.
ஓங்கி உலகளந்த உத்தமன்
வருடத்தில் ஏதாவது ஒரு மாதத்தில் நல்ல மழை பெய்தாலே நமது ஊர்கள் தண்ணீரில் மிதக்கின்றன. மாதம் 3 முறை மழை பெய்தால் என்ன ஆகும்? தெருவுக்குள் கடல் போல நீர் தேங்கும், எல்லா வீட்டிலும் நீச்சல் குளம் தோன்றும், கரண்ட் இருக்காது, நெட் வேலை செய்யாது, பால் தட்டுப்பாடாகும், மெழுகுவர்த்தி கிடைக்காது..
கழிவு நீர் பெருக்கெடுக்கும், நமது பைக் & கார்கள் நீரில் மூழ்கிப் பழுதாகும், படகுகள் தேவைப்படும், கொசுத் தொல்லை அதிகரிக்கும், காய்ச்சல், கண் வலி வரும், சமூக ஆர்வலர்களால் தண்ணீர் பாட்டில் உணவுப் பொட்டலம் வீடு தேடி வரும். EMI கவலை வாட்டும் தற்காலிகமாய் விலைவாசி ஏறும்! ஆனால் ஆண்டாள் காலத்தில்..
மாதம் மும்மாரி பொழிந்ததும் சாலைகள் அழியாமல் தீமைகள் அழிகிறது, செந்நிற நெல்கள் செழிப்பாக வளர்கிறது. அந்த வயல்வெளியில் ஓடுகின்ற கால்வாயில் கொழுத்த மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. மேனியில் புள்ளியுள்ள வண்டுகள் கரைகளில் இருக்கும் கருங்குவளை மலர்களில் தேன் உண்ணுகின்றன.
குபேரனின் தொப்பை போல் மடி நிறைந்திருக்கும் பசுக்கள் வள்ளல்கள் போல கறப்பதற்கு முன்பு தானாகவே பாலை சுரக்கின்றன. எங்கும் செல்வம் செழிக்கிறது. இத்தனைச் செல்வங்களும் தன் காலை ஓங்கி இவ்வுலகை அளந்தானே வாமன அவதாரக் கண்ணன், அவன் பேரை நோன்பிருந்து நீராடி நாம் பாடினால் கிடைக்கும் என்கிறார்!
அன்று அவ்வளவு மழை பெய்தும் ஆறு குளங்கள் மட்டுமே நிரம்பின. ஏனெனில் அவை ஒன்று கூட ஆக்ரமிக்கப்படவில்லை. எந்த ஆற்றிலும் அன்று மண் அள்ளவில்லை. நிறைய மரங்கள் வளர்க்கப் பட்டன, புகை, மாசு, தூசு எதுவுமே அன்று தமிழ்நாட்டில் இல்லை மேலும் அன்றைய டிரைனேஜ் சிஸ்டங்களும் சிறப்பாக இருந்தன.
அதை அமைத்ததற்கு எத்தனை கோடி எஸ்டிமேட் என பாசுரத்தில் எந்தக் குறிப்புகளும் இல்லை. முக்கியமாக ஆண்டாள் காலத்தில் பிளாஸ்டிக் பாலிதீன் குப்பைகள் அறவேயில்லை. ஆம் நமது ஆண்டாள் கண்ணன் மீது கொண்ட அன்பு வெள்ளத்தைவிட இந்த மழை வெள்ளம் ஒன்றும் பெரிதல்ல! அதில் மூழ்கிட எவர் தான் மறுப்பர்!
மார்கழி 3 ஆம் நாள் பாடல்..
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து
ஓங்கு பெருங் செந்நெல் ஊடு கயலுகளப்
பூக்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ எம்பாவாய்.

No comments:
Post a Comment