Saturday, 3 January 2026

பஞ்ச சபைகள் 01: சித்திர சபை


 பஞ்ச சபைகள் 01: சித்திர சபை

-----------------------------------------------------------
குற்றாலம்
"மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரமனாட
கோனாட வானுலகு கூட்டமெலாமாட குஞ்சர முகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை முருகேசனாட
ஞானசம்பந்தரொடு இந்திராதி பதினெட்டு முனியட்ட பாலகருமாட
நுரை தும்பை யறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட
வினை ஓட உனைப்பாட எனை நாடி யிதுவேளை விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனைஈன்ற தில்லைவாழ் நடராசனே"
என்பது நடராஜ தத்துவத்தை அதன் அழகை சொல்லும் பாடல். சிவபெருமானின் நடனம் என்பது தத்துவார்த்தமானது. அது மகா நுணுக்கமானது. எவ்வளவோ ரகசியங்களையும் புரிந்துகொள்ள முடியாத சூட்சுமங்களையும் கொண்டது. அதை நேரில் கண்ட மகா முனிகள் கூட அந்த ரகசியத்தை முழுக்க அறியவில்லை, தங்களால் அறிய முடிந்ததை ஒவ்வொரு முனிவர்களும் ஓரளவு சொல்லி வைத்தார்கள்.
இது வெறும் ஆன்மீகம் அல்ல, இது பிரபஞ்ச இயக்கம், அணுவுக்கும் அண்டத்துக்கும் உள்ள தொடர்பு, உடலுக்கும் உடலில் பாயும் பிரபஞ்ச சக்திக்குமான ஒரு தொடர்பு. இந்த இயக்கத்தைத்தான் சிவ நடனம் என்றார்கள். இந்த நடனத்தின் அசைவுகளை 108 நடனம் என்றார்கள், பரத முனிவர் நடன கலையினை இயற்றியபோது இந்த 108 நிலைகளையும் 108 கரணங்கள் என்னும் தோற்றங்களாக அமைத்தார்கள். அந்த பரதம் வெறும் நடனம் அல்ல, அது ஆன்மீகம் மட்டும் சொல்லும் விஷயமும் அல்ல, அது கலை தாண்டி ஒரு பிரபஞ்ச தத்துவ அசைவு, உடலுக்கும் பிரபஞ்ச மற்றும் அணு இயக்கத்துக்கான ஒரு தொடர்பு.
முழுக்க விஞ்ஞானம் அணுவின் இயக்கத்தை பிரபஞ்சத்தின் இயக்கத்தை, ஜடப்பொருளின் இயக்கத்தை, செல் எனப்படும் உயிர்களின் இயக்கத்தை முழுமையாக அறியுமோ அன்று சிவ நடனத்தின் முழு உண்மையினையும் அறியும்.
ஆனால் அது எப்போது அறியப்படும் என்பது தெரியவில்லை, காலமெடுக்கலாம், அவ்வகையில் அந்த மாபெரும் மலையின் அடியில்தான் விஞ்ஞானம் நிற்கின்றது. ஓரளவு விஞ்ஞானம் கண்டறிந்த விஷயம் சிவ நடனம் என்பது மூட நம்பிக்கையில் சொன்னது அல்ல, அது அணுவின் இயக்கம் என்பதை அறிந்து சர்வதேச அனு சக்தி ஆய்வகம் முன்னால் நடராஜ பெருமான் சிலையினை நிறுவியுள்ளது. இது வெறும் தொடக்கமே, எல்லாம் அறியப்படும் நாளில் விஞ்ஞான உலகமே இந்து மதத்திடம் சரணடையும்.
