Thursday, 5 March 2026

யந்திர சக்தி- வரி வடிவில் ஆற்றல்.


 யந்திர சக்தி- வரி வடிவில் ஆற்றல்.

--------------------------------------------------------------
பிரபஞ்ச சக்தி அனைத்து பொருளிலும் வெளிப்படுகிறது. இந்த பிரபஞ்ச சக்தி இல்லாத இடமே இல்லை என கூறலாம். சக்தி நிலையை மெய்ஞானத்தால் உணர்ந்தவர்கள் "சர்வம் சக்தி மயம் " என கூறினார்கள். சக்தி இல்லாத இடமே இல்லை என்பதை தாண்டி இந்த கூற்றில் பல அர்த்தங்கள் நிறைந்துள்ளது.
ஆற்றல் பல வடிவங்களில் வெளிப்படுகிறது. கிரக ஆற்றல், நட்சத்திர ஆற்றல் என்பவை ஆற்றலின் சில வடிவங்கள் ஆகும். கிரக ஆற்றலை கொண்டு மனிதன் பல விஷயங்களை செய்தான். ஆற்றலை உணர்ந்ததன் மூலம் சாஸ்திரங்கள் அவனின் உள்ளங்கையில் வசப்பட்டது.
வேதகால மனிதன் சக்தி வடிவங்களாக அனைத்தையும் கண்டுணர்ந்த பிறகு சக்தி மூலங்களை கண்டறியும் முயற்சியிலும் ஈடுபட்டான். இந்த முயற்சியிலும் விரைவிலேயே வெற்றி கண்டான். ஆற்றலின் மூலம் எது, எங்கிருந்து ஆற்றல் வெளிப்படுகிறது. என சக்தியின் உள்கருவை மெய்ஞான வடிவில் உணர்ந்தனர். ஆற்றல் வெளிப்படுவது நிரந்தரமற்றது. மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும். ஆற்றல் அழிவதில்லை. ஆற்றலின் செயலும் அதன் மூலமும் மாற்றம் அடைவது இயல்பு.
பேராற்றல் மாற்றம் அடைவதையும் பல சக்தி ரகசியங்களைக் கண்டு உணர்ந்த வேத கால மனிதன் ரிஷி என அழைக்கப்பட்டான். ரிஷி என்னும் சொல்லுக்கு "கண்டுணர்ந்தவன்" என பொருள் கூறலாம். ரிஷிகள் மூலத்தையும் சக்தி மாற்றத்தையும் உணர்ந்து கொண்ட பின்பு சக்தியை நிலைப்படுத்தும் நிலையான யுக்தியை வகைப்படுத்தினார்கள். சக்தியை மாற்றம் அடையாமல் நிலையான செயலுக்கு கொண்டுவந்தனர். இந்த நிலையான சக்திமையங்கள் " சக்தி கேந்திரம்" என அழைக்க்கப்பட்டது. ரிஷிகளால் செயற்கையாக கண்டுபிடிக்கப்பட்டாலும், சக்தி கேந்திரங்கள் இயற்கை தன்மையிலிருந்து எடுக்கப்பட்டது.
மலை முகடுகள், அருவிகள் மற்றும் குகைகள் அனைத்தும் இயற்கையின் எளிய ஆற்றல் மையங்கள் ஆகும். தெய்வீக வாழ்வில் ஈடுபடாதவர்கள் கூட மேற்குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் பொழுது உள்நிலையில் மாற்றம் அடைவார்கள். இயற்கையான சக்தி கேந்திரங்கள் அனைத்து இடத்திலும் இருப்பதில்லை. இதன் காரணமாக ரிஷிகள் சக்தி கேந்திரத்தை செயற்கை முறையில் உருவாக்கி தாங்கள் செல்லும் இடமெல்லாம் கொண்டு சென்றனர். இந்த சக்தி கேந்திரங்களே யந்திரம் என ரிஷிகளால் அழைக்கப்பட்டது.
நவீன காலத்தில் யந்திரம் எனும் சொல்லுக்கு தவறான அர்த்தமே கற்பிக்கப்படுகிறது. யந்திரம் என்பது ஆற்றல் செயல்வடிவில் இல்லாமல் வரிவடிவில் அமைக்கப்பட்டது. இந்த யந்திர சாஸ்திரத்தை எளிய உதாரணம் மூலம் விளக்கலாம். நாம் வாழும் நகரத்தின் வரைபடத்தை கையில் வைத்துக்கொண்டு முக்கிய வீதிகள் மற்றும் இடங்களை காண்கின்றோம். அந்த சமயம் நமது எண்ணங்களில் முக்கிய வீதிகள் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி விரிந்துகொண்டே இருக்கும். உண்மையில் நாம் அந்த வீதிகளில் சென்ற உணர்வை கொடுக்கும். யந்திரமும் இது போன்றே செயல்படுகிறது. ஒருமுறை யந்திரத்தை பார்த்தவுடன் உங்கள் உள்நிலையில் சிறு மாற்றத்தை அது ஏற்படுத்துகிறது.
வீடுகட்டுவதற்கு முன்பு அதற்கு உண்டான திட்டத்தை வரைபடமாக உருவாக்குகிறோம். அந்தவரைபடத்தை பார்க்கும் பொழுது நமக்கு காகிதமோ, கோடுகளோ தெரிவதில்லை. அவை மனதில் கட்டிடத்தின் தோற்றத்தை உருவாக்குகின்றது. வரைகலை வடிவில் உருவாக்கப்பட்ட வடிவங்கள் மனதில் மாற்றத்தை உருவாக்கும். நடைமுறை வாழ்க்கை உதாரணம் ஓரளவே யந்திர சக்தியை விவரிக்கும். யந்திரத்தால் உருவாக்கப்படும் மாற்றம் மனதின் எல்லைக்கு அப்பாற்பட்டது. சக்தியூட்டப்பட்ட எந்திரம் மனதை தாண்டி உங்கள் ஆன்மாவில் வேலை செய்யும்.
கம்யூட்டர் யுகத்தில் யந்திரம் வேலை செய்யுமா? என தோன்றலாம். சரியான முறையில் யந்திரம் அமைத்து அதில் சக்தியூட்ட தெரிந்தவர்கள் இருந்தால் தாராளமாக வேலை செய்யும். உங்கள் அலைபேசியில் இருக்கும் சிம் கார்டு அல்லது கம்யூட்டரில் இருக்கும் PCB வடிவ தகடுகளில் இருக்கும் வடிவம் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? ஆனாலும் அது வேலை செய்கிறது தானே? அது போலத்தான் யந்திரங்களும்.
கம்யூட்டர் சில்லை சரியான பொறியியலாளரிடம் கொடுத்தால் அவர் இயங்க வைப்பார். அதை விடுத்து அந்த மின்னனு வரை படத்தை கழுத்தில் தொங்க விட்டால் வேலை செய்யுமா?
திடீரென உலகம் அழிந்துவிட்டதாக வையுங்கள், எஞ்சிய பொருளில் அலைபேசியின் சிம்கார்டு மட்டும் எஞ்சி நிற்கிறது. நினைத்து பாருங்கள் அலைபேசி கிடையாது, அதை ஒலிபரப்பும் கோபுரம் இல்லை, அலைபேசியை நிர்வாகிக்கும் நிறுவனம் இல்லை. ஆனால் சிம்கார்டு மட்டும் உண்டு. மனித சமுதாயம் மீண்டும் உருவானதும் அவர்களிடம் இது கிடைத்தால் என்ன செய்வார்கள்? மிக எளிமையாக பதில் சொல்லிவிடலாம் சிலர் யந்திரங்களை இப்பொழுது எப்படி பயன்படுத்துகிறார்களோ அது போல சிம்கார்டில் சந்தனம் குங்குமம் வைத்து வழிபடுவார்கள். அது போல நாமும் நமது நாகரீகத்தை தொலைத்து கைகளில் வெறும் தகடுகளுடன் திரிகிறோம்.
