Saturday, 29 November 2025

சூரியோதயமா? அருணோதயமா?🤔


 சூரியோதயமா? அருணோதயமா?🤔

இந்து தர்ம புராணங்களின்படி ஒற்றைச் சக்கரம் உள்ள தேரில் அமர்ந்து, வானவில்லின் வர்ணங்களாலான ஏழு குதிரைகள் இழுக்க விண்வெளியில் வலம் வந்து, தன் வெப்பத்தாலும் வெளிச்சத்தாலும் உலகைக் காக்கும் அனுக்ரஹ தேவதையே சூரியன். ஸ்ரீமன் நாராயணரின் அம்சமான அவரை, ஸ்ரீசூரிய நாராயணர் என்று பூஜித்து வணங்குகிறோம்.
அவர் நவக்கிரகங்களின் நடுநாயகன். மனித ஜாதியின் அறிவு, ஆற்றல், புத்தி, நினைவு, பகுத்தறிவு ஆகிய சக்திகளுக்கு அவரே ஆதார தேவதை. மகரிஷி காஸ்யப முனிவருக்கும் அவரின் மனைவி அதிதிக்கும் மகனாகத் தோன்றியவர். உலகில் இருளை நீக்கி உயிரினங்கள், தாவரங்கள் ஆகிய அனைத்தும் உயிர் வாழ ஆதார சக்தியாக இருப்பவரும் அவரே! பஞ்ச பூதங்களில் அக்னியாக இருப்பவர். அவருக்கு ஆதித்யன் என்ற பெயரும் உண்டு. சூரிய உதயத்தை அருணோதயம் என்றும் குறிப்பிடுவார்கள். இது ஏன் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
சூரிய பகவானுக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவர் அருணன்; மற்றவர் கருடன். காஸ்யப முனிவருக்கு திதி, அதிதி மட்டுமின்றி கத்துரு, வினதை ஆகிய மனைவியரும் உண்டு. உலகில் தோன்றிய சர்ப்பங்களுக்குத் தாய் கத்துரு. வினதைக்குக் கால்களே இல்லாத மனித உருக்கொண்ட ஒரு குழந்தையும், கழுகின் தலை வடிவமும், மனித உடலும் கொண்ட ஒரு குழந்தையும் பிறந்தனர்.
அவர்களே அருணன் மற்றும் கருடன். இவர்களில் கால்கள் இல்லாத அருணனே சூரியனின் தேரோட்டியானான். அதனால்தான் சூரிய உதயத்தை அருணோதயம் என்று குறிப்பிடுகிறோம்.
அருணன் சூரியபகவானுக்குத் தேரோட்டியான வரலாற்றைக் காண்போம்.
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெற வேண்டி, பாற்கடலைக் கடைந்தனர். முதலில் விஷம் தோன்றியது. சிவபெருமான் அதனை உண்டு, தேவர்களையும் அசுரர்களையும் காத்தருளினார். அதைத் தொடர்ந்து, அமிர்தம் தோன்றியது. ஸ்ரீமஹாவிஷ்ணு மோகினி வடிவெடுத்து வந்தார்.
நல்லவர்களுக்கு மட்டும் மரணமில்லா வாழ்வு தர வேண்டும் எனக் கருதி அமிர்தத்தை முதலில் தேவர்களுக்கு மட்டுமே வழங்கினாள் அந்த மோகினி. அப்போது அசுரன் ஒருவன் சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவே நின்று, அமிர்தத்தைப் பெற்றுப் பருகிவிட்டான்.
அதனை சூரிய- சந்திரர்கள் மூலம் அறிந்ததும், மோகினி அவனது சிரசைத் துண்டித்து விட்டாள். இருப்பினும், அமிர்தம் அசுரனின் உடலில் கலந்து விட்டதால், வெட்டுப் பட்ட தலை ஒரு பாம்பின் உடலைப் பெற்று உயிர் பெற்றுவிட்டது; வெட்டுப் பட்ட உடல் ஒரு பாம்பின் தலையைப் பெற்று உயிர் பெற்றது. அவர்களே ராகு, கேது எனும் சாயா கிரகங்களாகி, நவக்கிரக மண்டலத்தில் இடம் பெற்றனர்.