அணுவின் அசைவே நடராஜ கோலம் என விஞ்ஞானம் ஒப்புக் கொள்கின்றது. இங்கு எதுவுமே நிரந்தமில்லை எல்லாமே ஒரு அசைவுக்கு உட்பட்டது. பொருட்களின் அணுக்கள், உடலின் செல்கள் தொடங்கி, குருதி விந்து தொடங்கி பூமியின் உயிர்கள் படைப்புக்கள் தொடங்கி, வானத்து கோள்கள் வரை எல்லாமே அசைவுகள், ஓயா அசைவுகள். இந்த அசைவே இயக்கம் இந்த இயக்கமே சிவம் என சொன்னது நமது மதம்.
அந்த அசைவின் இயக்கத்தை சிவநடனம் என்றார்கள். 108 வகை நடனங்களை 108 அண்ட தத்துத்வத்தில் அதன் இயக்கத்தில் சொன்னார்கள். இந்த இயக்கத்தை பரதமாக, பரத நடன கலையாக சொன்னார்கள். ஐரோப்பிய அணுசக்தி கழகத்தில் இருக்கும் நடராஜ சிலையில் அணுவின் நகர்வுகளை சிவனின் கால், கை என ஒரு வடிவத்தில் இணைத்து விஞ்ஞான தத்துவம் சொல்லும் விஞ்ஞான வடிவமே இந்த 108 கரணங்கள், அதை புரிந்தவர் எவருமிலர். இந்த 108 வடிவங்களில் மிக சிறந்ததை, ஆன்மீக லெளகீக தத்துவங்களை பஞ்ச நடனம் என சொல்லியது நமது மதம்.
இந்த ஐந்து நடனங்களை ஐந்து சபைகளில் சிவன் ஆடுகின்றார் என அது சொல்லிற்று, ஐந்து இடங்களையும் அது நிலை நிறுத்திற்று.
(1) குற்றாலத்தில் சித்திர சபை,
(2) நெல்லையில் தாமிர சபை,
(3) மதுரையில் வெள்ளி அம்பலம்,
(4) திருவாலங்காட்டில் ரத்தின அம்பலம்,
(5) சிதம்பரத்தில் பொன் அம்பலம்
என ஐந்து சபைகளை சொல்லிற்று....
அதனை சிவனின் தொழில்களோடும் இயக்கத்தோடும் இன்னும் பல சூட்சுமமான விஷயங்களோடும் பொருத்தியும் சொல்லிற்று. இந்த சபைகளையும் அதன் தாத்பரிய பலன்களையும் ஒவ்வொன்றாக பார்க்கலாம்....
முதல் சபை சித்திர சபை, இதன் தாத்பரியமும் அது சொல்லும் தத்துவமும் ஆழமானது, புரிந்துகொள்ள கொஞ்சம் சிக்கலான விஷயம் இது. நமது மதத்தின் அசைவு ஒவ்வொன்றும் ஞானம், மிக மிக கடினமான வகையில் புரிந்துகொள்ள கூடிய ஞானம் என்பதால் இதனை விளக்குதலும் கடினம், புரிந்து கொள்ளுதலும் கடினம். அந்த ஆழமான தத்துவத்தை மிக எளிதாக புரிந்து கொள்ளத்தான் சில குறியீடுகளை அடையாளங்களை வைத்தார்கள். அப்படி இந்த சபைக்கு சித்திர சபை என பெயர் வந்தது.
அழகிய மாடத்தினுள் சில தெய்வ சித்திரங்களை வைத்து இதுதான் சித்திரசபை என சொல்லி, அதற்கு புராண வரலாற்றையும் சொல்லி அழகிய சிறிய ஆலயமாக அதை உருவாக்கி பேணி சித்திரசபை என பெயரிட்டார்கள் முன்னோர்கள்.