யந்திரங்கள் என்பது இயங்கு சக்தி கொண்ட சாதனம். இந்த சொல்லின் தமிழ் வடிவமே இயந்திரம் (பொறி) என்கிறோம். இயங்கும் சாதனமே யந்திரம் எனும் பொழுது யந்திரங்கள் இயங்கி பார்த்திருக்கிறீர்களா? தற்கால அறிவியல் தானியங்கி இயந்திரங்களை வடிவமைக்கிறது. உண்மையில் யந்திரங்கள் சக்தியூட்டப்பட்டால் தானியங்கி மற்றவைகளையும் இயக்குகிறது.
யந்திரத்தை கவனித்தோம் எனில் பல கோடுகள், முக்கோணங்கள் மற்றும் வட்டங்கள் அதில் காண முடியும்
யந்திரங்கள் அதிக அளவில் வட்டங்களை அடித்தளமாக கொண்டது. முக்கோணங்கள், கோடுகள் குறைந்த அளவே பயன்பட்டாலும் அவற்றின் உபயோகம் மிக முக்கியமானது. வரைகலை வடிவங்கள் இயற்கையிலிருந்தே பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றை சற்று விளக்கமாக பார்ப்போம்.
யந்திரங்கள் என்பது ஏதோ ஒரு மந்திரவாதி படிக்கவேண்டிய விஷயம் நாம் ஏன் இதை தலையில் ஏற்றிக்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைக்கலாம்.
ஒரு குறிப்பிட்ட வரிவடிவத்தை பார்த்ததும் நமது மூளையின் ஞாபக அடுக்குகளில் ஒரு சலனம் ஏற்படுகிறது. உள்நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த வரிவடிவமே யந்திரம் என்கிறோம்.
உண்மையில் யந்திரங்கள் உங்கள் வாழ்க்கையில் அனுதினமும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. எந்திரத்தின் எளிய உதாரணம் சொல்ல வேண்டுமானால் ஒரு நிறுவனம் அல்லது அரசு சார்ந்த அமைப்பின் சின்னம் (logos) நவீன கால யந்திரமாகும். அசோக சக்ரம் தாங்கிய சிங்க வடிவங்கள் பார்த்ததும் உங்களுக்கு இந்திய அரசின் ஞாபகம் வருகிறது அல்லவா?
யந்திரங்கள் மொழி,மதம் என அனைத்தும் கடந்த ஒரு மெய்ஞானம். வாகனத்தில் பயணமாகி கொண்டிருக்கிறீர்கள். வழியில் இந்த சின்னத்தை பார்க்கிறீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்? இதில் மொழி மதம் எனும் அடையாளம் ஏதேனும் உண்டா? அது போல யந்திரங்கள் வரிவடிவில் ஒரு தனியொரு உயிரை மேல் நிலைக்கு கொண்டு செல்லும்.
வட்ட வடிவம்:
----------------------
வட்டம் என்பது சாதாரணமாக ஒரு வரிவடிவமாக நினைத்துவிட கூடாது. பிரபஞ்சத்தின் அனைத்து பொருளுக்கும் வட்டமே ஆதாரம். இயற்கையில் எந்த ஒரு வஸ்து உண்டானாலும் அது வட்டத்தின் அடிப்படையில் அமையும்.
இந்த அண்டத்தின் வடிவம் வட்டம், பிரபஞ்சத்தின் இந்த வடிவத்திலிருந்து தோன்றும் அனைத்தும் அவ்வடிவத்தையே மூலமாக கொண்டுள்ளது. அண்டத்தின் வடிவமே அதன் பிண்டங்களில் பிரதிபலிக்கிறது. நட்சத்திரங்கள் வட்டத்தின் முழு வடிவமான கோள வடிவத்தை கொண்டது. சூரியனும், சந்திரனும் மற்றும் பிற கிரகங்களும் வட்ட வடிவங்கள். அதன் சுற்றும் பாதைகளும் வட்ட வடிவமானது. பூமியில் தோன்றும் இயற்கையான முத்து, கற்கள் மற்றும் நீர்துளி அனைத்தும் கோள வடிவத்தை கொண்டது.
உயிர் பிறக்க சூல்வடிவம் எடுக்கும் கரு வட்ட வடிவத்தை எடுத்த பிறகே உருபெறுகிறது. அணுவும் அணுக்கருவும் வட்டத்தை அடிப்படையாக கொண்டது. சக்தியும் அதிர்வும் பரவுகின்ற வடிவம் வட்ட வடிவமாக கொண்டு விரிவடையும். நீரில் ஒரு கல்லை வீசும் பொழுது அதில் ஏற்படும் வட்டத்தை கவனித்தால் அந்த சக்தி அதிர்வு எத்தகையது என உணரலாம். இயற்கை வடிவான லிங்கமும் ஆவுடையாரும் தெய்வீகத்தை உணர்த்தும் வட்ட வடிவங்கள்.
இயல்பாகவே நமது ஆன்மாவுக்கு வட்ட வடிவில் ஓர் ஈர்ப்பு உண்டு. குழந்தை மாயையால் பீடிக்கப்படாமல் ஆன்மாவினால் இயங்கும் தன்மை கொண்டது. சதுர வடிவத்திலும், வட்ட வடிவத்திலும் ஆன இரு பொருட்களை குழந்தையின் முன் வைத்துவிட்டு கவனியுங்கள். அந்த குழந்தை முதலில் வட்ட வடிவ பொருளை எடுத்து விளையாட துவங்கும். பிற பொருள்களை காட்டிலும் பந்து வைத்து விளையாடுவதை குழந்தைகள் பெரிதும் விரும்புவதை அனைவரும் அறிவோம். எனவே ஆன்மாவால் ஈர்க்கப்படும் வட்ட வடிவம் யந்திர வடிவங்களில் முதன்மையாகின்றது. நடைமுறை வாழ்க்கையில் இந்த வட்ட வடிவம் நமது வாழ்க்கையில் பல மாற்றங்களை உண்டாக்குகிறது.
பிரபலமான சில நிறுவனங்களின் சின்னங்களை [ Logos ] கவனித்தால் அந்த சின்னங்களில் வட்ட வடிவம் பிரதானமாக இருக்கும். அந்த அடையாளமாக சின்னத்தை பார்த்தாலே அந்த நிறுவனத்தை பற்றிய எண்ணங்கள் மனதில் வெளிப்படும். எனக்கு தெரிந்த வகையில் சில உலக நிறுவனங்களின் சின்னம் யந்திர கோட்பாடுகளை போன்று உள்ளது. அந்த நிறுவனங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தமைக்கு அந்த கோட்பாடும் ஒரு முக்கிய காரணம். உங்களுக்கு தெரிந்த ஐந்து பிரபல நிறுவனங்களை பட்டியலிடுங்கள். அதில் நான்கு நிறுவனங்கள் கண்டிப்பாக வட்டவடிவத்தை அடிப்படையாக கொண்ட சின்னங்களை வைத்திருப்பார்கள். காரணம் உங்கள் ஆன்மா வட்டவடிவத்தை கண்டால் ஈர்க்கப்படுகிறது.
வட்ட வடிவத்திற்கும் இறைதன்மைக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. நிலைத்தன்மை, முழுமை, ஆரம்பம் முடிவு அற்ற நிலை, மையத்தை கொண்டு விரிவடைதல், மையத்தில் ஒடுங்குதல், பிற வடிவங்களுக்கு மூல காரணமாக இருத்தல் என வட்ட வடிவத்தையும் பரம்பொருளையும் தொடர்பு படுத்தும் இலக்கணங்கள் மனித மூளைக்கு அப்பாற்பட்டது. இதன் மூலம் வட்டவடிவம் என்பது இறைத்தன்மையின் முழுமையான வரி வடிவம் என்பதை உணரலாம்.
எனது பணியில் ஒன்றாக சில ஆண்டுகளாக மந்திர சாஸ்திர முறையில் நிறுவனங்களுக்கு பெயரையும், யந்திர சாஸ்த்திர முறையில் சின்னம் அமைத்து கொடுப்பதுண்டு. சாஸ்த்திரம் அறிந்து இப்பணிகளை செய்தால் சமூகத்திற்கும் தனி மனிதனுக்கும் நன்மை ஏற்படும்.
முக்கோணம்:
-----------------------
சக்தியின் மூல வடிவம் முக்கோணம். பரம்பொருளின் வடிவம் வட்டம் என அறிந்துகொண்டோம். அப்பரம் பொருள் ரூபமாக மாற்றம் அடையும் பொழுது எடுத்துக்கொள்ளும் வடிவம் முக்கோணம். மூன்று தன்மையை உள் அடக்கியது முக்கோணம். அவை படைத்தல் - காத்தல் -அழித்தல். அறம் - பொருள் - இன்பம், ரஜோ - தமோ - சாத்வீக குணங்கள், இட -பிங்கள -சூஷ்ம நாடிகள் என அனைத்தும் பரம்பொருள் எடுத்துக்கொண்ட சக்தி வடிவங்களாகும். இடத்திற்கு ஏற்றதுபோல இந்த முக்குணங்கள் செயல்படும். முக்கோணங்களை மேல் நோக்கிய முக்கோணம், கீழ் நோக்கிய முக்கோணம் என இரு வகை படுத்தலாம்.
மேல் நோக்கிய முக்கோணம் ஆண் தன்மையானது. கீழ்நோக்கிய முக்கோணம் பெண் தன்மையானது.
இதை சிவ மற்றும் சக்தியின் வடிவம் என கூறலாம். இவை இரண்டும் இணைந்த வடிவம் ஒர் போல காணப்படும். இவ்வடிவம் அர்த்தநாரீஸ்வரர் போன்ற சிவ சக்தி வடிவங்களாகும். இந்த இரு கோணம் இணைந்தவுடன் பல முக்கோண அமைப்புகள் அதன் உள்ளே தோன்றுவதை காணலாம்.
இணைந்த முக்கோணங்கள் ஆக்க சக்தியின் வடிவங்கள். இவ்வகை யந்திரம் தென்பகுதி இந்தியாவில் ஸுப்ரமண்ய கடவுளின் வடிவமாக வணங்கப்படுகிறது. இப்பொழுது 'சரவணபவ' என மூல மந்திரம் எழுதிய சரவண யந்திரம் உங்கள் நினைவில் நிழலாடும் என நினைக்கிறேன். ஸுப்ரமண்யர் கார்த்திகை நட்சத்திரப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் நட்சத்திர வடிவம் எடுத்தவர் என புராணம் சொல்லும் காரணம் யந்திர சாஸ்திரத்துடன் தொடர்பு கொண்டது.
யந்திர விதிகள் சாதாரண கோடுகளுக்கும், சதுரத்திற்கும் முக்கியத்துவம் தருவதில்லை. முடிவு பெற்ற வடிவங்களை ஆன்மா உணர்வதில்லை. சதுரத்தில் உள்ள நான்கு கோணங்களும் ஆன்மாவின் தொடர்பை ஏற்றுக் கொள்வதில்லை. சதுரம் பயன்படுத்த வேண்டிய இடத்தில் சதுரத்தின் பக்கங்களை திறந்த வடிவில் ஆற்றலை வெளிவிடுமாறு அமைக்கிறார்கள்.
வரிவடிவில் உள்ள வட்டமும் முக்கோணமும் என்ன தான் மாற்றத்தை ஏற்படுத்தும் ? உண்மையில் இவை குறிப்பது என்ன? என பல கேள்விகள் உங்கள் மனதில் எழலாம்.
ஓர் சக்தி கேந்திரத்தின் வடிவமே யந்திரங்கள். உதாரணமாக ஓர் மோட்டார் இயந்திரத்தை எடுத்துக்கொள்வோம். பல இடங்களில் இந்த மோட்டார் பேருதவி செய்து வருகிறது. வாகன இயக்கம், நீர்ஏற்றம் மற்றும் விசைத்தறி என பல துறைகளில் வேகப்படுத்தவும் நேரத்தை குறைக்கவும் மின்சார மோட்டார் பயன்படுகிறது.
இத்தகைய மோட்டாரின் அமைப்பு சக்தியின் அடையாளம். பொறியியல் துறையில் இதை வடிவமைக்கும் பொழுது பல கோணங்களில் மோட்டாரின் அமைப்பை வரைந்து கொள்வார்கள். இரண்டாக பிளந்த [ section drawing ] முறையில் பார்த்தால் மின்சாரமோட்டார் யந்திரம் போல காட்சியளிக்கும்.
இதற்கு மேலும் ஓர் எளிய உதாரணம் கூறலாம். ஓர் ஆணியை எடுத்துக்கொள்ளுங்கள். நமது வாழ்வில் பல தருணங்களில் இது பயன்படுகிறது. ஒரு நீளமான ஆணியின் தலைப்பகுதி கீழே இருக்குமாறு வைத்து கீழ்பகுதியை உங்கள் கண்ணுக்கு நேராக வைத்துப் பாருங்கள். ஒரு வட்டத்தின் மையத்தில் நட்சத்திரம் இருப்பது போல தோன்றும். யந்திரத்தின் தத்துவமும் இதுவே. முப்பரிமாணமாக உள்ள விஷயத்தை வரி வடிவில் இரு பரிமாண பிம்பங்களால் நமது உள்நிலை முப்பரிமாணமாக அதை உணரும்.
ஸ்ரீ யந்திரம், சுதர்ஸ்ன யந்திரம் என பல சக்தி யந்திரங்கள் உண்டு. நவகிரக சக்திகளையும் யந்திர வடிவில் நிலைப்படுத்த முடியும். இந்த யந்திரங்கள் பார்க்கும்பொழுது சிக்கலான அமைப்பை கொண்டதாக தெரிந்தாலும், வரைவதற்கு எளிதானது. இந்தியாவில் பல கோவில்கள் ஸ்ரீ யந்திரத்தின் மைய அமைப்பை போன்று காணப்படும். உதாரணமாக திருமலை திருப்பதியில் மூலஸ்தான கோபுரம் ஸ்ரீமேரு எனும் ஸ்ரீசக்கரத்தின் மையத்தை போன்று கட்டப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் பல கோவில்கள் முழுமையான ஸ்ரீசக்ரங்களாக அமைந்துள்ளது. இந்த கோவில்களை கருட பார்வையில் [ Top view ] பார்த்தால் முழுமையான ஸ்ரீசக்ரங்களாக தெரியும்.
வரை படமாக வரைந்தால் மட்டும் யந்திரம் வேலை செய்யும் என நினைக்காதீர்கள். சக்தியூட்டுதல் எனும் செயல்மூலம் யந்திரம் ஆற்றல் பெறவேண்டும். மந்திர உச்சாடனம், பூஜா விதி மற்றும் ஆற்றல் நிலைபடுத்தும் விதி மூலம் யந்திரம் மாபெரும் பிரபஞ்ச சக்தியை பெற்று செயல்பட துவங்கும்.