தங்களை மோகினியிடம் காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களைப் பழிவாங்க அவர்களுக்குப் பகைவர்கள் ஆனார்கள் ராகுவும் கேதுவும். கிரஹண வேளைகளில் அவர்கள் சூரிய- சந்திரர்களை மறைத்து அவர்களின் ஒளியும் சக்தியும் இல்லாமல் செய்தனர்.
தொடர்ந்து இந்தப் பகையால் பாதிக்கப்பட்ட சூரியன், ஒருமுறை கடும் கோபம் கொண்டார். அப்போது அவர் விஸ்வரூபம் எடுத்தார். அவர் வீசிய அக்னிக் கதிர்கள் ஏழுலகங் களையும் சுட்டெரிக்க ஆரம்பித்தன. எங்கும் அக்னி ஆறு பெருக்கெடுத்து ஓடியது. எரிமலைகள் அக்னிக் குழம்பைக் கக்கின. கடலே வற்றும் அளவுக்கு வெப்பம் தாக்கியது. தேவர்கள் கலங்கி நின்றனர்.
ஆபத்துகள் வரும்போது அனைவரும் ஸ்ரீமந் நாராயணரிடம் சென்று முறையிடுவதே வழக்கம். அந்த நாராயணனே கோபத்தீயைக் கக்கும் போது யாரிடம் முறையிடுவது? இதனை அறிந்த பிரம்மதேவன் இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டி, அகில உலகங்களையும் காக்க ஒரு வழி செய்தார்.
சுட்டெரிக்கும் சூரியக் கதிர்கள் அண்ட சராசரங்களில் பரவி அழிவை ஏற்படுத்தாமல் இருக்க, சூரியனுக்கு ஒரு திரை போட முடிவு செய்தார். அந்தத் திரைதான் சூரிய ரதம். அதனை ஓட்டுவதற்கு சூரியனின் சகோதரனான அருணனை நியமித்தார்.
ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்களைக் குதிரைகளாக்கி, சூரியனுக்கு முன்னே நிறுத்தினார். குதிரைகளைச் செலுத்தும் சாரதியான அருணன் அவற்றின் பின்னே அமர்ந்தார். இவர்களுக்குப் பின்னே சூரிய தேவனை அமரச் செய்தார் பிரம்மன்.
தேரும், வண்ணக் குதிரைகளும், அருணனும் சூரியனுக்கு ஒரு கவசமாகப் போட்டது போல் அமைந்ததால், சூரியனின் வெப்பக் கதிர்களிலிருந்து ஜீவராசிகள் காக்கப்பட்டனர். சூரியன் உதிக்கும் முன்பே கீழ் வானில் தோன்றும் வர்ண ஜாலங்கள் உலகை விழித்தெழச் செய்கின்றன.
சூரியனுக்கு முன்னே உலகுக்குத் தோன்றுவது அருணன்தான். அதனால்தான் அதிகாலை நேரத்தை அருணோதயம் என்கிறோம். தவம், தியானம் மற்றும் பிரார்த்தனைக்கு உகந்த காலம் அது. கோபத்தால் கொதித்தெழுந்த சூரியன், தனது தேர் மற்றும் சாரதியின் சக்தியால் சாந்தி அடைந்தான்.
அருணனுக்கு சூரியனின் அனுக்ரஹம் பூரணமாகக் கிடைத்தது. ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனைப் 'புத்திரகாரகன்’ என்று சொல்வார்கள். குழந்தைச் செல்வங்களை நல்கவல்ல அனுக்ரஹ தேவன் சூரியன். அதனால், அருணனுக்கு நான்கு குழந்தைச் செல்வங்களைப் பெறும் பாக்கியம் கிடைத்தது. இது பற்றிய விவரம் வால்மீகி ராமாயணத்தில் கூறப்படுகிறது.
ராமாயணத்தில் முக்கிய பங்கு வகித்த ஜடாயு, சம்பாதி எனும் கழுகு வடிவம் கொண்ட தேவர்கள் அருணனின் புதல்வர்களே. சீதாபிராட்டியை ராவணன் தூக்கிச் சென்ற போது, அவனோடு போராடி, அவனால் சிறகுகள் வெட்டப்பட்டு வீழ்ந்து, உயிர் துறக்கும் முன் இந்தச் சம்பவத்தை ராம- லட்சுமணருக்கு எடுத்துக் கூறி பெரும் தியாகம் செய்த ஜடாயுவை தன்னுடைய தந்தைக்கு நிகராகப் போற்றி வணங்குகிறார் ஸ்ரீராமர்.
ஜடாயுவின் சகோதரன் சம்பாதி, தான் இருந்த இடத்திலிருந்து எழுந்து பறக்கமுடியாத நிலையில் இருந்தார். எனினும், கண்ணுக்கெட்டாத வெகு தூரம் வரையிலும் பார்க்கும்படியான பார்வை தீட்சண்யம் பெற்றிருந்தார் அவர். அவரே சீதை இருக்குமிடத்தை அனுமன், சுக்ரீவன் முதலா னோர்க்கு தெரிவித்து, அனுமன் இலங்கை செல்ல வழிவகுத்து தந்தவர்.
இவ்வாறு ஸ்ரீராம சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இரண்டு புதல்வர்களின் தந்தை என்ற பெருமை அருணனுக்கு உண்டு. ஜடாயு, சம்பாதி தவிர, அருணனுக்கு வேறு இரண்டு புதல்வர்களும் இருந்தனர். அது பற்றிய சுவையான சம்பவம் ஒன்று சூரிய புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருமுறை நாராயினி என்ற பதிவிரதையின் சாபத்தில் சூரியனே உதிக்காமல் போகும் நிலை ஏற்பட்டது. உலகெங்கும் இருள் சூழ்ந்தது. சூரிய ரதம் நின்றது. அப்போது, அருணன் சூரியனின் அனுமதியுடன் பிரம்மலோகம் சென்று, பிரார்த்தனை செய்துவரப் புறப்பட்டார்.
தேவலோகம் சென்று இந்திரனை முதலில் வழிபட நினைத்தார் அருணன். எனவே, அழகான அப்சரஸ் வடிவை எடுத்து, அருணாதேவி என்ற பெயருடன் இந்திரனைச் சந்தித்தார். அவள் அழகில் மயங்கினான் இந்திரன். அவர்கள் இருவருக்கும் ஒரு தெய்வீக குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை அகல்யாதேவியிடம் விட்டுவிட்டு, மீண்டும் தனது ரதத்துக்கு திரும்பிய அருணன், சூரிய பகவானிடம் நடந்ததை விவரித்தார்.
அருணனின் எடுத்த அப்சரஸ் வடிவை சூரியபகவானும் பார்க்க விரும்பினார். எனவே, அருணன் மீண்டும் அருணாதேவியாக மாற, சூரிய தேவனின் அனுக்ரஹ பார்வையில் ஒரு தெய்வீக குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையையும் அகல்யாதேவியிடம் விட்டுவிட்டு, தனது தேரோட்டும் பணியைத் தொடர்ந்தார் அருணன்.
இந்திரனுக்கும் சூரியனுக்கும் பிறந்த தெய்வீகக் குழந்தைகளால் தன் மனைவி அகல்யாவின் தவம் கெட்டுவிடக் கூடாது எனக் கருதிய கௌதம ரிஷி, அந்தக் குழந்தைகளை வானர வடிவம் பெறுமாறு மாற்றிவிட்டார்.
இதை அறிந்த இந்திரன் இரண்டு குழந்தைகளையும் எடுத்துச்சென்று, கிஷ்கிந்தை என்ற கானகத்தில் வளர அருள்புரிந்தான். இந்திரனின் புதல்வன்தான் வாலி. சூரியனின் புதல்வன்தான் சுக்ரீவன்.
நீண்ட வாலைக் கொண்டவன் வாலி. அழகிய கழுத்தைக் கொண்டவன் சுக்ரீவன். ஸ்ரீராம காவியத்தில் இருவருக்குமே சிறப்பான இடம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே!
ஸ்ரீராமன் சூர்ய வம்ஸத்தில் உதித்தவர். அன்றாடம் சூரியனை வணங்கியவர். அதனால்தானோ என்னவோ, அந்த ராமனுக்கு சேவை செய்து ஸ்ரீராம காவியத்தில் அழியாத இடம் பெற நினைத்த அருணனின் எண்ணம் நிறைவேறும் விதமாக அவரது நான்கு புதல்வர்களும் ஸ்ரீராம சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.
1
ராமபிரான் காலடியாகவே அயோத்தி முதல் ராம சேது தாண்டி இலங்கை வரை யாத்திரை புரிந்துள்ளார். அவர் காலடித் தடங்கள் பதிந்த இடங்களில் முக்கியமான சிலவற்றை இங்கு பார்ப்போம்.
அயோத்யா
இது ராம ஜென்ம பூமி. ஹிந்துக்களின் புனித பூமி. துளஸிதாஸர், கம்பர், தியாகராஜர், மகாத்மா காந்தி உள்ளிட்டோருக்கு உத்வேகம் அளித்த ராம நாமத்தின் ஊற்றான அதி முக்கிய இடம்.
வடக்கு ரயில்வேயின் வாரணாசி – லக்னோ மார்க்கத்தில் அயோத்யா ரயில் நிலையம் உள்ளது. வாரணாசியிலிருந்து 189 கிலோமீட்டர் தூரத்திலும் லக்னோவிலிருந்து 128 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.
பக்ஸர்
சித்தாசிரமம், வேத சிரா, வேத கர்ப்பா, க்ருஷ் என்று வேறு பெயர்களாலும் இது பிரசித்தி பெற்றது. விசுவாமித்திரர் ராமருக்கு பலை, அதிபலை ஆகிய முக்கிய மந்திரங்களை உபதேசித்த இடம் இது. கிழக்கு ரயில்வேயின் பாட்னா – மொகல்சராய் ரயில் மார்க்கத்தில் முக்கிய நிலையம் இது.
அகல்யாசிரமம்
கல்லாக இருந்த அகல்யா சாப விமோசனம் பெற்ற இடம் இது. சீதாமடி-தர்பங்கா ரயில் மார்க்கத்தில் கம்தௌல் என்ற ரயில் நிலையத்தில் இறங்கி மேற்கே 15 மைல் தொலைவில் உள்ள அஹியாரி என்ற கிராமத்தை அடைந்து கௌதம குண்ட் என்ற இடத்தை அடையலாம். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அஹல்யா குண்ட் உள்ளது. இதுவே அஹல்யா சாப விமோசனம் பெற்ற இடம்.
ஜனக்பூர்
மிதிலை அரசர் ஜனகரின் ராஜதானி ஜனக்பூர். இது சீதாமடியிலிருந்து ஜனக்பூர் சாலையைக் அடைந்து அங்கிருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜனக்பூரை அடையலாம். இங்குள்ள பெரிய மைதானத்திலேயே ராமர் வில்லை முறித்த சம்பவம் நிகழ்ந்தது.
பரத்வாஜ ஆசிரமம்
ஆதிகாலத்தில் அனைவரையும் ஆகர்ஷித்து ஈர்த்த பிரயாகையின் முக்கிய கேந்திரம் பரத்வாஜ ஆசிரமம். பரத்வாஜ மாமுனிவர் தம் சிஷ்யர்களுடன் இருந்த இடம் இது. ப்ரயாகை தீர்த்தராஜம் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது தீர்த்தங்களிலெல்லாம் சிரேஷ்டமான தீர்த்தம் என்று பொருள். இந்தப் பகுதி இப்போது அலகாபாத் என்று பிரசித்தி பெற்ற இடமாகத் திகழ்கிறது.
வால்மீகி ஆசிரமம்
ஆதி காவியமான ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர் வாழ்ந்த இடம். ப்ரயாகைக்கு தெற்கே 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இன்னும் இரு இடங்களையும் வால்மீகி ஆசிரமமாகக் கூறுகின்றனர். கான்பூர் அருகே பிடூரில் கங்கை கரையிலும் சீதாமடி அருகேயும் அவர் வசித்ததாகக் கூறப்படுகிறது.
சித்ரகூடம்
ராமர் வனவாசத்தில் முக்கிய இடம் இது. அலகாபாத்- ஜபல்பூர் ரயில் மார்க்கத்தில் மாணிக்பூர் ஜங்ஷன் உள்ளது. இங்கிருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் சித்ரகூடம் ரயில் நிலையத்தில் இறங்கிச் செல்லலாம்.