திரிகூடமலை எனும் குற்றால மலை அருவியில் குடிகொண்டிருக்கும் குற்றால நாதன் ஆலயம் அருகே அது அமைக்கப் பட்டிருக்கின்றது. சித்திரம் என்றால் உருவம் என பொருள். மானுடன் என்பது ஆத்மா தங்கியிருக்கும் கூடு என்பதால் அதனை சித்திரம் என்றார்கள். மிக சரியாக புரிந்துகொள்ள எம தர்மனின் உதவியாளன் சித்திர குப்தன் என்பவனே சாட்சி, மனிதர்கள் செய்யும் எல்லா பாவ புண்ணிய கணக்கை, சித்திர உருவமுள்ள மனிதர்கள் செய்வதை குறிப்பதால் அவன் சித்திர குப்தன். சித்திரம் என்றால் இயல்பானது, சித்திரம் என்பது ஒரு விஷயத்தினை விளங்க வைக்க கூடியது ஒரு செயலின் முடிவு. ஒரு செயலின் விளைவு, கடைசி படிநிலை சித்திரம்.
மனிதனின் இயங்கு நிலையினைத்தான் அங்கே இறைவன் இயக்குவதைத்தான் சித்திர சபை என சொன்னார்கள். சித்திரத்துக்கு தேவையான நிறம் மண்ணில் இருந்துதான் வரும், மனிதன் மண்ணை நம்பி வாழ்பவன், மண் இல்லாவிட்டால் மனிதனுக்கு எதுவுமே இல்லை, அவன் மண் தத்துவம் அவனின் ஆன்மாதான் கவனிக்கபட வேண்டியது என்பதை சித்திரம் மற்றும் அதன் நிறத்திலே தெளிவாக சொன்னார்கள்.
மண் விதவிதமான நிறம் கொண்டது போல பலவித சிந்தனைகள் பலவித வடிவங்களை கொண்டவன் மனிதன், மண்ணுக்கு படைக்கும் சக்தி உண்டு என்பதுபோல மனித மனம் பல படைப்பு தத்துவங்களை கொண்டது என்பதையும் தெளிவாக சொன்னார்கள்.
ஆன்மீக நிலையில் தொடக்க நிலை அது, அங்கிருந்துதான் இறை தேடலை இறை சிந்தனையினை முழு தேடலோடு தொடங்க வேண்டும். உடலில் தங்கியிருக்கும் ஆன்மாவோடு தொடங்க வேண்டும் என்பதை சித்திர சபை என்றார்கள். இறைவன் ஆன்மாவினை தொட்டு சிந்தனைகளை தூண்டும் இடம் அது. சித்திர வடிவில் இருக்கும் மானுடன் தெய்வ நிலை நோக்கி செல்ல தொடங்கும் தலம் அது. அந்த சித்திர சபையின் தாத்பரியமும் அடையாளமும் அதுதான், அதை குறிக்க உள்ளே தெய்வம் மனிதனை ஆட்கொண்ட அத்தனை புராணங்களையும் சித்திரமாக வரைந்து வைத்தார்கள். அதை காணும் மனிதன் ஒவ்வொருவனும் தெய்வம் நம்மையும் ஆட்கொள்ளும் என மனமார நம்புகின்றான், அடுத்தடுத்த படிநிலைக்கு செல்ல தயாராகின்றான். சித்திரம் என்பது சுவற்றிலோ திரையிலோ வரைவது அது காலத்தால் பழுதாகும், மறுபடி மறுபடி வரையவேண்டிய அவசியம் வரலாம். மானுட உடலும் காலத்தால் அழியும் என அதன் நிலையாமையினையும் இங்கே சொன்னார்கள்.
அப்படியே சிவபெருமானின் ஐந்து தொழிலையும் மிக அழகாக இங்கே தத்துவமாக பொருத்தினார்கள். சிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டு என்பது எல்லோரும் அறிந்தது. சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈஷானம் என ஐந்து முகம் உண்டு. அந்த ஐந்து முகங்களும் ஐந்து தொழில் செய்வதும் உண்டு. அது படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என ஐந்து தொழில்களை சிவன் செய்வதாக புராணங்கள் சொல்கின்றன‌.
