#கசகசாம்ருத #திருமண #தேவதைகள்
20 ம் நூற்றாண்டு வரை அச்சிடப்பட்ட மஞ்சள் வண்ணத் திருமணப் பத்திரிக்கையில், மேலே இரு புறமும் இரண்டு
மாலைகளுடன் விண்ணில் பறக்கும் நிலையில் ஆசி தரும் தேவதைகளின் படங்களை பார்த்திருப்பீர்கள்.
இரண்டு மாலைகளுடன் விண்ணில் பறந்த நிலையில் ஆசி தரும்
இந்த இரண்டு தேவதைகளும்
கசகசாம்ருத லோகங்களைச் சார்ந்தவர்களாவர்!
இவர்கள் தாங்கி வரும் மாலைகளின் மலர்களில் கசகசாம்ருதத் துளிகள் நிறைந்திருக்கும்.
சித்தர்களே நன்கு அறிந்த “அமிர்த நேரக் கடிகை” நேரத்தில், ஆலயங்களில், சுவாமி சன்னதி முன், குருவருளால் தாலி கட்டுவோர்க்கு, இவர்கள் கசகசாம்ருத சக்திகளைப் பொழிந்து பரிபூரண ஆசிகளை அளிக்கின்றனர்.
குடும்பத்தில் சாந்தம் பேண உதவும் கசகசாம்ருத தேவி பூஜை!
தற்காலக் குடும்ப வாழ்க்கையில் கணவன், மனைவி இடையே பலத்த மன வேறுபாடுகள் பெருகி வருகின்றன.
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பரஸ்பர அன்பு, பணிவு, அடக்கம் போன்ற நற்குணங்களை கு(ம)றைந்து வருவதும், பக்தி நிறைந்த தக்க பூஜை, விரத வழிபாடுகளும் இல்லாமையுமே, இத்தகைய பலத்த மன வேறுபாடுகளுக்கு மூல காரணமாகின்றன.
இதற்குத் தக்கப் பரிகாரமாக அமைந்து, குடும்ப நல்வாழ்விற்குத் துணைபுரிவதே ஸ்ரீகசகசாம்ருத தேவி வழிபாடாகும்.
கசம் நீக்கி அருள்புரியும் கசகசாம்ருத தேவி!
வாழ்க்கையின் எந்நிலையிலும், எத்தகைய பிரச்னைகளும் வந்தாலும், கணவனை விட்டுப் பிரியாது, அவருக்கும், அவருடைய நற்காரியங்களுக்கும் எந்நேரமும் உறுதுணையாக இருந்து உதவுதலே உத்தம மனைவிக்கு நல்ல இலக்கணமாகும்.
இதற்குரிய சுமங்கலித்வ சக்திகளைப் பெற்றுத் தர உதவுவதே கசகசாம்ருத தேவி வழிபாடு!
திருச்சி வாளாடி அருகே உள்ள இடையாறுமங்கலம் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் ஆலயத்தில் கோதூளி லக்ன நேரத்தில் தினமும் இங்கு அம்பிகையை கசகசாம்ருத தேவி சூக்கும,தூல வடிவில் வழிபட்டு இதன் பலாபலன்களை இங்கு வழிபடுவோர்க்கு அளிப்பதற்காக ஸ்ரீமாங்கல்ய மகரிஷியின் திருப்பாதங்களில் அர்ப்பணித்துச் செல்கின்றாள்!
ஒவ்வொரு பொருளுக்கும் இரு புறங்கள் உண்டு.
தங்கத்தில் உள்ள அழுக்கையும், இல்லறத்தில் கணவன், மனைவி இடையே உள்ள மன வேறுபாடுகளையும் “கசம்” என்றும் சொல்வதும் உண்டு.
பல அற்புதமான பீஜங்கள், பீஜ அட்சரங்கள், பீஜ அட்சங்கள், பீஜ அட்சாட்சரங்கள் ஆகிய வேதச் சதுர் பீஜகுணங்கள் நிறைந்த சொல் இது!
பலத்த மனக் கசப்புகள், இல்லறப் பகைமையின் ஊடே பிறக்கும் குழந்தைக்கு இதனால்தாம் ‘கசமுத்து’ எனப் பெயரிட்டு, ‘கசம் நீக்கும்’ (வைத்ய) முத்தாய் வளரப் பெரியோர்கள் ஆசிர்வதிப்பர்.
