திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோயில் பற்றிய தகவல்கள்..!!
இது முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்கிறது.
திருமணத் தலம்:
இங்குதான் முருகப்பெருமான், இந்திரனின் மகளான தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.
குடைவரைக் கோயில்:
இந்தக் கோயில் உறுதியான கற்பாறையில் (மலையில்) செதுக்கப்பட்ட குடைவரைக் கோயில் ஆகும். இங்குள்ள குடைவரைக் கோயில்கள் 8 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் காலத்தவை எனக் கணக்கிடப்படுகின்றன.
மூலவர் சிவன்:
இந்த மலையே சிவலிங்க வடிவில் அமைந்திருப்பதால், சிவபெருமானே குன்று வடிவில் அருளுவதாகக் கருதப்பட்டு, சுவாமி 'பரங்குன்றநாதர்' என்றும், தலம் 'பரங்குன்றம்' என்றும் அழைக்கப்படுகிறது. இப்போதும் இங்கு மூலவர் சிவன் தான். அவரை 'சத்தியகிரீஸ்வரர்' என்று அழைக்கிறார்கள்.
ஐந்து தெய்வங்கள் ஒரே குடைவரையில்:
மூலஸ்தானத்தை ஒட்டிய ஒரே குடைவரையில் சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக் கனிவாய்ப் பெருமாள் (விஷ்ணு), கற்பக விநாயகர், சுப்பிரமணியர் (முருகன்), துர்கையம்மன் ஆகிய ஐந்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
திருமணக் கோலம்:
இங்கு முருகப்பெருமான், பொதுவாகக் காணப்படுவது போல் நின்ற கோலத்தில் அல்லாமல், தெய்வானையை மணமுடித்த திருமணக் கோலத்தில் அமர்ந்திருக்கிறார்.
நந்திக்குப் பதிலாகப் பெருமாள்:
பொதுவாக சிவன் கோயில்களில் சிவனுக்கு எதிரே நந்தி இருக்கும். ஆனால், இக்கோயிலில் சத்தியகிரீஸ்வருக்கு எதிரே நந்தி இருக்க வேண்டிய இடத்தில் பவளக்கனிவாய் பெருமாள் மகாலட்சுமியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.
வேலுக்கு அபிஷேகம்:
அறுபடை வீடுகளில் வேலுக்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும் கோயில் இதுவே. சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகப்பெருமான் இங்கு வந்து அமர்ந்ததால், வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
பாடப்பட்ட தலம்:
இத்தலம் சைவ சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோராலும், நக்கீரர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் போன்றோராலும் பாடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment