக்கி படைப்பின் தத்துவம் யோக தத்துவமாக காட்சியளிகின்றார்.
மதுரை ஆலயம் செல்வோர் அங்கு அந்த வெள்ளிசபை நாதனை வணங்க தவறாதீர்கள், ஒரு நொடி நின்று அந்த அற்புத காட்சியினை தரிசியுங்கள்.
உங்கள் கர்மவினையெல்லாம் அற்றுப்போய் புதுபடைப்பாவீர்கள், எந்த நோக்கத்துக்காய் இந்த பூமிக்கு வந்தீர்களோ அந்த நோக்கம், அந்த செயலை செய்யும் படைப்புதிறன் உங்களுக்கு துலங்கும். யோகங்களில் மனம் சென்றால் இந்த ஆலயம் புதுபடைப்பாய் உங்களை மாற்றி ஆன்மீக நிலையில் புதுபடைப்பை கொடுக்கும்.
அந்த வெள்ளிசபை என்பது படைத்தலை சொல்வது, அங்கு நீங்கள் தரிசிக்கும் போது "இன்று புதிதாய் பிறந்தோம்" எனும் நிலைக்கு உங்களை உயர்த்துவது. மகா முக்கியமாக, எது நல்லதோ அதை அது தரும், எது பவித்திரமோ எது சுத்தமானதோ அதை உங்களுக்கு கொடுக்கும்.
அந்த ஆலவாய் நாதன் ஆலயம் சென்று அந்த வெள்ளி அம்பலத்தானை வணங்கும் போது புது படைப்பாக நீங்கள் மாறுவீர்கள், அதன் பின் நீங்கள் தொட்டதெல்லாம் பன்மடங்கு துலங்கும், இது சத்தியம்.
"ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி"

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...