Sunday, 30 November 2025

கொடையாளி_மாவீரன்_கர்ணன் 9. #கர்ணனனின்_மரணம்

 பதினேழாம் நாள் போரில் கர்ணனும், அர்ஜுனனும் சமநிலையில் கடுமையாகப் போரிட்டுக் கொண்டனர். இரு மலைகள் மோதுவதைப் போல இருவரும் தாக்கிக்கொண்டனர். கர்ணனைப் பாதுகாக்க, அவனை சுற்றி நின்ற வீரர்களையும் அர்ஜுனன் கடுமையாகத் தாக்கினான். அவனது தாக்குதலைத் தாங்க இயலாது கௌரவ வீரர்கள் ஓடினர். வீரர்களே! நீங்கள் அனைவரும் கர்ணனை விட்டு ஓடாதீர்கள்! எனத் துரியோதனன் எத்தனையோ எடுத்துரைத்தும், அவர்கள் அர்ஜுனனின் தாக்குதலை சமாளிக்க இயலாது ஓடினர்.

அர்ஜுனன் ஆயிரக்கணக்கான அம்புகளை கர்ணனின் மீது செலுத்தி அவனை அம்புகளால் மூட செய்தான். அர்ஜுனன் தாக்குதலை சமாளிக்க இயலாது தவித்தான் கர்ணன். முன்பு காண்டவ வனத்தை அர்ஜுனன் தனது பாணங்களால் எரித்து இந்திரபிரஸ்தம் ஆக்கிய போது அங்கிருந்த நாகங்கள் அர்ஜுனனின் அம்புகளால் எரிந்து போயின. அப்பொழுது #அசுவசேனன் என்ற பாம்பு அர்ஜுனனின் அம்பில் இருந்து தப்பிப் பூமிக்குள் பதுங்கியிருந்தது.
கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் போர் நடைபெறுவதை அறிந்த அந்தப் பாம்பு அம்பாக மாறி கர்ணனுடைய அம்பறாத்தூணியில் தஞ்சம் புகுந்திருந்தது. அர்ஜுனனை பழி வாங்குவதற்காகவே நாகாஸ்திரமாக மாறியிருந்த அந்த பாணம் கர்ணனுக்கு நினைவுக்கு வந்தது. எனவே அதை அர்ஜுனனின் முகத்துக்கு குறிவைத்து அந்த #நாகாஸ்திரத்தை வில்லில் பூட்டினான் கர்ணன்.
கர்ணனின் தேர் சாரதியாக இருந்த #மாவீரன்_சல்லியன் இதைப் பார்த்துவிட்டு கர்ணா! நீ அர்ஜுனனின் கழுத்துக்கு குறி வை! நீ அவனது முகத்திற்கு குறி வைத்திருக்கிறாய். உனது குறி தவறி விட போகிறது என்றான். எனது குறி ஒரு நாளும் தவறாது! நீ தேர் ஓட்டும் வேலையை மட்டும் கவனி! எனக்கு நீ வில்வித்தையைக் கற்றுத் தரவேண்டாம்!என்று மன்னனான மாவீரன் சல்லியனைக் கடுமையாக பேசிவிட்டு நாகாஸ்திரத்தை இழுத்துவிட்டான் கர்ணன்.
#நாகாஸ்திரம் வருவதை கண்ட கிருஷ்ணர் தனது வல்லமையால் தேரைப் பூமியில் அமிழும்படி செய்தார். இதனால் அர்ஜுனனின் முகத்துக்கு ஏவிய நாகாஸ்திரமானது அவனது கிரீடத்தை மட்டும் தட்டி மண்ணில் விழ வைத்தது. இந்திரனால் வழங்கப்பட்ட நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட பொன்னாலான கிரீடம் மண்ணில் விழுந்தது.
அர்ஜுனா! காண்டவ வனத்தின் போது உன்னிடம் இருந்து தப்பிய #அசுவசேனன் என்ற பாம்பு வஞ்சம் காரணமாகக் கர்ணனிடம் இருந்தது. எனவே இதை நீ உனது பாணங்களால் துண்டித்து விடு! என்றார். எனவே அர்ஜுனன் அந்த அசுவசேனன் என்ற நாகத்தின் மீது ஆறு பாணங்களை எய்தான். பாம்பு துண்டு துண்டாக உடல் அறுபட்டு விழுந்து மடிந்தது.
