இந்திரன் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மாவிடம் சென்றான். அதற்கு பிரம்மா குறுமாணக்குடி சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற வழி கூறினார். இந்திரனும் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட, அவனது ஆயிரம் பெண் குறிகளும் ஆயிரம் கண்களாகத் தோன்றுமாறு அருள் செய்தார். இந்திரனின் சாபம் தீர்ந்தது. எனவே இத்தல இறைவன் "கண்ணாயிரமுடையார்" என்று பெயர் பெற்றார். #வாமன அவதாரம் எடுத்த திருமாலும் இத்தலத்தில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட, அவருக்கும் அருள் செய்ததால் இத்தலத்திற்கு "குறுமாணக்குடி" என்ற மறு பெயரும் உண்டாயிற்று.
சீகாழியை விட்டுத் தாதையார் முதலியவர்கள் உடன் போக அடியார்கள் வாழ்த்தொலி எடுத்துவரத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருக்கண்ணார்கோயிலை அடைந்தார். அங்கு எழுந்தருளியுள்ள பிஞ்ஞகனை "தண்ணார் திங்கள் பொங்கரவம்" என்னும் திருப்பதிகத்தால் தோத்திரித்தார். திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
திருக்கண்ணார்கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் அணுகாது, நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் வந்தடையும், இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு எமனால் வரும் துன்பங்கள் இல்லை, இத்தல இறைவனை வழிபடுகவர்கள் தம் உள்ளத்தில் மலம் நீங்கப் பெற்றவராய் வானுலகில் இனிது உறைபவராவர், இப்பதிகப் பாடல்கள் பத்தினாலும் போற்றி வழிபட வல்லவர்கள், தம் மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர்." என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் கூறியுள்ளார்.
பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத
கண்ணார் கோயில் கைதொழுவோர்கட்கு இடர்பாவம்
நண்ணாவாகும் நல்வினையாய நணுகும்மே."
— (திருஞானசம்பந்தர் தேவாரம் : 01.101.01)
பதிக குரலிசைக்கு : https://youtu.be/LGoXP-mYFYw
பொருளுரை : குளிர்ந்த திங்கள், சினம் மிக்க பாம்பு, ஆகாயத் திலிருந்து தாழ்ந்துவந்த கங்கை ஆகியவற்றை முடியில் சூடி, பெண்ணும் ஆணுமாய கோலத்தில் விளங்கும் பெருங்கருணையாளனாகிய சிவபிரான் பிரியாமல் எழுந்தருளியிருக்கும் திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் நண்ணா. நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் நண்ணும்.
ஆலய முகவரி : அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோவில், குறுமானக்குடி, கொண்டத்தூர் அஞ்சல், தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், PIN - 609 117. இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

No comments:
Post a Comment