Friday, 26 December 2025

*தமிழுக்கு முகவரி தந்த அகத்தியம்*


 *தமிழுக்கு முகவரி தந்த அகத்தியம்*

மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்ததாக கருதப்படும் அகத்தியரின் பிறந்த தினம் சித்தமருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. அகத்தியம் என்பது ஒரு மரபு. அந்த மரபின் முதல் சித்தர் அகத்தியர். உடல் கூறுகள், உடல் செயலியல், அறுவை சிகிச்சை, மனநோய்கள், மந்திரம், தந்நிரம், வைத்தியம், யோகம், நோய் கணிப்பு, தத்துவம் என அகத்தியர் தொடாத விசயங்களே இல்லை. இந்திரனின் சாபத்தால் தீ என்ற பூதமானது, கும்பத்தில் கிடந்து, பூமியில் விழுந்து, வாயுவின் துணையால் அகத்தியராக உருவெடுத்தது என்பது புராணக்கதை. ஆகையால் அகத்தியரை கும்பமுனி என்றும் குறிப்பிடுகின்றனர். 12,000 ஆண்டுகளுக்கு மேல் அகத்தியர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சிவனின் கட்டளைப்படி தென்னாட்டிற்கு சென்று வைத்தியம் வாத யோகம் ஞான சாஸ்திரங்களைக் கற்று கொடுத்து பல்வேறு சிந்தனைகளை உருவாக்கியதால் அகத்தியர் சித்த மருத்துவத்தின் முதல் சித்தர் என்றும் ஆணையின்படி பல்வேறு தமிழ் நூல்களை இயற்றினார்.
புராணங்களில் இவ்வாறு கூறப்பட்ட இருந்தபோதிலும் அகத்தியர் என்ற மரபில் அகத்தியர் என்ற பெயர் கொண்ட பல்வேறு சித்தர்கள் இருந்ததாக வரலாறு கருதுகிறது. பொதிகை மலை அகத்தியர், வாதாபி அகத்தியர், லோபமுத்திரை அகத்தியர், புரோகித அகத்தியர், பாவநாச அகத்தியர், புலவர் அகத்தியர் என்ற பெயரில் சித்தர்கள் இருப்பதாக தெரியவருகிறது. தட்சணாமூர்த்தி என்ற சித்தரும் அகத்தியரும் ஒன்று எனவும் கருதப்படுகிறது. பல்வேறு அகத்திய நூல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அகத்தியர் பெயரில் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ள. சமஸ்கிருதம் தமிழ் இரண்டிலும் வல்லவராக அகத்தியர் திகழ்ந்ததால் அகத்தியர் பெயரில் ஆயுர்வேதம் மற்றும் தமிழ் மருத்துவ நூல்கள் ஏராளமாக காணப்படுகின்றன. வேதத்தில் வல்லவரான அகத்தியர் தமிழ் கற்றுத்தேர்ந்து தமிழ் மருத்துவத்தை முதல் நிலைப் படுத்தி பல சிகிச்சை முறைகளை ஏற்படுத்தி சித்த மருத்துவத்தை தோற்றுவித்தார் என்பதால் சித்த மருத்துவத்தின் முதல் சித்தர் அகத்தியர் வணங்கப்படுகிறார்.
திருவனந்தபுரத்தில் அனந்தசயனம் என்ற ஊரில் இவர் சமாதி அடைந்ததாக கூறப்பட்டாலும் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி இருப்பதாகவும் குறிப்பிடுகிறது.
சித்த மருத்துவ வரலாறு எழுதிய கந்தசாமி பிள்ளை, தனது நூலில் வடநாட்டிலிருந்து அகத்தியர் தென்னாடு வந்த காரணம் வரலாற்று ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. பிற வடநாட்டு ரிஷிகள் போல் ஆரிய பெற்றோர்கள் பிறக்காமல், கும்பத்தில் பிறந்ததால் வடக்கு-தெற்கு ஏற்றத்தாழ்வுகளை சரிகட்ட கும்பமுனியாக தென்னாட்டிற்கு வந்ததாக புராண வரலாறு கூறுகிறது. கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் அகத்தியரை பற்றிய குறிப்புகள் காணப்படுவது வியப்பூட்டுகிறது.
