கைசிக ஏகாதசி
திருக்குறுங்குடி கிராமத்தில் பாணர் குலத்தில் பிறந்த நம்பாடுவான் என்ற ஏழை, கைசிகம் என்னும் பண்ணிசை பாடி பரந்தாமனை வழிபட்டு வந்தார். அவர் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் என்பதால் திருக்குறுங்குடி நம்பி கோயிலின் வாசலில் நின்று ஒவ்வொரு ஏகாதசி தினத்திலும் கைசிகப் பண் பாடி திருக்குறுங்குடி நம்பியை வழிபட்டு வந்தார்.
அதேபோல் ஒரு கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசியில் விரதமிருந்து கைசிகப் பண் பாடி தன் விரதத்தை முடிக்க, நம்பி கோயிலுக்கு காட்டு வழியாக வந்து கொண்டு இருந்தார். அப்போது மிகுந்த பசியுடன் இருந்த பிரம்ம ராட்சசன் ஒருவன், நம்பாடுவானை வழிமறித்து தனக்கு உணவாக வேண்டும் என்று பிடித்துக் கொண்டான்.
அதற்கு நம்பாடுவான், “ஏகாதசி விரதத்தை முடித்து, திருக்குறுங்குடி நம்பியை வணங்கி விட்டு வருகிறேன். பின்னர் என்னைக் கொன்று உணவாக ஏற்றுக் கொள்ளலாம்’ என்று கூறினார். அதை நம்பாத பிரம்ம ராட்சசன் நம்பாடுவானை விடுவிக்க மறுத்தான்.
அப்போது நம்பாடுவான் 18 விதமான சத்தியங்களை எடுத்துச் சொல்லி தன் ஏகாதசி விரதத்தை பூர்த்தி செய்ய விடுவிக்குமாறு பிரம்ம ராட்சசனிடம் மன்றாடினார். நம்பாடுவான் செய்து கொடுத்த சத்தியத்தின் பேரில் அவரை பிரம்ம ராட்சசன் விடுவித்தான். நம்பாடுவானும் மிகுந்த மகிழ்ச்சியுடன் விடை பெற்று, திருக்குறுங்குடி நம்பி கோயில் முன்பாக திருமாலை கைசிகப் பண் பாடி வழிபட்டு பின்னர் பிரம்ம ராட்சசனிடம் செல்ல முனைந்தார்.
அவனது பக்தியைக் கண்டு திளைத்த திருக்குறுங்குடி நம்பியும் ஒரு வயோதிகராக நம்பாடுவானை வழிமறித்து பிரம்ம ராட்சசனிடம் செல்ல வேண்டாம் என்று தடுத்து பார்த்தார். ஆனால் நம்பாடுவானோ தான் ஏகாதசி விரதமிருந்து செய்து கொடுத்த சத்தியத்தை மீறமாட்டேன் என்று கூறி, பிரம்ம ராட்சசன் அருகே சென்று தன்னை உணவாக ஏற்றுக் கொள்ள வேண்டினார்.
இதைக் கண்டு திகைத்த பிரம்ம ராட்சசன், தான் முன் பிறவியில் சோம சர்மா என்னும் அந்தணனாக பிறந்து வாழ்ந்ததாகவும், அப்போது ஹோமங்கள் செய்யும்போது மந்திரங்களை தவறாக உச்சரித்ததால் பிரம்ம ராட்சசனாக மாற சபிக்கப்பட்ட உண்மையையும் தெரிவித்தான்.
தான் சாபவிமோசனம் பெற, நம்பாடுவான் மேற்கொண்ட ஏகாதசி விரத பலனைத் தருமாறு அவரின் திருவடிகளைப் பணிந்து வேண்டினான். அதற்கு மனமிரங்கி நம்பாடுவானும் தான் மேற்கொண்ட ஏகாதசி விரத பலனை பிரம்ம ராட்சனுக்கு அளிக்க, அவன் சாபம் நீங்க பெற்றான்.
தான் செய்த சத்தியத்துக்கு மதிப்பளித்து பிரம்ம ராட்சசனின் முன் வந்து தன்னை உணவாக ஏற்றுக் கொள்ள சம்மதித்த உத்தமர் நம்பாடுவான். அந்த நம்பாடுவானின் வரலாற்றை பூமி பிராட்டிக்கு வராகப் பெருமாள் கூறுகிறார். இந்த நம்பாடுவான் வரலாறு நிகழ்ந்த இடமே திருக்குறுங்குடி.
கைசிக ஏகாதசி நன்னாளில் விரதமிருந்து திருக்குறுங்குடி நம்பியை வழிபட்டால் நன்மை உண்டாகும் என்பது ஐதீகம். ஏகாதசி தினத்தில் நம்பாடுவான் சரிதம் நாடகமாக இரவு முழுவதும் நடத்தப் பெறும். மறுநாள் துவாதசி தினத்தில் திருக்குறுங்குடி நம்பிக்கு கருடசேவை உற்சவம் நடைபெறும்.

No comments:
Post a Comment