Saturday, 29 November 2025

மனப் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் சுந்தர காண்டத்தின் சக்தி வாய்ந்த ஸ்லோகம்!

 


மனப் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் சுந்தர காண்டத்தின் சக்தி வாய்ந்த ஸ்லோகம்!

சுந்தரகாண்டம் அனுமனின் வீரதீர பராக்கிரமங்களைச் சொல்வது. சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்தாலோ, கேட்டாலோ நம் துயர்கள் எல்லாம் நீங்கும் என்பது நம்பிக்கை. அதற்கு அடிப்படை ராமாயணத்திலேயே இருக்கிறது.
பரம்பொருள் ஸ்ரீராமர், லோகமாதா சீதாதேவி. இவர்களின் மனத் துயரையே நீக்கியருளியவர் அனுமன் சுவாமி. அந்தப் பகுதிதான் சுந்தரகாண்டம். அப்படிப்பட்ட சுந்தர காண்டத்தைக் கேட்டாலோ, படித்தாலோ மானுடர்களாகிய நம் துயரங்கள் நிச்சயம் தீரும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.
அனுமன் பல்வேறு தடைகளைத் தாண்டி பறந்து வருகிறார். மைநாகத்தின் பாசத்தை வென்று, சுரசையின் சோதனைகளைக் கடந்து, இலங்கை மாநகருக்கு அருகில் வருகிறார். அங்கே லங்கினி என்னும் அரக்கி எதிர்ப்படுகிறாள்.
அனுமனின் வழியை மறித்தாள் லங்கினி. அவளிடம் தப்பிப்போக அனுமன் முயன்றார். ஆனால் அவளோ விடாது தாக்கவே, அனுமன் பேருருக் கொண்டு அவள் தலையில் குட்டினார். அந்த நொடியில் அவளுக்குத் தன் முன்ஜன்ம ஞாபகம் வந்தது.
லங்கினி முற்பிறவியில் பிரம்மலோகத்தைக் காப்பவள். அவள் பெயர் சத்யங்கினி. அகந்தையால் அங்கிருந்த முனிவர்களையும் தேவர்களையும் அவமரியாதை செய்தாள். இதுகுறித்து அவர்கள் பிரம்மதேவரிடம் முறையிட்டபோது, அவர் விசாரித்து சத்யங்கினி செய்ததே பிழை என்று கண்டார். கோபம் கொண்டு அவளை சபித்தார். ‘பூலோகத்தில் சென்று அரக்கியாகி ராட்சசர் வாழும் நாட்டைக் காப்பாயாக’ என்று சாபம் இட்டார்.
சத்யங்கினி தன் பிழையை எண்ணி வருந்தினாள். பிரம்மதேவரை வணங்கி சாபவிமோசனம் வேண்டினாள். பிரம்மதேவரும் மனம் இரங்கி, ‘எப்போது உன் தலையில் வலிமையுடைய ஒரு குரங்கு குட்டுகிறதோ, அப்போது உன் சாபம் நீங்கும்’ என்று தெரிவித்தார். பிரம்மன் இட்ட சாபத்தின்படி இத்தனை நாள்களும் அரக்கியாக இருந்து லங்கினி இலங்கை நகரைக் காத்துவந்தாள். அனுமன் அவள் தலையில் குட்டியதும் அவளுக்கு அனைத்தும் நினைவுக்கு வந்துவிட்டன.
அனுமனை அவள் வணங்கினாள். பிரம்மன் சொன்ன அனைத்தும் நிகழும் என்று கூறி, ‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்று அனுமனுக்கு மன உறுதி அளித்தாள். மேலும் `அனுமன் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் இனி வெற்றிகரமாக நிறைவேறும்’ என்றும் வாழ்த்தி, இலங்கைக்குள் செல்ல வழிவிட்டு நின்றாள்.
