யமன், பிரமன், இந்திரன்- பசு தான உபதேசங்கள்
''தெரிந்தாலும் நீங்கள் சொல்வதைக் கேட்க பிடிக்கும். சொல்லுங்கள் '' என்றான் யுதிஷ்டிரன். எனவே அவர் சொன்னது:
தனது அன்றாட அக்னி ஹோமத்துக்கு தேவையான அரணிக்கட்டை, தர்ப்பை, கமண்டலம், உத்ரணி, பாத்திரம், புஷ்பம், திரவியங்கள் எல்லாவற்றையும், கொண்டுவர மறந்து போய் விட்டேன், நீ போய் கொண்டு வா மகனே'' என்று ரிஷி உத்தலாகர் மகன் நசிகேதனிடம் சொன்னார். அவன் சென்று அவர் சொன்ன இடத்தில் ஆற்றங்கரையில் தேடியபோது, அவை வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகப்பட்டன என்று உணர்ந்து ''அப்பா அங்கே எதுவுமே இல்லையே, காணோமே'' என்று சொன்னான். ஏற்கனவே பசி.ஹோமம் பண்ண முடியாது என்று ஆத்திரம் ரிஷிக்கு.
''நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கள்'' என்று கேட்ட நசிகேதனிடம்,
''நீ எமனிடம் போய்ச்சேர்'' என்று சொல்லிவிட்டார் ரிஷி. ரிஷி சாபம் பலிக்குமே . நசிகேதன் அங்கேயே அப்பாவை வணங்கி கீழே விழுந்தான். இறந்தான். ஓர் பகல் ஒரு இரவு கழிந்தது.
ரிஷி தனது செயலுக்கு வருந்தினார். கண்ணீர் உகுத்தார். அதற்குள் நசிகேதன் யமலோகம் சென்றான்.
இரவெல்லாம் அழுத கண்ணீரால்,உத்தாலகரின் தியானத்தால் நசிகேதன் உடலில் அசைவு ஏற்பட்டது. தூக்கத்தில் இருந்து எழுந்தவன் போல் அமர்ந்தான்.
மகனே உன் நற்செயல்களால், விண்ணுலகம் சென்றாயா. உன் உடலில் ஒரு ஒளி தோன்றுகிறதே. நீ தேவனாகி விட்டாயா.சொல்லப்பா? என்கிறார் உத்தாலகர்.
''அப்பா, நான் தங்கள் ஆணைப்படி யமலோகம் சென்றேன். மாடமாளிகைகள் பொன்மயமாக எங்கும் இருந்தது. யமன் என்னை எதிர் கொண்டு அழைத்தான். ஆசனம் தனது உபசரித்தான்.
''தர்மராஜா, நான் தங்கள் தேசம் வந்து விட்டேன். என் கர்ம வினைப்படி என்னை எப்படி நடத்தவேண்டுமோ அதை பணிக்க வேண்டுகிறேன்'' என்றேன்.
''மகனே இங்கே விதி முடிந்தவர்கள் தான் ஏற்றுக் கொள்ளப் படுவார்கள். உனக்கு இன்னும் காலம் முடியவில்லையே. நீ இங்கு இருக்க முடியாது. நீ தந்தை சொல்லை மந்திரமாக ஏற்று இங்கே விருந்தாளியாக வந்தவன். ''நீ யமனிடம் போ'' என்று சொன்னதால் இங்கு வந்தவன். என்னைப் பார்த்தாகிவிட்டது. நீ திரும்பிச் செல்லலாம். உனக்கு என்னிடம் ஏதாவது வேண்டுமானால் கேள்'' என்றான் யமதர்மன்.
''தர்மராஜா, இங்கே புண்யம் பண்ணியவர்கள் வாழும் இடத்தைப் பார்க்க விருப்பம்'' என்றேன். யமதர்மன் என்னை ஒரு தேரில் வைத்து அழைத்துச்சென்று காட்டினான்.
