Monday, 29 December 2025

48. பார்வதியின் கேள்வியும் காசி க்ஷேத்திரத்தின் ரகசியங்களும்

 சிவமகா புராணம்


48. பார்வதியின் கேள்வியும் காசி க்ஷேத்திரத்தின் ரகசியங்களும்
சிவஞானச் செம்மலே! காசி நகரமே புண்ணிய க்ஷேத்திரங்களில் சிறந்தது என்று சொன்னீர்கள். அதை விளக்கமாக எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நைமிசாரண்ய ரிஷிகள் வேண்டினார்கள். சூத முனிவர் சொல்லத் துவங்கினார். முனிவர்களே! காசி மஹாத்மியத்தையும் விஸ்வேஸ்வர லிங்கம் மகாத்மியத்தையும் உங்களுக்குச் சுருக்கமாகவே சொல்லுகிறேன். ஒரு காலத்தில் பார்வதிதேவி சிவபெருமானை நோக்கி, உலகிலுள்ளவர்களுக்கு இந்தக் காசி க்ஷேத்திர மகிமையைத் தெரிவிப்பதற்காக நாதா! இந்தக் காசி க்ஷேத்திர பிரபாவத்தைத் தயவு செய்து விபரமாகச் சொல்ல வேண்டும் என்று கேட்க சிவபெருமான் உமா தேவியாரின் விருப்பத்திற்கிணங்க, உலகத்தாருக்கு எல்லாம் நன்றாகத் தெரிவதற்காகவும் காசி மகாத்மியத்தைத் திருவாய் மலர்ந்தருள்வரானார். பார்வதி! நீ உலகம் சுகம் பெறவேண்டி, இந்த விஷயத்தை விருப்பத்துடன் கேட்டுவிட்டாய், நீ விரும்பியவாறு நான் உனக்குக் காசியின் சிறப்பைச் சொல்லுகிறேன் கேள்.
இந்த க்ஷேத்திரம் மிகவும் இரகசியமானது, எனக்குப் பிரியமானது, சகல பிராணிகளுக்கும் சர்வ காலத்திலும் மோட்சத்தையளிக்க எளிதாயுமுள்ளது. இதில் இருந்து யோகசித்தி அடைந்த புண்ணியசாலிகள் என்னை தியானித்துப் பூஜை விரதம் தவம் முதலயிவற்றைச் செய்து என் சின்னங்களான பஸ்ம உருத்திராட்சங்களைத் தரித்து என் சிவலோகத்தையடைய விரும்பி உயர்ந்ததான சிவயோகத்தை அப்பியாசித்து பஞ்சேந்திரியங்களை ஜெயித்து, இங்கே வசித்திருப்பார்கள். அநேக விதமான மரங்கள் பறவைகள் முதலியவற்றாலும் தாமரை, கருநெய்தல் முதலிய மலர்கள் நிறைந்த தடாகங்களாலும் அலங்கரிக்கப் பெற்று அப்ஸரசுகள் கந்தர்வர்கள் முதலியவர்களால் எப்போதும் சேவிக்கப்படும். இந்த முக்தி க்ஷேத்திரம் எனக்கு எப்போதும் வாசஸ்தானமாக இருக்கும்படிச் சம்பவித்த காரணத்தைச் சொல்லுகிறேன் கேள் என்னிடம் அன்புடையவனும் மனம் உடையவனும் இராகம் குரோதம் பயம் முதலியவற்றை விட்டவனும் சுகதுக்க லாப நஷ்டம் முதலியன ஒழிந்த சம மதிப்புடையவனும் கோபமற்றவனும் சிவஞானமுடையவனும் சிவதத்துவத்தை விசாரிப்பவனுமான அத்தகையவனுக்கும் எனக்கும் பேதமில்லை! அவனே சகல தீர்த்தங்களுக்கும் ஒப்பாவான் அத்தகையவனுடைய தரிசனத்தை நானும் விஷ்ணுவும் பிரமனும் மற்ற தேவர்களும் விரும்புவோம். ஏனென்றால், அத்தன்மையான ஒருவன் உயிர்விடுவோன் சமீபத்தில் இருந்தால் அவனைக்கண்டு உயிர் விட்டவன் மோட்சம் அடைவான். அவனை முக்தன் என்று சொல்ல வேண்டும். அவனே ஜீவன் முக்தன் அவனுக்கு விதிவிலக்குகள் கிடையாது.
