Monday, 29 December 2025

எல்லா காலமும் தர்மத்தை காக்க அதர்மத்தை எதிர்த்து போராடிகொண்டே இருப்பவர் விஷ்ணு பெருமான்

 


எல்லா காலமும் தர்மத்தை காக்க அதர்மத்தை எதிர்த்து போராடிகொண்டே இருப்பவர் விஷ்ணு பெருமான், முரண் எனும் பெரும் அசுரனை எதிர்த்து அவர் போராடி அழித்தார், அது நீண்ட யுத்தம் என்பதால் அவர் யுத்தம் முடிந்ததும் ஓய்வில் இருந்தார்

அப்படி ஓய்வில் இருந்த பகவானை நள்ளிரவில் கொல்ல வந்த அசுரனை பகவானின் உடலில் இருந்து வந்த தேவதை அந்த அசுரனை ஒழித்துகட்டினாள். அந்த சக்திக்கு ஏகாதசி என பெயர் கொடுத்து சில வரங்களும் கொடுத்தார்
அதாவது அந்நாளில் விரதம் இருந்து வணங்குபவர்கள் சொர்க்கம் அடைவார்கள் என்பதாகும், ஏகாதசி உருவானது அப்படித்தான்
அப்படியே பிரம்மனுக்கு இரு அசுரர்கள் தொல்லை கொடுத்தனர், மது, கைடபர் எனும் இருவரும் ஊழி கால தொடக்கத்தில் வேதங்களை திருடி செல்ல முயன்றபொழுது பகவான் அவர்களை அழிக்க முனைந்தார், ஆனால் இருவரும் பகவானின் பாதத்தில் சரணடைந்ததால் அவர்களை மன்னித்து தன் துவாரபாலகர்களாக வைத்து கொண்டார்
மார்கழி மாதம் ஏகாதசியன்று அவர்களுக்காக சொர்க்கத்தின் வாசல் திறக்கபட்டது அன்றிலிருந்து இன்றுவரை அந்த நிகழ்வு இந்நாளில் விஷேஷமாக கொண்டாடபடும்
இதுதான் வைகுண்ட ஏகாதசி சிறப்பும் அந்த சொர்க்கவாசல் தத்துவமும்
செய்த பாவங்களுக்கு மனம் உருகி மன்னிப்பு கேட்டால் அப்பாவம் மன்னிக்கபடும் சொர்க்கம் அருளபடும் என்பது இந்த விரதத்தின் தத்துவம்
அதுவன்றி வேறு தத்துவமோ பொருளோ இல்லை,
ஒரு வகையான பாவநிவர்த்தி வழிபாட்டு நாள் இது
இந்நாளில் விரதம் இருந்து பிரார்த்தித்தால் சொர்க்கது வாசல் அவர்களுக்காக திறக்கபடும் எனபது நம்பிக்கை
ஆம் அசுரர்களே மனம் திருந்தினால் வைகுண்டத்தில் கதவு திறக்கபடும், அப்படி எந்த பாவியாயினும் அவன் கடவுளிடம் சரணடைந்தால் அவனுக்கு சொர்க்கம் அருளப்படும் என்பதே அதன் தத்துவம்
இந்துமதம் விஞ்ஞானமும் உடல்நலமும் கலந்த ஆன்மீக மதம் என்பதால் இந்த விரதம் நம்புகின்றவர்களுக்கு சொர்க்கவாசலை காட்டும் நம்பாதோருக்கு குறைந்த பட்சம் உடல்நலத்தையாவது காக்கும்
இன்றைய மருத்துவமும் 15 நாட்களுக்கு ஒருமுறை முழு விரதம் இருப்பது நோய்க்கு இடம் கொடுக்காது என்கின்றது, வாரம் ஒருமுறை இருந்தால் இன்னும் நல்லது என்கின்றது
இதை அன்றே உணர்ந்து பல விரதங்களையும் சில கடும் விரதங்களையும் உருவாக்கிற்று இந்துமதம்
விரதங்களில் உண்ணாமல் இருப்பது மட்டும் அல்ல, பேசாமல் இருப்பதும், தூங்காமல் இருப்பதும் ஒரு கட்டுபாட்டினை கொடுக்கும் என்கின்றது உடலுக்கான அறிவியல்
மவுன விரதம் என்றும் சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி என தூங்கா இரவுகளை இந்துமதம் அன்றே உருவாக்கியதும் அதற்குத்தான்
