பக்கவாதம் எப்படி ஏற்படுகின்றது???
மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதை
"ஸ்ட்ரோக்" என்று அழைக்கிறோம்
இதயத்தில் இருந்து மூளைக்கு
ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பழுது மற்றும் மூளைக்குள் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் பழுது ஆகியவற்றால் ரத்த ஓட்டத்தில் சுணக்கம் ஏற்படுகின்றது.
எப்படி இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையை "ஹார்ட் அட்டாக்" ( இதய ரத்த ஓட்ட முடக்கம்) என்று அழைக்கிறோமோ
அதைப்போல இந்த ஸ்ட்ரோக்கை "ப்ரைன் அட்டாக்" ( மூளை ரத்த ஓட்ட முடக்கம்) என்று அழைக்கலாம்.
"மூளை" என்பது நமது தலைமைச்செயலகம் என்பதை அனைவரும் அறிவோம்
நமது இச்சை செயல்கள் அனைத்திற்கும் பிறப்பிடம் மூளை தான்.
நமது எண்ணங்கள்
செயல்பாடுகள் அனைத்திற்கும் மூல காரணம் மூளை
மூளைக்குத்தான் நமது ரத்த ஓட்டத்தின் பெரும்பங்கு செல்கிறது.
இப்படிப்பட்ட மூளையையும் முடக்கும் விதமாக ரத்த ஓட்ட சுணக்கம் இரண்டு வகைகளில் நடக்கும்
முதல் வகை
ரத்த ஓட்டத்தில் ஏற்படும் அடைப்பு
(ISCHAEMIC STROKE) இது தான் அரிதி பெரும்பான்மை பேருக்கு ஏற்படும்.
இரண்டாவது வகை
ரத்தக்குழாய்களில் ஏற்படும் கசிவு
(HAEMORRHAGIC STROKE) . மேற்சொன்ன இரண்டில் இது தான் அதிக ஆபத்தானது.
இந்த அடைப்பு
மூளைக்குள் உள்ள ரத்த குழாய்களில் மெல்ல மெல்ல அடைப்பு ஏற்படுவதால் இருக்கலாம். இதை THROMBOTIC STROKE
என்று அழைக்கிறோம்
அல்லது
வேறெங்கோ ரத்தக்கட்டி ஏற்பட்டு அது உடைந்து மூளைக்கான ரத்த நாளங்களுக்குள் வந்து அடைப்பு ஏற்படுத்துவது இதை EMBOLIC STROKE என்று அழைக்கிறோம்
மூளையில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது என்பதற்கான அறிகுறிகள் யாது????
இதை சுருக்கமாக BE FAST என்று கூறுவோம்.
Balance
நடையில் தள்ளாட்டம்
சரியாக நேர்க்கோட்டில் நடக்க இயலாமல் போவது.
Eye sight
திடீரென ஒரு அல்லது இரு கண்ணிலும் பார்வை பறிபோவது அல்லது பார்வைக்குறைபாடு ஏற்படுவது
Facial palsy
ஒரு பக்க முகம் தொங்கிப்போவது.
வாய் ஒரு பக்கமாக இழுத்துக்கொள்வது
Arm down
ஒரு பக்க கை அல்லது ஒரு பக்க கை மற்றும் கால் இயங்காமல் தொங்கி விடுவது.
Speech
நன்றாகப்பேசிக்கொண்டிருந்தவர்
பேச்சு குளறுவது அல்லது பேச இயலாமல் போவது
Time
இத்தகைய அறிகுறிகள் தோன்றினால் உடனே குறித்த நேரத்தில் மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவமனையை அடைய வேண்டும்.
எவ்வளவு நேரத்தில் மூளை சிறப்பு மருத்துவமனையை அடைய வேண்டும்???
ஒருவருக்கு மூளை ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதும்
அந்த குறிப்பிட்ட இடத்தைச்சுற்றி உள்ள அளவில் குறைவான மூளையின் பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு அங்கிருக்கும் செல்கள் முற்றிலும் இறந்து விடும். இதை CORE AREA என்று கூறுகிறோம்.
இது ஐந்தே நிமிடங்களில் நிகழ்ந்து விடும்.
ஆனால் அடைப்பு ஏற்பட்ட அந்த மையப்பகுதியைச்சுற்றி இருக்கும் பெரும்பான்மை பகுதிகளுக்கு இன்னும் ரத்த ஓட்டம் முழுமையாக தடைபட்டிருக்காது.
