• தேர் கட்டுதல்
• பாடை கட்டுதல்
• தொட்டில் கட்டுதல்
பணவசதி கொண்டவர்கள், வாழ்ந்து முடித்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) மூங்கிலால் தேர்செய்து அதில் அமர வைத்துத் தூக்கிச்சென்று அடக்கம் செய்வார்கள்.
பணவசதி இல்லாதவர்கள் மற்றும் கணவனுக்குத் தேர்க் கட்டாமல் இறந்து போகும் பெண்களுக்கு வைக்கோலால் படுக்கை செய்து மூங்கிலில் வைத்துக் கட்டி அதில் படுக்கவைத்துத் தூக்கிச் சென்று அடக்கம் செய்வார்கள்.
குறிப்பு: திருமணமாகிப் பாதி வாழ்க்கையிலேயே எதிர்பாராமல் இறந்து போகக் கூடியவர்களுக்கும் இதையே செய்கிறார்கள்.
திருமணம் ஆகாதவர்களுக்கு (குழந்தைகள், இளைஞர்கள்) வெள்ளைத் துணியால் தொட்டில் கட்டி எடுத்துச் செல்கிறார்கள்.
#தேர்_கட்டினால் செய்யும் சடங்குகள்;
பூரண வாழ்வு வாழ்ந்து முடிந்தவர்களுக்கு இறைவனுக்குச் செய்யும் வழிபாட்டு முறைகள் அனைத்துமே இச்சடங்கில் இருக்கும்.
இறந்தவர்கள் உடலுக்கு ‘நல்லடக்கம்’ செய்யப்படும். இதை நாவிதர் செய்வார்.
தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு, ஒரு தட்டில் அரிசி, அதன்மேல் வட்டுக்கருப்பட்டி, ஊதுபத்தி, சூடம் இவற்றை வைக்க வேண்டும். பங்காளி வீட்டுப்பெண் மண்விளக்கு ஏற்றி பங்காளி வீட்டு ஆண் தேங்காய் உடைத்து வைக்க அனைவரும் இறந்தவர்களை வணங்குவார்கள், பங்காளி வரும்வரை காத்திருக்க வேண்டும் மற்றவர்கள் செய்யக் கூடாது. அதன் பின்பே இறப்பு நடந்த வீட்டில் அழுவார்கள்.
பறையடிப்பவர்கள் வெளியே பறை அடிப்பார்கள். அதில் புராணக் கதைகளைக் கதைப் பாடல் வடிவில் இசைப்பார்கள். (குறிப்பாக அரிச்சந்திரன் கதைப்பாடல் இருக்கும்) அவர்களுக்கு அங்கே வந்திருப்பவர்கள் அனைவரும் பணம்போடுவார்கள். அதற்கு ‘வாசப் பணம்’ என்று பெயர் (வாச – வாயில்) இப்படியாக ஒருநாள் வீட்டில் பிணத்தை வைத்திருப்பார்கள்.
அடக்கம் செய்யும் நேரம் நெருங்கும் வேளையில் அதாவது, பிணத்தைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் முன்பாக வெளியே எடுத்து வந்து, உட்கார வைத்து, மகளும் பங்காளிகளும் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் புனிதநீர்கொண்டு வந்து குளிப்பாட்டுவார்கள். எண்ணெய் மற்றும் அரப்புப் பொடியைத் தலையில் வைப்பார்கள். இப்படியாக நீராடுதல் நடத்தப் பெற்று அபிஷேக பூசை அனைத்தும் செய்வார்கள். உட்காரவைப்பதற்கு வலது புறமாகப் பூப்பந்தல் போடுவார்கள் (பொன்னரளிச் செடியின் கிளைகளால்).