அகம் என்றால் ஒளி. தமிழ் மொழிக்கு ஒளியாக வெளிச்சத்தை ஏற்படுத்தி தந்ததால் அகத்தில் தீயை கொண்டு அதன் மூலம் இந்த பிரபஞ்சத்திற்கு நல்வாழ்வு நெறிகளை போதித்ததால் அகத்தியர் என்றும் அழைக்கப்படுகிறார். கஷ்டம் என்றால் பாவம். அகஸ்தம் என்றால் பாவத்தை நீக்குதல். கன்ம வினையினால் நாம் செய்த பாவங்களை நீக்குவதால் அகஸ்தியர் என்றும் எந்தவித லஞ்ச் ஆனாலும் அதை நீக்கி வெளியேற்றும் தன்மை உடைய அகத்தி மரத்திற்கு ஒப்பானதால் அகத்தியர் என்று அழைக்கப்படுகிறார். அகத்தை அடக்கியவர், அகத்தீயை அடக்கியவர், அகத்தில் அழுக்கில்லாதவர், கும்பத்திலிருந்து வந்தவர், வாதாபியை தோற்கடித்தவர் என அகத்தியரை பற்றி பாடாத வேதங்களும், புராணங்களும், இலக்கியங்களும், தமிழ் நூல்களும் இல்லை எனலாம். ரிக் வேத காலத்திலேயே அகத்தியரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சப்தரிஷிகளில் ஒருவராகவும், அஷ்ட ரிஷிகளில் ஒருவராகவும் அகத்தியர் வணங்கப்படுகிறார். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக்கதைகளிலும் கூட அகத்தியர் பற்றிய பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன. தமிழ் சைவ மரபில் முதன்மையான சித்தராக அகத்தியர் வணங்கப்படுகிறார். தமிழ் மொழியின் தந்தை எனவும், தமிழ் இலக்கியத்தில் சித்தர் என்றும் அழைக்கப்படும் அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர். சமுத்திரம் நீரை குடித்து தேவர்களை காத்த பெருமை அகத்தியருக்கு உண்டு. வடநாட்டில் இருந்த அகத்தியரை சிவன் தென்னாட்டிற்கு அனுப்பியதாக வரலாறு கூறப்படுகிறது. கைலாய மலை, மேரு மலை, சிவன் வழிபாட்டுத்தலமாக உள்ள வடக்கே சிவனைக் காண அலைகடலாக மக்கள் கூடியதால் தென்பகுதியை காக்க தென்னாட்டிற்கு அகத்தியர் வந்தாரென்றும் சில வரலாறு குறிப்பிடுகிறது. சிவனின் கட்டளைப்படி பொதிய மலைக்கு வந்ததாக திருமூலர் திருமந்திரத்தில் அகத்தியரைப் பற்றிய பாடலை குறிப்பிடுகிறார்.
ராமாயணத்தில் குள்ளமாக, தடிமனான உருவமுடைய அகத்தியர் தெற்கே வசித்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன. தென்னிந்தியா மட்டுமின்றி, தென்னாசியா, தென்கிழக்காசியா, ஜாவா, இந்தோனேசியா மற்றும் இந்திய ஐரோப்பிய நாடுகளில் அகத்தியரைப் பற்றிய பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன.
அகத்தியர் யாருக்கு பிறந்தார் என்ற வரலாறு இல்லை என்றாலும் அவர் ஒரு தெய்வப் பிறவியாக கருதப்படுகிறார். கடவுளின் வரமாக மண்கலத்தில் உயிரணுவாக விழுந்து, அங்கேயே வளர்ந்து வசிஷ்டர், அகத்தியர் ஆகிய இரட்டைக் குழந்தைகளில் ஒருவராக பிறவி எடுத்ததாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
அகத்தியர் மனித பிறவி இல்லாததால் வர்ண வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவான சித்தராக வணங்கப்படுகிறார். நட்சத்திர குடும்பத்தில் ஒருவதாக அகத்தியர் கருதப்படுகிறார். விதற்ப நாட்டு இளவரசி லோபமித்திரையை திருமணம் கொண்டு தீர்த்தசாயு என்ற குழந்தையும் பெற்றெடுத்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. அகத்தியருக்கும் லோபமித்திரைக்கும் பிறந்த தீர்த்தசாயு என்ற மகன் தாயின் கருவில் இருக்கும்போதே அகத்தியரின் உபதேசங்களைக் கேட்டு வளர்ந்து பல நற்காரியங்களைச் செய்ததாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன.