மிகக்குறைவான ரத்த ஓட்டத்தில் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு அந்த பகுதியின் மூளை செல்கள் காத்திருக்கும். அந்த பெரும்பகுதியை ISCHAEMIC PENUMBRA என்று அழைக்கிறோம்
இந்த காத்திருப்பு காலம் தான் GOLDEN PERIOD FOR STROKE என்று அழைக்கப்படுகின்றது
இது வெறும் மூன்று மணிநேரம் மட்டுமே.
எனவே ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்ட நிமிடத்தில் இருந்து 180 நிமிடங்களுக்குள் எவ்வளவு சீக்கிரம் அடைய முடியுமோ அவ்வளவு சீக்கிரம்
மூளை சிறப்பு மருத்துவமனையை அடைந்தால் அவருக்கு ரத்தக்கட்டியை கரைக்கும் மருந்து கொடுக்கப்பட்டு மீண்டும் மூளையின் பெரும்பகுதிக்கு ரத்த ஓட்டம் பாய்ச்சப்பட்டு காப்பாற்றப்படும்.
ஆனால் போதிய விழிப்புணர்வு இன்றி
முக்கியமான இந்த மூன்று மணிநேரங்களை
வீட்டிலேயோ அல்லது பயணத்தில் கழித்து விட்டு தாமதமாக கொண்டு செல்லும் போது ரத்தக்கட்டி நன்றாக உறைந்து கரைக்கும் தன்மை இல்லாமல் போய் விடுகிறது.
அதற்குப்பிறகும் ரத்தக்கட்டியை கரைக்கும் ஆஞ்சியோப்ளாஸ்டி சிகிச்சை முயன்று பார்க்கப்பட்டாலும் முதல் மூன்று மணிநேரங்களுக்குள் செல்பவர்களுக்கு கிட்டத்தட்ட முழுமையாக வாதம் சரியாகும் விந்தையைக் காண முடியும்.
60 வயதைத் தாண்டிய ஆண்களுக்கு பெண்களை விட அதிக ரிஸ்க் உண்டு.
தெற்காசியாவைச் சேர்ந்த நமக்கு ஸ்ட்ரோக் ரிஸ்க் அதிகம்.
உயர் ரத்த அழுத்தம்
போதிய உறக்கமின்மை
புகை பழக்கம்
உடல் பருமன்
உடல் உழைப்பின்மை போன்றவை
இதற்கான வேறு சில சரிசெய்யக்கூடிய காரணங்கள் ஆகும்.
தற்போது பல இளைஞர்களுக்கும் பக்கவாதம் வருவதை காண முடிகின்றது
மன அமைதியுடன்
ரத்த அழுத்தத்தை முறையான சிகிச்சை மூலம் பேணி
புகை பழக்கத்தை விட்டொழித்து
உடல் பருமன் குறைத்து
உடலை வளைத்து உழைப்பு செய்து
வாழ்ந்தால் இந்த பக்கவாதம் வருவதை தடுக்க இயலும்
பக்க வாதம் வந்தவர்களுக்கு முறையான
பேச்சு பயிற்சி
இயன்முறை மருத்துவம்
சுய வேலைகளுக்கான பயிற்சி போன்றவற்றை சரியான நேரத்தில் கொடுத்தால் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.
பக்கவாதம் வந்த முதியோர்களை கவனிக்கும் போது தண்ணீர் மெத்தையில் வைத்து பராமரிக்க வேண்டும் அல்லது அவர்களை இருபக்கவாட்டிலும் திரும்பி திரும்பி அரை மணிநேரத்திற்கு ஒருமுறை படுக்கச்செய்ய வேண்டும். முதுகில் அழுத்தம் தராத துணிகளை போடவேண்டும். அவர்களால் அசைய முடியாமல் போவதால் முதுகுப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு பெரிய புண்கள் ஏற்பட்டு சீழ் பிடித்து பெரும் பிரச்சனையாக மாறும் வாய்ப்பு உண்டு.
பக்க வாதம் குறித்த விழிப்புணர்வையும்
GOLDEN HOUR மூன்று மணிநேரம் குறித்த விழிப்புணர்வையும் நாமும் பெற்று பிறர்க்கும் எடுத்துக்கூறுங்கள்

No comments:
Post a Comment