அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை ஞீலிவனேசுவரர் திருக்கோயில்,
*சுவாமி பெயர் : அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் (வாழை வனநாதர்).
*அம்பாள் பெயர்: அருள்மிகு விசாலட்சி (நீள்நெடுங்கண் நாயகி)
*தலவிருட்சம்: ஞீலி, ஒருவகை கல்வாழை. பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது.
*சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஆகியோரால் தேவார ப் பாடல்பெற்ற சிவத்தலமாகும்.
*நித்தமும் இரவில் நடராசப் பெருமானை வணங்கும் வசிட்ட மாமுனி, ஒரு முறை இங்கு வந்து இரவில் தங்க நேர்ந்தமையால், இறைவன் அவருக்கு தமது ஆடலரசன் தோற்றத்தினை இவ்விடத்திலேயே காட்டியருளினார்.
அதனால் இத்தலம் மேலச் சிதம்பரம் எனப்படுகிறது.
*முன்னொரு காலத்தில் வாயுவுக்கும், ஆதிசேசனுக்கும், யார் பெரியவர் என்ற அகந்தைக் கூடியது. அதிசேசன் கைலாய மலையை சுற்றி வளைத்துக் கொண்டார். அதைத்தளர்த்த சண்ட மாருதத்தை (கடுமையான சூராவளிக் காற்று) உண்டு பண்ணினார். சண்ட மாருதம் கடுமையாக வீசியதால் கைலாயத்திலிருந்து எட்டு கொடுமுடிகள் (சிகரங்கள்) பெயர்ந்து விழுந்தன. அவை
. திருகோணமலை
. திருகாளத்தி
. திருசிராமலை
. திருஈங்கோய்மலை
. ரஜிதகிரி
. நீர்த்தகிரி
. ரத்தினகிரி
. சுவேதகிரி
என்பனவாகும். இவற்றுள் சுவேதகிரி என்பதே இத்தலமான திருப்பைஞ்ஞீலி. ஆகவே இது தென்கைலாயம் எனவும் வழங்கப்படுகிறது.
*ஏழு கன்னிமார்களான பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் திருமண வரம் வேண்டி இவ்விடத்தில் தவம் இயற்றுகையில், பார்வதி அன்னை அவர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு வரம் அளித்ததுடன், வாழை மர வடிவில் அத்தலத்திலேயே குடி கொண்டு என்றென்றும் தனது காட்சியினைக் கண்டு களித்தேயிருக்கலாம் எனப் பெரும் பேறளித்தாள். பின்னர், அவ்வாழை வனத்தின் மத்தியில் சிவனாரும் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளினார்.
*திருமணத் தடை நீங்க இக்கோயிலுக்கு வந்து சுவாமி, அம்மன் சன்னதிகளில் அர்ச்சனை செய்து கல்வாழைக்கு மாங்கல்யத்தைக் கொண்டு தாலிகட்டி கல்வாழை பரிகாரப் பூஜையை நிறைவேற்றினால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். திருமணம் முடிவாகிய பின்னர், திருக்கோயில் நிர்வாகத்துக்கு திருமண அழைப்பிதழை அனுப்பி வைப்பதும், திருமணம் முடிந்த பின்னர் தம்பதி சகிதமாக வந்து பரிகார நிவர்த்தி பூஜை செய்வதும் இன்றும் இக்கோயிலில் நடைபெறுகிறது. திருமண அழைப்பிதழை அனுப்பி வைப்பவர்களுக்குத் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் குங்கும-விபூதி பிரசாதம் அனுப்பப்பட்டு வருகிறது.
*வாரத்தில் அனைத்து நாள்களிலும் பரிகார பூஜை செய்யப்படுகிறது. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவிலான கூட்டம் கூடுகிறது.
*திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயருக்காக எமதர்மனை சம்ஹாரம் செய்ததால் பூமியில் உயிர்களுக்கு மரணம் இல்லாமல் போய்விட்டது. பூமிதேவி பாரம் தாங்க இயலாமல் தேவர்களுடன் சென்று சிவனிடம் முறையிட, இறைவன் திருப்பைஞ்ஞீலி ஆகிய இத்திருத்தலத்தில், எமனுக்கு உயிர் கொடுத்து அதிகாரம் வழங்கினார். குடைவரைக் கோயிலாக அமைந்துள்ள ஒரு சந்நிதி இங்கு எமனுக்காக உள்ளது.