அனுமன் இலங்கைக்குள் புகுந்தான். அவன் புகுந்த நேரம் நள்ளிரவு. ஊர் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது. ஓர் ஊரின் அருமையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றால், அங்கு இரவு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். எந்த ஊரில் இரவு அமைதியானதாகவும் மக்களுக்குத் தூக்கம் தடை இல்லாததாகவும் இருக்கிறதோ, அந்த ஊர் உண்மையிலேயே நல்ல ஊர் என்பதில் சந்தேகமேயில்லை.
இலங்கையில் உத்தமர்கள் எல்லாம் தங்களின் தினப்படியான பணிகளை முடித்துவிட்டு நிம்மதியாக உறங்குகின்றனர். எப்போதும் யோகம் செய்யும் யோகியரும் உறங்குகிறார்கள். ராவணன் அரண்மனையில் இருக்கும் இந்திரனின் வெண் களிறான ஐராவதமும் உறங்குகிறது. பொதுவாக இரவு வேளையில் மனநிலை பிறழ்வு கொண்ட பித்தர்களுக்கு உறக்கம் வராது. ஆனால் இலங்கையில் அவர்களும் நிம்மதியாக உறங்கினார்கள் என்கிறார் கம்பர். இவ்வாறு விரிவாகச் சொல்லக் காரணம் இலங்கை, குறைவற்ற ஒரு தேசமாகத் திகழ்ந்தது என்பதை விளக்கத்தான்.
துளசிதாசர் தன் ராமாயணத்தில் ஒரு காட்சியைக் காட்டுகிறார்.
அனுமன் இலங்கையில் சுற்றித் திரிந்தபோது, ஒரே ஒரு வீடு மட்டும் வைஷ்ணவ லட்சணத்தோடு இருந்ததாம். வெளியே துளசி மாடம். சுவர்களில் சங்கு, சக்கர, கத ஆயுதங்களின் ரேகைகள் இருந்தன. அங்கே இருந்தவன் விபீஷணன். அவன் பெருமாளின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தான் என்று சொல்கிறார் துளசிதாசர். ஆனால் இது மூல ராமாயணத்தில் இல்லை. ஆனால் விபீஷணன் எத்தனை உத்தமமான பாகவதன் என்பதை எடுத்துரைக்க துளசிதாசர் இவ்வாறு விளக்குகிறார் என்று அதனைப் புரிந்துகொள்ளலாம்.
அனுமன் அரக்கர்கள் குடியிருக்கும் பகுதிக்குச் சென்றார். அவர் வந்த நோக்கம் சீதையைக் கண்டுபிடிப்பது. சீதை எப்படி இருப்பாள் என்று ராமன் அடையாளம் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்தக் குடியிருப்புகளில் அவர் பார்த்த பெண்கள் அனைவரும் அரக்கிகள். அவர்கள் அலங்கோலமாகப் படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் அருகே பெரிய பாத்திரங்களில் மது இருந்தது. ஸ்ரீராமர் சொன்ன அடையாளங்களோடு யாரேனும் இருக்கிறார்களா என்று விளக்கின் வெளிச்சத்தில் தேடினார். ஆனால் ஒருவர்கூட அந்த அடையாளத்தில் அங்கு இல்லை.
அனுமன் ராவணனின் அரண்மனைக்குள் நுழைகிறார். அங்கே படுக்கையறையில் ஒரு வீரன் படுத்திருக்கிறான். அவன் மார்பில் யானைகள் தந்தங்களால் குத்திய தடங்கள் பல இருந்தன. இதைக் கண்ட அனுமன், இந்த ஊரில் இப்படிப்பட்ட ஒரு வீரன் இருக்கிறான் என்றால் அது ராவணனாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்கிறார். அனுமனின் முடிவு மிகவும் சரியானது. அவன் ராவணன்தான்.
அவன் அருகிலேயே ஒரு பெண் அடக்கமாகப் படுத்திருக்கிறாள். சாந்தமான அவள் முகத்தைக் கண்டதும் அனுமன் ஒரு கணம் அவள்தான் சீதை என்று நினைத்து மகிழ்ச்சியில் துள்ள ஆரம்பித்தார். பொதுவாகக் குரங்குகளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டால் தன் வாலுக்கு முத்தம் கொடுத்துக் கொள்ளுமாம். அப்படி அனுமனும் தன் வாலை எடுத்து முத்தமிட்டுக் கொண்டார்.