அனசூயா ஆசிரமம்
ரிஷிபத்தினி அனசூயா வசித்த இடம். சித்ரகூடத்திலிருந்து தெற்கில் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
சுதீக்ஷ்ண ஆசிரமம்
வீரசிங்கபுரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சரபங்க ஆசிரமத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஜைத்வாரா ரயில் நிலையத்திலிருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் வீரசிங்கபுரம் உள்ளது. சரபங்கர் ஆசிரமமும் இந்தப் பகுதியில்தான் உள்ளது.
அகஸ்தியாசிரமம்
குந்தாபூர் – கோகர்ண மார்க்கத்தில் கங்கோலி உள்ளது. கங்கோலியிலிருந்து பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரைக் காணலாம். இங்கே பல அபூர்வ கோவில்கள் உள்ளன. இங்கேதான் கடல் அருகே அகஸ்திய ஆசிரமம் உள்ளது.
ராம்டேக்
இது ராமகிரி என்றும் அழைக்கப்படுகிறது. டேகரி என்றால் சிறிய மலை என்று பொருள். டேக் என்றால் அபயம் தந்து ஆதரிப்பது என்று பொருள். ராமர், லக்ஷ்மணன், சீதை ஆகிய மூவரும் வனவாசத்தின் போது சிறிது காலம் தங்கி இருந்தனர். ஆதலால் இது புண்ய ஸ்தலமாகக் கருதப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர்-சிவனி-ஜபல்பூர் மார்க்கத்தில் தும்சர் என்ற ஒரு சிறிய நகரம் உள்ளது. இதன் அருகில் உள்ள இடமே ராம்டேக். நாக்பூரிலிருந்து 46 கிலோமீட்டர் தூரம் தான்!
பஞ்சவடி
ராமாயணத்தில் கோதாவரியை ராமர் அடைந்தது விஸ்தாரமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பஞ்சவடி மிக முக்கியமான இடம்.இங்கிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் த்ரயம்பகேஸ்வரத்திலிருந்து கோதாவரி தோன்றுகிறது.
சென்ட்ரல் ரயில்வேயின் மும்பை – புசாவல் தடத்தில் நாசிக் ரோட் ஒரு பெரிய ரயில் நிலையம். இங்கிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் பஞ்சவடி உள்ளது.
சபரி ஆசிரமம்
சபரி பக்தியுடன் எச்சில் படுத்தித் தந்த கனியை ராமர் மனமுவந்து ஏற்ற சம்பவம் நடந்த இடம் இது.
விஜயநகர சாம்ராஜ்யத்தில் பிரசித்தி பெற்ற புராதன நகரம் ஹம்பி ஆகும். இது 36 கிலோமீட்டர் விஸ்தீர்ணத்தில் பரவிய பெரிய நகரம். நகர மத்தியில் விரூபாட்சர் கோவில் உள்ளது. இங்கே துங்கபத்ரா நதி கோலாகலத்துடன் துள்ளி வருகிறது. இதை சக்ர தீர்த்தம் என்கின்றனர். இதன் அருகே உள்ள மலையில் ஸ்ரீ ராமர் ஆலயம் இருக்கிறது. இந்த மலை மதங்க பர்வதம் என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான் மதங்க மாமுனிவர் வசித்து வந்தார்.
இவர் ஆசிரமத்திற்கு அருகேதான் சபரி வசித்து வந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.
கிஷ்கிந்தா
கர்நாடகத்திலிருந்து ஹூப்ளி – கதக் – பெல்லாரி மார்க்கத்தில் ஹான்ஸ்பேட் முக்கிய ரயில் நிலையம் ஆகும். பெல்லாரியிலிருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது. ஹூப்ளியிலிருந்து 145 கிலோமீட்டர் தூரத்திலும் கதக்கிலிருந்து 85 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இங்கிருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் ஹம்பி உள்ளது.
ஹான்ஸ்பேட் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பழைய ராஜதானி ஆகும். இதை ஒட்டிய பகுதியே கிஷ்கிந்தா ராஜ்யம் ஆகும். இதை ஆண்டவரே சுக்ரீவ மஹாராஜா. இந்தப் பகுதியில் உள்ள சிவ-விருபாட்சர் கோவில் மிகவும் பிரசித்தமானது.
