கொங்கு நாட்டுத் தேவாரத் தலங்களில் மிக முக்கியமானது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில். காசிக்கு நிகராகப் போற்றப்படும் இத்தலத்தில் வீற்றிருக்கும் சனீஸ்வர பகவான் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தவர். 
பொதுவாக சனீஸ்வர பகவான் என்றாலே அச்சப்படுபவர்கள் உண்டு. ஆனால், இங்கு அவர் 'நல்ல சனீஸ்வரன்' என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
தோஷம் நீங்கிய தலம்: வசிஷ்ட மகரிஷியைப் பிடித்திருந்த சனி தோஷம், அவர் இத்தல இறைவனை வழிபட்டு, சனீஸ்வர பகவானைத் தனிச் சன்னதியில் பிரதிஷ்டை செய்த பின் நீங்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
அனுக்கிரக மூர்த்தி: இங்குள்ள சனீஸ்வரர் பக்தர்களுக்குத் துன்பம் தராமல், இன்முகத்துடன் நற்பலன்களை வாரி வழங்கும் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தனித்துவமான திருவுருவம்: இடது காலை பீடத்திலும், வலது காலை காகத்தின் மீது வைத்தும், மேல் வலது கையில் அம்பும், இடது கையில் வில்லும், கீழ் வலது கையில் சூலமும், இடது கையில் அபய முத்திரையுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.
காசியில் வாசி அவிநாசி: "காசியில் பாதி அவிநாசி" என்பார்கள். காசிக்குச் சென்று வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அது அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிட்டும் என்பது நம்பிக்கை. 
அவிநாசி என்பதன் பொருள்: 'விநாசம்' என்றால் அழியக்கூடியது. அதனுடன் 'அ' சேரும்போது 'அவிநாசி' - அதாவது 'அழிவற்ற தன்மை கொண்டது' என்று பொருள்படும்.
அம்மன் சிறப்பு: இங்கு அம்மன் 'ஆட்சிபீட நாயகி' என்பதால், சுவாமிக்கு வலப்புறம் வீற்றிருக்கிறார். இது மிகவும் விசேஷமான அமைப்பாகும்.
அருள்மிகு அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில், அவிநாசி - 641654, திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு.

No comments:
Post a Comment