இந்த சித்திர சபை என்பது அதாவது குற்றாலத்தில் இருக்கும் சபை என்பது சிவனின் தொழிலான மறைத்தல் தொழிலை காட்டுவது. தத்புருஷம் என்னும் அந்த முகத்தின் தத்துவத்தை சொல்லும் தலம் இது. சிவன் எல்லா உயிருக்குள்ளும் மறைந்திருக்கின்றான். எல்லா இயக்கத்திலும் மறைந்திருக்கின்றான் என்பதை உரக்க சொல்லும் சபை இது.
சித்திரம் எனும் வடிவம் கொண்ட மனிதனை இயக்குவது அவனே, அங்கு மலையாக அருவியாக கொட்டுபவனும் அவனே, இங்கே எல்லாமும் அவனின் இயக்கம், எல்லா பொருளிலும் உயிரிலும் அந்த மகா சக்தி மறைந்திருக்கின்றது.
அந்த மகா சக்தியினை தே ட துவங்குவாய், உன்னில் அது மறைந்திருக்கின்றது எல்லா உயிரிலும் மறைந்திருக்கின்றது, அந்த சக்தியினை தேடி அடைய தொடங்குவார், இந்த உடலில் ஆன்மா தங்கியிருக்கும் காரணம், சித்திரமான உடல் இயங்க காரணம் அந்த சக்தி, பெரும் சக்தி.
அதனை தேடி அடைவாய், அடுத்த படிநிலைக்கு செல்வாய் என்பதை சொல்லவே சித்திர சபை என ஒன்றை அமைத்தார்கள் சித்தர்கள்.
இந்த தலத்தில் சிவன் ஆடும் நடனம் திரிபுர தாண்டவம் எனும் நடனம். அந்த தலபுராணபடி மார்கண்டேயனுக்காக எமனை மிதித்த சிவபெருமான் அந்த காட்சியினை பிரம்மதேவருக்கு இந்த இடத்தில் காட்டினார். அதை பிரம்ம தேவனே இங்கு சித்திரமாக வரைந்தார். இந்த நடனத்தையும் இந்த சித்திரத்தையும் இணைத்து பார்த்தால் இன்னும் நன்றாக இந்த தத்துவம் விளங்கும்.
திரிபுர நடனம் என்பது சிவன் திரிபுரத்தை எரிக்கும் போது ஆடிய நடனம், அந்தரத்தில் மூன்று கோட்டைகளை சிவன் எரித்து போட்ட நேரம் ஆடிய நடனம். அந்த காட்சியினை புராணம் தெளிவாக சொல்கின்றது. வரம் வாங்கிய அசுரர் மூவர் மூன்று கோட்டைகளை அந்தரத்தில் கட்டிக்கொண்டு அது மூன்றும் ஒன்றாக இருக்கும் நேரம் ஒரே ஒரு அஸ்திரத்தால் மட்டும் அழிவு என சொல்லி வரம் வாங்கி தனித்தனி பற்ககும் கோட்டைகளை வைத்திருந்தார்கள். அந்த பலத்தில் அட்டகாசம் செய்தார்கள், தேவலோகம் அதிர்ந்தது. அப்படி பாதிக்கப்பட்ட தேவர்களே சிவனிடம் வந்தார்கள், சிவனுக்கு அந்த அசையும் கோட்டைகளை தாக்க தங்கள் உதவி தேவை என கருதி அகம்பாவமும் கொண்டார்கள். எல்லா தேவர்களும் தேராகி அச்சாகி வாகனமாகி நின்றார்கள், வாசுகி நாகம் வில்லாயிற்று. சிவன் அந்த அசுரர்களை நோக்கி அப்படியே தேவர்களின் அகம்பாவம் எண்ணி ஒரு புன்னகைதான் பூத்தார். அந்த சிரிப்பிலே அந்த கோட்டைகள் அழிந்தன, தங்கள் பலமின்றி சிவனே ஒரு சிரிப்பிலே அந்த கோட்டைகளையும் அசுரர்களையும் அழித்த காட்சி கண்டு தேவர்களுக்கும் அகம்பாவம் ஒழிந்தது. இந்த சம்பவத்தின் போது சிவன் ஆடியதுதான் திரிபுர நடனம்.