இங்கு ஒரு விசேஷதீர்த்தம் உள்ளது. அதையும் சொல்லுகிறேன். பார்வதி பிரம க்ஷத்திரிய வைசிய சூத்திரர்களும் பிரமசரிய கிரஹஸ்த வானப்பிரஸ்த சந்நியாசிகளும், பால, குமார யவுவனர்களும் அபரிசுத்தனும் குழந்தையும் கன்னிகையும், பதிதையும், விதவையும், மலடியும் ரஜோ(சூத) தோஷமுடையவளும், பிரசவித்து இறந்தவளும் ஜகாகன் மாது சம்ஸ்காரங்கள் இல்லாதவளும் பரிசுத்தமானவளும் பாபியும் கர்மவசத்தையுடைய அஞ்ஞானியுமாயினும் இந்தக் காசி க்ஷேத்திரத்தில் மடிந்தால் சந்தேகமின்றி மோட்சமடைவார்கள். சுவேதசம் அண்டஜம் உத்பீஜம் சராயுசமாயினும் இங்கேயே இறந்த பட்சத்தில் அவையெல்லாம் மோட்சம் அடையும். கர்வ சத்வவனாயினும் ஞானமில்லாதவனாயினும் பாபியாயினும் சந்தேகமின்றி மோட்சம் அடைவான், ஞானம், தியானம், மோட்சம் யோகம் இல்லாதவர்களாயினும் தடையின்றி மோட்சம் அடைவார்கள். முன்பு நான் சொன்ன உயர் குணங்களையுடைய சிவஞானியர் கணக்கிலாதவர்கள் இங்கு வசிப்பதனால் இந்த க்ஷேத்திரம் எனக்கு எல்லா க்ஷேத்திரங்களையும் விடச் சிறந்ததாக இருக்கிறது. இந்த விஷயம் மிகவும் அந்தரங்கமானது, இந்த விபரத்தைச் சித்தியோகிகள் அறிவார்களேயல்லாமல் பிறர் அறியார்கள். இங்கு நகரமே யாவருக்கும் முக்தியை கொடுக்கத்தக்கது. இந்த நகரத்துக்கு அவிமுக்தம் என்னும் பெயர் உண்டு. (விமுக்தம்-விடத்தக்கது. அவிமுக்தம்-விடத்தகாதது)
காசிநகரம் ஒரு காலத்திலும் என்னால் நீங்கத்தகாதது என்றும் அந்நகரத்தையடைந்தவர்களை தன் மெய்யன்பர் போலப் பாதுகாத்து முக்தியளிக்கத் தக்கதன்றி விடத்தகாதது என்றும் பொருள்படும், நைமிசாரணியம், குருக்ஷேத்திரம், கங்காத்துவாரம் புஷ்கரம் முதலிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து. சேவித்து வருவதால் மோட்சம் உண்டாகலாமன்றி, இறந்தால் மோட்சம் அடைய மாட்டார்கள். இந்தக் காசிப்பதியிலோ இறப்பதனாலேயே மோட்சம் உண்டாவதால் எல்லா தலங்களையும்விட இந்தத் தலத்தில் நான் நீங்காது வசிப்பதால் இது பிரயாகையைக் காட்டிலும் சிறந்ததாகும். இந்த காசி நகரமானது க்ஷேத்திர சிறப்பு, தீர்த்தச் சிறப்பு, மூர்த்தி மகிமை என்ற மூவகை சிறப்புக்களையும் தன்னகத்தில் கொண்டது. இந்த நகரத்தில் வசிப்பவர்கள். அன்னம், பானம் நித்திரை ஸ்திரீபோகம் முதலிய யாவும் குறைவின்றி செய்து கொண்டிருந்து உயிரை விட்டாலும் மோட்சம் அடைவார்கள். அநேகம் பாபங்களைச் செய்து, அந்தப் பாப பலத்தால் பைசாசத்துவம் அடைந்தாலும் இந்தக் காசிப்பதியில் வசிப்பது பல கோடிப் புண்ணிய காரியங்களைச் செய்து சுவர்க்கத்தில் வசிப்பதை விட உயர்வானதாகும். இந்தத் தலத்தில் எம்மை நோக்கித் தவஞ்செய்து கொண்டிருக்கும் மகாநுபாவர்கள் அநேகர் வசிக்கின்றனர். எனவே மற்ற ஸ்தலங்களைவிட இந்த நகரத்தில் சுலபமாக உயர்ந்த பதவி கிடைத்து விடுகிறது. எந்தெந்தப் பயன்களையும் சாயுஜ்ய