பணத்தில் பாதி. சிறுகதை.
மாணிக்கம் என்ற ஒரு பணக்காரன் இருந்தான். அவனுக்கு எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் திருப்தியே ஏற்படவில்லை. மேலும் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை அவனுக்கு இருந்தது.
ஒருநாள் அவன் பழனி என்ற பதினைந்து வயதுப் பையனை அழைத்து, "நீ என்னோடு இரு. நான் சொல்லும் வழியில் நடந்து சாமான்கள் கொண்டு வந்தால், அதில் பாதியை உனக்குக் கொடுக்கிறேன்" என்றான். பழனியும் அதற்குச் சம்மதித்து மாணிக்கத்தோடு இருந்தான்.
அன்றிரவு மாணிக்கம் திடீரென, "திருடன்! திருடன்! ஓடி வாருங்கள்!" என்று பலமாகக் கத்தினான். அது கேட்டு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் தம் வீட்டு வாசற்கதவுகளைத் திறந்து கொண்டு ஓடி வந்தார்கள். இதற்குள் மாணிக்கம் தன் வீட்டுப் புழக்கடைப் பக்கக் கதவைத் திறந்து வைத்துவிட்டான். எல்லோரும் வந்து "எங்கே திருடன்?" என்று கேட்டதும், அவன் புழக்கடை வழியாக ஓடியதாகப் பதில் சொன்னான். அவர்களும் பின் பக்கம் போய்த் தேடிப் பார்த்துவிட்டு, "பயல் தப்பிவிட்டான், இனி வர மாட்டான்" எனக் கூறிவிட்டுத் தம் வீடுகளுக்குச் சென்றனர்.
இந்தச் சந்தடி சாக்கில், பழனி மற்றத் திறந்த வீடுகளில் நுழைந்து அகப்பட்ட விலையுயர்ந்த பொருள்களையெல்லாம் சுருட்டி எடுத்து மூட்டை கட்டிக்கொண்டு, யார் கண்ணிலும் படாமல் மாணிக்கத்தின் வீட்டிற்கு வந்துவிட்டான். எல்லோரும் போன பிறகே மாணிக்கம் அந்த மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் பலவிதப் பாத்திரங்களும் பொருள்களும் இருந்தன.
அப்போது மாணிக்கம் பழனியிடம், "நீ இதை எடுத்து வந்ததை யாரும் பார்க்கவில்லையே?" என்று கேட்டான். பழனியும், "யாரும் பார்க்கவில்லை. எல்லோரும் இங்கே இருந்ததால் சாமர்த்தியமாக எடுத்து வந்தேன். சரி, என் பங்கைக் கொடு" என்று கேட்டான். மாணிக்கமோ, "இப்போது இவற்றைத் தந்தால் நீ எங்கே வைத்துக் கொள்வாய்? நாலைந்து நாட்களுக்குப் பிறகு வாங்கிக் கொள். அதற்குள் இந்தத் திருட்டுப் பற்றிய பேச்சும் அடங்கிவிடும்" என்றான். பிறகு அவற்றைத் தன் வீட்டின் பாதாள அறைக்குள் பதுக்கி வைத்தான். அவன் பழனியின் கைச்செலவுக்காக வெறும் இரண்டு ரூபாய்கள் மட்டும் கொடுத்தான்.
மறுநாளும் மாணிக்கம் 'திருடன், திருடன்' எனக் கத்தி எல்லோரையும் வரவழைத்தான். ஊரார் அவன் வீட்டிற்கு வந்தபோது, மாணிக்கம் கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்தவாறே 'திருடன், திருடன்' என மிகவும் பலமாகக் கத்தினான். அது கண்டு ஊரார், "ஐயோ பாவம், மாணிக்கம் பயந்துவிட்டான். தூக்கத்தில் பிதற்றுகிறான்" எனக் கூறி அவனை எழுப்பினார்கள். அவனுக்குத் தைரியம் மூட்டிவிட்டுச் சற்று நேரத்திற்குப் பிறகு அவர்கள் தம் வீட்டிற்குச் சென்று விட்டார்கள்.
இதற்குள் பழனி முந்தைய தினம் செய்தது போலவே ஊரில் பல வீடுகளில் புகுந்து பல பொருள்களை எடுத்து வந்துவிட்டான். எல்லோரும் போன பின் மாணிக்கத்திடம் பழனி தான் கொண்டு வந்தவற்றைக் கொடுத்தான். மாணிக்கம் அவற்றையும் தன் பாதாள அறைக்குள் வைத்துவிட்டு, "இவற்றையெல்லாம் நாளை எடுத்துப் போய்ப் பட்டணத்தில் விற்றுப் பணமாக்கி உன் பங்குப் பணத்தைக் கொடுக்கிறேன்" என்றான். பழனியும் அரைமனதுடன் அதற்குச் சம்மதித்தான்.
மறுநாள் மாணிக்கம் அந்தப் பொருள்களை நகருக்கு எடுத்துப் போய விற்றுப் பணமாக்கிக் கொண்டு வந்தான். பழனி அவனிடம் தன் பங்குப் பணத்தைக் கேட்க, மாணிக்கமோ திடீரென, "யாரடா நீ? பணமா? ஏது? ஒன்றும் கொடுக்க முடியாது. உன்னால் ஆனதைச் செய்துகொள்!" என்று கூறி அவனை விரட்டி விட்டான்.
பழனியும் வெளியே போவது போல நடித்து, மறுபடியும் வந்து மாணிக்கம் பணத்தைப் பூஜை அறையில் விக்கிரகத்திற்கு கீழே பாதாள அறையில் வைப்பதைப் பார்த்தான். அதனை எப்படியாவது அடைந்துவிடுவது எனத் தீர்மானித்துக் கொண்டான்.
அன்றிரவு ஒரு மரத்தடியே பழனி படுத்துக் கொண்டிருந்தான். அப்போது இரண்டு திருடர்கள் அங்கே வர, பழனி அவர்களிடம் மாணிக்கம் தனக்குச் செய்த மோசத்தைக் கூறி, "நீங்கள் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு எனக்கும் கொஞ்சம் கொடுங்கள்" என்றான்.
திருடர்களும் மாணிக்கத்தின் வீட்டினுள் போய் அவனைப் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டு, பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். அவர்கள் பழனிக்குக் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டே போனார்கள்.
மாணிக்கம் அன்றிரவு 'திருடன், திருடன்' எனக் கத்தியும் யாரும் வரவில்லை. "முதல் நாள் தூக்கத்தில் அவன் பிதற்றியது போல அன்றும் பிதற்றுகிறான்" என்று ஊரார் எண்ணிப் பேசாமல் இருந்துவிட்டனர். பேராசைப் பட்ட மாணிக்கம் தன் செல்வங்கள் அனைத்தையும் இழந்தான்.
பேராசை பெருநஷ்டம். பிறரை ஏமாற்ற நினைப்பவர் ஒருநாள் ஏமாறுவார்.

No comments:
Post a Comment