(திரிபுர நடனத்தின் விஞ்ஞான விளக்கம் அணுக்கள் அல்லது கோள்களின் இயக்கத்தை காட்டுவது, நகரும் கோட்டைகள் அவை வாங்கிய வரம், பின் சிவன் அதனை புன்னகையால் அழித்தார் என்பது அணு இயக்கம், கோள்களின் இயக்கத்தோடு சம்பந்தபட்ட லெளகீக காட்சி. பிரிதொரு நாளில் விஞ்ஞானம் அதை மெய்பிக்கலாம்)
இந்த காட்சி தத்துவ அடிப்படையில் எளிதாக விளக்கபட்ட விடலாம், என்குரு திருமூலர் அழகாக விளக்கிவிட்டார்...
"அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார் அறிவாரே"
ஆம், முப்புரம் என்பது ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை மூன்று முக்கிய குற்றமான குணத்தினை ஒழிப்பது. இந்த குணங்கள் அழியுமிடத்தில் ஒருவனுக்கு ஞானம் பிறக்கின்றது. இந்த சித்திர சபையில் ஆணவம், கன்மம், மாயை அழிந்து எல்லா இயக்கமும் உலகில் சிவ இயக்கம் என அறிந்து கொள்வதே ஞானத்தின் தொடக்கம்.
அழியும் சித்திரம் போல, ஓலையிலோ சுவரிலோ எழுதும் சித்திரம் அழிவது போல அழகானது என மானுடன் நம்பும் இந்த உடலும் அழியக்கூடியது, அந்த உடல் அழிந்து ஆன்மா இறைபதம் சேர இந்த ஆணவம், கர்மா, மாயை என எல்லாமும் அழிய வேண்டும், அந்த ஆற்றலை சிவன் அருள்வார் என்பதே இங்குள்ள தாத்பரியம். மானுடம் எனும் சித்திர வடிவில் இருக்கும் ஆன்மாவின் ஞானத்தின் தொடக்கம் மும்மலத்தின் ஒழிப்பில் இருக்கின்றது. மும்மலங்களை ஒழித்தலே ஞானத்தின் தொடக்கம் என்பதை சொல்லும் சபை சித்திர சபை.
அங்கே மும்மலங்கலும் அழிந்து ஆத்மா இறைவனை நோக்கி செல்லும் வரத்தை சிவன் அருள்வார்...
"மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்
தான் அந்த மானிடத்தே தங்கி விடும் - ஆனந்தம்
மொண்டு அருந்த நின்றாடல் காணும் அருள் மூர்த்தியாக
கொண்ட திருஅம்பலத்தான் கூத்து"
என்பது இந்த சித்திர சபைக்கான பாடல்...
"குற்றாலத்து எம் கூத்தா போற்றி
காவாய் கனகக் கடலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி"
என பாடப்பட்ட சபையும் இதுதான்....
"உற்றாரையான் வேண்டேன்
ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரையான் வேண்டேன்
கற்பனவும் இனியமையும்
குற்றாலத்து அமர்ந்துறையும்
கூத்தாஉன் குரைக்கழற்கே
கற்றாவின் மனம் போலக்
கசிந்துருக வேண்டுவனே"
என மாணிக்கவாசகர் பாடிய பாடல் இந்த சபைக்குத்தான்....
இந்த சபை இன்னும் நுணுக்கமான சில விஷயங்களையும் சொல்கின்றது, பஞ்ச பூதத்தில் காற்று என்பது மறைத்தல் தத்துவம். காற்றை கண்ணால் காணமுடியாது, உணரமுடியும் இன்னும் அந்த காற்றுதான் உடலை இயக்கும் மகா சக்தி, இயக்கும் உயிர்காற்று நின்றுவிட்டால் மானிடன் பிணம். அந்த காற்றின் தத்துவமும் இங்கு உண்டு. ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று சீறிவரும் இடம் இது, அதையும் தத்துவமாக வைத்தார்கள்.
