Friday, 17 April 2026

"திருச்செங்காட்டங்குடி | சிறுத்தொண்டர் அமுது படையல் | சித்திரை - பரணி"


 🍁"திருச்செங்காட்டங்குடி | சிறுத்தொண்டர் அமுது படையல் | சித்திரை - பரணி"🍁

#திருச்செங்காட்டங்குடி : கஜமுகன் என்னும் யானை முகம் கொண்ட அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். தேவர்கள் கஜமுகாசுரனிடமுருந்து தங்களைக் காக்கும்படி சிவனை வேண்டினர். சிவபெருமான் கணபதியை அனுப்பி அசுரனை சம்ஹாரம் செய்தார். இதனால் கணபதிக்கு தோஷம் உண்டாகவே, பூலோகம் வந்து சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து தவமிருந்தார். சிவன் அவரது தோஷம் நீக்கியருளினார். மேலும் அவரது வேண்டுதலுக்காக அவர் தவமிருந்த இடத்தில் லிங்கமாக எழுந்தருளி கணபதீஸ்வரர் என்றும் பெயர் பெற்றார். இத்தலமும் கணபதீச்சுரம் என்று பெயர் பெற்றது. விநாயகரால் சம்ஹாரம் செய்யப்பட்ட கஜமுகாசுரனின் செங்குருதி(ரத்தம்) இப்பகுதியில் காடாய்ப் பெருகியமையால் இத்தலம் "திருச்செங்காட்டங்குடி" எனப்பெயர் பெற்றது.
இறைவர் : ஸ்ரீ உத்தராபசுபதீஸ்வரர்
இறைவியார் : ஸ்ரீ திருகுகுழல் உமைநங்கை
பல்லவ மன்னன் நரசிம்மவர்மனிடம் சேனாதிபதியாக இருந்த பரஞ்ஜோதி வாதாபி போரிலிருந்து திரும்பி வந்த பிறகு தன்னை முழுமையாக சிவசேவையில் ஈடுபடுத்திக் கொண்டார். அடியார்களுக்கும் அடியாராக இருந்து தொண்டு செய்ததால் "சிறுத்தொண்டர்" என்று சிறப்புப் பெயர் பெற்றார். சிறுத்தொண்டரின் பெருமையை உலகறியச் செய்ய விரும்பிய சிவபெருமான் இவரை சோதிக்க பைரவ வேடம் பூண்டு வந்தார். அப்போது சிறுத்தொண்டர் வீட்டில் இல்லை. அவரது மனைவி திருவெண்காட்டு நங்கை, பணிப்பெண் இருவரும் அடியாரை சாப்பிட அழைத்தனர். அவர்களிடம், ஆண் இல்லாத வீட்டில் சாப்பிட மாட்டேன் என்றவர், இக்கோயிலில் உள்ள ஆத்தி மரத்தடியில் காத்திருப்பதாகச் சொல்லிச் சென்றார். வீடு திரும்பிய சிறுத்தொண்டர் நடந்ததை அறிந்தார். கோயிலுக்கு வந்து அடியாரை அழைத்தார். அந்த அடியவர் வித்தியாசமான ஒரு சாப்பாடு கேட்டார். சிறுத்தொண்டரிடம் அவரது பிள்ளை சீராளனை சமைத்து கறியாக்கி எனக்கு தர வேண்டும் என்றார். சற்றும் தயங்காத சிறுத்தொண்டரும், அவரது மனைவி திருவெண்காட்டு நங்கையும் அவ்வாறே செய்தனர். அவரது பக்தியைப் பாராட்டிய சிவன், சீராளனை உயிர்ப்பித்து அவரிடம் ஒப்படைத்தார். சிறுத்தொண்டருக்கு நாயன்மார்களில் ஒருவராகும் அந்தஸ்தைக் கொடுத்தார்.
இவ்வாலயத்திற்கு சம்பந்தர் பதிகங்கள் இரண்டு, அப்பர் பதிகம் ஒன்று ஆக மொத்தம் மூன்று பதிகங்கள் இருக்கின்றன. சம்பந்தர் திருநாகைகைகாரோணம், கீழ்வேளூர் ஆகிய திருத்தலங்களை தரிசித்துக் கொண்டு திருசெங்காட்டங்குடி வந்தார். சிறுத்தொண்டர் சம்பந்தரை வரவேற்று அவருடன் திருக்கோவிலை அடைந்து இருவரும் இறைவனைப் பணிந்தனர். சம்பந்தர் தனது இரு பதிகங்களில் ஒன்றான "பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்" என்று தொடங்கும் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் சிறுத்தொண்டர் இவ்வாலய இறைவனுக்கு செய்து வந்த பணியினைப் போற்றி சிறப்பித்துப் பாடியுள்ளார்.
🍁"பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்து என்னைத் தவிரா நோய் தந்தானே
செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே."🍁
——(திருஞானசம்பந்தர் தேவாரம் : 03.063.01)
பதிக குரலிசைக்கு : https://youtu.be/1GkKoOBXEJI
பொருளுரை : பசுமையான கிளைகளில் மலர்களையுடைய புன்னை மரத்தில் வீற்றிருக்கும் பறவைகளே! தலைவனான சிவபெருமான் என்னைப் பிரிந்ததால் உடம்பு பசலைநிறம் பெற, ஓடி ஆடி உல்லாசமாக இயங்கிய என் மகிழ்ச்சியை நீக்கி எனக்குத் தாங்காத துன்பம் தந்தான். அவன் திருச்செங்காட்டங்குடி என்னும் திருத்தலத்தில் சிறுத்தொண்டர் பணி செய்ய சுடுகாட்டுள், கையில் அனல் ஏந்தி திருநடனம் புரியும் பெருமானாவான்.
ஆலய முகவரி : அருள்மிகு உத்தராபசுபதீஸ்வரர் திருக்கோவில், திருசெங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம் அஞ்சல், நாகப்பட்டினம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், PIN - 609 704.
எப்படிப் போவது : திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலத்தில் இருந்து நாகூர் செல்லும் சாலை வழியில் திருப்புகலூர் அடைந்து, அங்கிருந்து தெற்கே திருக்கண்ணபுரம் செல்லும் சாலை வழியாகச் சென்று திருசெங்காட்டங்குடி தலத்தை அடையலாம். நன்னிலத்தில் இருந்து சுமார் 28 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருசெங்காட்டங்குடியில் இருந்து அருகில் உள்ள திருமருகல், திருசாத்தமங்கை, திருப்புகலூர் ஆகிய மற்ற சிவஸ்தலங்களையும் தரிசிக்கலாம். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., தூரத்திலுள்ள திருப்புகலூர் சென்று அங்கிருந்து 4.5 கி.மீ. சென்று இக்கோயிலை அடையலாம்.

No comments:

Post a Comment

"திருச்செங்காட்டங்குடி | சிறுத்தொண்டர் அமுது படையல் | சித்திரை - பரணி"

  "திருச்செங்காட்டங்குடி | சிறுத்தொண்டர் அமுது படையல் | சித்திரை - பரணி" — #திருச்செங்காட்டங்குடி : கஜமுகன் என்னும் யானை முகம் கொ...