பங்காளி வீட்டிலிருந்து இறந்தவரின் சகோதரன் பிறந்தவீட்டுப் பட்டு சுமந்தும் மகள் வழிப் பேத்தி பல்வேறு பூக்கள் நிறைந்த கூடையைத் தலைமேல் சுமந்து (இதனைப் பிண்ணப்பூப் போடுதல் என்பார்கள்) கொண்டு வந்து அதைப்போட்டு வணங்குவார்கள். பூசைகள் முடிந்தவுடன் புத்தாடை அணிவித்து அப்படியே தேரில் வைத்துக்கட்டிப் பறையொலியுடனும் வெடிகள் வெடிக்கச் சுடுகாட்டிற்குக் கொண்டு செல்வார்கள். அப்பொழுது, ‘வண்ணார்’ என்று சொல்லக் கூடிய சலவைத்தொழிலாளி தீப்பந்தம் பிடிப்பார். (ஆண்களுக்குக் குளிப்பாட்டுதல் நடைபெறுவதற்கு முன்பு முகச்சவரம் செய்வார்கள்; மனைவியை அழைத்துக் காலடியில் அமர வைத்துத் தாலிக்கயிற்றை அறுத்து இறந்தவரின் காலில் கட்டி விடுவார்கள்.)
சுடுகாடு செல்லும் வரை பிணத்தைச் சுமந்துகொண்டு பொரி, கடுகு, பூக்கள் இவற்றை வீசிக்கொண்டு செல்வார்கள்.
சுடுகாட்டில் செய்யும் சடங்கு:-
குழியில் படுக்க வைத்தவுடன் தாயாக இருந்தால் தலைமகன் (மூத்தமகன்) தந்தையாக இருந்தால் இளையமகன், (கடைசிமகன்) முதலில் மண்தள்ளிய பின்பு அனைவரும் சேர்ந்து குழியை மூடிவிடுவார்கள். பிணத்தை அடக்கம் செய்த பின்பு சுள்ளிச் செடியை அல்லது கள்ளிச் செடியைக் குழிமேட்டில் வைப்பார்கள். காலடியில் தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து வழிபாடு செய்வார்கள்.
மொட்டை அடித்தல், குடம் உடைத்தல்:-
மண் தள்ளியவர் தான் மொட்டையடிப்பார். அவரின் தோளில் நீர் நிரம்பிய பானையைச் சுமந்து கொண்டு இடது வலமாகச் சுற்ற வேண்டும். ஒவ்வொரு சுற்று முடிந்தவுடன் ‘தோட்டி’ (வெட்டியான்) அரிவாளால் ஓர் ஓட்டை போடுவார்; மொத்தம் மூன்று ஓட்டைகள் போட்டு இறுதியில் கீழே போட்டு உடைத்து விடுவார்கள். பின்பு கொள்ளி வைப்பார்கள்.
வீடு திரும்புதல்:-
ஆண்கள் சுடுகாட்டில் இருந்து வீடு திரும்பியவுடன் அதாவது அவர்கள் வருவதற்கு முன்பாகப் பங்காளி வீட்டுப் பெண்கள் வீட்டைக் கழுவி சுத்தம் செய்து நடு வீட்டில் விளக்கேற்றி வைத்திருப்பார்கள். இறந்தவுடன், எந்தப் பங்காளி வீட்டுப் பெண்ணால் விளக்கு ஏற்றப்பட்டதோ அதே பெண் புதுப்பானை வைத்து அகத்திக்கீரை, சர்க்கரை, கருவாடு கலந்த சோறாக்கித் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆண்கள் வந்தவுடன் உள்ளே வராமல் ஏற்றப்பட்ட விளக்கைப் பார்த்து வணங்குவார்கள். ஆக்கி வைத்த சோற்றை இறந்தவர் வீட்டின் கூரைமேல் போடுவர். பின்பு மொட்டையடித்து; தாய்மாமன் முதலில் புத்தாடை அணிவித்து விடுவார். பின்பு மற்ற மாமன் உறவுமுறை உடையவர்கள் புத்தாடையும் பணமும் வைத்துக் கொடுப்பார்கள். வந்திருந்த உறவுமுறைகள் அனைவரும் சேர்ந்து உணவு சமைத்து உண்பார்கள்.
