Thursday, 25 December 2025

ஜீவசமாதி


 ஜீவசமாதி

நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. ஒரு யோகியோ, சித்தரோ, ஜீவன் நீங்கிய (ஜீவ சமாதியான) பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். இது பல சந்தர்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. ஒரு சரா சரி மனிதனால் எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.
சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன.அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் இருதயத்தில் அடங்கிவிடுகிறது. உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.
அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார் மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை. அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். எனவே ஜீவ ஸமாதி என்பது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுணடு. அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மையாக விளக்கி அருளுவார்கள்.

No comments:

Post a Comment

கடவுள் எங்கே இருக்கிறார்?...

 குட்டி கதை..... ஒரு குளத்தில் ஒரு குட்டி மீனுக்கு நீரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ''அம்மா! நாம் வாழ தண்ணீர் மிக அவசியமென்று சொல்கி...