பின்னர் கிருஷ்ணர் கீழே இறங்கி பூமியில் ஆழப்பதிந்திருந்தச் சக்கரங்களை தூக்கி நிறுத்தினார். இதைக் கண்டு கோபம் கொண்ட கர்ணன், அர்ஜுனன் மீது நூற்றுக்கணக்கான பாணங்களையும், கிருஷ்ணரின் மீது இரண்டு பாணங்களையும் எய்தான். இதனால் கோபம் கொண்ட அர்ஜுனன் ஆயிரக்கணக்கான பாணங்களை விட்டு கர்ணனின் கவசத்தை உடைத்தான்! கிரீடத்தை கீழே தள்ளினான். அம்புகளால் அவனது உடலை காயப்படுத்தினான். குண்டலங்களும், கவசங்களும் இழந்து அர்ஜுனன் விட்ட பாணத்தால் இரத்தம் ஒழுக மூர்ச்சையாகிப் போனான் கர்ணன்.
மூர்ச்சையற்று கிடந்த கர்ணனைக் கொல்ல அர்ஜுனனுக்கு மனம் வரவில்லை. அப்போது கிருஷ்ணர், அர்ஜுனா! வீரம் உள்ளவர்கள் காலத்தை அறிந்து எதிரிகளை கொன்று, தர்மத்தையும், கீர்த்தியையும், தனத்தையும் அடைகிறார்கள். கர்ணன் அதர்மம் செய்தவன். திரௌபதியின் துகிலுரித்தலுக்கு முக்கிய காரணமாக இருந்தவன். உன் மகன் அபிமன்யுவை பின்னால் இருந்து அம்பறாதூணியைக் கிழித்து அவனை நிராயுதபாணி ஆக்கியவன். வாலிபனான அவனைப் பலரோடு சேர்ந்து, அதர்மமான முறையில் கொன்றவன். அப்பொழுது எந்த தர்மத்தை அவர்கள் பின்பற்றினர்? இப்பொழுது நீ அவன் மயக்கமடைந்து இருக்கிறான் என்று இரக்கம் காட்டுவது தவறு. அதர்மமே வாழ்வென்று இத்தனை காலமும் வாழ்ந்திருந்தான் கர்ணன்.
துரியோதனனின் அனைத்து அதர்மங்களும் துணையாக நின்றவன் கர்ணன். எனவே நீ அவனுக்கு இரக்கம் காட்டாது கொன்றுவிடு! என்றார் ஸ்ரீகிருஷ்ணர். எனவே அர்ஜுனன் அம்பை அம்பைத் தொடுக்கத் தொடங்கினான். அப்பொழுது கர்ணன் மயக்கம் தெளிந்து எழுந்தான். மீண்டும் இருவரும் கடுமையாகப் போரிட்டனர். பரசுராமரிடம் இருந்து தான் கற்ற அஸ்திரங்களை அர்ஜுனனின் மீது பிரயோகம் செய்ய நினைத்தான் கர்ணன். ஆனால் முக்கிய போரில் உனக்கு நீ கற்ற கல்வி பயன்படாமல் போகட்டும்! என்று பரசுராமர் விடுத்த சாபத்தினால் அது அவனுக்கே நினைவுக்கு வரவில்லை! அவனால் அதை பிரயோகிக்க முடியவில்லை. பசுவை இழந்த அந்தணன் ஒருவன் முன்பு கர்ணனுக்கு இட்ட சாபத்தினால் அவனது தேர்ச் சக்கரங்கள் பூமியில் புதையுண்டு இடப்புறம் முழுமையும் பூமியில் மறைந்துவிட்டது. இதை கண்டு கலங்கினான் கர்ணன்.
தனது மரணம் நெருங்கிவிட்டதை அறிந்த கர்ணன் பேசத் தொடங்கினான். தர்மம் தலைகாக்கும்! என்று கூறுவார்கள். நான் செய்த தான தர்மங்கள் இப்பொழுது என்னைப் பாதுகாக்கவில்லை! என்று புலம்பினான் கர்ணன். தேரில் இருந்தபடியே வேறுசில பாணங்களால் அர்ஜுனனையும், கிருஷ்ணரையும் தாக்கினான் #கர்ணன். #அர்ஜுனன் மீது பிரம்மாஸ்திரத்தை விட்டான். அர்ஜுனன் ஐந்தாஸ்திரத்தைகு கராணன் மீது விடுத்தான் . இப்பொழுது கர்ணனின் தேர் சக்கரங்கள் இரண்டும் முழுமையாக பூமியில் புதைந்து விட்டன. இதனால் கீழே இறங்கி தேரை தூக்க முயன்றான் #சல்லியன். ஆனால் அவனால் முடியவில்லை. எனவே கர்ணனும் சேர்ந்து தேரைத் தூக்க முயற்சித்தனர்! ஆனால் முடியவில்லை.