பதவியையும் யான் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். குபேரன் என்னிடத்தில் சகல கிரியைகளையும் சமர்ப்பித்து இந்தத் தலத்தில் என்னை சேவிப்பதால் காணாபத்தியம் அடைந்திருக்கிறான். பராசரன் என்ற யோகியும் வேதவியாசனும் வேதங்களைப் பாகுபடுத்திப் பிரித்து எனக்குப் பக்தர்களாக இங்கு இருக்கிறார்கள். திருமாலும் திருமகளும் பிரமனும் அநேக தேவரிஷிகளும் அஷ்டவசுக்களும் சூரியனும் இந்திரனும் ஏனைய தேவர்களும் யாவரும் என்னை உபாசனை செய்து கொண்டே இங்கு இருக்கிறார்கள். இன்னும் சிவயோகிகள் தமது ஸ்வரூபத்தைப் பிறருக்குக் காட்டாமல் என்னை இவ்விடத்தில் சேவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் ஐம்புலன்வழி மனதைச் செலுத்துபவனாயினும், தர்மங்களைச் சிதைத்தவனாயினும் இந்தத் தலத்தில் மாண்டவன் மீண்டும் தாயின் கர்ப்பத்தை அடையமாட்டான். ஐம்புலன்களை வென்றவர்களும் ஞானிகளும் உயர்பதவியுற்றவர்களும் என்னை இவ்விடத்தில் சேவித்துக் கொண்டிருப்பதால் இவ்விடத்தில் உயிர் நீங்கியவன் யோகபுருஷனாலும் அடையமுடியாத உத்தமப்பதவியை அடைவான்.
இந்தக் காசி க்ஷேத்திரத்தில் பிரமதேவனால் பிரதிஷ்டை செய்யப்பெற்ற கோப்பிரேக்ஷகம் ஒன்று உள்ளது. அது நம் கைலாயத்திற்கு சமானமானது இந்தக் கோப்பிரேஷகேச் சுரத்தைத் தரிசித்தவர்கள் துர்க்கதியை அடையமாட்டார்கள். கபிலாஹ்ரதம் என்ற பெயரால் வேறொரு க்ஷேத்திரமும் இங்கு உள்ளது. அதைச் சேவித்தாலும் பாபம் ஒழிந்து சிவலோகத்தையடைவார்கள் இதை என் ஸ்வரூபமாகப் பிரமன் படைத்தான் நீயும் இது என் ஸ்வரூமாக விளங்குவதைப் பார். இங்கு தேவர்கள் அனைவரும் என்னைப் பலவிதமாக பிரார்த்தித்ததால் யான் லிங்க ரூபமடையக் கண்ட பிரமன் என்னைப் பிரதிஷ்டை செய்து பூஜிக்க யோசித்துக் கொண்டிருக்கும்போது மகாவிஷ்ணு அந்தப் பிரமனின் கையிலிருந்த சிவலிங்கக் குறியைத் தானே! வாங்கிப்பிரதிஷ்டை செய்து முறையாக அருச்சனை செய்து முடித்தார். அதைக் கண்டதும் பிரமன் விஷ்ணுவே! நான் பிரதிஷ்டை செய்ய வைத்திருந்த சிவலிங்கத்தை நீ ஏன் பிரதிஷ்டை செய்தாய்? என்று கேட்க, அதற்குத் திருமால், பிரமனே! யான் சிவப்ரீதி மிக்கவன் நானே அதைப் பிரதிஷ்டை செய்தேனாயினும் அது உன் பெயராலேயே விளங்குக! என்று கூறினார். எனவே, அக்காரணத்தால் கபிலாஹ்ரதத்தில் இருக்கும் சிவலிங்கத்திற்கு ஹிரண்யகர்ப்பேசன் என்ற பெயர் வழங்குகிறது. இந்தக் காரணத்தாலும் யான் இங்கே இருக்கலானேன். ஆகையால் இந்த ஹிரண்யகர்ப்பேஸ்வரரைத் தரிசித்தவுடன் என்சிவலோகம் கிடைக்கும். மீண்டும் பிரமன் தன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக ஒரு சிவலிங்கம் இருக்க வேண்டும் என்று வேறு ஒரு சிவலிங்க ஸ்தாபனஞ் செய்தான். அதிலும் நான் லீனமாக இருந்ததால் லீனேஸ்வரன் என்ற பெயரையடைந்தது இங்கே மாண்டவன் மீண்டும் திரும்பாத மோக்ஷத்தையடைவான்.