பாடை கட்டுதல்:-
பாடை கட்டுபவர்களுக்குப் பறையடிக்கமாட்டார்கள். குளிப்பாட்ட மாட்டார்கள். வழிபாட்டு முறைகளும் அதிகம் இருக்காது பாடைகட்டினால் இறந்தவர்களை நடுவீட்டில் உட்கார வைக்கமாட்டார்கள். படுக்கவைத்து விடுவார்கள். மற்ற சடங்குகள் பொதுவானவை. எடுக்கும் முன்பாக வெளியே எடுத்து வந்து பங்காளி வீட்டுப் பெண் மஞ்சள் தெளித்தவுடன் பங்காளிகள் கோடி (புதிய வெள்ளைத்துணி) போடுவார்கள். பாடையில் வைத்துக்; கட்டியெடுத்துச் செல்வார்கள். சுடுகாட்டில் செய்யும் சடங்கு தேர் கட்டுவதற்குப் போலவே நடக்கும்.
(குறிப்பு : தொட்டில் கட்டி எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்கும் இது பொருந்தும்.)
கருமாதி அல்லது சாஸ்திரம் செய்தல்:-
இறந்த மூன்றாம் நாள் புதன் ஞாயிறு போன்று நாளில் சுடுகாட்டிற்குப் பால், நெய் மொட்டை அடித்தவரால் கொண்டு சென்று குழிமேட்டில் ஊற்றி விட்டுவந்து (மற்ற உறவுமுறை ஆண்களும் உடன்செல்வார்கள்) வீட்டில் இறந்தவர் விரும்பி உண்ணும் உணவு வகைகள் அனைத்தையும் படையலிட்டு வணங்கிப் படையலைக் காகத்திற்கு வைப்பார்கள்.
கடாத்துதல்:-
பிணத்தைச் சுடுகாட்டில் அடக்கம் செய்வதோடு மட்டுமின்றி சில இனக்குழுவில் எரிப்பார்கள் பிணத்தை எரித்த பின்பு அந்தத் தணலை நாவிதர், உறவினர்கள் சென்று நீரூற்றி அணைப்பார்கள் (நாவிதர் தான் நீர் ஊற்றுவார்). பின்பு மூன்று தலைவாழை இலையை விரித்துத் தலைப்பகுதியில் இருந்து ஓர் எலும்பு, உடம்பின் நடுப்பகுதி எலும்பு, கால்பகுதி எலும்புகள் என நாவிதர் வெளியே எடுத்து அபிஷேக வழிபாட்டுமுறை செய்வது போலவே (பால், இளநீர் கொண்டு கழுவி) செய்து, புதுப்பானையில் அவைகளைப் போட்டவுடன் உறவினர்கள் செலுத்திய காணிக்கையோடு வைத்துக்கட்டி அவர் வீட்டில் கொண்டு சென்று மிகவும் பாதுகாப்பாக 16 நாள் வைத்திருப்பார். இதற்கு ‘அங்கம் எடுத்தல்` என்று கூறுவர். பதினாறாம் நாள் சடங்கிற்கு ஆறுடன் கூடிய சிவன் கோவிலுக்குச் சென்று காணிக்கையை நாவிதர் எடுத்துக்கொண்டு அந்தப் பானையை ஆற்றில் விடுவார்கள். இதற்கு ‘அஸ்தி கரைத்தல்` என்று சொல்லுவார்கள்.
நல்லடக்கம் செய்தல்:-
மனித உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன் உடலில் எண்ணற்ற நோய்க் கிருமிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் உற்பத்தியாகிவிடும். இவை உடலை விட்டு வெளியேறாமல் இருக்க உடலில் இருக்கும் துவாரங்களை அடைத்து விடுவார்கள். (கண், காது, மூக்கு, வாய், மலத்துவாரம்) இறந்தவுடன் கண்களை மூடிவிடுவார்கள்; காது, மூக்கு இரண்டிற்கும் பஞ்சு வைத்து அடைப்பார்கள்; வாயைத் துணி கொண்டு கட்டி விடுவார்கள்; மல துவாரத்தைத் துணி கொண்டு அடைப்பார்கள். இதற்கு ‘சேமம் அடைப்பது’ என்று சொல்லுவார்கள். இதை நாவிதர்தான் செய்வார். நாவிதருக்கு ‘மருத்துவன்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. பெண்களுக்கு மகப்பேறு மருத்துவமே அன்றைய காலகட்டங்களில் மருத்துவச்சி (நாவிதப்பெண்) செய்திருக்கிறார். பிறப்பு முதல் இறப்புச் சடங்குகள் வரை இவர்கள் முதன்மையானவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு இனத்திலும் சீர்க்காரர், முறைமைக்காரர், அருமைக்காரர், சடங்கு முறைகளை நன்கு அறிந்து வைத்திருப்பவர்க்குப் பரிகாரி (நாவிதர்) என்போர் இருப்பார்கள். பரிகாரி சடங்குகளை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் கூறுவதுடன் அவரே அதைச் செய்யக் கூடியவராகவும் இருப்பார். நாவிதருக்குப் பரிகாரி, பண்டிதர், மருத்துவர், குடிப்பிள்ளை (அனைத்து இனக்குழுவிற்குப் பொதுவானவர் என்பதால் இப்பெயர்) நாவிதர் எனப் பலபெயர்கள் உண்டு.