இவ்வாறு மனக்கசத்தை அறுக்கும் முறையே கஷாயமாகின்றது.
(வைத்யக்) கஷாயம் தானே நோய் நொடிகளையும்,
பிறவிப் பிணிகளையும் தீர்க்கின்றது!
கலியுக இல்லறத்தில், தம்பதியரிடையே மன வேறுபாடுகள் இன்றி, கசகசாம்ருத அன்பு (அமிர்த) சக்திகள் பெருகிட, ரோகிணி தேவியே கசகசாம்ருத தேவியை எந்நேரமும் பூஜித்து, அருட்பலன்களை நமக்கு நல்குகின்றாள்.
கசகசாம்ருத தேவி வழிபாடு!
அமிர்த யோகம் கூடும் திங்களன்று, மூலிகைத் திரவியங்களுள் ஒன்றான கசகசாவுடன், பால், வெல்லம், முந்திரி, திராட்சை சேர்த்து, கசகசாவினால் ஆன அல்வா செய்து, கசகசாம்ருத தேவிக்குப் படைக்க வேண்டும்.
ரோஹிணி தேவியுடன் சேர்ந்து அருளும் ஸ்ரீசந்திர பகவானை வழிபட்டு, கசகசா அல்வாவினை ஏழைகளுக்குத் தானமளித்து வர,
இல்லற வாழ்வில் உள்ள கடுமையான மன வேறுபாடுகள் தணிந்து, அற்புதமான முறையில் குடும்பத்தில் ஒற்றுமை, சாந்தம் பெருகும்
கசகசாம்ருத சக்திகள் பூரிக்கும் தலங்கள்!
கசகசாம்ருத தேவ சக்திகள் திளைக்கும் தலங்களுள் ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர், ஸ்ரீசோமநாதர், ஸ்ரீசோமேஸ்வரர், ஸ்ரீசந்திரசேகரர் போன்ற சோம, சந்திர நாமத்துடன் இறைவன் அருளும் தலங்களும் உண்டு.
ஸ்ரீசந்திர பகவான் தனித்து அருளும் சன்னதிகள், சுக்கிரவார அம்மன், ஆடிப் பூர அம்மன் அருளும் தலங்கள், (சென்னை – பூந்தமல்லி அருகே உள்ள) நேமம் ஸ்ரீஅமிர்தாம்பிகை, திங்களூர், பட்டீஸ்வரம் அருகே சந்திரசேகரபுரம், பழையாறை, பேராவூரணி அருகே பெருமகளூர், முசிறி போன்றவையும் முக்கியமானவையே!
இவற்றில் கீழ்க் குறித்த நாட்களில் அபிஷேக, ஆராதனைகள், தான, தர்மங்களுடன் வழிபடுதல் சிறப்புடையதாம்.
கசகசாம்ருத சக்திகள் பூரிக்கும் இத்தலங்களில், சந்திர கிரகத்திற்கான நட்சத்திர நாட்களான ரோஹிணி, ஹஸ்தம், திருவோண நட்சத்திர நாட்கள், மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாள், திங்கள கிழமை, சந்திர கிரகண நாட்களில் சந்திர சேகராஷ்டகம், அபிராமி அந்தாதி மற்றும் சந்திரத் துதிகளை ஓதி, பக்தியுடன் வழிபட்டு வர, திருமணம் ஆகாதவர்களுக்குத் தோஷங்கள் நீங்கி நல்வரங்கள் அமைய உதவும்.
தம்பதியரிடையே ஒற்றுமை கிட்டும்.
அலுவல், தொழில், சச்சரவுகள் காரணமாகப் பிரிந்து வாழும் கணவன், மனைவி, குழந்தைகள், தம்பதியர் ஒன்று சேர நல்வழி பிறக்கும்.
மன உளைச்சல்கள் அடங்கி, மன நிம்மதி கிட்டும்.
எதுவும் என்னுடையது அல்ல
அனைத்தும் உன்னுடையதே
அருளாளா அருணாசலா

No comments:
Post a Comment