ஸ்ரீ நடராஜப்பெருமானின் திருவடிகள் போற்றி !கொம்பெழுத்தோ, காலெழுத்தோ இல்லாமல்
பதஞ்சலி பதம் பாட, பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் தாளம் போட, நந்தி, தந்திமுகன், ப்ருங்கிமுனிவர், சனகாதிமுனிவர்கள், தேவாதிதேவர்கள் என அனைவரும் கூடி நின்று பார்க்க, சலங்கை “ஜல் ஜல்” என ஒலிக்க ஆனந்த நடனம் ஆடினார் நடராஜன். ஸ்ரீ ஆனந்த நடராஜப்பெருமானின் திருவடிகள் போற்றி
சிதம்பர ரகசியம்- பதஞ்சலி பாடிய பதம்! கூத்தனின் நடனம்!
பதஞ்சலிக்கு முகம் வாட்டம் அடைந்தது. தான் ஆத்மார்த்த அனுபவத்தில் திளைத்து ஈசனின் ஆட்டத்தில் ஒன்றிப் போகவில்லையோ? இவர்கள் சொல்வது தான் சரியோ? ஒரு வேளை புலிக்கால்களும், நந்தியெம்பருமானைப் போல் கொம்புகளும் இருந்தால்தான் நாட்டியத்தை ரசிக்கும் பக்குவம் வருமோ? அப்போது அங்கே ஓங்கார சப்தம் ஒலிக்க ஈசன் வந்தார். கூடி இருக்கும் ரிஷி, முனிவர்களிடையே ஓர் ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டிருந்த பதஞ்சலியைக் கிட்டே அழைத்தார் கருணைக் கடலாம் எம்பெருமான். பதஞ்சலி முனிவரைப் பார்த்து, “பதஞ்சலி, இன்று யாம் பாதம் தூக்கி ஆடப் போகும் நடனத்திற்குப் பதம் பாடப் போவது நீயே தான்! உன்னுடைய பதத்துக்குத் தான் நான் ஆடப் போகின்றேன்.” என்று சொல்லவும் பதஞ்சலிக்குக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.
மேலும் கூறுகின்றார் ஈசன், “பதஞ்சலி, இன்றைய பாடலில் கொம்பும், காலும் வரக் கூடாது!”என்று சொல்லவும் சுற்றி நின்றவர்கள் அனைவரும் திகைத்துப் போகப் பதஞ்சலி முனிவரோ “அப்படியே ஆகட்டும் ஈசனே!” என வணங்கி நின்றார். வியாக்ரபாதரின் முகத்திலும், நந்தி எம்பெருமானின் முகத்திலும் ஈ ஆடவில்லை. பதஞ்சலி பதம் பாட ஆரம்பித்தார். எப்படித் தெரியுமா? கொம்பெழுத்துகளும், துணைக்காலோடு கூடிய எழுத்துகளும் வராதபடிக்கு துதி ஒன்றைப் பாடினார். கெ, பெ, போ, ஆகிய எழுத்துகளில் போடும் ஒற்றைக் கொம்பும், இரட்டைக் கொம்பும், கா, பா, சா, லா, ளா போன்ற எழுத்துகளில் வரும் துணைக்காலும் இல்லாமல் பாடிய அந்த நடராஜர் துதி ஒரு பாடல் !
“அநந்த நவரத்ன விலசத் கடக கிங்கிணி சலஞ்சல சலஞ்சல அரவம்!
முந்த விதி ஹஸ்தக தமத்தல லய த்வநி திமித்திமி நர்த்தந பதம்!
சகுந்தரத பர்ஹிரத நந்திமுக தந்திமுக ப்ருங்கிரிடிஸங்க நிகடம்!
ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ!”
இம்மாதிரிக் கொம்பெழுத்தோ, காலெழுத்தோ இல்லாமல் பதஞ்சலி பதம் பாட, பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் தாளம் போட, நந்தி, தந்திமுகன், ப்ருங்கிமுனிவர், சனகாதிமுனிவர்கள், தேவாதிதேவர்கள் என அனைவரும் கூடி நின்று பார்க்க, சலங்கை “ஜல் ஜல்” என ஒலிக்க ஆனந்த நடனம் ஆடினார் நடராஜன்.
இந்தப் பாடலைச் சாதாரணமாய்ச் சொல்லிப் பார்த்தாலே நடனம் ஆடுவது கண் முன்னே தெரியும்.

No comments:
Post a Comment