பூப்பந்தல் போடுதல்:-
பொன்னரளிப் பூச்செடியின் பூக்களோடு கூடிய கிளைகளை வெட்டிவந்து குளிப்பாட்டும்போது, வலதுபுறம் வைத்து விடுவார்கள். இதற்குப் “பூப்பந்தல் போடுதல்’’ எனக் கூறுவார்கள். எத்தனையோ அரளிச் செடிவகைகள் இருக்க, ஏன்? பொன்னரளிச் செடியைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என ஆய்வாளருக்கு ஐயப்பாடு எழுந்து தகவலாளியிடம் (மேலது) விளக்கம் கேட்டபொழுது, “பொன்னரளிப்பூ மருத்துவத் தன்மை உடையது; பால் விஷத்தன்மை உடையது, பொதுவாகவே, அரளிச் செடியின் தன்மை தீமையானது; பூவின் வாசனை நறுமணம் வாய்ந்ததாக இருக்காது. எனவே, மற்ற பூக்களையும் கெடுத்துவிடும் என்பதால் இறைவனுக்குச் சூட்டுவதில்லை, எளிதில் பட்டுப் போகும். இதனால் பட்டுப்போன உடம்பின் அடையாளமாகவே இச்சடங்கில் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், இது புழக்கம் இல்லாத இடங்களில்தான் முளைக்கும். சுடுகாட்டில் அதிகம் இருக்கும் என்பதாலும் இந்தப் பூவைப் பயன்படுத்துவார்கள். இதைப் பிறருக்குச் சாபம் இடும்போது கூறும் பழமொழி வாயிலாக விளங்கிக் கொள்ளலாம்.
“வேள முளைக்கோணும் வெரூடாய்ப் போகோணும்
எட்டி முளைக்கோணும் எருக்கலை காய்க்கோணும்
அரளிமுளைக்கோணும் அடியோட போகோணும்”
வேளச்செடி, எட்டிமரம், அரளிச்செடி, புழக்கம் இல்லாத, புழங்கக்கூடாத இடங்களில் முளைக்கும். இதை மற்றொரு பாடலின் வாயிலாக விளங்கிக் கொள்ளலாம்.
"வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலிவந்து படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை” (ஒளவையின் நல்வழிப் பாடல்-23)
அதாவது மன்றோரம், பெண்ணோரம் சொல்லுதல் கூடாது. ‘ஓரம் பேசுதல்’ என்றால் ஒருபக்கமாகச் சாய்ந்து பேசுதல் என்று பொருள். அப்படிப் பேசக்கூடியவர் வாழும் வீட்டில் வேதாளம் சேரும். வெள்ளெருக்கம் பூக்கும், சேடன் (பாம்பு) குடிபுகும்; பாம்பு குடியிருந்த வீட்டில் வாழ மாட்டார்கள். எனவே, அங்கு மூதேவிதான் வாழ்வாள். பாதாள மூலி, (எட்டி, எருக்கலை) படரும். இப்பாடலில், எதற்கும் ஓரம் பேசுதல் கூடாது என்று சொல்லப்படுகிறது. அப்படிப் பேசுபவர்கள் வீடு பட்டுப் போகும் என்பதுதான் இதன் மூலப்பொருண்மை ஆகும்.
