Friday, 26 December 2025

சாம்பிராணி போடுவது மிக முக்கியம் வீடுகளுக்கு...


 சாம்பிராணி

போடுவது மிக முக்கியம் வீடுகளுக்கு...
சாம்பிராணி புகை போடுவது ஏன்?
--------------------------------------------------------------
(கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமம் போன்ற அனைத்து ஹோமங்களும் செய்த பலனை கொடுக்கும் அபூர்வ மூலிகை தூப சாம்பிராணி தயாரிக்கும் முறை பற்றி கடந்த முறை ப்ரமரிஷி மலையில் என் குரு அன்னை சித்தர் ஐயா அவர்கள் தயாரிக்கும் போது எனக்கு சொன்னார். அந்த முழு ரகசியங்களையும் சித்தர்களின் குரல். இன்று பகிர்கிறேன்.)
நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய பூஜைப் பொருள் சாம்பிராணி. சாம்பிராணி என்ற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் வெண்புகையும் நறுமணமும் நம் ஞாபகங்களை நிறைக்கும். கல் போன்று கடினத்தன்மை கொண்ட சாம்பிராணி, ஒரு மரத்தில் இருந்து எடுக்கப்படும் பாலின் இன்னொரு வடிவமே என்பதை நீங்கள் அறிவீர்களா?
சாம்பிராணி மரங்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் பிரங்கின்சென்ஸ் (Frankincense) என்ற மரம் வடிக்கும் பிசின் தான் சாம்பிராணியாக உருமாறுகிறது. இது பாஸ்வெல்லியா செர்ராட்டா (Boswellia serrata) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தப் பிசின்தான் மெதுவாக இறுகி, ஒளிபுகும் தன்மையையும் எளிதில் எரியும் தன்மையையும் கொண்ட சாம்பிராணியாக உருமாறுகிறது. நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் இம்மரங்களிலிருந்து பால் அதிகமாக வடியும். ஆண்டு ஒன்றிற்கு ஒரு மரத்திலிருந்து 1 கி.கி வரையில் சாம்பிராணி பெற முடியும்.
சாம்பிராணியில் குங்கிலியம், மரத்துவெள்ளை, வெள்ளைக்கீரை, குமஞ்சம், பறங்கிச்சாம்பிராணி என்று பல வகைகள் உண்டு. நறுமணமிக்க புகையைத் தன்னுள்ளே வைத்திருந்தாலும், எரித்தால் மட்டுமே புகையாய் அந்த நறுமணத்தைத் தரும்.
இந்தியாவில் தமிழ்நாட்டிலும், குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிஸா போன்ற மாநிலங்களிலும் இந்தச் சாம்பிராணி மரங்கள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் இந்த மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இது உறுதியானது என்றாலும் எளிதில் அறுக்கவும், இழைக்கவும் முடியும். இந்த மரங்களில் இருந்து தீக்குச்சிகளும் தயாரிக்கப்படுகின்றன. பண்டைக் காலம் தொட்டே சாம்பிராணியின் பயன்பாடு இருந்து வருகிறது. மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம் கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார். பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தாராம். சாம்பிராணி மருத்துவப் பயனும் தருகிறது. சாம்பிராணி மரப் பிசினை நீருடன் சேர்த்துத் தயாரிக்கப்படும் மருந்து இருமல், காமாலை, நாட்பட்ட புண்கள், சொறி, சிரங்கு, படர்தாமரை போன்றவற்றுக்கு அருமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
சாம்பிராணி தூபம்:-
-----------------------------------
சாம்பிராணி அனைத்து மதத்தினரும் சாம்பிராணி தூபம் போடுவதை கடைபிடிக்கிறனர். ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் சுமங்கலி பெண்கள், மங்கல நாட்களான செவ்வாய், வெள்ளி கிழமைகளில் மாலை வேளையில், தெய்வம் படங்களுக்கு விளக்கு கொடுத்தால், சாம்பிராணி தூபமிட்டால் அந்த வீட்டில் இருக்கும் பீடைகள், தரித்திரம் அகலும். லட்சுமி கடாட்சம் பொங்கும்.