பார்வதி! இன்னும் சிறிது தூரத்தில் பூர்வத்தில் தேவர்கள் அனைவரையும் துன்புறுத்தி வந்த அசுரேசன் பெரும் புலியின் வடிவைக் கொண்டு அமரர்களை அழைத்தான். அவர்கள் என்னைப்பிரார்த்திக்க நான் மனமிரங்கி அவனைச் சங்கரித்து மோக்ஷமளித்து தேவர்கள் வேண்டியவாறு வியாக்கிரேசுவரன் எனவும் எழுந்தருளியிருக்கிறேன். உன் தந்தையான் பர்வதராஜன் இது எனக்கு இன்பமுள்ள க்ஷேத்திரம் என்பதை உணர்ந்து இங்கு வந்து ஒரு சிவலிங்கத்தைத் தன் பெயரால் பிரதிஷ்டை செய்திருக்கிறான், அதுவே சயிலேஸ்வரலிங்கம். அதையும் பார் இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்தை அலங்காரம் செய்து கொண்டு கங்கைநதி விளங்குகிறது. வருணா, அசி என்ற நதிகள் இரண்டும் கலக்கின்ற காரணத்தால் இந்த க்ஷேத்திரத்துக்கு வாரணாசி என்றும் பெயர் வழங்கும் அவ்விரு நதிகளும் சங்கமமாகும் இடத்தில் பிரமன் ஒரு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்திருக்கிறான். அதற்கு சங்கமேஸ்வரன் என்று பெயர். மேலும் மத்தியமேஸ்வரர் கிருத்திவாகேஸ்வரர் சுக்கிரன் பூஜித்த சுக்கிரேஸ்வரர் இந்திராதி தேவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு அவரவர் பெயரால் விளங்கும் இலிங்கங்கள் பாபஹாரமான சிவலிங்கங்களையும் பார்! இந்த இலிங்கங்களேயல்லாமல் இன்னும் சில அந்தரங்கமான விஷயங்களையும் சொல்லுகிறேன் கேள்.
இந்தக் காசிப்பதி நாற்புறத்திலும் ஐந்து குரோச விஸ்தீரண முடையதாக இருக்கிறது. இந்தப் பஞ்சக் குரோசப்பதியின் எல்லைக்குள் எங்கேயாயினும் இறக்க நேரிட்டால் மோக்ஷம் உண்டாகும். பண்டிதன், வேத அத்தியயனமுடையவன், சண்டாளன், பதிதன், சன்னியாசி, முதலிய யாவராயினும் இங்கு இறந்தால் அவர்கள் மோக்ஷம் அடைவரார்கள்! என்று சிவபெருமான் கூறினார். அவ்வார்த்தைகளைக் கேட்டதும் பார்வதிதேவி, சுவாமி! நீங்கள் சொன்ன விஷயமானது எனக்கு ஆச்சரியத்தை விளைவிக்கிறது. கர்மஹீனனான சன்னியாசியும் கர்ம பந்தனாகிய பிறரும் சமானமாக நற்கதியடைந்து சமானமான போக மோட்சங்களை அடைவரார்கள் என்று சொல்லுகிறீர்களே! இது எனக்கு வியப்பூட்டுகிறது. அன்றியும் இறப்பவன் அவனது மனைவி புத்திரர், மித்திரர் தனம் முதலியவற்றில் மனத்தைச் செலுத்துவானாயின் அதற்கேற்ற பிறவியை அடைவான் என்று நீதி நூல்கள் கூறுகின்றனவே. எனவே இங்கு இறந்தாலும் தானஞ் செய்தது, தீர்த்த யாத்திரை செய்தது ஆகியவற்றால் அடையும் பயனை அடையாலாமே தவிர மோக்ஷத்தை அடையக்கூடுமா? இந்தச் சந்தேகங்களை தாங்கள் தயவு செய்து நீக்க வேண்டும்! என்று பார்வதிதேவி கேட்க பரமசிவன் பதில் சொல்லத் துவங்கினா

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...