Saturday 10 June 2017

கல்லடி பட்டாலும், கண்ணடி படக் கூடாது [3]


காசி யாத்திரை என்பது தற்காலத்தில் வயதான பின் நிறைவேற்ற வேண்டிய

திருத்தல யாத்திரையாக கருதப்படுகிறது. உண்மையில் மணமான தம்பதிகள்

திருமணம் நிகழ்ந்தவுடன் காசி, கயா, அயோத்தி போன்ற திருத்தலங்களுக்கு

யாத்திரையாகச் சென்று அபரிமிதமான புண்ணிய சக்தியைச் சேர்த்துக்

கொண்டு அதன் பின்னர் இல்லற வாழ்வில் ஈடுபட்டால்தான் அவர்களுக்குப்

பிறக்கும் குழந்தைகள் உடல், மன ஆரோக்கியத்துடன் விளங்கி குடும்பத்திற்கு

ஒளி விளக்காய்த் திகழ்வார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் சாந்தி முகூர்த்த வைபவத்தை திருமணம் நிகழ்ந்த

அன்றே நிறைவேற்றுவது நடைமுறைக்கு வந்து விட்டாலும் தம்பதியர்

திருமணம் நிகழ்ந்த ஒரு மண்டல காலத்திற்குள்ளாவது காசி, கயா, அயோத்தி

போன்ற திருத்தலங்களை அவசியம் தரிசித்தல் நலம். காசி திருத்தலத்தில் உள்ள

64 தீர்த்தக் கட்டங்களிலும் நீராடி காசி விஸ்வநாதரைத் தம்பதிகள் தரிசித்தலால்

அவர்கள் மேல் படியும் அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்பது

உண்மை.

காசி, கயா போன்ற திருத்தலங்களை வழிபடும் அளவுக்கு தம்பதிகளுக்கு

பொருள் வசதி, நேர அவகாசம் கிட்டாவிட்டாலும் தென்னிந்தியாவின்

கயா திருத்தலமாகத் திகழும் திருச்சி அருகே பூவாளூர் திருத்தலம்,

மாந்துறை, திருவிடைமருதூர், திருச்சி அருகே உத்தமர் கோயில் போன்ற

திருத்தலங்களையாவது அவசியம் தம்பதிகள் தரிசிக்க வேண்டுமாய்க்

கேட்டுக் கொள்கிறோம். இதனால் தம்பதிகள் திருஷ்டி தோஷங்கள் தங்களைத்

தாக்காதவாறு பாதுகாத்துக் கொள்வதுடன் உத்தமமான குழந்தைச்

செல்வங்களைப் பெறத் தேவையான தெய்வீக புண்ணிய சக்திகளை பெற்றுக்

கொள்ளவும் இவ்வழிபாடுகள் பெரிதும் துணை புரியும்.

பெரும்பாலான சிவத்தலங்களில் ஸ்ரீவிசாலாட்சி சமேத காசி விஸ்வநாத தெய்வ

மூர்த்திகள் எழுந்தருளி இருப்பார்கள். புது மணத்தம்பதிகள் திருமணத்திற்கு

முன்னும் பின்னும் வாரம் ஒரு முறையாவது இம்மூர்த்திகளைத் தரிசித்து

தங்கள் கையால் தொடுத்த மணமுள்ள மலர் மாலைகளைச் சூட்டி

வழிபடுதலால் இல்லற வாழ்வு இன்பமூட்டும்.

தற்காலத்தில் திருமணத்திற்கு முதல் நாளே வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு

செய்து மணமக்களை ஒன்றாக அமர வைத்து பல கேளிக்கை நிகழ்ச்சிகளை

நிறைவேற்றுகிறார்கள். இதனால் பலவிதமான தோஷங்கள் தம்பதிகளைச்

சூழும் என்பதை நினைவில் கொள்ளவும். இன்னும் சில திருமணங்களில்

சாந்தி முகூர்த்த வைபவத்திற்கு ஓத வேண்டிய மந்திரங்களை திருமண

நிகழ்ச்சியின்போதே ஓதி தங்கள் கடமையை திருமணப் புரோகிதர்கள்

நிறைவேற்றி விடுகின்றனர். பெரும்பாலும் இத்தகைய வைபவங்களில்

மாப்பிள்ளைகள் பங்கு கொள்ள முடியாமல் போகும்போது அவர்களுக்குப்

பதிலாக புரோகிதர்களே மாப்பிள்ளைகள் சொல்ல வேண்டிய மந்திரங்களையும்

தாங்களே சொல்லி அந்தச் சடங்கை நிறைவேற்றி விடுகிறார்கள்.

இதனால் விளையும் அசம்பாவித வேதனைகளை வார்த்தைகளால் வர்ணிக்க

இயலாது.

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம்

ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை சுமார் ஆறு மணி இருக்கும். பள்ளிக்கு

விடுமுறை ஆதலால் சிறுவன் வெங்கடராமன் தனது குருநாதர்

கோவணாண்டிப் பெரியவருடன் நடைப் பயணமாக திருச்சியிலிருந்து

மணப்பாறை செல்லும் கருங்கல் பதித்த சாலையில் சென்று கொண்டிருந்தான்.

முதல் நாள் இரவே பெரியவருடன் திருச்சிக்கு வந்து விட்ட சிறுவன்

அங்கு பல திருத்தலங்களையும் தரிசித்து விட்டு பெரியவருடன் முதல்

நாள் நிகழ்ச்சிகளைப் பற்றி சுவாரஸ்மாகப் பேசிக் கொண்டே சென்று

கொண்டிருந்தான்.

பெரியவர் சிறுவனுக்கு ஒரு சிறு குன்றைக் காட்டி, ”இதுதாண்டா ராச்சாண்டார்

திருமலை கோயில். எதிர் காலத்தில் பலருக்கும் பயன்தரக் கூடிய கோயில்.,”

என்று கூறிக் கொண்டே அருகிலிருந்த ஒரு ஆலமர நிழலில் அமர்ந்து

கொண்டார். சிறுவனும் அவர் அடுத்து கூறப் போகும் சுவாரஸ்யமான

தெய்வீகமான தகவல்களைக் கேட்பதற்காக உன்னிப்பாக காதைத் தீட்டிக்

கொண்டு அவர் அருகில் தரையில் அமர்ந்து கொண்டான்.

பெரியவர் தொடர்ந்து, ”எதிர்காலத்துல கல்யாணம் என்பது ஒரு வியாபாரச்

சந்தையாகி விடும். நல்ல குணமுள்ள நற்பழக்கங்கள் உள்ள வரன்களைத்

தேடுவதை விடுத்து ஏட்டுப் படிப்புக்கும், பணத்திற்கும், கௌரவத்திற்கும்

முக்கியத்துவத்தை கொடுத்து சம்பந்தங்கள் ஏற்படுவதால் அதனால்

ஏமாற்றங்களையே தம்பதிகள் சந்திக்க வேண்டி வரும்.

மேலும், எதிர்காலத்தில் காசுக்காக திருமணப் பொருத்தம் பார்ப்பவர்கள் பெருகி

விடுவதால் உண்மையான ஜாதகப் பொருத்தம் அமையாத சூழ்நிலையில் தான்

தோன்றித் தனமான திருமணப் பொருத்தங்கள் அமைந்து அவற்றையே வேறு

வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையே உருவாகும்.

எனவே, முடிந்த வரை நெருங்கிய சொந்தத்தில் உள்ள வரன்களைத்

தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனமான செயலாகும். நல்ல குடும்பத்திற்கும்,

நல்ல பழக்க வழக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வரன்களைத் தேடி

திருமணம் முடித்தால்தான் மண வாழ்வு மணக்கும் என்பதை எதிர்காலத்தில்

உன்னை நாடி வரும் அன்பர்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லு, ”

ஆனால், நெருங்கிய சொந்தத்தில் திருமணம் நிகழ்த்தினால் பிறக்கும்

குழந்தைகள் மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி குறைந்திருக்கும் என்று சிலர்

வாதிடுவார்கள். உண்மையில் குழந்தை பாக்கியம் மட்டும் அல்லாது

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்துமே,

இன்பமாக இருந்தாலும் துன்பமாக இருந்தாலும், அது அவனுடைய முந்தைய

ஜன்மங்களின் செயல்களால் வருவதே. இதில் எவ்வித சந்தேகமோ ஐயப்பாடோ

வேண்டாம்.

எனவே உறவினர்களுக்குள் திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதே

இனி வரும் சந்ததிகளுக்கு நன்மை பயக்கும். அப்படி உறவினர்களுக்குள்

முறையான திருமண சம்பந்தங்கள் கூடி வராத நிலையில் மட்டுமே மற்ற

முறைகளில் வரன்களைத் தேடலாம். ஆனால், அத்தகைய சந்தர்ப்பங்களில்

மணமகன், மணமகள் இருவரையுமே முழுமையான மருத்துவ சோதனைக்குப்

பின் தேர்ந்தெடுப்பதால் எதிர்வரும் துன்பங்களிலிருந்து ஓரளவு பாதுகாத்துக்

கொள்ளலாம்.