காடுகளில் வளர்ந்து அங்கேயே இருந்ததால் தமது மனைவி லோபாமுத்திரைக்கு அகத்தியர் உபதேசம் செய்த வேதம், இனபேத மறுப்பு, குடும்ப வாழ்க்கை, விடுதலை, உலகப்பற்று, பொருட்பற்று, புதல்வர் பற்று, இயற்கை, இன்பம், துன்பம், வாழ்க்கை,பிறவி, இறைவனை சேர்தல், மருத்துவம், மந்திரம், மணி என அகத்தியர் கூறிய பல்வேறு கருத்துகளும் லோபாமுத்திராவின் வாயிலாக பல இடங்களில் பரப்பட்டதாக சித்தர் வரலாறு குறிப்பிடுகிறது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் அகத்தியரைப்பற்றி கோயில்களும், குறிப்புகளும், கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. தமிழகத்தில் திருநெல்வேலி பொதிகைமலை மற்றும் தஞ்சையில் அகத்தியரைப்பற்றி குறிப்பு காணப்படுகின்றன. மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை அகத்தியருக்கு உண்டு என தமிழ் வரலாறு குறிப்பிடுகிறது.
தமிழ் மொழியின் தந்தை, தமிழ் இலக்கணத்தில் தந்தை என வழங்கப்படும் அகத்தியரை பற்றி சங்க இலக்கியங்கள் புறநானூறு ஆகியவற்றில் பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன. இந்து சமயத்தில் சைவ சமயத்தில் முதல் சித்தராகவும் அகத்தியர் வணங்கப்படுகிறார். பதினென் சித்தர்களில் முதன்மையான சித்தராகவும் சித்த மருத்துவத்தில் வணங்கப்படும் அகத்தியர் புத்தர் காலத்திலேயே பல்வேறு தத்துவங்களை உபதேசித்ததாக வரலாற்று குறிப்புகள் குறிப்பிடுகின்றன.
அகத்தியர் எம்மொழிக்கும் பொதுவானவர், எந்நாட்டிற்கும் பொதுவானவர், ஆகவேதான் வடக்கு, தெற்கு என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் அகத்தியரை வணங்குகின்றனர். சித்த மருத்துவத்திற்கும், ஆயுர்வேத மருத்துவத்திற்கும் பொதுவாக வணங்கப்படுகிறார் அகத்தியர், தமிழில் ஏராளமான நூல்களை எழுதி தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கணத்திற்கும் தொண்டாற்றி சித்த மருத்துவத்தின் தந்தை என்று அகத்தியர் வணங்கப்படுகிறார். ஆயுளை வளர்க்கும் மருத்துவம் ஆயுள் வேதியர்களால் பின்பற்றி வந்த காலத்தில் வேதத்தில் உள்ள கருத்துகளை சித்தத்தின் மூலம் தெளிவு பெற்று தனக்கென தனி பாதையை ஏற்படுத்தியவர்கள் தான் சித்தர்கள். அந்த சித்தர்களில் முதன்மையானவர் அகத்தியர். அகத்தியர் கூறிய வாழ்வியல் நெறிமுறைகள் இன்னும் தமிழர்கள் தங்கள் வாழ்வில் கடைபிடித்து வரும் வாழ்வியல் நெறிகள் ஆகும்.