சாம்பிராணி புகையே, அக்காலங்களில் அரசர்கள், பெரும்செல்வந்தர்கள் இருப்பிடங்களில், வாசனைப் புகையாகவும், கொடிய நச்சுக்களைப் போக்கக்கூடியவையாகவும் பயன்பட்டன. சமய சடங்குகளிலும் இவையே இடம்பெற்றன.
பழங்கால வழக்கம்:-
-----------------------------------
முன்னோர் கூறியவை எல்லாம், சுத்த பட்டிக்காட்டுத்தனம் என்று சொல்லி, இன்று பல்வேறு வழிகளில், இயற்கையை விட்டு விலகி, நம் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டோம். இன்று கஷ்டப்படுகிறோம். "இயற்கை சாம்பிராணி" எதற்கு என்ற மகத்துவம் அறியாமல், அதை விலக்கி, செயற்கையாக கிடைக்கும், சாம்பிராணி வில்லைகளை வாங்கி, நாமும் சாம்பிராணி புகையை வீடுகளில் போடுகிறோம், என்று நம்மை நாமே, ஏமாற்றிக் கொள்கிறோம்.
தூபக்கால் எனும் சாம்பிராணி காட்டும் பாத்திரத்தில், தேங்காய் ஓடுகளை எரித்து, அதில் நெருப்பை உண்டாக்கி, அதில் சுத்த சாம்பிராணியை பொடியாக்கி தூவ, வீடுகளில், தெய்வீக நறுமணம் உண்டாகும்.....
இந்த சாம்பிராணி புகையை வீடுகளில் உள்ள பூஜையறையில் காட்டி விட்டு, பின்னர், வீடு முழுவதும், வரவேற்பறை, சமையலறை மற்றும் படுக்கையறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், சாம்பிராணி புகையை காட்டி வருவர்.
முன்னோர் செயலில் எதற்கும் ஒரு விளக்கம் இருக்கும், பெண்களின் கருப்பை சார்ந்த அனைத்து பாதிப்புகளையும் சரி செய்வதுடன், சாம்பிராணி புகையை சுவாசிக்க, அது உடலில் உள்ள இராஜ உறுப்புகள் அனைத்தையும் எந்த வியாதியும் அணுகாமல், காத்து வரும். மேலும், தலைக்கு சாம்பிராணி புகையை காட்டி வர, தலை முடி கருமையாக வளர்ந்து, நரைகள் இல்லாமல், ஆண்கள் பெண்கள் அனைவரும் நலமுடன் வாழ்ந்தனர். தற்போதைய ஆய்வுகளில், குங்கிலிய, சாம்பிராணி மரப் பிசின்களில் உள்ள வேதிப்பொருட்கள், புற்று வியாதிகளை சரியாக்கக்கூடிய, மருத்துவ தன்மை மிக்கவை என ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். இதையே நம் முன்னோர் அன்றே கூறி, வீடுகளில் வாரமிருமுறையும் சாம்பிராணி புகைக்கச் சொல்லி, அறிவுறுத்தி வந்தனர். சாம்பிராணி புகை நச்சுக்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மிக்கது. எனவே, வீடுகளில் நாம் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் சாம்பிராணி புகையிட்டு வர, கிருமிகள் விலகி விடும், வீட்டில் உள்ளவர்களுக்கும் எந்த பாதிப்புகளும் நேராது என்ற எண்ணத்திலேயே, வீடுகளில் சாம்பிராணி புகை இட்டனர். வீடுகளில் வாரமிருமுறை சாம்பிராணி புகையை இட்டு வர, நச்சுக்கள் எல்லாம், விலகி விடும். "குங்கிலியத்திலும், சாம்பிராணியிலும் உள்ள வேதி அமிலங்கள், மனிதர் உடல் நலனைக் காக்க, பயனாகின்றன".....
சாம்பிராணியில் பின்வரும் பொருட்களை கலந்து தூபமிட பின்வரும் பலன்கள் உண்டாகும் என சித்த ஆயுர்வேத நூல்கள் சொல்கிறது.
(1) சந்தனத்தில் தூபமிட தெய்வ கடாட்சம் உண்டாம்.
