திருக்கடவூர் மயானம் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்.
கங்கையை தீர்த்தமாகத் தோன்றிய தலம் என்ற சிறப்பை பெற்றது, திருக்கடவூர் மயானம் எனும் திருக்கடவூர் திருமெய்ஞானம் திருக்கோவில்.
பிரம்மன் வழிபட்டுப் பேறு பெற்றதலம், மார்க்கண்டேயர் தன் ஆயுள் நீட்டிக்க வழிபட்ட 108 தலங்களில் 107-வது தலம், கங்கை தீர்த்தமாகத் தோன்றிய தலம் போன்ற சிறப்புகளைப் பெற்றது, திருக்கடவூர் மயானம் எனும் திருக்கடவூர் திருமெய்ஞானம் திருக்கோவில். சிவபெருமான்,
ஆலய அமைப்பு :-
இந்த ஆலயம் ராஜகோபுரம் ஏதுமின்றி, எளிய நுழைவு வாசலைக் கொண்டு மேற்கு முகமாய் அமைந்துள்ளது. நுழைவு வாசலின் உள்ளே நுழைந்ததும், விசாலமான பிரம்மாண்ட வடிவில், நீளமான சுற்றுச் சுவரோடு ஆலயம் தென்படுகிறது. சுவாமி சன்னிதியை நெருங்கும் போது பலிபீடம், கிழக்கு நோக்கிய நந்திதேவர் காக்ஷி தருகின்றனர். மகாமண்டபத்தில் நுழைந்ததும், நேர் எதிரே கருவறையில் பிரம்மனை உயிர்ப்பித்து அருளிய பிரம்மபுரீஸ்வரரின் எழிற்கோலம் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகிறது. பிரம்மனின் பெயராலேயே இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். சதுர வடிவ ஆவுடையாரில் வீற்றிருந்தபடி மேற்கு முகமாய் அருள் வழங்குகிறார். மார்க்கண்டேயர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலானவர்களுக்கு காக்ஷி தந்த இறைவன் இந்த ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆவார்.
வில்லேந்திய சிங்கார வேலன் : -
சுவாமியின் மகாமண்டபத்தில் உற்சவத் திருமேனிகளைத் தரிசிக்கலாம். இதில் குறிப்பாக சிங்காரவேலனின் உற்சவத் திருமேனி கலைநயம் மிகுந்து காணப்படுகிறது. கையில் வில்லேந்தியபடி, வள்ளி- தெய்வானையுடன் கம்பீரமாக காக்ஷி அளிக்கிறார் சிங்காரவேலர். இவருக்கு இங்கு கந்தசஷ்டி விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. மேலும் நடராஜர் சபை, மறுபுறம் பைரவர் சன்னிதிகளும் அமைந்துள்ளன. கருவறைச் சுற்றில் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், கல்யாணசுந்தரர் திருவுருவங்கள் கலைநயத்தோடு காக்ஷி தருகின்றன. தட்சிணாமூர்த்தி கல்லால மரம் இன்றி காக்ஷி தருவது அபூர்வமான அமைப்பாக உள்ளது. அவரது திருவடியில் ஆறு சீடர்கள் அமர்ந்திருக்கின்றனர்.
அம்பாளின் திருப்பெயர்:மலர்க்குழல் மின்னம்மை . சுவாமி சன்னிதியின் எதிரே இடதுபுறம் தென்மேற்கு மூலையில், அம்பாள் மலர்க்குழல் மின்னம்மை, மூன்று நிலை ராஜகோபுரத்துடன் தனிச்சன்னிதி கொண்டு கிழக்கு முகமாய் சுவாமி சன்னிதியை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அன்னையின் சன்னிதி மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை கொண்டு விளங்குகிறது. துவாரபாலகிகள் காவல்நிற்க, அன்னை நின்ற கோலத்தில் அபய-வரத முத்திரையுடன்கூடிய நான்கு கரங்களுடன் அருள்புரிகிறார். அன்னைக்கு அமலகுஜநாயகி, அமலக்குயமின்னம்மை போன்ற பெயர்களும் உள்ளன.
இந்தத் திருக்கோவிலின் ஸ்தலமரம் கொன்றை ஆகும். ஸ்தலத் தீர்த்தம்: காசித் தீர்த்தம். ஆலயத்தை ஒட்டியுள்ள பெரிய திருக்குளம் ‘பிரம்ம தீர்த்தம்’ என வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி, ஆலயத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில், கிணறு வடிவில் காசித் தீர்த்தம் அமைந்துள்ளது.
மார்க்கண்டேயருக்காக பங்குனி மாதம், அஸ்வினி நக்ஷத்திரத்தன்று கங்கையே தீர்த்தமாகத் தோன்றினார் எனத் ஸ்தலபுராணம் கூறுகிறது. இதுவே கடவூர் தீர்த்தக் கிணறு என்றும், காசி தீர்த்தம் என்றும், அஸ்வினித் தீர்த்தம் என்றும் வழங்கப்படுகிறது. இந்த ஐதீகத்தினை உறுதிப்படுத்தும் விதமாக பங்குனி மாதம் அஸ்வினி நக்ஷத்திரத்தன்று பஞ்சமூர்த்திகள் வழிபாடு நடைபெறுகிறது. இந்த தீர்த்தத்தைக் கொண்டே திருக்கடவூர் அபிராமி மற்றும் ஈஸ்வரருக்கு நாள்தோறும் அபிஷேகம் செய்யப் பயன்படுகிறது. பிரம்மனுக்கு ஞானத்தை அருளியதால், கல்வி, ஞானம் பெற ஏற்ற தலமாக திருக்கடவூர் மயானம் விளங்குகிறது.
தேவாரப் பாடல் பெற்ற மிகத் தொன்மையான இந்த திருத்தலம் புகழ் பெற்ற திருக்கடவூர் கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது.
திருக்கடவூர் வரும் பக்தர்கள் அனைவரும் அவசியம் திருக்கடவூர் மயானத்தில் அருள் பாலித்துவரும் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரரை வணங்கி அவன் அருள் பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
.jpg)
No comments:
Post a Comment