எண்ணெய், அரப்பு குளிப்பாட்டும் போது எண்ணெய்யும் அரப்பும் வைத்துக் குளிப்பாட்டுவார்கள். எண்ணெய் நீருடன் கலக்காது. அரப்பு எண்ணெய்யுடன் சேராது. அதைப் போலவே இறந்தவர்கள் இனிமேல் நம்முடன் சேர்ந்து இருக்கப் போவதில்லை: இருக்கவும் முடியாது. இதனை வலியுறுத்தத்தான் இச்சடங்கு செய்யப்படுகிறது. (மேலது) இதை; கண்ணதாசன் தம் திரைப்படப்பாடல் ஒன்றில்,
எண்ணெய்யுடன் தண்ணீரை எப்படித்தான் கலந்தாலும்
ஒன்றுசேர முடியாதடி முத்தம்மா
இயற்கைக் குணம் மாறாதடி”
எனப்பாடியுள்ளார். இறந்தவர்கள் நம்முடன் மீண்டும் சேருவதில்லை என்பதை
“மாண்டவர் எழுந்து வந்தால் மந்தை இடங்கொள்ளாது
செத்தவர்கள் எழுந்துவந்தால் சீமை இடங்கொள்ளாது”
(அண்ணமார் சுவாமி கதை, நல்லதங்காள் கதை) என்பதன் வாயிலாகவும் விளக்கம் பெறலாம்
நெய்ப்பந்தம் பிடித்தல்:
இறந்தவர்கள் ஆன்மா மோட்ச நிலையை அடைய மோட்ச விளக்கின் அடையாளமாகப் பேத்தி, பேரன் நெய்யால் தோய்ந்த தீப்பந்தம் ஏந்திச் சுற்றி வந்து காலடியில் போடுதல் ஆகும் (மேலது).
கோழிக்குஞ்சு பலியிடுதல்:-
இரவு முழுவதும் பிணத்தை வைத்திருந்தால் எடுத்துச்செல்லும் முன்பாகத் தேர் அல்லது பாடையைச் சுற்றி கோழிக்குஞ்சை நீக்கி, ரத்தக் குறி காண்பிப்பார்கள். குடும்பத்திற்கு நல்லது நடக்கவும் இறந்தவர்களின் ஆன்மாவை வீட்டைவிட்டு அகற்றவும் இவ்வாறு செய்யப்படுகிறது (மேலது).
பிண்ணப்பூ:-
பேத்திக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இது நிகழ்த்தப்படுகிறது (மேலது).
சுள்ளி அல்லது கள்ளி வைத்தல்:-
பிணத்தைக் குழியில் மூடிய பின்பு, சுடுகாட்டில் நரிகள் அதிகம் வாழும் இடம் என்பதால் மூடிய குழியைப் பறிக்காமல் இருக்க அங்கே அதிகம் வளர்ந்து இருக்கக்கூடிய சுள்ளிமுள் அல்லது கள்ளிமுள் வெட்டி தலைப்பகுதி, நடுப்பகுதி, கால் பகுதி என மூன்று இடங்களில் வைத்து அதன்மேல் கல்லையும் வைத்து விடுவார்கள். காரணம் என்னவெனில் சுள்ளிமுள் (அ) கள்ளிமுள் எளிதில் கிடைக்கக் கூடியது. இவை கொத்தாக இருக்கும் என்பதால் இதன்மேல் கால் வைத்தால் கொத்தாகப் பிடித்துக் கொள்ளும். (மேலது) .
தென் மாவட்டங்களில் இதற்குக் ‘கொடிக்கள்ளி சாத்துதல்’ என்று சொல்லப்படுகிறது.
கடுகும் பொரியும் இறைத்தல்:-
பிணம் சுடுகாட்டிற்குச் செல்லும் பொழுது பிணத்தின்மேல் கடுகும், பொரியும் இறைக்கப்படுகிறது. இதற்குக் காரணங்கள் அறியப்படும் பொழுது இறந்தவர்களின் ஆன்மா மீண்டும் உறவுகளைத் தேடிவரும் அப்போது ஒவ்வொரு கடுகாக எடுத்துக் கொண்டு வருவதற்குள் விடிந்து விடும். விடிந்தால் வராது என எடுத்துரைக்கப்படுகின்றது.
