Wednesday, 17 December 2025

*முகூர்த்த கால் நடுவது ஏன்?*

 *முகூர்த்த கால் நடுவது ஏன்?*

திருமண நிகழ்ச்சிகளில் முகூர்த்த கால் நடுவதற்கு இது தான் காரணமா?
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள், கோவில்களில் திருவிழாக்கள் போன்றவை துவங்குவதற்கு முன் பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இது மங்கள நிகழ்ச்சி நடைபெறுவதை உறுதி செய்யப்பட்டு விட்டதன் அடையாளமாக கருதப்படுகிறது.
பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் ஏன் நடுகிறார்கள் என்று தெரிந்து கொள்வோம் வாங்க,
*ஈசான்ய மூலை 😘
திருமணத்திற்கு முன் வீட்டின் முன்பு முகூர்த்த கால் அல்லது பந்தக்கால் நடுவது, மாவிலைத் தோரணம் கட்டுவது போன்றவை மரபு.
பெரும்பாலும் பந்தக்கால் நடுவதற்கு மூங்கில் மரங்களையே பயன்படுத்துவார்கள்.
மூங்கிலை நன்கு சுத்தம் செய்து பின்பு மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்பு வெள்ளைத் துணியில் செப்புக்காசை வைத்து கட்டி, இதை அந்த மூங்கிலின் மேற்பகுதியில் கட்டுவார்கள்.
பந்தக்கால் நடும் குழியில் நவதானியங்கள் போட்டு, பால் ஊற்றி உறவினர்கள் ஒன்று சேர்ந்து இந்த பந்தக்காலை வடகிழக்கு மூலையில் நடுவார்கள்.
வடகிழக்கு மூலையை ஈசான்ய திசை எனக் கூறுவர்.
ஈசான்ய திசை சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசையாகும்.
நடை பெறப்போகும் திருமணம் இறை அருளாசியோடு, மணமக்கள் இன்புற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் நடப்படுகிறது.
மணமகன் வீடு, மணமகள் வீடு, விசேஷம் நடக்கும் இடம் ஆகியவற்றில் தனித்தனியாக, இந்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி சுபமுகூர்த்த நாளில், சுபமுகூர்த்த வேளையில் நடப்படும்.
இந்த பந்தக்காலே நடக்க போகும் விசேஷத்திற்கு பந்தலை தாங்கி நிற்கும் தூண் போன்றதாக அமையும் என்பார்கள்.
மூங்கில் மரம் செழித்து உயரமாக வளர்வது போல, புதிதாக வாழ்க்கையை துவங்க போகும் மணமக்களின் வாழ்க்கையும் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த சடங்கு நடத்தப்படுகிறது.
*வரலாற்றில் பந்தக்கால் 😘
தற்போது திருமண விழாக்களின் போது குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்திற்கு அழைப்பிதழ் வைத்து வணங்குவது போல, முந்தைய காலத்தில் நாட்டில் நடக்கும் திருமணங்களுக்கு அந்நாட்டின் அரசருக்கும் மரியாதை நிமித்தமாக திருமண அழைப்பிதழ் வைக்கும் வழக்கம் இருந்தது.
அப்படி அழைப்பு தந்த அனைவரது திருமணத்திற்கும் அரசனால் செல்ல முடியாது.
எனவே, அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார்.
அரசு ஆணைக்கோல் என்பது பிற்காலத்தில் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது.
அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அத்திருமணம் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.
அந்த திருமணம் அங்கீகரிக்கப்பட்ட திருமணம் என்பதை குறிப்பதற்காகவே பண்டைய காலம் தொட்டு திருமணத்திற்கு முன்பு பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் ஊன்றப்படும் வழக்கம் இருந்து வருகிறது.
கண்திருஷ்டி விலகி நடக்க போகும் சுபகாரியம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காகவும், மணமக்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்காகவும் முகூர்த்த கால் நடப்படும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதைத் தொடர்ந்தே மற்ற திருமண சடங்குகளை தொடங்குவார்கள்.🍀

