Thursday, 5 March 2026

தமிழர்களின் பண்பாட்டில் விருந்தோம்பல் எப்படி வந்தது தெரியுமா?


 தமிழர்களின் பண்பாட்டில் விருந்தோம்பல் எப்படி வந்தது தெரியுமா?

தமிழர்களின் விருந்தோம்பல் !
விருந்து என்ற சொல்லுக்குப் புதுமை என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை விருந்து என்றனர் தமிழர். நம் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு உறவினர்களையும், நண்பர்களையும் இன்முகத்துடன் வரவேற்று, இருப்பதைக் கொண்டு அன்புடன் மனதார செய்யும் உபசரிப்பு தான் விருந்தோம்பல்.
அன்றையக் காலத்தின் வழக்கம் :
கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று அனைவராலும் போற்றப்படும் தமிழ் மக்களின் பண்பாட்டை சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவர், விருந்தோம்பலுக்கு என்று தனி அதிகாரம் படைத்து அதில் உள்ள பத்து குறள்களில் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இலக்கண நூலான தொல்காப்பியம், சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களான நற்றிணை, புறநானூறு, பத்துப்பாட்டு நூலான சிறுபாணாற்றுப்படை, காப்பிய நூலான சிலப்பதிகாரம் ஆகிய நூல்களிலும் விருந்தோம்பலின் சிறப்பு இடம்பெற்றுள்ளது.
தன் வீட்டிற்கு வந்தவர்களுக்கு முதலில் ஒரு சொம்பு தண்ணீர் தருவதை நம் தமிழர்கள் பழக்கமாக வைத்திருப்பர். இதற்கு காரணம் வந்திருப்பவர்கள் வெயிலில் கஷ்டப்பட்டு வந்திருக்கக் கூடும். களைப்பாக இருக்கக்கூடும் என்பதால்தான்.
விருந்தோம்பல் எப்படி வந்தது?
பண்டைய தமிழரின் பண்பாட்டில் முதன்மையானது விருந்தோம்பல் ஆகும். பண்டமாற்று முறை வழக்கிலிருந்த அக்காலத்தில் போக்குவரத்து வசதிகளும் இல்லாத சூழ்நிலை நிலவியது. எனவே, இரவலர்கள் மட்டுமின்றி ஏனையோரும் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு கால்நடையாகவே நடந்து செல்ல வேண்டியிருந்தது. உணவு விடுதிகள் இல்லாத காரணத்தினால் உண்டிக்கும் உறையுளுக்கும் அனைவரும் செல்லும் ஊர்களையே நம்ப வேண்டியிருந்தது. ஆகவே, புதிதாக வருவோருக்கு பசிக்கு உணவளிக்க வேண்டிய நிலை இருந்தமையால் விருந்தோம்பல் பண்பாடு தமிழகத்து இல்லங்களில் உருவாயிற்று.
விருந்தோம்பலின் முக்கியத்துவம் :
விருந்தோம்பலில் உபசரிக்கும் முறையே முதன்மையானது. முகம் மலர்ந்து உபசரிக்கும் போது, விருந்துப்பொருள் உப்பில்லாத கூழாக இருந்தாலும் சிறப்பாக இருக்கும்.
தமிழர் வாழ்க்கை முறையில் விருந்தினரை உபசரிப்பது ஒவ்வொரு தலைவன், தலைவியின் தலையாயக் கடமையாக சங்க காலத்தில் போற்றப்பட்டது. இல்லறத்தில் விருந்தினரைப் பேணுதல் முக்கியக் கடமை.
இல்லற வாழ்க்கையின் முக்கிய கடமையாகப் போற்றப்பட்ட விருந்தோம்பல் சென்ற நூற்றாண்டு வரை மக்களிடம் செல்வாக்கு பெற்று இருந்தது. தன்னிடம் இருப்பதை மற்றவர்களுக்கு அளிப்பது மானிட மரபு. மனிதன் சமுதாயத்துடன் ஒன்றி வாழ்வதற்கு, விருந்தோம்பல் பாலமாக இருந்தது. இன்று விருந்தோம்பல் என்ற பண்பாடு மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.
மறைந்து வரும் தமிழரின் பண்பாடான விருந்தோம்பலை அனைவரும் போற்றி பேணி காப்போம்.

No comments:

Post a Comment

திக்குகளும் அவை தரக்கூடிய அதிர்ஷ்டங்களும் — வாஸ்து ரகசியங்கள்

 வடக்கு திசையில் அமர்ந்து யோசித்தால் பண வரவாம்! 8 திக்குகளும் அவை தரக்கூடிய அதிர்ஷ்டங்களும் — வாஸ்து ரகசியங்கள் ஒரு வீட்டில் சுவர், கூரை, கத...