இங்கு குழந்தை உருவில் எமதர்மராஜாவை காணலாம்.
*எமனுக்கான சிறப்புச் சந்நிதி உள்ளமையால், இங்கு நவக்கிரகங்கள் கிடையாது.
*இத்திருத்தலத்தில் ஆயுள் ஹோமம், ஷஷ்டியப்த பூர்த்தி (60 ஆம் கல்யாணம்), பீமரதசாந்தி (70 ஆம் கல்யாணம்), சதாபிஷேகம் (80 ஆம் கல்யாணம்) செய்வது மிக சிறப்பாகும்.
*திருநாவுக்கரசர் இத்தலம் நோக்கி வந்தபோது தாகமும், பசியும் அவரை வாட்டின. அவருடைய களைப்பைப் போக்க எண்ணிய சிவபெருமான் அவர் வரும் வழியில் ஒரு குளத்தையும், தங்கி இளைப்பாறுவதற்காக ஒரு மண்டபத்தையும் உருவாக்கி கட்டுச்சோறு வைத்துக் கொண்டு முதிய அந்தணர் வடிவில் காத்துக்கொண்டிருந்தார். களைத்து வந்த அப்பருக்கு பொதிச்சோற்றை உண்டு குளத்து நீரைப் பருகியும் மேலே செல்லும்படி இறைவன் கூற, அப்பரும் அவ்வாறே செய்தார். பிறகு இருவரும் திருப்பைஞ்சீலி நோக்கி சென்றனர். கோயிலின் அருகில் வந்தவுடன் அந்தணர் மறைந்தார். அப்போதுதான் இறைவனே அந்தணராக வந்து, உணவு அளித்ததை அப்பர் புரிந்து கொண்டார்.
"சோற்றுடைய ஈஸ்வரன்" என்னும் பெயர் கொண்டு அவருக்கு இத்தலத்தில் ஒரு தனிச்சந்நிதியும் அமைந்துள்ளது.
*ஆண்டுதோறும் சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திரத்தன்று "அப்பர் கட்டமுது விழா" நடைபெற்று வருகிறது.
*இத்திருக்கோயிலில் ஒன்பது படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கிச் சென்று மூலவரை தரிசிக்க வேண்டும். மூலவருக்கு முன்பாக நந்திக்கு எதிரில் ஒன்பது விளக்குகள் உள்ளன.
*இக்கோயிலில் அம்மன் சன்னதி இரண்டு உள்ளது. ஒரு சன்னதியில் நீள்நெடுங்கண் நாயகியும், மற்றொரு சன்னதியில் விசாலாட்சி அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றனர்.
விசாலாட்சி அம்மன் சந்நிதியின் முன் விசால தீர்த்தம், நந்தி மற்றும் கொடிமரம் உள்ளன.
*இத்திருக்கோயில் செவ்வாய் தோஷம், தார, புத்திர தோஷம் போன்ற பல்வேறு தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாகவும் விளங்கி வருகிறது.
*ஒவ்வொரு வருடமும், புரட்டாசி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில், சுயம்பு லிங்கத்தின் மீது சூரியக் கதிர்கள் படர்வதைக் காணலாம்.
*ஐந்து பிரகாரங்கள் கொண்ட இத்தலத்தில், ஏழு தீர்த்தங்கள் உள்ளன.
*இராவணன் வந்து வழிபட்டுச் சென்றதால் இக்கோயிலின் ராஜகோபுரம் இராவணன் திருவாயில் கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது.
*இது பல்லவர் காலக் கோயிற்கட்டிட அமைப்பைக் கொண்டுள்ளது.
பைஞ்ஞீலி மகாதேவர் மற்றும் பைஞ்ஞீலி உடையார் ஆகிய பெயர்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.
*திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவிலும், மண்ணச்சநல்லூரிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது.
சிவாயநம

No comments:
Post a Comment