சந்தோஷத்தில் அருகில் இருந்த தூணில் மேலே ஏறி இறங்கினார். ஆனந்த நடனமிட்டார். அடுத்த கணம் அவருக்குள் ஏதோ ஒன்று தோன்றியது. அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து சிந்திக்கத் தொடங்கினார்.
‘ஆண்களில் புருஷோத்தமர் என்று போற்றப்படுபவர் ராமர். அவரே சீதையின் பிரிவை நினைத்து அழுகிறார் என்றால், சீதாதேவி எப்படிப்பட்ட கல்யாணகுணங்கள் உடையவராக இருப்பார்? லோகமாதாவான சீதா, ராவணன் அருகே படுத்திருப்பாரா... அவ்வாறு எண்ணியதே பாவம் அல்லவா’ என்று தனக்குத் தானே வருந்தினார் அனுமன். பிறகு, அங்கிருந்து புறப்பட்டு நகரின் பல பகுதிகளிலும் தேடினார். ஆனால் சீதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அனுமன் மனம் உடைந்தார். அவருக்கு ராமர் இட்ட கட்டளையை நிறைவேற்ற முடியவில்லையே என்று வருந்தினார். சுக்ரீவனின் சேனையில் ஆயிரக்கணக்கான குரங்குகள். அவற்றை மூன்றாகப் பிரித்து மூன்று திசைகளிலும் சீதையைத் தேட அனுப்பினார்.
ஆனால் அனுமனை மட்டும் தெற்கு திசை நோக்கி அனுப்பினார். அதுவும் தன் கை மோதிரத்தைக் கொடுத்து அனுப்பினார் என்றால் அதற்குக் காரணம் ராமர் அனுமன் மீது வைத்த நம்பிக்கை. அதை நினைத்ததும் அனுமனின் மனம் கனத்தது.
இப்போது திரும்பிச்சென்று சீதையைக் காணமுடியவில்லை என்று சொன்னால் ஸ்ரீராமர் உயிர் தரித்திருப்பாரா? அவர் உயிர் துறந்தால், லட்சுமணப் பெருமாள் தாங்குவாரா? சுக்கிரீவன் முதலான வானர சேனைகள் தாங்குமா? அயோத்தி மக்கள் அதைத் தாங்கிக் கொள்வார்களா? தன் சொல்லால் எத்தனை பேருக்குத் துயரம் உண்டாகிவிடும் என்று தவித்தார்.
இப்படி அனுமனுக்குள் பல்வேறு சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன. ஏன் தன்னால் சீதாதேவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று யோசித்தார்.
‘சீதாதேவி இந்த உலகின் தாய். அவள் அனுக்கிரகம் இல்லாமல் அவளை அறியமுடியுமா? தான் இலங்கையை நோக்கிப் புறப்படும் போது, குருவான சூரியனை வணங்கினேன். ஸ்ரீராமரை வணங்கினேன். லட்சுமணரை வணங்கினேன். அஷ்டதிக் பாலகர்களை வணங்கினேன். ஆனால் சீதாபிராட்டியை வணங்கவில்லை. தேடுவதோ அவளைத்தானே... அவள் அனுக்கிரகம் இல்லாமல் அவளை அறிந்துகொள்ள முடியுமா...’ என்று நினைத்தார். அடுத்த கணம் சீதாதேவியை நினைத்துத் துதிக்கலானார்.
நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய
தேவ்யைச தஸ்ய ஜனகாத்மஜாயை
நமோஸ்து ருத்ர இந்தர யம அநிலேப்யக
நமோஸ்து சந்தராக்க மருத் கணேப்ய:
சுந்தர காண்டத்தில் உள்ள இந்த ஸ்லோகம் மிகவும் முக்கியமானது. நமக்கு முடிவெடுக்க முடியாமல் திணறும் நேரத்தில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி அனுமனை தியானித்தால், நல்ல முடிவு தோன்றும். மனதில் பலம் பெருகும். பிரச்னைகள் தீரும் என்கிறார்கள் பெரியோர்கள்.

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...