‘கல்யாணம் நிச்சயமாயிடுச்சி... முகூர்த்த தேதியும் நெருங்குது. அடுத்து, கல்யாண வேலைகளைப் பார்க்க வேண்டியதுதானே? ஒரு நல்ல நாளாப் பார்த்து முதலில் பந்தக்கால் நட்டு கல்யாண வேலைகளைத் துவங்கணும்.’ திருமணம் நடைபெற உள்ள வீடுகளில் இந்த டயலாக்கை நிச்சயம் கேட்டிருப்போம். ஒரு திருமண விழாவின் முதல் துவக்கமாக நடைபெறும் நிகழ்ச்சிதான் முகூர்த்தக்கால் அல்லது பந்தக்கால் நடுவது. இந்த பந்தக்கால் எதற்காக நட வேண்டும்? நடும் முறைகள் என்ன? இந்த வழக்கம் எப்படி ஏற்பட்டது? இதோ சிறு விளக்கம்.

இந்தப் பந்தக்கால் நடும் விழா பிரம்ம முகூர்த்தம் அல்லது ஏதேனும் முகூர்த்த நாளில் நல்ல நேரம் பார்த்து திருமணத்துக்கு முன்பு நடைபெறும். இந்தச் சடங்கில் தனித்தனியே மணமகன் மற்றும் மணமகள் வீட்டில் வடகிழக்கு பகுதியில் பந்தக்கால் ஒன்று நடப்படும். இந்தப் பந்தக்கால் நடுதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சடங்காகும். எல்லா சமூகத்தினரும் கடைப்பிடிக்கும் பழக்கங்களில் இது முக்கியமானதாகிறது.

பந்தக்கால் நடும் முறை: கல்யாண முருங்கை மரத்தில் உள்ள ஒரு கிளையை வெட்டி அதிலுள்ள இலைகளை அகற்றிவிட்டு அந்த மரத்தின் நுனியில் ஐந்து மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டிவிட வேண்டும்.

உற்றார் உறவினர்கள் அனைவரையும் அழைத்து வீட்டில் உள்ள பெரியவர்கள் அந்த மரத்தை நட வேண்டிய இடத்தில் வைத்து அதற்கு பூக்கள் சாத்தி, தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்டி பூஜை செய்ய வேண்டும். அதை நடும் இடத்தில் உள்ள குழிக்குள் நவதானியத்தோடு நீர் மற்றும் பால் ஊற்றி மரத்துக்கு திருநீறு, சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். இதுதான் முகூர்த்தக்கால் நடும் முறை.

இந்த பந்தக்காலை நட்ட பின், பெண் மற்றும் மாப்பிள்ளையின் குடும்பத்தினர் திருமணச் சடங்குகள் முடியும் வரை எந்த விதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுதல் கூடாது என்பது நியதி.

பந்தக்கால் நடும் முறை வந்தது எப்படி?: அரசர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் திருமணம் செய்யும்போது அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அப்படி அழைப்பு தந்த அனைவரின் திருமணத்துக்கும் அரசரால் செல்ல இயலாது. எனவே, தன் சார்பாக அவர் ஆணைப்படி ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் என்பதே பின்னாளில் மருவி, அரசாணைக்கோல் ஆகிவிட்டது என்பது ஒரு தகவல். அன்று அரசரின் ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அந்தத் திருமணம் அங்கீகரிக்கப்பட்டது என்பதாக மகிழ்வார்கள். ஆகவே, பந்தக்கால் எனும் கல்யாண பந்தலில் கல்யாண முருங்கை மரக்கிளை ஒன்றை வைத்து அதனை வழிபடுவது வழக்கமாகி இருக்கலாம்.

என்றாலும், திருமணம் சிறப்பாக நடைபெற இந்தப் பிரபஞ்சத்தின் உதவியும் வேண்டும் என்பதாலும் பஞ்ச பூதங்களுக்கு மரியாதை செய்யவும் இந்த விழா நடைபெறுவதாகக் கருதி மகிழ்வோமே. காரணம் எதுவாயினும் விழாக்களில் கூடும் உறவுகளின் உற்சாகம் சிறப்பு.

No comments:

Post a Comment

திருக்கானப்பேர்(காளையார்கோவில்) :

  #திருக்கானப்பேர் (காளையார்கோவில்) : சண்டாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவம் நீங்க காளி இத்தலத்தை அடைந்து இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்...