(2) சாம்பிராணியில் தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
(3) ஜவ்வாது தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.
(4) அகிலில் தூபமிட குழந்தை பாக்கியம் உண்டாகும்.
(4) துகிலியில் தூபமிட குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியத்தினை உண்டாகும்.
(4) தசாங்கத்தில் தூபமிட தரித்திரியங்கள் அனைத்தும் நீங்கி அஷ்ட ஐஸ்வர்யம் கிட்டும்.
(5) துளசியில் தூபமிட காரியத்தடைகள், திருமணத்தடைகள் நீங்கி விரைவில் நடந்தேறும்.
(6) தூதுவளையில் தூபமிட எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்.
(7) வலம்புரிக்காயில் தூபமிட பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.
(😎 வெள்ளைகுங்கிலியத்தில் தூபமிட துஷ்ட ஆவிகள் இருந்தவிடம் தெரியாது நீங்கிவிடும்.
(9) வெண்கடுகில் தூபமிட பகைமை எதிர்ப்புகள் விலகும்.
(10) நாய்கடுகுகில் தூபமிட துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர்.
(11) கோஷ்டத்தில் தூபமிட நவக்கிரக கோளாறுகள் நீங்கும்.
(12) மருதாணிவிதையில் தூபமிட சூனிய கோளாறுகளை நீக்கும்.
(13) கரிசலாங்கன்னியில் தூபமிட மகான்கள் அருள்கிட்டும்.
(14) வேப்பம்பட்டையில் தூபமிட ஏவலும் பீடையும் நீங்கும்.
(15) நன்னாரிவேரில் தூபமிட இராஜவசியம் உண்டாக்கும்.
(16) வெட்டிவேரில் தூபமிட சகல காரியங்களும் சித்தியாகும் .
(17) வேப்பஇலை தூளில் தூபமிட சகலவித நோய் நிவாரணமாகும்.
(18) மருதாணி இலை தூளில் தூபமிட இலட்சுமி கடாட்சம் உண்டாகும்.
(19) அருகம்புல் தூளில் தூபமிட சகல தோஷமும் நிவாரணமாகும்.
மேலே குறிப்பிட்டுருக்கும் அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். தேவைப்படுபவர்கள் வாங்கி பயன்படுத்தி பாருங்கள்...
அறிவியல் உண்மை:-
-------------------------------------
பொதுவாக அறிவியல் ரீதியாக சாம்பிராணி தூபம் போடுவதால், வீடு மட்டும் கடைகளில் எல்லா இடங்களிலும் உள்ள கெட்ட காற்றை அகற்றும். மேலும் விஷ ஜந்துகள் அண்டா விடாமல் வெளியேற்றும். சாம்பிராணி காட்டுவது என்பது நம் தொன்று தொட்டு இருக்கும் ஒரு வழக்கம்.
அது எந்தந்த நாட்களில் இறைவனுக்கு காட்டினால் எந்தெந்த பலன்கள் கிடைக்கும்....
(1) ஞாயிறு அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் - ஆத்ம பலம், சகல செல்வாக்கு, புகழ் உயரும், ஈஸ்வர அருள் கிட்டும்.
(2) திங்கள் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – தேக, மன ஆரோக்கிய மன அமைதி, அம்பாள் அருள் கிடைக்கும்.
(3) செவ்வாய் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – எதிரிகளின் போட்டி, பொறாமை மற்றும் தீய-எதிர் மறை எண்ணங்களின் மூலம் உண்டான திருஷ்டி கழிதல், எதிரிகளின் தொல்லை நீங்குதல், முருகனின் அருள், கடன் நிவர்த்தி போன்ற பல நல்ல பலன்கள் கிட்டும்.
(4) புதன் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில் இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி, வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல் போன்ற பல நல்ல பலன்கள் கிட்டும்.
(5) வியாழன் அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – சகல சுப பலன்கள், பெரியோர்கள் குருமார்கள் ஆசி கிட்டுதல், அத்துடன் சித்தர்களின் மனம் குளிரும், முன்னேற்றங்கள் தொடரும் கிட்டும்.