ருஸ்யமுகம்
கிஷ்கிந்தா ராஜ்யத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் அனாகுந்தி என்ற கிராமம் உள்ளது. இதற்கு 3 கிலோமீட்டர் தூரத்தில் பம்பா சரோவர் உள்ளது. இதைச் சார்ந்த பகுதியே ருஸ்யமுக பர்வதம் ஆகும்.
ராமேஸ்வரம்
ராமேஸ்வரத்திற்கு மதுரையிலிருந்தும் சென்னையிலிருந்தும் செல்லலாம். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ராமசேது
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸா ஜெமினி -11 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் 1966ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி ராமேஸ்வரம் -ஸ்ரீலங்கா இடையே அமைந்துள்ள. பாலத்தின் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டது. ஒப்பற்ற தனித்தன்மையுடைய வளைவுடன் கூடிய மனிதனால் அமைக்கப்பட்ட பாலம் என்று நாஸாவே புகழ்ந்த பாலம்தான் ராம சேது. (நாஸா எடுத்த இந்தப் படத்தை 1993ம் ஆண்டு டில்லி பிரகதி மைதானில் நடந்த தேசிய விஞ்ஞான மையத்தின் கண்காட்சியில் பிரதானமாக வைத்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.)
இதன் மீது நடந்தே ராமர் தன் சைனியத்துடன் இலங்கை சென்றார்.
இலங்கை
குபேரன் வாழ்ந்த எல்லையற்ற செல்வத்துடன் இருந்த நாடு. அவனிடமிருந்து ராவணன் இதை அடைந்து இங்கு வாழ்ந்து வந்தான். பத்துத் தலைகளுடன் கூடிய இவனை வீழ்த்தி சீதா தேவியை அசோகவனத்திலிருந்து ராமர் மீட்டு விபீஷணனை அரசனாக நியமித்து அயோத்தி மீண்டார்.
ராமாயணம் தென் கிழக்கு ஆசியாவிலும், திபெத்திலும், மலேசியாவிலும், ஸ்ரீலங்காவிலும், பிலிப்பைன்ஸிலும், அரேபியா, பல்கேரியா நாடுகளிலும் பரவி உள்ளது. பர்மிய, கம்போடிய, சீன, செக், எகிப்திய, ரஷிய, ஆங்கில மொழிகள் உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் ராமாயணம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
ராமரின் வரலாற்றை மனித குலம் உள்ளவரை மறைக்கவோ மாற்றவோ மறுக்கவோ முடியாதபடி அவர் பாதம் பட்ட புண்ய ஸ்தலங்கள் இந்தியா முழுவதும் வரலாற்றுச் சின்னங்களாக பரவி உள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றையே மேலே பார்த்தோம். மர்யாதா புருஷோத்தமான ராமன் தன் ஜீவியத்தால் வாழ்க்கை முறையைக் காண்பித்தான். இது கர்மயோகம். தன் நாமத்தால் உலகைக் காப்பாற்றுகிறான். இது பக்தி யோகம். தனது அகண்டாகார பொருளால் மெய்ப்பொருளை விளக்குகிறான். இது ஞான யோகம்.
2
ஆஞ்சநேயர் அருளிய ஸ்ரீ ராமர் திருப்பள்ளியெழுச்சி
வனவாசம் முடிந்து அயோத்தி வந்த மறுநாள் காலை ஸ்ரீராமபிரான் விழித்தெழ, ஸ்ரீ ஹனுமார் பாடிய திருப்பள்ளி யெழுச்சி.
இதைத் தினமும் அதிகாலையில் பாராயணம் செய்து வந்தால் ஸ்ரீ சீதாராமரின் அருளோடு ஆஞ்சநேயரின் அருளும் கிட்டும்.
இதை தினமும் பாராயணம் செய்து வந்தால் இராமாயணம் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.
ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்.
அருள்மிகு ராமபிரான் திருப்பள்ளியெழுச்சி பாடல்.:-
தேவானு குலவா, தேவி கௌசலை பாலா
தசரத ராமனே எழுந்திரும்.
ஆவலோடு அழைத்திட்ட கௌசிகன் வேள்வியை
அன்புடன் காத்தவனே எழுந்திரும்.
கல்லைக் பெண்ணாக்கிய கமல பொற்பாதனே
கல்யாண ராகவா எழுந்திரும்.