எனவே பயம் கொண்ட கர்ணன் அர்ஜுனனைப் பார்த்து பேசத் தொடங்கினான். அர்ஜுனா! நான் தேரின்றி நிற்கிறேன். அந்தணன், போரில் புறமுதுகிட்டு ஓடுபவன், வணங்குபவன், சரணாகதி அடைந்தவன், ஆயுதங்கள் இன்றி இருப்பவன், யாசிப்பவன், கவசம் இல்லாதவன் ஆகியோர்களை கொல்லக்கூடாது. நீ மாவீரன், யுத்த தர்மங்களை அறிந்தவன்! எனவே சற்றுப் பொறுத்திரு! தேரில் நிற்கும் நீ, தரையில் நிற்கும் என் மேல் அம்புகளை போட வேண்டாம்! என்றான் கர்ணன்.
இதைக் கேட்டு ஶ்ரீகிருஷ்ணர் அவனுக்கு பதில் கூறத் தொடங்கினார்.கர்ணா! தர்மத்தைப் பற்றிய நினைவு உனக்கு இப்பொழுதாவது வந்ததே. #பாண்டவர்கள்_எப்பொழுதும் #தர்மத்திற்குக்_கட்டுப்பட்டவர்கள். அதனால்தான் அவர்கள் மேன்மை அடைந்துக் கொண்டிருக்கிறார். #கௌரவர்கள்_எப்பொழுதும்
எனவே தாழ்வான நிலையை அடைந்து கொண்டிருக்கின்றனர். அதர்மவாதிகள் மேலான நிலையை அடையும் பொழுது, தம்மைப் பெருமைப்படுத்தி பேசிக்கொள்வார்கள்! தெய்வத்தையும் நிந்தித்திப்பர். ( இக்காலத்திலும் இதுவே நடைபெறுவது _ வேடிக்கை).
ஐந்து புத்திரர்களின் தாயான #திரௌபதி சபையில் அவமானப்பட்ட பொழுது உன்னுடைய தர்மம் எங்கே போய்விட்டது? அவளை விலைமகளைப் போன்றவள் என்றாயே? விலைமகளுக்கு ஆடை எதற்கு? என்று பேசினாயே? அரக்கு மாளிகையில் அவர்களை தீயிட்டு அழித்த போது துரியோதனனுக்கு நீ ஏன் அறிவுரை கூறவில்லை? பீமனுக்கு விஷம் வைத்து துரியோதனன் கொடுத்தானே? அப்பொழுது நீ ஏன் தடுக்கவில்லை? அபிமன்யுவை ஒன்பது பேர்கள் இணைந்து அநியாயமாக, நிராயுதபாணியாக்கிச் சூழ்ந்து கொன்றீர்களே! அப்பொழுது உனது தர்மம் எங்கே போயிற்று? அவனது எதிரில் வர பயந்து, அவனது முதுகிற்குப் பின்னால் மறைந்து நின்று, அவனது அம்பறாத்தூணியைக் கிழித்து அவனை நிராயுதபாணி ஆகியதே நீதானே? இப்பொழுது உனக்கு துயரம் என்றபோதும் மட்டும் நீ தர்ம நியாயத்தை பேசுகிறாய்! என்றார் ஶ்ரீகிருஷ்ணர். இதனால் வெட்கத்தால் தலை கவிழ்ந்தான்! கர்ணன்.
ஆனாலும் தரையில் நின்றவாறே அர்ஜுனனிடம் போரிட்டான். இருவரும் கடுமையாக திவ்ய அஸ்திரங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அப்பொழுது கர்ணன் விட்ட ஒரு பாணத்தால் எங்கும் இருள் சூழ்ந்தது! சுழல்காற்று வீசியது! திசைகளும் புழுதியால் மூடப்பட்டன. இதைப் பயன்படுத்திக்கொண்டு, அந்தத் தேரை தூக்கி நிறுத்த முயன்றான் கர்ணன். ஆனால் அவனால் இயலவில்லை. அப்பொழுது கிருஷ்ணர், அர்ஜுனனைப் பார்த்து, கர்ணன் தேரில் ஏறும் முன்பு உனது அம்புகளால் அவனைக் கொன்று விடு! இவன் காலமெல்லாம் அதர்மத்திற்குத் துணை நின்றவன். கர்ணன் இதுவரை எந்த நியாயத்தையும் கடைப்பிடிக்கவில்லை, நீ ஏன் அவனுக்காக காத்திருக்கிறாய்? என்று கர்ணன் அதுவரை செய்த அதர்மங்களை எல்லாம் கூறிய கிருஷ்ணர், பாணங்களை விடு என்றார்! அர்ஜுனனிடம்.