மானுட உடலை அதன் சூட்சும தன்மையின்படி மனித உடலை ஐந்து அடுக்குகளாக‌ பிரித்துப் பார்க்கும் ஒரு பகுதி தைத்ரீய உபநிடதத்தில் வருகிறது. பஞ்ச கோசங்கள் என்று இவை குறிப்பிடப்படுகின்றன. கோசம் என்றால் உறை; பஞ்ச என்றால் ஐந்து.
அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என ஐந்து அடுக்குகளை உபநிடதம் போதிக்கின்றது.
இதில் மானுட உடல் மட்டும் கண்ணுக்கு தெரிவது, மீமௌள்ளது சூட்சும உடலோடு தொடர்புடையது. இந்த மானுட உடல் அன்னம் எனும் உணவால் வாழ்வது, அதை காப்பது பிராணம் எனும் மூச்சுகாற்று, இது உடலின் உள்ளும் உண்டு, வெளியிலும் உண்டு. இந்த அன்னமய, பிரானமய கோச தத்துவங்களை விளக்குவதே சித்திர சபையின் ஆழமான தாத்பரியம். இந்த சபை திருகுற்றால நாதர் ஆலயத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் வடக்கே அமைந்துள்ளது.
குற்றாலம் என்பது குத்தாலம் என பெயர் கொண்டது, கு+தாலம் என அது பிரியும் கு என்றால் பிறவிப்பிணி தலம் என்றால் தீர்ப்பது, அவ்வகையில் இது பிறவிப்பிணி தீர்க்கும் ஆலயம். இந்த மலை திரிகூட மலை என பெயர்பெற்றது. அதற்கு மூன்று மலைகள் கூடியது என்பது மட்டும் பொருள் அல்ல, முப்பெரும் தேவியான அன்னை பராசக்தி இங்கு குடிகொண்டிருக்கின்றாள். அதனால் ஆலயத்தில் அவளுக்கு தனி பீடமே உண்டு, இந்த ஆலயத்தின் அன்னை குழல்வாய்மொழி அம்மையார்.
அகத்திய முனியின் கைதடம் அந்த ஆலய சிவலிங்க கருவறையில் உண்டு. இந்த ஆலயத்தின் தலவிருட்சம் பலாமரம் பிறவி பிணி அறுக்கும் இந்த ஆலயத்தில் பலாமரமும் ஒரு தத்துவத்தை சொல்கின்றது. அது வாழ்க்கை மிக மிக கடினமனாது முள்ளும் கரடுமுரடும் நிரம்பியது. அதை தாண்டினால் வாழ்வு பலாசுளை போல் இனிக்கக்கூடியது. இன்னும் ஆழமாக சொன்னால் மனதின் கரடுமுரடான சிந்தனைகளை எல்லாம் தாண்டினால் உள்ளே ஆத்மா சுகம் உண்டு, ஆத்மகனி உண்டு என்பதை சொல்லும் தத்துவம் அந்த பலா விருட்சம்.
சம்பந்தர் தன் பதிகத்தில் பாடினார்....
"அரவின் அனையானும் நான்முகனும் காண்பரிய அண்ணல் செக்கி
விரவி மதி அணிந்த விகிதர்க்கு இடம் போலும் விரி பூஞ்சாரல்
மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்தகீ
குரவமறு வலி செய்யும் குன்றிடம் சூழ் தண் சாரக் குறும்பலாவே"
ஆம், அந்த பலா என்பதன் ஆத்மார்த்த தத்துவம் அபாரமானது, அதை சூசகமாக 11 பாடல்களில் பாடிவைத்தார் திருஞானசம்பந்த பெருமான்.