(6) வெள்ளி அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் - லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி போன்ற பல நல்ல பலன்கள் கிடைக்கப் பெறும்.
(7) சனி அன்று சாம்பிராணி அல்லது தூபம் காட்டினால் – சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள் நீங்கி சனி பகவான், பைரவர் போன்றோரின் அருள் கிட்டும்...
தற்போது பெரும்பான்மையான மக்கள் விறகு அடுப்பு உபயோகிப்பது இல்லை இதனால் கரிதனல், மேலும் தூபக்கால் கிடைப்பதும் கடினம். நாம் சாம்பிராணி, குங்கிலியம் போன்றவற்றை வாங்கி வைத்தாலும், உபயோக படுத்த மக்கள் தயாராக இல்லை என்பதால் அதை குறித்து வைத்ததோடு விட்டுவிட்டோம்.
தற்போது இலங்கை மட்டக்களப்பில் வாழும் வ்வியாபாரம் செய்யும் நண்பர் ஒருவர் கேட்டு கொண்டதற்காக, சோதிப்பதற்காக அவருக்கு மூலிகைகளை பறித்து சுத்தம் செய்து கலந்து கொடுத்தேன். அவர் தொடர்ந்து 21 நாட்கள் உபயோகித்து பார்த்து நன்றாக இருப்பதாக கூறினார். முழுபலனையும் கூறவில்லை. கடந்த மூன்று மாதங்களாக வீடு மற்றும் கடைகளில் உபயோக படுத்துகிறார். தற்போது புதிய இடத்தில் கடை மாற்றம்
செய்துள்ளோம், இங்குள்ள கடை உரிமையாளர், இந்த மூலிகை தூப பொடியை உபயோகித்து நன்றாக உள்ளது, தூக்கமின்மை போகிறது, கடையில் நல்ல வித்தியாசம் தெரிகிறது என்றார்.
கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, துஷ்டசக்திகளை விரட்ட ''லக்ஷ்மி மூலிகை தூப பொடி'' தயாரிக்கும் முறை பற்றி சொல்கிறேன்.....
"கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி படக்கூடாது" என்பது முன்னோர் வாக்கு. ஒருவர் நல்ல செல்வ செழிப்புடன் வாழ்ந்தால் அவரை சுற்றி வாழும் சுற்றத்தார்க்கு மனதுக்குள் ஒரு பொறாமை தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கிவிடும். இதைத்தான் பொறாமை, பொல்லாப்பு, வயிற்றெரிச்சல் என்பர். இத்தகைய துர் எண்ணங்களோடு, பொறாமையோடு பிறர் நம்மை பார்ப்பதையே கண்திருஷ்டி, கண்ணேறு, ஓமல் என்று முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். தீங்கை உண்டாக்கும் ஒருவரது பார்வைக்கு கண்திருஷ்டி, கண்ணேறு, ஓமல் என்று பெயர். கண்திருஷ்டி, கண்ணேறு, ஓமலால் முகத்தில் கருஞ்சிவப்பாய் படர் தாமரை உண்டாக்கும், கண்திருஷ்டியினால் உடலில் வியாதிகள், சுகவீனம் உண்டாகும். குடும்பத்தில் மனநிம்மதியின்மை, வீண் குழப்பங்கள், சண்டை - சச்சரவுகள், தேவையற்ற வம்பு - வழக்குகள், தொழிலில் குழப்பங்கள், வியாபாரத்தில் நலிவு - நஷ்டங்கள் - கடன்கள் உண்டாகுதல் முதலிய துன்பங்கள் உண்டாகும்.
செல்வவளம் தரும், லட்சுமி வசியம் தரும் நவகிரக தூப பொடியில் கலக்க வேண்டிய பொருட்கள்.
(1) மருதாணி விதை.
(2) கஸ்தூரி.
(3) கருங்காலி
(4) செந்நாயுருவி.
(5) இலுப்பை.
(6) புனுகு.
(7) புங்கன்.
(😎 குங்கிலியம்.
(9) வெள்ளெருக்கு.
(10) ஏலக்காய்.