யந்திரம் வரைந்து அதில் சக்தியை நிலைபடுத்துவது எல்லோராலும் முடியாது. இதை சிறந்த யந்திர சாஸ்திரம் கற்றவர்களே செய்ய முடியும். தற்சமயம் பலர் யந்திரம் என்ற பெயரில் சில கோடுகளை வரைந்து கொடுக்கிறார்கள். இதை வாங்கி உபயோகிப்பவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் தொழில் ஸ்தாபத்தில் சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்கிறார்கள். உண்மையில் யந்திரம் வரைவதும், பயன்படுத்துவதற்க்கும் பல நெறிமுறைகள் உண்டு.
யந்திரத்தை தாமிரம் போன்ற உலோகத்தில் வரைவது முக்கியம். மின்சாரம் கடத்தும் பொருட்களில் தாமிரம் முதல் இடத்தை பெறுகிறது. நமது ரிஷிகள் தாமிரத்தை யந்திர சாஸ்திரத்திற்கு பயன்படுத்திய காரணம் இதற்கு அற்றல் கடத்தும் திறன் அதிகமாக இருப்பதால் தான். மேலும் தங்கம் , தாமிரத்தை கட்டிலும் ஆற்றல் கடத்துவதில் சிறந்தது என்றாலும் பொருளாதார ரீதியில் பயன்படுத்த முடியாது. யந்திரம் வரையும் பொழுது சிறிது தவறு செய்தாலும் யந்திரம் முழுவதும் வீணாகிவிடும். தேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்கள் அமைக்கும் யந்திரம் முழுமையான செயல்களை செய்யும்.
கோவில்களின் கருவறையில் மூல விக்ரஹம் அமைப்பதற்க்கு முன்னால் அதன் அடியில் யந்திரதை ஸ்தாபனம் செய்வார்கள். இந்த இறை சக்தியே விக்ரகம் மூலம் பக்தர்களை வந்தடைகிறது. கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கும் பொழுது யந்திரம் மீண்டும் மீண்டும் சக்தியூட்டம் பெறுகிறது.
யந்திரத்தை நாம் பயன்படுத்தும் பொழுது அவற்றை வெறும் படம் போல சட்டத்தில் தொங்கவிடுதல் கூடாது யந்திர அமைப்பை முழுமையாக தியானிக்க வேண்டும். எனது யோகப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு யந்திர தியானம் கற்றுக்கொடுப்பதுண்டு. இவர்கள் யந்திரத்தை பயன்படுத்தும் விதம் தெளிவாக தெரிந்துகொள்வார்கள்.
இதை பயிற்சி பெற்றவர்கள் செயல், சிந்திக்கும் திறன் மற்றும் வாழ்வியல் நிலையில் பல மடங்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். யந்திர தியானம் கற்றுக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பல, அனைத்தையும் பட்டியலிட முடியாது. யந்திர தியானம் ஏற்படுத்தும் மாற்றம் பட்டியலுக்கு அப்பாற்பட்டது. உடலில் உள்ள ப்ராண சக்திகளின் ஏற்றத்தாழ்வை பொறுத்து நமது சுக துக்கங்கள் அமைகிறது. கல்வி, பொருளாதார உயர்வு, திருமண வாழ்க்கை, உடல் நோய் என வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் சிறந்த நிலையில் அமைய யந்திரத்தை பயன்டுத்தலாம். வாழ்க்கை சம்பவத்தைக் காட்டிலும் ஆன்ம உணர்வுக்கும், ஞான முதிற்சிக்கும் யந்திரயோகம் எனும் தியான பயிற்சி மிகவும் உறுதுணையானது.

No comments:

Post a Comment

திக்குகளும் அவை தரக்கூடிய அதிர்ஷ்டங்களும் — வாஸ்து ரகசியங்கள்

 வடக்கு திசையில் அமர்ந்து யோசித்தால் பண வரவாம்! 8 திக்குகளும் அவை தரக்கூடிய அதிர்ஷ்டங்களும் — வாஸ்து ரகசியங்கள் ஒரு வீட்டில் சுவர், கூரை, கத...