அவ்வளவு மகா சிறப்பு கொண்டது அந்த ஆலயம். அந்த குற்றால முக்கிய அருவி அன்று குற்றால நாதருக்காக மட்டும் அர்பணிக்கபட்டதால் சுத்தமான நீர் அந்த ஆலயத்துக்கு அபிஷேகத்துக்கு என விலக்கு இருந்தது. குற்றாலம் என்பது சுற்றுலா தலம் அல்ல, ஓய்வெடுக்கும் உல்லாசபுரி அல்ல, அது சிவாலய பூமி, அன்னை பராசக்தி வந்து அமர்ந்து அருள்புரியும் மலை. அந்த குற்றாலம் என்பது கர்மம் அறுக்கும் தலம், அது பாவ கர்மங்கள் ஆன்ம மலங்கள் எல்லாம் அகற்றி ஒருவனின் எல்லா கர்மவினைகளையும் அகற்றி நல்வாழ்வு தரும் தலம். அகத்திய முனியோடும் தேவியோடும் சிவன் அதை செய்கின்றார், பராசக்தி அன்னை தான் தேர்ந்துகொண்ட ஆலயத்தில் இருந்து பெரும் அருள் வழங்குகின்றாள்.
"காலன் வருமுன்னே
கண்பஞ் சடை முன்னே
பாலுண் கடைவாய்
படு முன்னே - மேல் விழுந்தே
உற்றார் அழுமுன்னே
ஊரார் சுடுமுன்னே
குற்றாலத்தானையே கூறு"
என பட்டினத்தார் இந்த தலத்தை பாடினார்....
குற்றால நாதரை வணங்கியபின் மறவாது வடக்கே இருக்கும் சித்திர சபையினை சென்று பாருங்கள், அதி அற்புதமான சபை அது. அது பாண்டிய மன்னர்களால் அமைக்கப்பட்டு மிக மிக தொன்மையான காலத்தில் இருந்து பராமரிக்கபட்டது. பின்னாளில் அப்பிரதேசம் சேர மன்னர்கள் கையில் சிக்கியபோது அவர்கள் கேரள பாணியில் கூம்பு வடிவ கூரையுடன் அதை புதுப்பித்தார்கள்.
இன்றிரூக்கும் சித்திரசபை கேரள மன்னன் வீர மார்த்தாண்ட வர்மன் கட்டியது. தமிழர் மலையாளி என்பதெல்லாம் அங்கு இல்லை, இது சிவபூமி சிவனின் ஆலயம் சிவபக்தியின் மகா புனித தாத்பரியமும் கொண்ட பூமி என்பதை காட்சிகள் காட்டுகின்றன‌. சித்திர சபையில் சிவன் ஆடுகின்றார் என்பது, முறையான வடிவம் கொண்ட மானுட உடல் முதல் எல்லா பொருளிலும் படைப்பிலும் சிவன் உண்டு.
மானுட இயக்கம் மட்டுமல்ல மரம் செடி கொடி பறவை விலங்கு மலை அருவி என எல்லாவற்றிலும் அந்த இயக்கு சக்தி உண்டு, இறைவன் அங்கே "மறைதல்" எனும் தத்தவபடி எல்லாவற்றிலும் மறைந்திருக்கின்றார் என்பதை சொல்வது.
இன்னும் சில விஷயங்கள் உண்டு. அந்த சித்திர சபை மனதின் எண்ணங்களை சொல்வது, மானுட மனம் எல்லையில்லா அளவு விரிந்தது பரந்தது, நிறைவே கொள்ளாதது, அந்த சபையின் சித்திரத்தை கூட இன்னும் இன்னும் அழகாக பெரிதாக வரையாலம் எனும் அளவு ஆயிரம் சிந்தனைகளை கொட்டக் கூடியது.
மனம் என்றால் என்ன என்பதையும், மனம் அங்கே எப்படி ஒருமைபட முடியும் என்பதையும் அங்கே உணரமுடியும். அந்த சித்திரங்களும் அவற்றின் தத்துவமும் உண்மைபொருள் என்பதும் அறிவு என்பதும் நம் மனதுக்கு அற்பாற்பட்டது என்பதையும் புரிந்து கொள்ளமுடியும். மனதை தாண்டி ஒரு ஞானமான பொருள் உண்டு, ஒரு நித்திய நிறைவு உண்டு, அதை தேடி செல்லவேண்டும் எனும் ஞானம் வரும்.
