Thursday 4 May 2017

எதெது எப்போது கவிழும்?

                                            1    எதெது எப்போது கவிழும்?


மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனையிலா அரசன் வீரம்
        காப்பிலா விளைந்த பூமி கரையிலாது இருந்த ஏரி
    கோப்பிலான் கொண்ட கோலம் குருஇலான் கொண்ட ஞானம்
        ஆப்பிலா சகடுபோல அழியும் என்று உரைக்கலாமே!




பெரியவர்கள் துணையின்றி இருக்கும் பருவப்பெண்ணின் வாழ்க்கை
படைபலம் இல்லாத அரசனின் வீரம்
காவல் இல்லாத விளை நிலம்
கரை இல்லாத ஏரி
ஒழுங்கில்லதவன் செய்து கொள்ளும் ஆடம்பரமான அலங்காரம்
ஆசான் இல்லாது பெற்ற அறிவு
இவை அனைத்தும் அச்சாணி இல்லாத வண்டிக்குச் சமம். என்று வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் கவிழ்ந்து போகும்!


     2    தெள்ளற வித்தை கற்றவன் என்ன செய்வான்?

“பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல்புத்தி கேளான்
கள்ளின் நல்குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப்பாராள்
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்
உள்ள நோய் பிணிகள் தீர்ந்தால் உலகோர் பண்டிதரைத் தேடார்!



பிள்ளை வளர்ந்து பெரியவனாகிவிட்டால்(இளைஞனாகி விட்டால்), தன் தந்தை சொல்லும் அறிவுரைகளைக் கேட்கமாட்டான்.
இல்லாளும், வயதாகிவிட்டால், கணவனை மதிக்க மாட்டாள்.
கல்விக் கற்றுத் தேரிய மாணவனும் ஆசிரியரைத் தேடமாட்டான்.
வியாதி முற்றிலும் குணமாகிவிட்டால், மக்களும் வைத்தியரைத் தேட மாட்டார்கள்!



3  "குரு உபதேசம், மாதர்கூடிய இன்பம், தன்பால்
மருவிய நியாயம், கல்வி,வயதுறச் செய்த தர்மம்,

அரிய மந்திரம், விசாரம்,ஆண்மை இங்கு இவைகள் எல்லாம்,
ஒருவரும்
தெரிய ஒண்ணாது உரைத்திடின் அழிந்துபோமே."



ஒருவனுக்கு மறைவாக ஆசிரியர் செய்த உபதேசம்,
மாதரிடத்து அனுபவித்த இன்பம்,
தன் மனதில் பொருந்திய நியாயம்,
தான் கற்ற கல்வி,
தன்னால் செய்யப்பட்ட தர்மம்,
அரியதான மந்திரம்,
தனது கவலை,
தனது வல்லமை
என்ற இவையெல்லாம் வேறு ஒருவருக்கும்
தெரியச்சொல்லுதல் கூடாது.
சொன்னால் அவற்றின் மதிப்பு அழிந்துபோகும்.


4    "திருப்பதி மிதியாப்பாதஞ் சிவனடி வணங்காச் சென்னி
இரப்பவர்க் கீயாக்கைக ளினியசொற் கேளாக்காது
புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாதேகம்
இருப்பினும் பயனென்காட்டி லெரிப்பினு மில்லைதானே.

திருப்பதி மிதியாத பாதம்,
சிவனடி வணங்காத தலை,
இரப்பவருக்குக் கொடுக்காத கை,
இனிய சொற்களைக் கேட்காத காது,
தங்களைப் பாதுகாப்பவர் கண்களில் கண்ணீர் கண்டும்
உயிர் கொடுக்காதவனின் உடல்
ஆகியவைகள்
இருந்தும் பயனில்லை; 

5     ஆபத்துக்கு உதவாப்பிள்ளை அரும்பசிக்கு உதவாத அன்னம்
தாபத்தைத் தீராத தண்ணீர் தரித்திரம் அறியாத பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்
பாபத்தைத் தீராத தீர்த்த


 பயனில்லை ஏழுந்தானே!”



1. பெற்றோர்களை - அவர்கள் துயர் உற்றிருக்கும் காலத்தில் கவனித்துப் போற்றாத பிள்ளை
2. நன்றாகப் பசிக்கும்போது கிடைக்காத உணவு - அது எவ்வளவு சுவையானதாக இருந்தாலும்
3. தாகத்தைத் தவிர்க்க முடியாத தண்ணீர்.
4. கணவனின் வருமானம் தெரிந்து குடும்பம் நடத்தாத பெண் (மனைவி)
5. கோபத்தை அடக்கி ஆளத்தெரியாத ஆட்சியாளர்கள்
6. தன் ஆசிரியர் சொல்லிக்கொடுத்தன்படி நடக்காத மாணவன்
7. பாவம் போக்கும் புனிதத்தன்மை இல்லாத திருக்குளம்

ஆகிய இந்த ஏழும் பயனற்றவை ஆகும்!


No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...