மலயத்துவசன் முன் இந்திரன் தோன்றினான். பாண்டியனே நீ நற்புத்திரப் பேற்றினை விரும்பினாய். ஆதலால் உலக இன்பத்தை அளிக்கக் கூடியதும் நற்புத்திரப் பேற்றினை வழங்கக்கூடிய புத்திர காமேஷ்டி செய் என்று கூறி தன்னுலகத்தை அடைந்தான். பாண்டியனும் இந்திரனின் வழிகாட்டுதலின்படி புத்திர காமேஷ்டி யாகத்தை தொடங்கினான். யாகத்தின் பலனாக தலையின் இடதுபுறத்தில் கொண்டையுடன், கையில் கிளி வைத்துக் கொண்டு, காலில் சதைங்கை அணிந்து, முகம் நிறைய புன்னகையைச் சிந்தியவாறே மூன்று வயதினை ஒத்த சிறுமியாக உலக நாயகியான உமையம்மை மூன்று தனங்களுடன் தோன்றினார்.
அக்குழந்தையின் கண்கள் மீன்களைப் போன்று நீண்டு அழகாக இருந்தன. ஆகையால் அங்கயற்கண்ணி என்ற பெயரில் அழைக்கப்பட்டாள். அவள் தன் சின்னஞ்சிறு கால்களால் நடை நடந்து காஞ்சன மாலையின் மடியில் போய் அமர்ந்தாள். தன்னுடைய சின்னச்சிறிய செவ்விதழ்களால் காஞ்சனமாலையை அம்மா என்று மழலை மொழியில் அழைத்தாள். அதனைக் கண்டதும் காஞ்சன மாலை குழந்தை வடிவில் இருந்த உலக அன்னையை வாரி எடுத்து அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள். குழந்தையைக் கண்ட மலயத்துவசன் மனதில் மகிழ்ச்சி கொண்டான். இருப்பினும் கவலை ஒன்று அவனை வாட்டியது.
புத்திர பேற்றினை விரும்பி புத்திர காமேஷ்டி செய்த தனக்கு, தான் விரும்பியபடி ஆண் குழந்தை தோன்றாமல் மூன்று தனங்களுடன் கூடிய பெண் குழந்தை தோன்றியதுதான் அவனுடைய கவலை ஆகும். மலயத்துவசன் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் சோமசுந்தரக் கடவுளை வழிபட்டான். தன்னுடைய மனக்குறையை இறைவனிடம் விண்ணப்பித்தான். இறைவனும் அவ்வரசனுக்கு மட்டும் கேட்குமாறு திருவாக்கு ஒன்றினைக் கூறினார். பாண்டியனே கலங்காதே. உன்னுடைய அன்பு புதல்விக்கு தடாதகை எனப் பெயரிட்டு எல்லா கலைகளையும் கற்பித்து அவளுக்கு ராணியாக முடிசூட்டு.
அவளுக்கு ஏற்ற கணவனை அவள் காணும் போது அவளுடைய ஒரு தனம் தானே மறைந்து விடும். எனவே மனம் வருத்தம் கொள்ள வேண்டாம் என்று சொக்கநாதர் கூறினார். இறைவனின் திருவாக்கினை கேட்ட மலயத்துவசன் கவலை நீங்கி மனத்தெளிவு பெற்றான். மீனாட்சி அம்மையின் திரு அவதாரம் நிகழ்ந்து விட்டது என்று அகத்தியர் மற்ற முனிவர்களுக்கு கூறினார். அம்முனிவர்கள் அகத்தியரிடம் மலையரசனும் பல நாட்கள் வருந்தி தவம் இயற்றியே உலக அன்னையை தம் மகளாகப் பெற்றிருக்கிறான். தற்போது அன்னை பாண்டியனின் திருமகளாக இப்பூமியில் இறைவனை விட்டுவிட்டு தனியே தோன்றக் காரணம் என்ன? என்று கேட்டார்கள்.
அதற்கு அகத்தியர், விச்சுவாவசு என்ற கந்தவர்வனின் மகளான விச்சாவதி உமையம்மையின் மீது மிக்க அன்பு கொண்டு இருந்தாள். ஒரு நாள் தனது தந்தையிடம் உமையம்மையின் அருளைப் பெற வழிபட வேண்டிய தலம் என்ன? என்று கேட்டாள். அதற்கு விச்சுவாவசுவும் துவாத சந்தம் எனப்படும் மதுரை சிறந்த இடம் என்று கூறினார். விச்சாவதியும் மதுரையை அடைந்து, பல விரத முறைகளை மேற்கொண்டாள். தை மாதத்தில் அங்கையற்கண்ணி இறைவியின் சந்நதியை அடைந்து யாழினை இசைத்து அம்மன் பற்றிய இனிய பாடல்களை பாடினாள். அப்போது அங்கையற்கண்ணி அம்மை மூன்று வயது குழந்தையாக விச்சாவதிக்கு காட்சி தந்தாள். விச்சாவதியிடம் அங்கையற்கண்ணி உன் விருப்பம் என்ன? என்று கேட்டாள்.
விச்சாவதியும் தாயே நின் திருவடியில் நீங்காத அன்பினை நான் எப்போதும் பெற்றிருக்க வேண்டும் என்று கேட்டாள். அங்கையற்கண்ணி மேலும் இன்னும் வேறு என்ன வேண்டும் என்று கேட்டாள். அதற்கு விச்சாவதி அம்மையே தற்போது காட்சி தருகின்ற திருவுருவத்திலேயே என்னிடம் தோன்ற திருவருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அதனைக் கேட்ட அங்கையற்கண்ணி, பாண்டியனின் மரபிலே மலயத்துவசன் தோன்றுவான். நீ அவனுடைய மனைவியாய் வருவாய். யாம் அப்போது இத்திருவுருவத்திலேயே உனது தவப்புதல்வியாய் உன்னிடம் வருவோம் என்று அருளினார். விச்சாவதியின் தவப்பயனால் உலக அன்னை மதுரையில் தடாதகையாகத் தோன்றினாள். என்று அகத்தியர் சொல்லி முடித்தார்.
இறைவனின் திருவாக்குப்படி தாடாகை என்ற பெயரை குழந்தைக்கு சுட்டி மனைவியுடன் அரண்மனை திரும்பினான் மலயத்துவசன். தனக்கு குழந்தை பிறந்ததை உலகெங்கும் அறிவிக்கச் செய்தான். தடாதகை பற்றிய இறைவனின் திருவாக்கினை மன்னன் தன்னுடைய நம்பிக்கைக்கு உரிய அமைச்சர் சுமதியிடம் மட்டும் சொன்னான். தடாதகை என்ற சொல்லுக்கு மாறுபட்டவள் என்பது பொருள் ஆகும். தடாதகையும் போர் கலைகள் உள்ளிட்ட எல்லா கலைகளையும் கற்று குமரிப்பருவத்தை எய்தினாள். தடாதகை பிராட்டியார் குமரிப் பருவத்தை அடைந்ததும், மலயத்துவசன் தன் அமைச்சரான சுமதி என்பவரிடம் கலந்தாலோசித்து நல்லதொரு நாளில் தடாதகை பிராட்டியாருக்கு பாண்டிய நாட்டு அரசியாக திருமுடி சூட்டினான். சில நாட்களில் மலயத்துவசன் விண்ணுலகத்தை அடைந்தான்.
தடாதகையும் தான் கற்ற கல்வியின்படி நாட்டினை சிறப்புற ஆட்சி செய்தார். மீனானது பார்வையாலே தன் குஞ்சுகளுக்கு உணவினை ஊட்டி பாதுகாப்பது போல தடாதகையும் தம் குடிமக்களைப் பாதுகாத்து அரசாண்டார். மீன் போன்ற கண்களைக் கொண்டு அரசியாக அரசாண்டதால் மீனாட்சி என்றும் அங்கயற்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறார். அம்+ அயல்+கண்ணி = அங்கயற்கண்ணி. அம் என்றால் அழகிய, கயல் என்றால் மீன், கண்ணி என்றால் கண்களை உடையவள். அழகிய மீன்போன்ற கண்களை உடையவள். தடாதகை பிராட்டியார் கன்னிப் பருவத்தில் முடிசூடி பாண்டிய நாட்டை ஆண்டமையால் பாண்டியநாடு கன்னிநாடு என்னும் பெயர் பெற்றது.
மீதி அடுத்த பதிவில் பார்ப்போம்....
ஓம் மீனாட்சி தாயே போற்றி 
.

No comments:
Post a Comment