''அப்பப்பா, கண்ணைப் பறிக்கும் தங்க மய மாளிகைகள், பச்சைப் பசேல் என்று நந்தவனங்கள், நிலவைப் பழிக்கும் ஒளி குளுமை, அழகிய மலர்கள், கனிகள் குலுங்கும் மரங்கள் செடிகள், கொடிகள், எங்கும் நறுமணம். பளிங்கு நீர் கொண்ட குளங்கள், ஏரிகள். தென்றல் காற்று. தேவலோகத்தில் அது தனி ஒரு விண்ணுலகம்.
''பாலும் நெய்யும் ஓடும் இந்த ஆறுகள் யாருக்காக? என்று யமனைக் கேட்டேன்.
''தான தர்மம் செய்தவர்கள், புண்ய காரியங்கள் செய்தவர்கள், பசுக்களை வாரி வழங்கியவர்கள் உபயோ
கிக்க'' என்றான்.
பசு தானம் செய்ய இயலவில்லை எனில் வேறு எந்த தானம் செய்தவர்கள் இந்த சுகத்தை அடைவார்கள் ?'' என்று கேட்ட நசிகேதசுக்கு
''உபவாசம் இருந்து பிராமணர்களுக்கு பக்தி சிரத்தையோடு எள்ளினால் செய்த பசுக்களை கொடுத்தவர்களும் இந்த பாலாற்றில் ஸ்நானம் செய்யலாம் .'' என்றான் யமதர்மன்.
'' ஆகவே அப்பா நீங்கள் எனக்கு இட்டது சாபம் அல்ல. ஒரு அருமையான சந்தர்ப்பம். உங்களால் நான் யமலோகம் சென்று அங்கே இதெல்லாம் பார்வையிட்டு யமனோடு பேசி ஞானம் பெற முடிந்தது. அப்பா நீங்களும் இனி பசு தானம் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது '' என்றான் நசிகேதன். தொடர்ந்து பல வகை பசுக்கள், காளைகள் ஆகியவற்றை, குறித்த காலங்களில் கொடுப்பதால் கிடைக்கும் தான பலன் பற்றியும் நிறைய கூறுகிறான். எல்லாம் அவன் யமதர்மனிடம் கேட்டது..
பிறகு யமனை வணங்கி விடை பெற்று திரும்புகிறான். ஒரு பகல் ஒரு இரவு ஆகிவிட்டது இதற்குள்.
(அப்போது தான் திடீரென்று தூக்கத்தில் இருந்து விழித்தவன் போல் அவன் உடலில் அவன் சூக்ஷ்ம சரீரம் நுழைந்து எழுந்து இதெல்லாம் பேசினான். )
பிறகு பீஷ்மர், ப்ரம்மதேவனுக்கும் இந்திரனுக்கும் நடந்த சம்பாஷணையை , முக்கியமாக பசுக்களை பற்றியும், அவற்றை தானம் செய்வதன் பலனும் பற்றி இந்திரனுக்கு ப்ரம்ம தேவன் சொன்னதை விவரிக்கிறார். ஒரு இடத்தில், பசுக்களை வதைத்தாலோ, கொன்றாலோ, விற்றாலோ, தின்றாலோ இதில் சம்பந்தப் பட்ட அனைவருமே அந்த பசுவின் உடலில் எத்தனை ரோமங்கள் இருக்கிறதோ அத்தனை வருஷங்கள் நரகத்தில் வாதனையில் உழலவேண்டும் என்று பிரமன் கூறியதை பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் சொல்கிறார். ''பசுவோடு தங்கக் காசு தானமாக கொடுத்தவன் தனது முன்னோர் தனக்கு பின் சந்ததி அனைவருக்கும் புண்யத்தை தேடித் தருகிறான்'' என்கிறான் பிரமதேவன்.
யுதிஷ்டிரா, இந்த தான தர்மம் விஷயங்கள் அனைத்தையும் இந்திரன் பிரம்மனிடம் சொன்னான் அல்லவா. இந்திரன் அதை அப்படியே தசரதனிடம் கூற, அவன் தன் மகன் ராமனிடம் சொல்ல, ராமன் வனவாசத்தின் போது இதையெல்லாம் லக்ஷ்மனிடம் சொல்லி, லக்ஷ்மணனிடமிருந்து விஷயங்கள் ரிஷிகளிடம் போய் சேர்ந்தது. ரிஷிகள் மூலம் நமக்கு கிடைக்கிறது.

No comments:
Post a Comment