பொரி இறைத்தல் என்பதையும் நிலையாமையின் குறியீடாக எடுத்துக் கொள்ளலாம். பொரி காற்றுப்பட்டால் வற்றிப்போய் விடும். அதுபோல உடம்பில் இருக்கும் காற்றுப்போய்விட்டால் வெறும் சதைப் பிண்டமே. இதை உணர்த்தத்தான் அச்சடங்கானது நிகழ்த்தப்படலாம். அச்சடங்கைச் செய்வதற்குப் பொரியை அனைத்துத் தரப்பினராலும் வாங்கக்கூடிய பொருளாக இருப்பதாலும் ஆகும் என எண்ண முடிகிறது. மேலும் இதைக் “காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா” என்ற கூற்றுடனும் நினைவு கூறலாம்.
குடம் உடைத்தல் பற்றி அவர்களிடம் கேட்கும்பொழுது அவர்கூறியது: மட்குடத்தில் முதல் துளை பிறப்பை உணர்த்துவது, இரண்டாவது துளை இடுவது வாழும் நாட்களை உணர்த்துவது, மூன்றாவது இடம் துளை இறப்பைச் சுட்டுகிறது இதே கருத்தைத்தான் ஞானியாகிய புத்தர் இந்த உடம்பு மட்குடம் போன்று உடையும் இயல்புடையது. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் தங்கள் மனதைக் கோட்டைபோல் பாதுகாப்புச் செய்து கொண்டு மாரனை (தீயஆசைகளை) எதிர்த்து நிற்பார்கள். பற்றற்ற நிலையில் நின்று வெற்றியைப் போற்றி நிலை நாட்டிக் கொள்வார்கள். (மேலது, பக். 17, 18) இக்கருத்தை உற்றுநோக்கும்பொழுது குடம் உடைத்தல் என்பது ஓட்டைக் குட நீரானது சிறிது சிறிதாக ஒழுகிநீர் முழுவதும் தீர்ந்து போவது போல மனிதன் வாழும் நாட்களில் வயது முதிர்ந்தோ நோய் வாய்ப்பட்டோ இறக்க நேரிடுகிறான். இறுதியில் குடம் உடைக்கும் நிகழ்வு என்பது உடைந்த மண்குடம் எதற்கும் பயன்படாமல் மண்ணோடு மண்ணாக மக்கிப்போவது போல உயிர்போன உடம்பும் எதற்கும் பயன்படாததால் மண்ணுக்குள் புதைக்கப்படுகிறது. இதனால் உடம்பானது மண்ணோடு மண்ணாகக் கலந்து விடுகிறது. ஓட்டை மண்குடம், மனித உடம்பு ஒழுகும் நீர், வாழும் நாட்கள் ஒழுகிப்போன வெற்று மண்குடம், உயிரில்லா உடம்பு குடம் உடைத்தல், பயனில்லா உடம்பு மண்ணோடு சங்கமமாதல். இச்சடங்கானது உயிர்நிலையாமைக் கோட்பாடுகளை ஆணித்தரமாக உணர்த்துகிறது.
பிண்ணப்பூ; ‘பிண்ட புட்பம்’ என்பதற்கு ‘அசோகமரம்’ எனவும் ‘பிண்டம், பிண்டு’ என்றால் ‘உடல்’ எனவும் பொருள் என கிரியாவின் தற்காலத் தமிழ் ஆங்கிலம் அகராதி கூறுகிறது. (ப. 733) ‘பிண்டப்பூ’ என்பதே காலப் போக்கில் ‘பிண்ணப்பூ’ என மருவியிருக்கிறது. முன்னொரு காலத்தில் அசோக மலர்களையும் செவ்வந்திப் பூக்களையும் தூவி வணங்கியிருப்பது, பின்னாளில் கிடைக்கும் மலர்களைக் கொண்டு போடுவது எனும் வழக்கமாக மாறிவிட்டது. மேலும், ‘பிண்டியார்’ என்றாலே ‘சமணர்கள்’ எனக் கூறப்படுவதால், இதுசமணமதத்தின் எச்சமும் ஆகும்.
மேற்கூறிய நிறுவல்கள் தவிர மற்ற சடங்குகள் வெளிப்பாடு இறந்தவர்களை இறைவனாக நினைத்து வழிபடுதல் என்ற நிலையை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment