ஒரு காட்டில் ஒரு அழகான கஸ்தூரி மான் வாழ்ந்து வந்தது. ஒருநாள், அந்த மானின் மூக்கிற்கு மிக அற்புதமான, தெய்வீகமான ஒரு மணம் எட்டியது. அந்த வாசனையை அதுவரை அந்த மான் நுகர்ந்ததே இல்லை.
அந்த மணம் எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் மான் பித்துப் பிடித்தது போல் ஓடியது. "இந்த வாசனை எந்தப் பூவில் இருக்கிறது? எந்த மரத்தில் இருக்கிறது?" என்று காடு மேடெல்லாம் அலைந்தது.முட்செடிகளில் சிக்கி அதன் உடல் ரணமானது, பாறைகளில் ஏறி விழுந்து கால்கள் சோர்ந்தன. ஆனாலும், அந்த வாசனை வந்த இடத்தை அதனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
இறுதியில், தாகத்தாலும் களைப்பாலும் ஒரு சுனை ஓரம் அந்த மான் சரிந்து விழுந்தது. அப்போது அதன் மூச்சுக்காற்று, அதன் சொந்த உடலிலேயே இருந்த 'கஸ்தூரிப் பையில்' பட்டது. அப்போதுதான் அந்த மானுக்குப் புரிந்தது—தான் காடு முழுவதும் தேடி அலைந்த அந்த அபூர்வ மணம், தன் உடலுக்குள்ளேயே, தன் தொப்புள் பகுதியிலேயே இருக்கிறது என்று!
நாம் தேடும் நிம்மதியும், சக்தியும், செல்வமும் நமக்கு வெளியிலோ அல்லது மற்றவர்களிடமோ இல்லை. அது அந்தப் பரம்பொருளின் அம்சமாக ஏற்கனவே நம்மிடம் ஒளிந்து கொண்டிருக்கிறது. அந்த மான் காடு முழுவதும் அலைந்து திரிந்து காயப்பட்டது போலத்தான், நாமும் வெளியுலகில் யாரிடமாவது எதையாவது எதிர்பார்த்து ஏமாறுகிறோம். "தன்னைப் பார்த்தால் தலைவன் தெரிவான்" என்பதே இதன் சாரம்.
"நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணுமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்..."

No comments:
Post a Comment