இன்றைய நாள் உண்ணாவிரதம், தூங்காவிரதம் அதிகம் பேசாமல் பகவானின் செய்திகளை கேட்கும் கவனிக்கும் நாளாக அமைந்துவிட்டது அப்படித்தான்
உடல்நலத்தையும் மனநலத்தையும் ஒருசேர கொடுக்கும் அந்த தர்மபடி இன்று வைகுண்ட ஏகாதசியினை மக்கள் கொண்டாடுகின்றார்கள்
அவர்களுக்கு எல்லா வளமும் நலமும் பகவான் அருளட்டும்
யாரையும் பசிக்க விடாதே, பசி கொடுமையனது என்பதையும், யாருடைய உணவையும் உணவுக்கான வழியினையும் பறித்தல் பெரும் பாவம் என்பதையும் அப்படியே யாரையும் நிம்மதியாக தூங்கவிடாதது பெரும் பாவம் என்பதையும் உணர்த்தும் நாள் இது
எல்லா உயிர்க்கும் உணவளித்தல், எல்லா உயிரையும் நிம்மதியாக தூங்க வைத்தல் ஆகியவன் மாபெரும் புண்ணியம் என்பதையும் சொல்லும் நாள் இது
ஏன் ஒவ்வொரு ஆண்டின் ஏகாதசியன்றும் விரதம் இருத்தல் வேண்டும்?
மரணம் ஒரு மனிதனுக்கு எப்பொழுதும் வரலாம், எந்நொடியிலும் வரலாம், அப்பொழுது அவன் பாவமெல்லாம் மன்னிக்கப்ட்டு சொர்க்கம் புக தயாராக இருத்தல் வேண்டும், எப்பொழுது மரணம் வந்தாலும் அவன் ஏற்றுகொள்ளும் அளவு தன் பாவங்களை எல்லாம் இறைவனிடம் சமர்பித்து சொர்க்கம் ஏக தயாராக இருத்தல் அவசியம்
எப்பொழுதும் யாரையும் பகவானின் நீதிமன்றம் அழைக்கலாம், அந்த அழைப்பு வரும் நேரம் நம்மிடம் உள்ள எல்லா குற்றங்களும் நீங்கியிருக்க வேண்டும், அதனாலே ஒவ்வொரு வருடமும் தங்கள் பாவத்தையும் குற்றங்களையும் மன்னிக்க இப்படி விரதமிருந்து உறங்காமல் அந்த பாவங்களுக்காக மன்றாடி சொர்க்க வாசலை மிதிக்க வேண்டும் , தன் பாவங்களை முழுக்க உணர்பவருக்கு சொர்க்கம் நிச்சயம் என்பதே இந்நாளின் தத்துவம்
பாவம் என்பது ஆசையால் விளைவது, ஆசை என்பது மாய சொரூபம். அந்த மாய ஆசையினால் செய்த குற்றங்களை மனதால் உணர்ந்தாலே பாவ மன்னிப்பு நிச்சயம்
கொடும் அசுரங்களுக்கே மன்னிப்பு அருளிய பகவான் உங்களையும் எம்மையும் மன்னிக்கமாட்டாரா என்ன?
ஆசை எனும் மாயையுடன் ஒவ்வொரு ஆத்மாவும் பெரும் போர் நடத்துகின்றது, அது களைக்கும் நேரம் மாயை மறுபடி வெல்ல பார்க்கின்றது , ஊழி காலம்முடியும் பொழுது பிரம்மனிடம் இருந்து வேதங்களை பறித்த அசுரர் போல வாழ்வு முடியும் காலம் மாயை மனதை கவ்வி செல்ல பார்க்கின்றது
இதனில் இருந்து விடுபட முழுக்க பகவானை சரண்டைய வேண்டும் அவன் நினைவில் மூழ்கி முழுக்க தன் ஆசை மாய பாவங்களுக்காக நிவர்த்தி தேடவேண்டும் என்பதே இந்நாளின் தத்துவம்
அந்த பரந்தாமன் எல்லோருக்கும் ஞானம் கொடுத்து எல்லோருக்கும் சொர்க்கத்தை அருளட்டும் , சொர்க்க வாசலுக்கு முந்தைய ஞானவாசல் எல்லோருக்கும் திறக்கட்டும்.
பிரம்ம ரிஷியார்

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...