எனவே அர்ஜுனன் தனது பாணத்தை விட்டு அவனது தேர்க் கொடியைச் சாய்த்தான். இதனால் கௌரவர்கள் மனவேதனையடைந்தனர். கர்ணன் வெற்றி பெறுவான்! என இதுவரை நம்பியிருந்த அவர்கள் நினைத்திருந்தனர். பின்னர் #அஞ்சலிகம் என்ற அம்பைக் காண்டீபத்தில் பூட்டினான் அர்ஜுனன். சிறப்புமிக்க இந்த பாணம் எதிரியின் உயிரை வாங்கும் தன்மையுடையது. #நான்_செய்தத்தவம்பலிக்குமானால் இது கர்ணனைக் கொல்லட்டும்! என்று அந்த பாணத்தை விட்டான்! #அர்ஜுனன்.
இதனால் அண்ட சராசரங்களும் நடுக்கம் கொண்டன. அந்த அம்பானது கர்ணனின் தலையைத் துண்டித்து கீழே வீழ்த்தியது. கர்ணனுடைய உடலிலிருந்து புறப்பட்ட ஓர் ஒளியானது பிரகாசத்துடன் ஆகாயத்தில் சென்று *சூரியனை அடைந்தது. கர்ணன் மாண்டான்! என்பதை அறிந்த பாண்டவர்கள், தத்தம் சங்கங்களை எடுத்து ஊதினர்.
#இதிகாசமான_வியாசபாரதத்தின்படி #கர்ணன்_கொல்லப்படும்வரை #சல்லியன்_தேரிலேயே_இருந்தான். கர்ணன் மாண்டதால் சாபம் நீங்கியதால், அவனது தேரைச் சல்லியன் வெளிக்கொண்டு வந்து, ஓட்டிச் சென்றான். கர்ணன் கொல்லப்பட்டதால் தன் சபதம் நிறைவேறிய மகிழ்ச்சியோடு அர்ஜுனன் சென்றான்.
சல்லியன் தேரை விட்டு ஓடவில்லை. தர்ம தேவதை வந்து கர்ணனின் அம்புகளை தாங்கிக் கொள்ளவுமில்லை. அர்ஜுனனின் அம்புகள் மலர்மாலைகளாக மாறவும் இல்லை. கர்ணன் மாண்ட பின்னர் குந்திதேவி வந்து அழவுமில்லை. கர்ணன் இறக்கும் வரையிலும் குந்திதேவி அவன் தன் மகன் என்பதை யாரிடமும் கூறவேயில்லை. போர் முடிந்த பிறகு அனைவருக்கும் ஈமக் கிரியைகளைச் செய்யும் பொழுதுதான் #குந்திதேவி பாண்டவர்களிடம், கர்ணனும் என் மகனே! என்ற உண்மையைக் கூறினாள். எனவே அப்பொழுது பாண்டவர்கள், கர்ணனுக்கும் சேர்த்து ஈமக்கிரியைகளைச் செய்தனர்.
நாகாஸ்திரத்தை இரண்டாம் முறை கர்ணன் ஏவாததற்குக் காரணம்__ கிருஷ்ணர் அர்ஜுனனின் தேரைப் பூமியில் அழுத்தியதும் #நாகாஸ்திரம் தவறி மண்ணில் விழுந்தது. உடனே அந்த நாகத்தை தனது பாணங்களால் துண்டாக்கினான் அர்ஜுனன். எனவே மீண்டும் அந்த நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஏவ முடியாமல் போய்விட்டது! கர்ணனுக்கு. இதுவே கர்ணனுக்கும், அர்ஜுனனுக்கும் நடந்த போரின் சுருக்க விவரம்.
கர்ணனுக்கு இரு மனைவியரும், ஒன்பது மகன்கள் இருந்தனர். அவனது திருமணம் காதல் திருமணமல்ல. துரியோதனன் அவனது பிறப்பறியாத நிலையைக் கூறாது, அங்கதேச மன்னன் எனக் கூறி திருமணம் செய்து வைத்தான்.
அவனது மகன்கள்__ விருசசேனன் சுதமா; ஷத்ருஞ்ஜயா; திவிபடா; சுஷேனா; சத்தியசேனா; சித்ரசேனா; சுஷர்மா (பனசேனா); மற்றும் விருச்சகேது.
இதில் #விருச்சகேது குருச்சேத்திரப் போரில் இறக்காத ஒரு மகன். போருக்குப் பின் இவன் அர்ஜுனனின் அரவணைப்பில் இருந்தான். அவனை நாட்டின் ஒரு பகுதிக்கு மன்னனாக்கினர் பாண்டவர்கள். மிகவும் அன்புடன் கர்ணனின் மகன் விருச்சகேதுவை
தன் மகனைப் போலவே அரவணைத்து காத்தான்! *அர்ஜுனன்.🙏
(கர்ணன்_தொடரும்)

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...