#திருக்கானப்பேர்(காளையார்கோவில்) : சண்டாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவம் நீங்க காளி இத்தலத்தை அடைந்து இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி சிவபெருமானை வழிபட்டாள். பின் காளி தனது கரிய உருவமும், அசுரனைக் கொன்ற பாவமும் நீங்கப்பெற்று சுவர்ணவல்லியாக உருமாறி காளீசுவரரை திருமணம் புரிந்து கொண்ட தலம் திருக்கானப்பேர் என்ற காளையார்கோவில்.
இறைவர் : ஸ்ரீ காளீஸ்வரர், ஸ்ரீ சோமேஸ்வரர்
இறைவியார் : ஸ்ரீ சொர்ணவல்லி, ஸ்ரீ சௌந்தர நாயகி
இத்தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி என்று தலபுராணம் கூறுகிறது.. இத்தல இறைவனை வணங்கினால் பூர்வ ஜென்ம பாவம் விலகும். இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை போக்க பல சிவாலயங்களை தரிசித்து வந்தபோது இத்தலம் வந்தவுடன் ஆயிரம் சிவாலயங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைத்ததாக உணர்ந்தான். இதன் அடிப்படையிலேயே இங்கு சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தங்கத்தால் ஆன பள்ளியறை இங்குள்ளது மற்றொரு சிறப்பம்சம்.
விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடும்
கடியுலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல் நின்
அடியலால் அடைசரண் உடையரோ அடியரே."
—(திருஞானசம்பந்தர் தேவாரம் : 03.026.01)
பொருளுரை : பெண் யானைகள் பின்தொடர, பெரிய தும்பிக்கை உடைய ஆண் யானையானது, விடியற்காலையிலேயே குளத்தில் மூழ்கி, மலர்களை ஏந்தி விதிமுறைப்படி வழிபடுகின்ற நறுமணம் கமழும் பூஞ்சோலையுடைய திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளையன்றி, அடியவர்கள் சரணம் புகுவதற்கு யாது உள்ளது?.
பதிக குரலிசைக்கு :
மதுரைத் திருவாலவாயினை வழிபட்டு அரிதின் நீங்கி, தென்னவன் தேவியாரும், அமைச்சர் குலச்சிறையாரும், ஊன் நெகிழ, உள்ளம் அழியக் கண்ணீர் பாய்ந்து ஒழுக, உணர்வின்றி வீழ்ந்து வணங்கக்கண்டு "உம்மையான் பிரியாதவண்ணம் இந்நாட்டு இறைவர் பதி எனைப் பலவும் பணிவீர்" என்று அருளி அவ்விருவரொடும், அடியரொடும் திருப்பரங்குன்றம் முதலியவற்றை வணங்கிய காலத்தில், கற்றார்கள் தொழுதேத்தும் கானப்பேரும் கைதொழுது பாடிய தமிழ் இத்திருப்பதிகம்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமானுடன் தலயாத்திரை செய்த போது திருச்சுழியல் தலத்திற்கு வந்தார். அங்கு இறைவனை வழிபட்டுவிட்டு இரவு தங்கினார். இரவில் அவர் கனவில் காளை வடிவம் தாங்கிக் கையில் பொற்செண்டு பிடித்துத் கொண்டு திருமுடியில் சுழியும் அணிந்து காட்சி தந்த இறைவன் "யாம் இருப்பது கானப்பேர்" எனக்கூறி மறைந்தார். கண் விழித்த சுந்தரர், சேரர் பெருமானுடன் இத்தலத்திற்கு வந்து பணிந்து பதிகம் பாடிப் பரவினார். கானப்பேர் திருத்தலத்தில் காளை வடிவில் குடியிருக்கும் இறைவனே என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். இப்பதிகம் ஏழாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
07.084 திருக்கானப்பேர்(காளையார்கோவில்) | தொண்டர் அடித்தொழலும் சோதி இளம்பிறையும் | சுந்தரர் தேவாரம்
ஆலய முகவரி : அருள்மிகு காளீஸ்வரர் திருக்கோவில், காளையார்கோவில், சிவகங்கை மாவட்டம், PIN - 623 351.
எப்படிப் போவது : திருக்கானப்பேர் தற்போது காளையார்கோவில் என்று வழங்கப்படுகிறது. இத்தலம் சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ளது. சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மதுரை ஆகிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்து வசதிகள் உள்ளன.

No comments:
Post a Comment