வில்லொடித்து மிதிலை வேந்தன் பெண் சீதையை
விவாஹம் செய்தோனே எழிந்திரும்.
அட்டகாசமாய் வந்த பரசுராமனை ஜெயித்து
அயோத்தி வந்த துரையே எழுந்திரும்.
தட்டாமல் தந்தை மொழி பிசகாமல் தம்பி, சீதையுடன்
தண்டகாரண்யம் வந்தவரே எழுந்திரும்.
சித்தம் மகிழ்வுடன் குகனார் தோழமை கொண்டு
சித்ரகூடம் வந்தவரே எழிந்திரும்.
பக்தியுடன் அழைத்த பரதர்க்கு மகிழ்வுடன்
பாதுகை அளித்தோனே எழுந்திரும்.
மூர்க்கன் விராதனைக் கொன்றவனே! சூர்ப்பனகை
மூக்கை அறுத்தவரே எழுந்திரும்.
ஜடாயுவுக்கும், சபரிக்கும் மோட்சமளித்துவிட்டு
அடியேனை எதிர்கொண்டவரே எழுந்திரும்.
சுக்ரீவனிடம் நட்புகொண்டு மாமரங்களைத் துளைத்த
கோதண்ட ராமரே எழுந்திரும்.
வாலியை வதம் செய்து தாசனைத் தூதுவிட்ட
காருண்ய ராகவா எழுந்திரும்.
அரக்கர் விபீஷணருக்கு அபயம் கொடுத்து கடல்
துணையால் அக்கரை சென்றவனே எழுந்திரும்.
வம்சத்துடனே இலங்கை எதிர்த்து இராவணனை அவன்
வம்சத்தோடு அழித்தவரே எழுந்திரும்.
தசமுகனை வதைத்து தேவி ஜானகியுடன்
திருவுளம் மகிழ்ந்தோனே எழுந்திரும்.
திசை எங்கும் புகழவே புஷ்பரத மேறிய திருவை
அயோத்தி வந்தவரே எழுந்திரும்.
உலகம் புகழ் பரதன் மனம்மிக மகிழ்ந்திட
மகுடாபிஷேகம் ஏற்றுக் கொள்பவரே எழுந்திரும்.
உன் அருள் பெற அடியேனும் சீதாபிராட்டி உதவி
அருளவேணும் எழுந்திரும்.
சங்கீத ராமனே, ஜானகி நேசனே, ஸ்ரீ பரந்தாமனே
ஜனகரின் மருகரே எழுந்திரும்.
ஆத்ம ராமனே, கல்யாண ராமனே பட்டாபிஷேகம் காண
அருள வேண்டும் எழுந்திரும்.
3
இராமன் பாலம் அமைத்தது தொடர்பான கதையைச் சொல்வது சேது புராணம் என்ற பழைமைவாய்ந்த நூல் ஆகும். நூற்றாண்டு பழமை வாய்ந்த அப்புராணத்தை தேடிக் கண்டு அதை ஆய்வு செய்தால் இவர்களின் மோசடியும், அயோக்கியத்தனமும் அப்பட்டமாக வெளிப்படுகிறது.
இராமன் சேது அணையைக் கட்டியதை கூறும் அப்புராணம், இராமன் கையாலே, தனது வில்லினால் சேது அணையை தகர்த்து அழித்து விட்டான் என்ற செய்தியையும் அறிவிக்கிறது.
அதாவது, கடலுக்கு மேலே (நீருக்கு மேலே) மிதவைக்கல்லால் இராமன் பாலம் அமைத்தான் என்றும். இராவண வதம் முடிந்து, அப்பாலத்தைக் கடந்து மீண்டும் தனுஷ்கோடிப்பகுதிக்கு இராமன் கூட்டம் வந்த போது, விபீஷணன், இராமனைப் பார்த்து, இலங்கைக்குச் சென்று வர நீங்கள் அமைத்த இப்பாலத்தை இப்படியே விட்டுச் சென்றால், இலங்கையில் உள்ள கொடியவர்கள் இப்பாலத்தின் வழியே வந்து பல பகுதிகளுக்கும் சென்று அக்கிரமம், கொடுமை, அழிவு செய்வார்கள். எனவே, நீங்கள் அமைத்த இப்பாலத்தை நீங்களே தகர்த்து அழித்து விடுங்கள் என்று வேண்ட, இராமன் அவ்வாறே அப்பாலத்தை தகர்த்து அழித்து விடுங்கள் என்று வேண்ட, இராமர் அவ்வாறே அப்பாலத்தை தகர்த்து அழித்து விட்டான் என்கிறது சேது புராணம்.