திருஷ்டி கண்டி வழிபாடு்

தவறான பழக்க வழக்கங்களால் இனி பிறக்கும் ஆண்களும் பெண்களும்

பெரும்பாலோனார் சந்ததிகளை உருவாக்கும் அளவிற்கு ஆரோக்கியமான

உடல், மன வளத்தைப் பெற்றிருக்க மாட்டார்கள். அத்தகையோர் இத்தல ஈசனை

வணங்கி வழிபடுவதால் அவர்களுடைய பூர்வ ஜன்ம நற்செயல்களைப்

பொறுத்து இறைவன் அவர்களின் குறையை நிவர்த்தி செய்வான்.

ஆண் மலடு, பெண் மலடு போன்ற குறைகளை நிவர்த்தி செய்வதுடன் கால்

பாதங்கள் மூலம் வரும் திருஷ்டி தோஷங்களைக் களையும் திருஷ்டி நிவாரண

சக்திகள் இத்தலத்தில் பொங்கி பெருகுவதால் சிறு வயது குழந்தைகளுக்கும்

பள்ளிக் குழந்தைகளுக்கும் காலணி தானம் அளிப்பது இத்தல இறைவனுக்கு

உகந்த வழிபாடாகும்.

இவ்வாறு ராச்சாண்டார் கோவில் திருத்தல ஈசனின் மகிமைகளை பெரியவர்

வர்ணித்துக் கொண்டிருக்க அவற்றை ஆனந்தமாகப் பருகிக் கொண்டிருந்தான்

சிறுவன். அப்போது சுமார் 30, 35 வயதுள்ள இரு நண்பர்கள் கோவணாண்டிப்

பெரிவயரைக் கண்டு அவரை வணங்கி அவர் அருகில் அமைதியாக நின்றனர்.

கைச் சாடை மூலம் சிறுவன் அருகில் அமரும்படிக் கூறவே, அவர்களும்

பெரியவரின் காலடியில் அமர்ந்து கொண்டு கோவணாண்டியின் அமுத

மொழிகளை கேட்கத் தொடங்கினர்.

இனி வரும் இல்லற வாழ்வில் தம்பதிகள் ஒருவொருக்கொருவர் சந்தேகக்

கண் கொண்டு பார்ப்பதால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகளும்,

விவாகரத்துகளும், தற்கொலைகளும் நிகழும். எதிலுமே திருப்தியில்லாத

சூழ்நிலையில் மண வாழ்வு பாலைவனமாகத் தோன்றும். இல்லற இன்பம்

என்பது கானல் நீராக மாறிவிடும்.

இந்நிலையை மாற்றவல்ல கருணா மூர்த்தியே இத்தல பெருமான் ஆவார்.

ஒவ்வொரு வாரமும் புதன், வியாழன் வெள்ளிக் கிழமைகளில் ஒவ்வொரு

நாளும் 12 தீபங்களுக்குக் குறையாமல் ஏற்றி இத்தல அம்பிகையையும்

இறைவனையும் வழிபடுவதால் இல்லற நல்லறமாய் இனிமை பெருக

இறைவன் நல்வழி காட்டுவான். புதன் கிழமை நல்லெண்ணெய் தீபமும்,

வியாழக் கிழமை இலுப்பெண்ணெய் தீபமும், வெள்ளிக் கிழமை தேங்காய்

எண்ணெய் தீபமும் ஏற்றி தீப வழிபாட்டை நிறைவேற்றுதல் நலம்.

பெரிவரின் வார்த்தைகளைக் கேட்ட அந்த நண்பர்களுக்கு அவை

அவர்களுக்காகவே தரப் பட்ட ஆறுதல் வார்த்தைகளாகத் தோன்றவே

அவர்களில் மூத்தவன் தடாலென்று பெரியவரின் கால்களில் விழுந்து,

அவர் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழத்

தொடங்கினான். சற்று நேரம் கழித்து பெரியவர் மௌனமாக அவனிடமிருந்து

தன்னை விடுவித்துக் கொண்டார்.

சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது.

பின்னர் பெரியவர் அந்த நண்பர்களிடம், ”எதையுமே வருமுன் காப்பதுதான்

புத்திசாலித்தனம். வந்த பின் சுமப்பதால் யாருக்கு என்ன லாபம்? எப்படியோ

நடந்தது நடந்து விட்டது. இனி நடக்கப் போவதைப் பற்றித்தான் யோசிக்க

வேண்டும்,” என்று பீடிகையாகச் சொன்னார்.

சிறுவனுக்கு பெரியவர் கூறிய வார்த்தைகள் ஒன்றும் விளங்கவில்லை.

ஆனால், வந்திருந்தவர்கள் பெரியவர் கூறிய விஷயங்களைத் தெளிவாகப்

புரிந்து கொண்டவர்கள் போல் தலையாட்டினார்கள்.

அவர்களின் பிரச்னை என்ன என்பதை பெரியவர் சில நாட்கள் கழித்து

சிறுவனுக்கு விளக்கினார். அதாவது, அந்த நண்பர்களில் ஒருவனுக்கு சிறு

வயது முதல் தவறான பழக்க வழக்கங்கள் இருந்து வந்தது. அதே சமயம்

ராச்சாண்டார் திருத்தல ஈசனிடம் நீங்காத அன்பும் வைத்திருந்தான். தன்னுடைய

இருபதாவது வயது முதல் தவறாது ஒவ்வொரு பிரதோஷ பூஜையிலும்

இறைவனை வழிபட்டு, நந்தி எம்பெருமானுக்கு அருகம்புல் மாலையும்,

தேங்காய் பச்சரிசி வெல்ல பிரசாதமும் படைத்து பக்தர்களுக்கு வழங்கி வந்தான்.

இறை பக்தியை விட அவனிடம் சபல புத்தி மேலோங்கி நின்ற காரணத்தால் பல

பெண்களிடம் சகவாசம் கொண்டான். அதனால் சிறுவயதிலேயே பல விதமான

உடல் உபாதைகள் அவனிடம் குடி கொண்டன. நில புலன்கள் தோட்டம் துரவு

வசதிகளுடன் விளங்கியதால் அவனுடைய பெற்றோர்கள் அவனுக்கு ஒரு நல்ல

மணமகளைத் தேர்ந்தெடுத்து மணம் முடித்து வைத்து விட்டனர்.

தவறான பழக்கங்களில் ஈடுபட்டிருந்ததால் இல்லறம் அவனுக்கு

சுவைக்கவில்லை. திருமணம் நடந்த ஓராண்டிற்குள் முக்கிய உடல் உறுப்பை

அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற வேண்டிய சூழ்நிலையும் அமைந்து

விட்டது.

இந்நிலையில்தான் அவன் பெரியவரை ராச்சாண்டார் திருத்தலத்தில் தரிசனம்

செய்யும் பேறு பெற்றான். நடந்த விவரங்கள் அனைத்தையும் அவர்களிடம்

இருந்து கேட்டுக் கொண்டார் பெரியவர். தற்போது அவனுடைய இளம்

மனைவிக்கு எப்படி ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது

என்பதுதான் அவனுடைய கவலையாக இருந்தது. அது பற்றி பெரியவரிடம்

வாய் விட்டுக் கேட்டும் விட்டான்.

பெரியவர், ”இவ்விஷயத்தில் நீ எடுத்துள்ள முடிவு சரியான முடிவுதான்.

ஆனால், அதில் ஒரு சிறிய மாற்றம் மட்டும் செய்தால் போதும்,” என்றார்

பெரியவர்.

அப்படி அவன் எடுத்த முடிவு என்ன? தன்னுடைய ஆருயிர் நண்பனுக்கு

தன்னுடைய இளம் மனைவியை திருமணம் செய்து வைத்து விட்டு

தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் அவள் பெயரில் எழுதி வைத்து

விட்டு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வதாக அவன் மனதிற்குள்

முடிவெடுத்திருந்தான். அவன் மனதைப் படித்த பெரியவர் அதை ஓரளவு

ஆமோதிப்பதுபோல் கூறினார்.

பெரியவர் நிதானமாகத் தொடர்ந்தார், ”நீ இந்த சின்ன விஷயத்திற்காக

உயிரை விடத் தேவையில்லை. உன்னுடைய மனைவியின் நல்வாழ்விற்காக

சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வைப்பதற்குப் பதிலாக அதில்

பாதியை நீ வைத்துக் கொண்டு உன்னுடைய பாக்கிக் காலத்தை கோயில்

திருப்பணிகளுக்காக செலவிட்டு வந்தால் உன்னுடைய பழைய கணக்கும்

தீர்ந்து விடும்,” என்று அறிவுறுத்தினார்.

