Friday, 28 November 2025

ரேவதி நட்சத்திரத்து விருட்சம் இலுப்பை

 


ரேவதி நட்சத்திரத்து விருட்சம் இலுப்பை

இலுப்பை எண்ணெய், ‘ஏழைகளின் நெய்’ என்று அழைக்கப்படுகிறது. நெய்க்கு இணையாக இதில் சத்துகள் உள்ளன.
அந்தக் காலத்தில் இந்த எண்ணெயில்தான் பலகாரங்கள் தயாரிப்பார்கள். இந்த எண்ணெய் நீண்ட நாட்களுக்குக் கெடாது.
இதை கொண்டு சமைத்து உண்டுவந்தால் நரம்புகள் பலப்படும்.தேகம் பளப்பளப்பு ஆகும்.நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்றது..
பாலை நிலத்தில், வேனிற்காலத்தில், நீர் வேட்கையைத் தணிக்கப் பழங்குடித் தமிழர் இலுப்பைப் பூக்களைத் தின்றனர்,
பூக்களின் சாறைக் குடிநீர் போன்று பருகினர். பூக்களை அரைத்துப் பாலுடன் கலந்து குடித்தனர்.
வேடர் குலப் பெண்கள் கீழே உதிர்ந்த பூக்களை ஒன்று திரட்டி, மூங்கில் குழாய்களுக்குள் அடைத்து, கிராமங்களுக்குச் சென்று விற்பர் என்று அகநானூறு 381-ம் பாடல் குறிப்பிடுகிறது.
பூக்களை அதே மூங்கில் குழாய்களுக்குள் அடைத்து வைத்து, நொதிக்கச் செய்து, நாள்பட்டவுடன் சாராயமாக வேட்டுவ மக்கள் குடித்தனர்.
பூக்களிலிருந்து மட்டுமின்றி, பழச் சதையிலிருந்தும் இத்தகைய சாராயத்தைத் தயாரித்தனர். இது ஒரு டானிக் போன்று செயல்பட்டது.
இதன் காரணமாகத்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையக் காலத்திலிருத்து அண்மைக் காலம்வரை இந்தப் பூக்களிலிருந்து சாராயம் பெறும் தொழில் காணப்பட்டது.
இதேபோன்று பூக்களிலிருந்து ஆல்கஹாலும் தயார் செய்யப்பட்டன.
ஒரு டன் இலுப்பைப் பூவிலிருந்து 340 லிட்டர் ஆல்கஹாலைப் பெற முடியும். இந்தத் தொழில் தொடங்கப்பட்டு, பிறகு பெருமளவில் கைவிடப்பட்டுவிட்டது.
பழங்குடி மக்களால் மீன் பிடிக்கவும் எலிக்கொல்லியாகவும் இலுப்பெண்ணெய் பயன்படுத்தப்பட்டது மட்டுமின்றி தோல் நோய், மலம் கட்டுதல், மூட்டுப் பிடிப்பு, தலைவலி, பாம்புக் கடி போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்பட்டது.
இலுப்பை எண்ணெயில் அதிக அளவு சப்போனின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் பழங்குடியினரால் ஷாம்பு போன்றும் பயன்படுத்தப்பட்டது.
இதிலிருந்து சலவை சோப்பு தயாரிக்கப்பட்டது (குளியல் சோப்பில் பயன்படுத்தப்படுவதில்லை, ஏனெனில் இது எளிதில் சிக்கு பிடித்துவிடும்.விகிதம் சரியானதாக கலந்தால் சிக்கு பிடிக்காது).
சோப்பு தவிர மெழுகுவர்த்தித் தயாரிப்பிலும், எஞ்சின் எண்ணெயாகவும், ஸ்டியரிக் அமிலத் தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்பட்டது.
சப்போனின் நீக்கப்பட்டு, நன்கு சுத்திகரிக்கப்பட்ட இலுப்பெண்ணெயை சமையல் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம்.இது ஆண்மையை அதிகரிக்கும்.எண்ணெய் மூட்டு நோய்களைக் குணமாக்கும்..
தமிழகத்தில் 1960-ம் ஆண்டு வருடாந்திர இலுப்பை விதை உற்பத்தி 6,000 டன்னாக இருந்தது; தற்போது இது 1,000 டன்கூட இல்லை.
தமிழகத்திலும் கர்நாடகத்திலும் காணப்படும் நெட்டிலை இலுப்பை அழிவை நோக்கிச் செல்லும் தாவரமாக ஐ.யு.சி.என் (International Union for Conservation of Nature), என்ற பன்னாட்டு அமைப்பால் வகைப்படுத்தப்பட்டிருப்பது பெரும் கவலையளிக்கிறது.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்கள். இதன் பூவை சேகரித்து வறுத்து சாப்பிடுவது கிராமத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ள ஒன்றாகும்.
