Monday 16 September 2019

*கூட்டுக் குடும்பம் மலரட்டும்*


எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

கூட்டுக் குடும்பங்கள் இருந்த அந்த காலத்திலும் கூட, பிள்ளை – பெற்றோர், அண்ணன் – தம்பி, அக்கா – தங்கை கருத்து வேறுபாடு ஏற்பட்டது இயல்பே.
ஆனால், அந்த பிரிவு நிரந்தரமாக இல்லை. யாரோ சிலர் மத்தியஸ்தம் செய்து, குடும்பங்களை இணைத்தனர்.
அக்காலத்தில், ஒரு வீட்டில் திருமணம் என்றால், ஒரு வாரம் முன்பே உறவினர்கள் குவிந்து விடுவர்.
ஆளுக்கொரு வேலையாக இழுத்துப் போட்டு பார்ப்பர். கருத்து வேறுபாடு வரத்தான் செய்யும்.
அதை ஒரு பெரியவர் மத்தியஸ்தம் செய்து, வளராமல் பார்த்துக் கொள்வார். இப்படி இருந்தது அந்தக்காலம்.
இந்த ஒற்றுமைக்கு காரணம் என்னவெனில், அன்று நல்லொழுக்க பாடங்கள் பிள்ளைகளுக்கு கற்றுத் தரப்பட்டன.
பள்ளிகளில் மட்டுமல்ல, வீடுகளில் தாத்தா, பாட்டிகள், தங்களுக்கு தெரிந்த புராணக் கதைகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பர்.
திருப்பரங்குன்றத்திற்கு நீங்கள் பலமுறை போய் இருப்பீர்கள்.
ஆனால், கருவறையை உற்றுக் கவனித்தீர்களா!
அது முருகன் கோவில் என்றாலும், மூலவர் முருகன் இல்லை.
பரங்குன்றநாதராகிய *சிவனே மூலவர். அம்பாள் ஆவுடைநாயகியாகிய *பார்வதி.*
*சிவனின்* எதிரே எல்லா கோவில்களிலும் #நந்தி தான் இருக்கும்.
ஆனால், இங்கே சிவனின் மைத்துனரான பவளக்கனிவாய் *பெருமாள்* இருக்கிறார்.
இந்த இடத்திலேயே, குடும்பத்தின் ஒற்றுமையும், விட்டுக்கொடுக்கும் தன்மையும் புலப்படுகிறது.
அடிப்படையில், திருப்பரங்குன்றம் *சிவாலயமாக* இருந்தாலும், தந்தை பரங்குன்றநாதர், தன் இளைய மகன் முருகனுக்காக இதை விட்டுக் கொடுத்துள்ளார்.
அண்ணன் கணேசனும் இதில் பங்கு கேட்கவில்லை.
கருவறையில் தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் முருகன் இருக்கிறார்.
திருமணத்துக்கு பிரம்மாவின் தேவியரான காயத்ரி, சாவித்திரி, கலைமகள் ஆகியோர் வந்திருக்கின்றனர்.
முருகனுக்கும், பிரம்மாவுக்கும், "ஓம்’ என்ற பிரணவம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.
பிரம்மாவை முருகன் தண்டித்து விட்டார். ஆனாலும், அதை மனதில் கொள்ளாமல், பிரம்மனும் திருமணத்துக்கு வந்திருக்கிறார்.
"குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’
என்ற தத்துவத்தை இது நினைவுபடுத்துகிறது.
தெய்வானையின் தந்தை இந்திரன் வந்திருக் கிறார்.
கனியைக் கொண்டு வந்து குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அதையெல்லாம் மறந்து, திருமணத்துக்கு அழைக்கப்பட்ட நாரதரும், கருவறையில் காட்சி தருகிறார்.
உறவினர்கள் எல்லாரும் மண மேடையில் சிரித்த முகத்துடன் கூடி நிற்கின்றனர்.
பக்தர்களாகிய நமக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
ஆனால், ஏதோ தெய்வக் காட்சி என நினைத்து, கன்னத்தில் போட்டுக் கொண்டு போய் விடுகிறோம்.
அதிலுள்ள உள் அர்த்தத்தை புரிந்து கொள்வதில்லை.
நம் வீட்டு இன்றைய திருமணங்களை எண்ணிப் பாருங்கள்.
ஒரு கண் மணமேடையிலும், இன்னொரு கண்ப்பாட்டு பந்தியிலும் இருக்கிறது. திருமணம் முடிகிறதோ இல்லையோ, உறவினர்களெல்லாம் அடித்துப் பிடித்து சாப்பாட்டை முடிக்கின்றனர்; கொண்டு வந்த மொய்யை எழுதுகின்றனர். போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர். மதியம் 2:00 மணிக்கெல்லாம் கல்யாணக் களையே இல்லாமல் போய்விடுகிறது.
கடமைக்காக வருவது தான் இன்றைய உறவுகள்.
திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து கருவறையில் பரங்குன்றநாதர், எதிரே பெருமாள், முருகன் சன்னிதியிலுள்ள தெய்வங்கள், அடுத்திருக்கும் கணபதி, துர்க்கை ஆகியோரை பார்த்தாவது, நம் குடும்பமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற உணர்வுடன் திரும்ப வேண்டும்.
மீண்டும் கூட்டுக் குடும்பம் மலர்ந்தால் தான், கலாச்சார சீரழிவும் தடுக்கப்படும்.
இதெல்லாம் நடக்காது என்பதல்ல. ஒவ்வொருவரும் மனது வைக்க வேண்டும். நாம் மனம் வைத்து கேட்டால், பரங்குன்றம் முருகன் வரம் தர மறுக்க மாட்டார்.
சிவ சிவ..

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...