இராமன் பாலத்தை தகர்த்ததையும் கூறும் சேது புராண பகுதி இதோ: மஹருஷிகளே கோதண்ட மென்னும் வில்லைக் கரத்திலேந்தி யிலகாநின்ற ஸ்ரீராம மூர்த்தியானவர் பத்து சிரங்களையும், இருபது கரங்களையுமுடைய இராவணனைச் சங்காரஞ் செய்து பண்ணுதற்கரிய தசக்ரீவனென்னும் ராவணனாலே தரிக்கப்பட்டிருந்த கிரீடத்தை, விபூஷணனுடைய சிரத்திற்தரித்து பட்டாபி ஷேகஞ்செய்து இலங்கைக்கு அரசனாக்கிச் சமுத்திரத்திற் கட்டியிருக்குஞ் சேது மார்க்கத்தில் சீதாதேவியோடு தனது தம்பியாகிய இலட்சுமணன் அனுமான், சுக்ரீவன் முதலிய வானர வீரர்கள் யாவரும் புடைசூழந்திறைஞ்சப் புட்பக விமானத் திலேறிச் சந்திர சூரியரும் விலகிநிற்கும் படியாய் கருட காந்தர்வ சித்த வித்யாதரர்கள் போற்றச் சேதுவைக் கடந்து அந்தவாகனத்தி லிறங்கித் திருவிளையாடல் செய்ய வெண்ணியிருக்கையில் ஸ்ரீராமச்சந்திரனுடைய பாதபத்மங்களை விபீஷணனானவன் பணிந்து கூறுவான் சுவாமீ வேதவேதாந்த மூர்த்தியே தேவரீரிப்போது இராவணாதி ராட்சதர்களைக் கண்டிக்கும் பொருட்டு வானராதி வீரற்களாற் செய்யப்பட்ட இச்சேதுவை இவ்வாறே யிருக்கச்சயன்றால், இலங்கையில் உள்ள இராக்கதர்கள் யாவரும் இம்மார்க்கத்தில் எங்கும் போக்குவரவாயிருந்து உலகிலுள்ள ஜீவர்களை இம்சை செய்வார் களாதலால் இச்சேதுவாகிய அணையை சோதிக்க வேண்டுமென்று சொல்ல, அப்போது ஸ்ரீராம மூர்த்தியானவர் அவ்வாய் மையைக் கேட்டு மெய்தானென்று சிந்தித்து மனக்களிப்பினோடு தனதுகரத்தில் விளங்குங் கோதண்டமென்னும் வில்லினாலே நல்ல சர்ப்பத்தை கருடன் தன் கால்நகங்களினால் தாக்கிக் கிழித்ததுபோலவும் முன்னர் இலங்கையில் இந்திரசித்துவினால் விடப்பட்ட நாகபாசத்தை கருடபகவான் பொடி படச் செய்ததுபோலவும் கிழித்துச் சேதுவாகிய திருவணையை உடைத்துப் போட்டார்.
மேலே கண்ட புராணக் கதையிலிருந்து இராமன் பாலம் கடலுக்குள் அமைக்கப்பட்ட மணல் பாலம் அல்ல.அது மிதவைக் கற்களால் கட்டப்பட்டது. கடல் நீரின் மேல் மிதக்கும்படி கட்டப்பட்டது. (வருணனின் முதுகின்மேல். இராவணனை அழிக்க இலங்கைக்குச் சென்று வர மட்டுமே மிதவைப் பாலம் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் விபீஷணனின் வேண்டுகோளில் உள்ள நியாயத்தை இராமன் ஏற்று, அப்பாலத்தை இராமனே தகர்த்து விட்டான். அதுவும் எப்படித் தகர்த்தான்? பாம்பை கீரியானது குதறி எறிவது போல்; இந்திரசித்து விட்ட நாகபாசத்தை, கருடன் சிதைத்ததைப் போல் இராமன் தன் கையாலே, தன் வில்லாலே தகர்த்தான்.

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...