இதன் பூவிலிருந்து சர்க்கரை எடுக்கலாம். சர்க்கரை அல்லது வெல்லப்பாகில் பூவை வறுத்து சேர்த்து கடலை உருண்டை போன்று செய்து உண்பார்கள்.
தமிழ் இலக்கியத்திலும் கல்வெட்டுகளிலும் ‘இருப்பை’ என்றழைக்கப்பட்ட இலுப்பைத் தாவரம் மது, மதுகம், மதூகம், குலிகம், சந்தானகரணி, அட்டி போன்ற இதர பெயர்களாலும் அழைக்கப்பட்டதாக பல தமிழ் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன.
இவற்றில் முதல் மூன்றும் சமஸ்கிருதப் பெயர்கள், மற்றவை மருத்துவப் பெயர்கள்.
இதைக் கொண்டு விளக்கு எரிப்பதால் கண்கள் பிரகாசமடையும். அறிவுத் தெளிவு ஏற்படும்.
இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாக சூடு செய்து தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலி , நரம்பு தளர்ச்சி முதலியவை தீரும்.
நமது முன்னோர்கள் ஆய்ந்து சொன்ன வகையில் முறையாக பயன்படுத்தி நோய்நீங்கி நலமுடன் வாழ்வோம்.
இலுப்பை மரங்களை கோயில்களில் வளர்பதற்கு காரணங்கள் உண்டு. இதன் எண்ணெய் நீண்ட நேரம் எரிந்து வெளிச்சத்தை கொடுக்க கூடியது.
விளக்கு எரியும் காலங்களில் ஏற்படும் புகையால் வீட்டில் நஞ்சு உள்ள சிறு பூச்சிகள் ஓடிவிடும்.
மனம் அமைதியடையும்.
ஈரத்தன்மையுடன் இருக்கும் போது மென்மையா இருக்கும் இந்த மரம் காய்ந்த பிறகு இரும்பை போன்று வலிமையானதாக மாறிவிடும் என்பதால் இந்த மரத்தின் பாகங்களிலிருந்து தான் கோயில் தேரின் அச்சு உட்பட முக்கியமான பாகங்களை உருவாக்குவார்கள்.
தாய்ப்பால் சரிவர சுரக்காத பெண்கள் பலவகையான மருந்து மாத்திரைகளை உட்கொள்வார்கள்.
இவை சில சமயங்களில் தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்புகளை உண்டு பண்ணும்.
இந்த இன்னலைப் போக்க இலுப்பை உதவுகிறது. இலுப்பை இலையை அல்லது அதன் எண்ணெய் மார்பில் வைத்து
ஒத்தடம் கொடுக்க தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.
பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு
கட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே
இந்தத் தாலாட்டுப் பாடலைப் பலரும் அறிந்திருப்பார்கள்.
குழந்தை பிறந்தவுடன், வலிமையான இலுப்பை மரத்தால் செய்த தொட்டிலில் படுக்க வைப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நடைமுறை.
பால் வடியும் மரமான இலுப்பை மரத்தொட்டிலில் குழந்தையை உறங்க வைத்தால், தாய்க்கு வற்றாமல் பால் சுரக்கும் என்பதும் நம்பிக்கை.
இறுதிச் சடங்கின்போது, இறந்து போனவரின் தலையில் உறவினர்கள் எல்லாம் இலுப்பைப் பிண்ணாக்கு பொடித்து தயாரிக்கப்பட்ட அரப்பு வைத்து விடுவது இன்றளவும் தொடரும் ஒரு சடங்கு.
எண்ணெய், மருத்துவ உபயோகம், தின்பண்டம் என பல வழிகளில் பிறப்பிலிருந்து இறப்பு வரை தமிழக மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரே மரம்… இலுப்பைதான்.
நிழல், காற்று, பூ, பழம், விதை என இன்னும் பல அற்புதங்களை அள்ளித் தந்து, அவர்களை நோய் நொடி இல்லாமல் வளமாக வாழ வைத்துக் கொண்டிருந்த பெருமைமிக்க இலுப்பை மரங்கள், இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன என்பதுதான் வேதனையான விஷயம்.

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...