அந்த நித்திய பரம்பொருளை மனம் கடந்த அறிவு கடந்த ஞான மெய்பொருளை அடைய என்னென்ன காரியங்களை செய்யவேண்டும் எப்படி அந்த பயணம் தொடங்க வேண்டும் என்பதை அந்த சபை அருளும். அந்த இடம் ஞானத்தை நோக்கி மானுடனை செலுத்துமிடம், திரிபுர நடனம் எனும் நடனம் புரியும். சிவன் மும்மலங்களையும் அகற்றி ஆன்மாவினை மேல் நிலைக்கு அழைக்கும் சபை அது.
இறைவன் தத்புருஷ முகத்தோடு மறைந்திருக்கின்றான்
அவன் எல்லா உயிரிலும் எல்லா படைப்பிலும் மறைந்திருக்கின்றான் அவனை தேடி அடையுங்கள். அவன் காற்றாக மறைந்திருந்து இயக்குகின்றான், அவன் உங்கள் உள்ளே இருக்கின்றான் மனம் தாண்டி, சிந்தை தாண்டி அவனை அடையுங்கள், ஒருமுகபட்ட மனதோடு அடையு முயலுங்கள் என போதிக்கும் தலம் அது.
குற்றாலம் என்றால் அருவி குளியல் அல்ல, செங்கோட்டை பாரோட்டா அல்ல பிரியாணியோ உணவோ ஓய்வோ கொண்டாட்டமோ அல்ல‌. குற்றாலம் என்பது இந்த ஞானமரபில் கர்மம் கழியுமிடம், ஞான தேடல் தொடங்குமிடம். இறையனாரும் தேவியும் அகத்திய மாமுனியும் உறையும் அவ்விடம் மும்மலம் ஒழிந்து ஆன்மா மானுட உடலில் இருந்தபடியே ஞானம் தேடலை தொடங்குமிடம்.
அங்கு செல்லும்போது குற்றால நாதர் ஆலயத்தோடு இந்த சித்திரசபையினை காண தவறாதீர்கள், அந்த ஆலயத்தில் வணங்கிய முழு பலனும் இந்த சித்திர சபையில்தான் கிடைக்கும்.
அங்கு அமர்ந்து "ஓம் தத்புருஷாய நமஹ" எனும் ஸ்லோகத்ஹை மனதுள் மெல்ல சொல்லுங்கள், மறைந்திருந்து இயக்கும் சிவனின் தத்புருஷ முகமும், மறைத்தல் தொழிலின் மகத்துவமும் புரியும். அங்கே உங்கள் வாழ்வு மாறும், சிந்தனைகள் பெருகும். மனம் கடந்த சிந்தனை ஓங்கும், மனம் அறிவு தாண்டி அதன் எல்லை தாண்டிய ஒரு தேடல் உருவாகும். அது ஞான பிரம்மத்தை நோக்கி உங்களை அழைத்து செல்லும், ஆத்மா அடுத்தகட்ட தேடலுக்கு செல்லும்.
சித்திரசபையில் வணங்கிவிட்டு அடுத்து நெல்லையில் இருக்கும் தாமிர சபைக்கு வரலாம். மிக ஞானமாக அதை தாமிர சபை என்றார்கள், திரையிலோ ஓலையிலோ வரையப்படும் சித்திரம் கலையும் ஆனால் தாமிரத்தில் வரைந்தால் அது உறுதியானது.
ஒருவிஷயம் உறுதியாவது என்பது மிக மிக வலுவான நிலையினை எட்டுவது என்பது எங்குமே அவசியமானது. அப்படி சித்திர சபையில் தொடங்கிய ஞானதேடல் இன்னும் வலுவாக வேண்டி வணங்குமிடம் தாமிர சபை அதை அடுத்து பார்க்கலாம்

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...