எது தேவையோ, அதுவே தர்மம்.
ஒரு ஊரில் ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர்.
யாருக்காவது ஏதாவது கொடுத்துக் கொண்டே இருப்பார்.
தினமும் யாராவது ஒருவருக்கு ஏதாவது கொடுக்கவில்லை என்றால் அவருக்கு தூக்கம் வராது. அப்படி ஒரு பழக்கம்.
அதுமட்டுமல்ல அவர் கொடுப்பது அடுத்தவர்களுக்கு தெரியாது. அவ்வளவு ரகசியமாக கொடுப்பார்.
ஒரு நாள் இரவு அவர் ஏற்கனவே தயாராக கட்டி வைத்திருந்த பண முடிப்பை கையில் எடுத்துக்கொண்டார்.
வீட்டை விட்டு வெளியில் வந்தார். தெருவில் இறங்கி நடந்தார். இன்றைக்கு யாருக்கு தர்மம் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருட்டில் நடந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரில் ஒருவர் வருவது போல் இருந்தது. உடனே அவரிடம் போனார் .
தன்னிடமிருந்த பண முடிப்பை அவசரம் அவசரமாக அவர் கையில் திணித்து விட்டு திரும்பி வந்துவிட்டார்.
அப்பாடா ஒரு வழியாக தருமம் செய்தாகி விட்டது என்கின்ற மகிழ்ச்சி!
மனநிறைவு அவர் முகத்தில்!
நிம்மதியாக தூங்கி எழும்பினார்.
மறுநாள் காலையில் ஊர் பூராவும் ஒரே பேச்சு .
நேத்து ராத்திரி ஒரு திருடன் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் விட்டார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
இதை கேள்விப்பட்டதும் பெரியவருக்கு வருத்தமாகிவிட்டது. போயும் போயும் ஒரு திருடனுக்கு உதவி செய்தோம் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டதே என்று நினைத்தார்.
சரி இன்றைக்கு யாருக்காவது உதவி செய்வோம் என்று முடிவு பண்ணினார்.
எதிரில் ஒரு பெண்ணின் உருவம் மங்கலாகத் தெரிந்தது.
உடனே அந்தப் பெண்ணிடம் பணத்தை கொடுத்துவிட்டு போனார்.
மறுநாள் காலையில் ஊர் பூராவும் நேத்து ராத்திரி விபச்சார பெண்ணின் கையில் யாரோ பணத்தை கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள் என்று பேச்சு.
அடடா இன்றைக்கும் தவறு நடந்து விட்டது என்று வருத்தப்பட்டார்.
இருக்கட்டும் இன்றைக்கும் ஏதாவது தர்மம் செய்வோம் என்று நினைத்தார்.
மூன்றாம் நாள் இரவும் புறப்பட்டார். அப்போதும் எதிரில் ஒருவர் வந்தார். இவர் பணத்தை கொடுத்தார்.
மறுநாள் மக்கள் இரவு ஒரு செல்வந்தர் கையில் யாரோ பணத்தை கொடுத்துவிட்டு போய் இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
தினம் தினம் இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்துக் கொண்டு படுத்து தூங்கினார்.
அன்று இரவு ஒரு கனவு.
அந்த கனவில் இறைவன் வந்தார்.
நீ கொடுத்த தர்மம் வீணாகப் போய்விடவில்லை.
உன்னிடம் பணம் வாங்கிய அந்த திருடன் திருந்தி விட்டான்.
அந்தப் பெண்ணும் திருந்தி விட்டாள். அந்த செல்வந்தனும் கொடையாளி ஆகிவிட்டான் என்று கடவுள் சொன்னார்.
அதாவது நல்ல மனதுடன் தர்மம் செய்தால் அது ஒருபோதும் வீணாகப் போய் விடாது.
அது மட்டுமல்லாமல் தருமம் தன்னை மட்டுமல்ல அடுத்தவர்களையும் தீமையிலிருந்து காப்பாற்று சக்தி வாய்ந்தது.

No comments:
Post a Comment