பெரியவர் கூறியபடியே செய்வதாகச் சொல்லிவிட்டு நிறைவான மனதுடன்

அவ்விரு நண்பர்களும் பெரியவரிடம் இருந்து விடை பெற்றுச் சென்றனர்.

அவர்கள் சென்றதும் பெரியவர் சிறுவனிடம், ”சப்ஸ்ட்யூட் போட்டதால் வந்த

துன்பத்தைப் பார்த்தாயா? இங்கு வந்தவன் பூர்வ ஜன்மத்தில் திருமணங்களை

நடத்தி வைக்கும் புரோகிதனாக இருந்தான். பல திருமணங்களிலும் மாப்பிள்ளை

ஓத வேண்டிய மந்திரங்களை தானே ஓதி பல சாந்தி முகூர்த்த சடங்கையும்

நடத்தி வைத்தான். இவன் குரல் வளம் சிறப்பாக இருந்ததால் அதை வியாபாரப்

பொருளாக்கி இலவசமாக வேதம் ஓதுவதை விடுத்து வேதத்தை விற்க

ஆரம்பித்தான். அதனால் முப்பிறவியில் அவன் யார் யாருக்கெல்லாம் சாந்தி

முகூர்த்த சடங்கை நிறைவேற்றி வைத்தானோ அவர்களுடன் இப்பிறவியில்

பழக வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது. ஆனால், அதே சமயம் இத்தல

இறைவன்பால் அன்பு பூண்டு பிரதோஷ வழிபாடுகளை முறையாக பல

வருடங்கள் நிறைவேற்றி வந்ததால் பல பிறவிகளில் அவன் பட வேண்டிய

அல்லல்களை இத்தல ஈசன் இந்த ஒரு பிறவியிலேயே அவன் கர்மத்தைத்

களைந்து அவனைக் கரையேற்றும் மார்கத்தை இந்த அடிமையிடம்

(பெரியவரிடம்) ஒப்படைத்து விட்டார்,” என்று ஒரு பெரிய கர்ம பரிபாலன

கீதையை சிறுவனுக்கு உபதேசித்தார் பெரியவர்.

திருமணத்திற்கு முன்னால் மாப்பிள்ளையையும் பெண்ணையும் ஒன்றாக

அமர வைத்து வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதால் பலவித

தோஷங்கள் மணமக்களைச் சாரும் என்று கூறினோம் அல்லவா? அதே

போல திருமணத்திற்குப் பின்னும் கூட பொது இடங்களில் தம்பதிகள் தங்கள்

அன்யோன்யமான உறவை வெளிப்படுத்துவதிலும் ஜாக்கிரதையாக இருக்க

வேண்டும்.

மனிதனுக்கும் மிருகங்களுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. அதில்

முக்கியமானது சிரிப்பு. மனிதன் மட்டுமே சிரிக்கத் தெரிந்தவன். மற்றவர்களை

சிரிக்க வைக்கும் சக்தி உடையவன். மிருகங்களால் சிரிக்க முடியாவிட்டாலும்

மற்றவர்களை சிரிக்க வைக்கக் கூடிய சக்தி உடையவை. இரண்டாவதாக,

மனிதர்களைப் பொறுத்த வரையில் காமம் என்பது மறைபொருளாக இருக்க

வேண்டியது அவசியம். இந்த மானிட தர்மம் அவமதிக்கப்படும்போது

அதனால் மனிதர்கள் பலவித திருஷ்டி தோஷங்களுக்கும், சாபங்களுக்கும்

ஆளாகிறார்கள்.

பல குடும்பங்களில் ஏற்படும் விவாகரத்து, சண்டை சச்சரவுகள்,

அமைதியின்மை சந்ததியின்மை, உடல் மன நோய்கள் போன்றவற்றிற்கு

தம்பதிகளின் அஜாக்கிரதையே காரணம் என்பதை ஆத்ம விசாரம் செய்து

பார்த்தால் அவர்களே இதை எளிதில் உணர முடியும். எனவே தம்பதிகள்

பொது இடங்களில் மற்றவர்களின் தேவையில்லாத பார்வை தங்கள்மேல்

படியாத அளவிற்கு தங்கள் நடிவடிக்கைகளை பொறுப்புடன் வைத்துக்

கொள்வதால் பலவிதமான திருஷ்டி தோஷங்களிலிருந்து தங்களைப்

பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...