Sunday, 23 November 2025

*"நாடிய பொருள் கை கூடும்"*


 *"நாடிய பொருள் கை கூடும்"*

கிராமத்து ஜோசியருக்கு வாக்குப் பலிதம் ஆக, பெரியவா சொன்ன, இரண்டு கம்பராமாயணப் பாடல்கள்.
ஒரு கிராமத்தில் ஸ்ரீ மடம் முகாம். கிராமத்தில் பல வகையான தொழில் செய்பவர்களும் - விவசாயம், பெட்டிக்கடை, துணி வெளுத்தல், காய்கறிக் கடை, டெய்லர், பால்-தயிர் வியாபாரம், தோட்ட வேலை, கூலியாட்கள் என்றுள்ளவர்கள் - தரிசனம் செய்ய வந்தார்கள்.
பெரியவாளுக்குக் கள்ளங் கபடமறியாத கிராமத்து மக்களிடம் எப்போதுமே ரொம்பவும் பரிவு உண்டு. அதிகமான படிப்பு, குறிப்பாக சமயக்கல்வி - இல்லாவிட்டாலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் தர்ம வழியில் நடக்கிறார்கள் என்ற நம்பிக்கை. அதனால் அவர்களிடம் இன்முகத்தோடு பேசுவார்கள்.
ஒரு வேளாளர் வந்தார், தரிசனத்துக்கு. வழக்கம்போல் பெரியவா, பெயர் - தொழில் விசாரித்தார்கள்.
"சாமி! நான் ஜோசியம் சொல்லிப் பிழைக்கிறேனுங்க. பரம்பரைத் தொழில். அதனால விட முடியலே. நல்ல நாள் குறிப்பது, கல்யாணத் தேதின்னு சொல்லுவேன். ஜனங்களுக்கு ஒரு நம்பிக்கை அவ்வளவுதாங்க" என்று அடக்கமாகக் கூறினார்.
பெரியவா, பிரசாதம் கொடுக்கச் சொன்னார்கள்.
வேளாளர் பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளாமலே, "சாமி கிட்டே ஒரு பிரார்த்தனை. ஜோசியம் கத்துக்கற மாதிரி தமிழ்லே பொஸ்தகம் வேணும். சாமிதான் கொடுத்து உதவனும்" என்று கேட்டுக் கொண்டார்.
கும்பகோணம் ஸ்ரீ மடத்திலிருந்து வந்த சில ஜோசியப் புத்தகங்களைக் கொடுக்கும்படி, அணுக்கத் தொண்டரிடம் சொன்னார் பெரியவா.
கிராமத்து ஜோசியருக்கு, கண்களில் தண்ணீர் தளும்புகிற அளவுக்கு மகிழ்ச்சி.
"நான் சொல்ற ஜோசியம் வாக்குப் பலிதம் ஆகணும். அதுக்குப் பெரியவங்க அருள் செய்யணும்" என்று கேட்டுக் கொண்டார் நெஞ்சு தழுதழுக்க.
பெரியவா சொன்னார்கள். "ஓவ்வொரு ஜாதகத்தையும் பார்த்துப் பலன் சொல்றதுக்கு முன்னாலே,
*உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளை யாட்டுடை யார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரணாங்களே*!
என்ற பாடலையும், கடைசியில்,
*நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் வீடு இயல் வழி அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும் நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய வாகை சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவார்க்கே.*
என்ற செய்யுளையும் சொல்லு.."-- பெரியவா,
வேளாள ஜோசியர் கீழே விழுந்து பணிந்து, பிரசாதம் பெற்றுக் கொண்டார். மெய்த் தொண்டர்களுக்கும் கூட மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அறிவுச் செல்வமும், பொருட் செல்வமும் படைத்த எத்தனையோ பக்தர்கள் இருக்க, அவர்களுக்குக் கிடைக்காத பெரும்பேறு, இந்தக் கிராமவாசிக்குக் கிடைத்திருக்கிறதே!
'நாடிய பொருள் கைகூடும்' என்ற சொற்களை, ஜோசியரிடமிருந்து கேட்டால், மக்கள் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள்?
இவை கம்பராமாயணப் பாடல்கள் என்பது கூட பல பேருக்குத் தெரிந்திருக்காது. பாடலில் ஒரு சொல் கூடப் பிசகாமல் சொன்னார்கள் பெரியவா.
எப்படி பெரியவாளுக்குத் தெரிந்தது? பாடலிலேயே பதில் இருக்கிறது. 'சிலை இராமன் தோள்வலி கூறுவோர்க்கே ஞானமும், புகழும் உண்டாம்.

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...