அகத்தியர் கூறிய பல்வேறு வாழ்வியல் நெறிமுறைகளே இன்று சித்த மருத்துவமாக உங்கள் முன் உருவெடுத்து நிற்கிறது. சித்தர்கள் கூறிய பல்வேறு மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து ஒவ்வொரு சித்தர்களும் எதனடிப்படையில் தங்கள் அனுபவங்களையும் மருந்து செய்முறைகளையும் வாழ்வியல் நெறிகளில் தொகுக்க வேண்டும் என்ற அகத்தியரின் வழிகாட்டுதலின் படியே பல்வேறு சித்தர்களும் ஓலைச்சுவடிகளிலும், கல்வெட்டுகளிலும் தங்கள் அனுபவ கருத்துகளையும் மெய்ஞானத்தில் பெற்ற மருத்துவ அறிவையும் தொகுத்து வைத்ததே சித்தர் நூல்களாக இன்றும் வணங்கப் பெறுகின்றன. ஆகவேதான் எந்த சித்தரும் தங்கள் பாடலில் அகத்தியர் துதி என அகத்தியரை வணங்காமல் தங்கள் நூலை எழுதுவதில்லை. இறை வணக்கத்தில் மெய்ஞான கடவுளை வணங்கிய பின்பு அகத்தியருக்கு குரு வணக்கம் செய்தே பல்வேறு சித்தர்களும் நூல்களை எழுதி வருகின்றனர். அந்த சித்தர்களில் முதன்மையான அகத்தியர் திருவனந்தபுரத்தில் அனந்தசயனம் என்ற ஊரில் சமாதி அடைந்தார். அதேபோல் தேரையரும் பல்வேறு மருத்துவ கருத்துகளை வாழ்க்கை நெறிமுறைகளை குறிப்பிட்டுள்ளார். தேரையர் கூடிய வாழ்வியல் நெறிமுறைகள் இன்றும் மக்களால் போற்றத் தக்கவை. அவ்வையாரால் அகத்தியருக்கு அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு நூல்களை கற்று தேர்ந்தால் தேரையர் என்ற புனைப் பெயர் சூட்டப்பட்டு, தமிழ் மருத்துவத்தையும், தமிழ் இலக்கணத்தையும் தென் நாட்டு மக்களுக்கு கற்று கொடுத்ததாகவும் பல்வேறு தமிழ் மருத்துவ நூல்களை ஒருங்கிணைப்பதற்காகவும் அகத்தியரால் தென்னாட்டிற்கு அனுப்பப்பட்டவர் தான் தேரையர். தமிழில் பல நூல்கள் எழுதிய தேரையர் பல்வேறு மருத்துவ முறைகளை தமிழில் தொகுத்து, சித்த மருத்துவத்தின் சிறப்பு என்ன என்பதை இந்த உலகிற்கு தெளிவாக அறிவித்து கேரளாவில் சமாதியடைந்தார்.
தாங்கள் சமாதி அடைந்த தலங்களில் கேரளாவில் தேரையரும், அகத்தியரும் கூறிய பல்வேறு மருத்துவ குறிப்புகள், ஆயுர்வேத பஞ்சகர்மமாக, கேரளீய பஞ்சகர்மம் என்ற மாற்றம் செய்யப்பட்டு வடநாட்டு மருத்துவ முறைகளில் இல்லாத பல்வேறு மருத்துவ முறைகளையும், வட நாட்டு மக்களின் வழக்கமாக இல்லாத பல வாழ்வியல் முறைகளை பஞ்சகர்மா முறைகளாகவும் தொகுதி வெளியானதே கேரளீய பஞ்சகர்மமாகும். தென்னாட்டு மக்களுக்கு தமிழுக்கே உரித்தான பல்வேறு தமிழர்களின் வாழ்வியல் முறைகளை நாம் பின்பற்றுவது அகத்தியருக்கு நாம் செய்யும் குரு வணக்கம்.
தமிழ் வாழ்க! தமிழ் இலக்கணம் தந்த அகத்திய சித்தர் வாழ்க! அகத்தியர் நெறி பின்பற்றி நடப்போம்.
அகத்தியர் நமக்கு சொல்லிக் கொடுத்த விஷயங்களே இல்லை எனலாம். நோய் ஆரம்பமுற்ற காலத்தில் நோயாளியின் மணிக்கடை சுற்றளவை கணக்கிட்டு அவர் விரலளவுக்கும், மணி கடை சுற்றளவுக்கும் உள்ள விகித சாரத்தின் அடிப்படையில் இட நோயின் தீவிரத்தையும், என்ன நோய் இருக்கும் என்பது பற்றியும் அறியும் மணிகடை நூல் என்ற சூட்சுமத்தை நமக்கு கற்றுக் கொடுத்தவர் அகத்தியர். நாம் அன்றாடம் செய்யும் பாதையில் எந்தவித காரணமுமின்றி மூலிகைகள் கிள்ளி எறிவோம். அங்கு திரியும் பூச்சிகளை, ஐந்துகளை அடித்தோ, மிதித்தோ கொல்வோம். இதுபோன்று செய்வதால் பல வியாதிகள் உண்டாகும் என்று அகத்தியர் கர்ம நோயாக குறிப்பிடுகிறார். இந்த உலகமானது அனைவருக்கும் பொதுவானது. பறவைகள், விலங்குகள், மனிதர்கள் என அனைவரும் வாழ வேண்டும். அவர்களின் வாழ்விடத்தை வட்டமிட்டு அவர்களை விரட்டுவதால் நோய் உண்டாகும் என அகத்தியர் குறிப்பிடுவது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நல்ல எண்ணத்தின் அடிப்படையாகும். நவீன உலகில் ஜோதிடத்தை பற்றிய பல்வேறு மாற்று கருத்துக்கள் இருந்த போதிலும் கூட, வான சாஸ்திரத்தின் சித்தர்களின் அறிவை இன்றும் மறக்க முடியாது. சூரியன், சந்திரன்,புதன்,குரு, சுக்கிரன், சனி போன்ற உலகங்கடிள பல்வேறு தாவரங்களுடனும் நமது உணவுப் பொருட்களுடனும், விலங்குகளுடனும் ஒப்பிட்டு இந்த கிரகத்தின் பாதிப்பு இருந்தால் இந்த விலங்குகளை போற்றி பாதுகாக்க வேண்டும். அவைகளை அழியாமல் காப்பாற்ற வேண்டும் என அகத்தியர் தனது ஜோதிட நூல்களின் குறிப்பிட்டிருப்பது சமூக நல்லிணக்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அம்சமாகும்.
ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும், ஒரு நோயாளி எப்படி நடந்து கொள்ள வேண்டும், நோயாளியுடன் வருபவர்கள் எப்படி மருத்துவரிடமும் நோயாளியிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும், மருத்துவர் கூறும் வழிமுறைகளை எப்படி நோயாளி பின்பற்ற வேண்டும், நோயாளிக்கு தரும் உணவுகளின் மேல் எப்படி வீட்டில் இருப்பவர்கள் செம்மையாக நடந்து கொள்ள வேண்டும், எந்தெந்த நோய்க்கு எவ்வளவு கட்டணம் வாங்க வேண்டும், எந்த நோய் தீரும், தீராது, நோயின் தீராத நிலையில் எப்படி இறப்பை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை கற்றுக்கொள்ள வேண்டும். இறைவழிபாடு, மருத்துவம், மந்திரம், வாழ்வியல் முறைகள், கர்மவினை, கன்மம், பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்வின் அர்த்தம் என்ன அகத்தியர் நமக்கு கற்றுக்கொடுத்த எங்கள் ஏராளம்.
சித்த மருத்துவம் தமிழர்களின் வாழ்வியல் மருத்துவம். இயற்கையாக நமக்கு கிடைக்கும் பொருட்களை கொண்டு அன்றாட வாழ்க்கைக்கு எப்படி நாம் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். நோயின்றி வாழ வேண்டும் என்பது பற்றி அகத்தியர் பல்வேறு சித்தர்கள் வாயிலாக நமக்கு கற்றுக் கொடுத்தவற்றை நாம் பின்பற்ற வேண்டும். காலையில் எழுந்து கரி, உப்பு, வேப்பங்குச்சியில் பல் துவக்குவதில் இருந்து, சிறு தானியங்களால் செய்யப்பட்ட கஞ்சி, நீராகாரம், நீர்,மோர், தேற்றாங்கொட்டை சுத்தப்படுத்தப்பட்ட நீர், கீரை, அறுசுவை உணவு, இரவில் விரைவிலேயே உறங்கச் செல்லுதல், அதிகாலையில் விரைவிலேயே எழுந்திருத்தல், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சந்தோஷமான வாழ்க்கை முறை ஆகியவை தான் சித்த மருத்துவம் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடங்கள். நவீன வாழ்க்கை முறைக்கு உணவுகளுக்கு அடிமையானதால் நாம் இழந்துவிட ஆரோக்கியத்தை மீட்டெடுக்க சித்தர்கள் கூறிய நெறிகளைப் பின்பற்றி எண்ணெய் முழக்கு, அறுசுவை உணவு, சித்தர்களின் யோக வாழ்க்கை, விரதமிருத்தல் என நோய் அணுகா விதி முறைகளை கடைப்பிடித்து ஆரோக்கியமாக வாழ்வோம். டிசம்பர் 26 இரண்டாம் சித்த மருத்துவ தினம். சித்தர்களின் பெருமை போற்றுவோம். சித்த மருத்துவத்தை பின்பற்றி நோயில்லா நெறி முறையை கற்றுக் கொள்ளுவோம்.

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...