(11) வெண்கடுகு.
(12) கோராசனை.
(13) கோஷ்டம்.
(14) நொச்சி.
(15) ரோஜா இதழ்.
(16) சந்தனம்.
(17) அகில்.
(18) தேவதாரு.
(19) துளசி.
(20) தாமரை.
(21) லாமிச்சை வேர்.
(22) மைகாசி.
(23) தும்பை.
(24) அருகம்புல்.
(25) வேப்ப இலை.
(26) வில்வ இலை.
(27) நன்னாரி.
(28) வெட்டிவேர்.
(29) நாய்க்கடுகு.
(30) ஆலங்குச்சி.
(31) அரசங்குச்சி.
(32) நாவல் குச்சி.
போன்ற 32 வகையான மூலிகைகளை தனித்தனியாக பொடித்து சம அளவு எடுத்து தூய சாம்பிராணியில் கலந்து காற்று புகாத பாத்திரத்தில் சேமித்து வைத்து உபயோகபடுத்தலாம். இந்த முறையை போகர் நிகண்டு என்ற ஆயுர்வேத வைத்திய நூலில் தயாரிக்கும் முறை, பலன்களை பற்றி சொல்கிறார்.
இந்த மூலிகை கலவையை கொண்டு தூபம் போடுவதால், (சிவனடியார் கூறியது, சோதித்து பார்க்கப்பட்டது மேலும் பரிசோதனைக்கு உட்பட்டது)
(1) கணபதி மற்றும் நவ கிரக ஹோமம் செய்த பலனை எளிமையாக பெறலாம். (தடைகள் விலகும், எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும், ஏவல், பில்லி சூனியம் போன்ற தடைகள் நீங்கும். நவ கிரக தோஷங்கள் நீங்கிவிடும். எதிரிகள் தொல்லை, இறந்தவர்களின் சாபம் போன்றவை போய் விடும்)
(2) கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும், எதிரிகள் தொல்லை விலகும்.
(3) வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெரும். வீண் சண்டை... அமைதி இன்மை, தூக்கமின்மை போன்றவை அகலும்.
(4) நோய் தொல்லை நீங்கும். எந்த விஷ கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில் தங்காது.
பொதுவாக அறிவியல் ரீதியாக சாம்பிராணி தூபம் போடுவதால், வீடு மட்டும் கடைகளில் உள்ள அனைத்து இடங்களில் உள்ள கெட்ட காற்றை அகற்றும் மேலும் விஷ ஜந்துக்களை
அண்ட விடாமல் வெளியேற்றும். எதிர்மறை எண்ணங்களை குறைக்கும். மழை காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை குறையாமல் அதிகரிக்கும்.
#இயற்கை_சாம்பிராணியுடன் மேலே உள்ள மூலிகைகள் கலந்து பயன்படுத்தும் போது பலன்கள் இன்னும் அதிகமாகின்றன ..!
இவைகளை பற்றிய விளக்கங்கள் ஆழமாக சித்தர் பெருமான்கள் அகத்தியர் , கோரக்கர் , போகர் , மச்சமுனி ஆகியோரது குறிப்புகளில் உள்ளன....!
மூலிகை தூப பொடியை காற்று போகாமல் ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு, தினமும் தணல் மூட்டி அதில் சாம்பிராணி போடுவது போல தூபம் காட்ட வேண்டும். தூபம் காட்டுக்கு போது அவ்விடம் முழுதும் பரவி இருக்கும் படி காட்டுவது சிறப்பு.
தினமும் தூபம் காட்ட இயலாவிடின் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தூபம் காட்டலாம் .!!
"48 நாட்கள் தொடர்ந்து மூலிகை தூபம் போட்டு வருவது ஒரு யாகம் நடத்துவதற்கு சமமானது ..!"
(48 நாட்கள் தொடர்ந்து மூலிகை தூபம் போட்டு வந்தால் யாகம் நடத்திய பலன் கிடைக்கும்....!!!)
இந்த மூலிகை தூப பொடியை தயார் செய்து, நீங்களும் உபயோகித்து பலன்களை மறக்காமல் எழுதுங்கள்.
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...