Monday, 22 December 2025

காயத்ரி மந்திரம் விளக்கம்


 காயத்ரி மந்திரம் விளக்கம்

"ஓம் பூர் புவ ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்"
இதன் பொருள் இதுதான்.
"பூர் புவ ஸுவர்" என்றால் மூன்று உலகம் அனைத்திலும் வ்யாபித்துள்ள (பரவியுள்ள), தத் என்றால் அது அல்லது அவர், ஸவிதுர் என்றால் ஒளி பொருந்திய சூரியனாகவும் எல்லா ஒளிமயமானதாகவும், வரேண்யம் என்றால் வணங்கதக்கவராயும்,
"பர்கோ" என்றால் அறியாமை மற்றும் குழப்பத்தை பஸ்மமாக்குபவரும், தேவஸ்ய என்றால் தெய்வம், "யோ ந" என்றால் அவர் நம், "தீமஹி" என்றால் த்யானிக்கிறேன், 'தியோ" என்றால் முடிவெடுக்கும் திறனை, "ப்ரசோதயாத்" என்றால் பிரகாசப்படுத்தட்டும்.
அதாவது, மூன்று உலகம் அனைத்திலும் வ்யாபித்துள்ள, ஒளி பொருந்திய, வணங்கத்தக்க அந்தத் தெய்வத்தை த்யானிக்கிறேன். அவர் நம் எல்லோருடைய அறியாமையை அகற்றி, அறிவைத் தூண்டி, முடிவெடுக்கும் திறனை பிரகாசப்படுத்தட்டும் என்பதுதான் காயத்ரி மந்திரத்தின் பொருள்.
ஆம் மகா கௌரி, அவள் உருவான காயத்ரி தேவி, அந்த அம்சமான சரஸ்வதி என எல்லாம் ஒன்றே, ஒரே வடிவமே...
அதனாலேதான் தூய வெண்மையானவள், வெண்ணிற காளையில் வருகின்றவள் என மஹா கௌரிக்கான இந்த துர்காஷ்டமி நாளில் சரஸ்வதிக்கான நாளையும் சொன்னார்கள். அவளுக்கும் வெண்ணிற ஆடை, வெண்ணிற அன்னம், வெள்ளாடை என கொடுத்தார்கள். நவராத்திரியில் சரஸ்வதி என அந்த மகா கௌரியினைத்தான் கொண்டாடி வழிபட சொன்னார்கள். எட்டாம் நாள் சரஸ்வதிக்கான காலம் என்பது இதுதான். அதனால் அந்த மகா கௌரியின் சரஸ்வதியினை கம்பனின் சரஸ்வதி அந்தாதி பாடலில் இருந்து பார்க்கலாம்...
"பெருந்திரு வும்சய மங்கையும் ஆகியென் பேதை நெஞ்சில்
இருந்தரு ளும்செஞ்சொல் வஞ்சியைப் போற்றிலெல் லாவுயிர்க்கும்
பொருந்திய ஞானம் தரும்இன்ப வேதப் பொருளருளும்
திருந்திய செல்வம் தரும் அழியாப்பெரும் சீர்தருமே"
அதாவது அன்னை இந்த உலகாளும் மகாலஷ்மி எல்லா ஞானமும் அறிவும் செல்வமும் தைரியமும் அவளிடமிருந்தே வருகின்றன. அப்படியான அன்னை என் மனதில் இருந்து கவியும் பாடலும் நல்ல சொல்லும் தைரியமும் தருகின்றாள்.
அவள் எல்லா உயிர்களையும் அதனதன் ஞானத்தில் இயக்குவது போல அதனதன் தனித்தன்மையில் இயக்குவது போல என்னை அவள் ஞானத்தில் இயக்குகின்றாள்.
அவள்தான் எனக்கு அழியாத ஞானமும் மோட்ச பாக்கியமும் தருவாள். அவளே இந்த பூமியில் எனக்கு செல்வாக்கும் செல்வமும் தந்து வாழ வைக்கின்றாள் என்பது பொருள்...
அன்னை மகாலக்ஷ்மி, அவளே ஜய லக்ஷ்மி. அதாவது எல்லா வகை செல்வமும் ஞானமும் அறிவும் அதைக் காக்கும் வழியும் தைரியமும் அவளே கொடுப்பாள். அவள் எல்லா உயிர்க்கும் அதைக் கொடுப்பாள்.
தேனிக்களின் ஞானம், எறும்பின் ஞானம், சிங்கத்தின் பலம், சிப்பியின் முத்து, புலியின் பாய்ச்சல், குயிலின் கானம், மயிலின் நடனம், மானின் மருட்சி என எல்லாமும் அவள் கொடுத்த ஞானமே.
செடிகளின் மலர், மணம், கொடிகளின் அழகு, கனிகளின் வடிவம், சுவை என எல்லாமும் அவள் கொடுத்ததே.
அவளே எல்லா உயிர்களையும் அதனதன் ஞானமாக இயக்குகின்றாள். எந்த அளவுக்கு ஞானம் ஒவ்வொரு உயிருக்கும் உண்டோ அவ்வகையில் தைரியமும் தன்னைக் காக்கப் போராடும் ஞானமும் பலமும் அவளே கொடுக்கின்றாள்.
தேனிக்கு கொடுக்கு, மலருக்கு முள் என எல்லா காவலும் அவள் கொடுப்பதே. அவள் முக்தியும் தருவாள்.
ஒரு வகையில் இப்பாடல் பிரசித்தியான சமஸ்கிருத ஸ்லோகத்தின் தழுவலே. அன்னைக்கு போற்றப்படும் பிரசித்தியான துதியினைத் தழுவி இயற்றப்பட்ட பாடல்.
அந்த பாடல் இதோ.....
"ஸர்வ மங்கல மாங்கல்யே சிவே ஸர்வார்த்தஸாதகே
சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே"
இதன் பொருள் என்னவென்றால் எல்லா மங்களங்களுக்கும் மங்களமாகத் திகழ்பவளே, சிவபெருமானின் நாயகியே, பக்தர்களின் எல்லா ஆசைகளையும் (இச்சைகள்) பூர்த்தி செய்யக்கூடியவளே, எல்லோருக்கும் புகலிடமாக இருப்பவளே, மூன்று கண்களை உடையவளே, குறைவில்லாத மேனி நிறமுடையவளே, தேவி உன்னை வணங்குகிறேன் என்பது.
இது பெரும்பாலும் எல்லா அம்மன் ஆலயங்களிலும் அர்ச்சனையின் பொழுது சொல்லி வணங்கும் துதி. இன்னும் எல்லா வழிபாட்டிலும் சொல்லப்படும் முக்கியமான ஸ்லோகம்.
இந்தப் பாடலின் பொருளைத்தான் அன்னை எல்லா மங்களங்களுக்கும் மங்களமாக எல்லா செல்வதுக்கும் செல்வமாக திகழ்பவள். பக்தரின் எல்லா ஆசைகளையூம் தீர்த்து வைப்பவள் என்பதைத்தான் மையமாகக் கொண்டு இந்த ஸ்லோகத்தை தமிழாக்கி இந்தப் பாடலை கொடுத்திருக்கின்றான் கம்பன்....

No comments:

Post a Comment

பூண்டின் மருத்துவக் குணங்களால்,

 பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தா...