சீதையும் ... திரௌபதியும்...!!!
.
ராமாயண சீதை மற்றும் மகாபாரத திரௌபதி ஒரு ஒப்பீடு....
சீதா, திரௌபதி ஆகிய இருவரும் கர்ப்பவாஸம் இல்லாமல் அவதரித்தவர்கள்.
சீதா பஞ்சபூதங்களில் ஒன்றான பூமியிலிருந்து ஜனக மஹாராஜா தங்க ஏர்கொண்டு உழும்போது தோன்றியவள்.
திரௌபதியும் பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னியிலிருந்து துருபத மஹாராஜா செய்த யாகத்தில் தோன்றியவள்.
இருவரும் பேரழகிகள். ஸாமுத்ரிகா லக்ஷணம் பூரணமாக அருளப் பெற்றவர்கள். ஜனகரின் புத்திரி ஜானகி. துருபதனின் புத்திரி திரௌபதி.
இருவரும் ராமாயணம், மஹாபாரதம் இவற்றின் காவிய நாயகிகள்.
இருவரின் விவாகத்திலும், வில்வித்தை/வில்பலம் தீர்மானிக்கும் சுயம்வரம் மையப்பொருளாக இருந்தது.
சீதா விவாகத்தில் ராமரின் பராக்கிரமும், புஜ வலிமையும், சிவதனுஸ்ஸில் நாண் ஏற்றுவதில் பரீக்ஷையாக இருந்தது.
திரௌபதி விவாகத்தில் புஜவலிமையை புறந்தள்ளி நுட்பமும் குறியுடன் இலக்கை வீழ்த்தும் சாதுர்யமும் பரீக்ஷையாக இருந்தது.
இருவரும் பதிவ்ரதா ஸ்த்ரீகள் என்று போற்றப்படுகிறார்கள். சீதாவும் திரௌபதியும் எதிரிகளை வீழ்த்துவதில் பின்புலத்திலிருந்து பெரும் பங்களிப்பு செய்தவர்கள்.
இருவரும் வனவாஸம் அனுபவித்தவர்கள்.
ஶ்ரீமத் ராமாயணம், ஶ்ரீமஹாபாரதம் ஆகிய இரு காவியங்களிலும் நடந்த பெரும் யுத்தத்திற்கு மூலகாரணமாக முறையே சீதாவும் திரௌபதியும் இருந்துள்ளார்கள்.
சீதா, பத்து மாதங்கள் அசோக வனத்தில் தனியாக சிறையில் இருந்தாள்.
திரௌபதியும் ஒரு வருஷம் விராட தேசத்தில் அஞ்ஞாத வாஸம் அனுபவித்தாள்.
சீதா & திரௌபதி வேறுபடும் அல்லது மாறுபடும் இடங்கள்.
ஶ்ரீராமரின் வனவாஸத்திற்குக் காரணமான கைகேயி மேல் சீதாவுக்கு துவேஷம் இல்லை.
ஆனால், திரௌபதிக்கு 12 வருஷ வனவாஸகாலம் & ஒரு வருஷ அஞ்ஞாதவாஸ காலம் முழுவதும் தன் கஷ்டத்திற்குக் காரணமான துரியோதனன், துச்சாதனன் மேல் வன்மத்துடன் இருந்தாள்.
சீதாவிடம் பூமியிலிருந்து தோன்றியதால் பூமாதேவியின் பொறுமை, மன்னிக்கும் குணம் இருந்தது.
உதாரணம் :
காகாசுரன் & தன்னைப் பத்து மாதம் துன்புறுத்திய ராக்ஷஸிகளை மன்னித்தது.
ஆனால், திரௌபதியிடம் பழி வாங்கும் சுபாவம் இருந்தது.
சீதா, தன்னை முக்கியத்துவம் கொடுத்து project செய்து கொள்ளவில்லை.
ஆனால், திரௌபதி, காவியம் முழுவதும் தன்னை முன்னிலைப்படுத்தி project செய்து கொள்கிறாள்.
சீதா, ராவணன் தன் கணவர் ஶ்ரீராமரிடம் சரணாகதி செய்தால் அவனது அபசாரத்தை ராமர் மன்னிப்பார் என்று கூறுகிறாள்.
ஆனால், திரௌபதி, துரியோதனன் முதலியவர்களை மன்னிக்கத் தயாராக இல்லை. யுத்தமே தீர்வு என்று உறுதியாக இருக்கிறாள்.
சீதாவுக்கு 'புத்திரசோகம்' இல்லை.
ஆனால், திரௌபதிக்கு 'புத்திரசோகம்' ஏற்பட்டது.
தூங்கிக் கொண்டிருந்த உபபாண்டவர்கள் எனப்படும் திரௌபதியின் ஐந்து குழந்தைகளை அசுவத்தாமன் கொன்றதால் புத்திரசோகம் ஏற்பட்டது.
சுவை சேர்ப்பதிலும், மருத்துவ குணநலன்களிலும் தேனும் மிளகும் பெரும் பங்கு வகுப்பவை.
சீதா = தேன்.
திரௌபதி = மிளகு.

No comments:
Post a Comment