ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கழிவு இருக்கிறது. அது மிக ரகசியமானது; தனிப்பட்டது. உடல் ரீதியாக அழுக்குகளைக் கழிப்பறையில் கழிக்கிறோம். ஆனால் மனதின் அழுக்குகளை எங்கே கழிப்பது?
மனம் திறந்து பேச இந்த உலகத்தில் ஒரே ஒரு உறவு கூட இல்லாத வாழ்க்கை, லோடு செய்யப்பட்ட ஒரு துப்பாக்கியைச் சுமந்து திரிவதற்குச் சமம். அந்தத் துப்பாக்கி எப்போது வேண்டுமானாலும் நம்மையே சுடலாம். சரி, யாரிடமாவது சொல்லலாம் என்று போனால், அங்கேதான் மிகப்பெரிய வேடிக்கையே காத்திருக்கிறது.
மனித விசித்திரம் என்னவென்றால், யாரிடம் உங்கள் பலவீனத்தைச் சொல்கிறீர்களோ, அவரிடமிருந்துதான் உங்களுக்கான ஆபத்து தொடங்குகிறது. நாம் ஒருவரிடம் ரகசியத்தைச் சொன்னால், அவர் அதை அப்படியே கேட்டுவிட்டு மறந்துவிடுவதில்லை. நான்கு பேர் கூடும் இடங்களில் இதுபோன்ற ரகசியங்களைத் தான் சுவையான 'ஸ்நாக்ஸ்' போலப் பரிமாறிக் கொள்கிறார்கள். அடுத்தவன் அந்தரங்கத்தை அசைபோடுவதில் தான் மனிதர்களுக்கு அசாத்தியமான மனநிறைவு கிடைக்கிறது.
இப்படி ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றிப் புறம் பேசிக் கொண்டு திரிந்தால், ஒரு மனிதன் தன்னைத் திறந்து காட்ட யாரைத்தான் நம்புவது? இதயம் என்பது ரகசியங்களைப் புதைக்கும் குழி அல்ல, அது நிம்மதியாகத் துடிக்க வேண்டிய இடம்.
மனித உறவுகள் ஒருவரை ஒருவர் வேடிக்கை பார்க்கும் இந்தச் சங்கிலித் தொடரில், பாரத்தைச் சுமக்க ஆள் இல்லாமல் மனிதன் திணறுகிறான். இத்தனை கோடி ஜனங்கள் இருந்தும், ஒருவன் தன் மனதைக் கொட்ட ஆள் இல்லாமல் தனிமையில் தவிப்பது தான் காலத்தின் விந்தை.
வாழ்க மனித இனம், அதன் மௌனமான ரகசியங்களோடு!
No comments:
Post a Comment