Saturday 13 October 2018

வசனம் மிகவேற்றி

                           வசனம் மிகவேற்றி


இன்னைக்கு பழனி திருப்புகழ் பாக்கப் போறோம். சென்னை பெசண்ட் நகர் அறுபடை முருகன் கோயில் பழனி முருகனுக்கு இந்தத் திருப்புகழ் கல்வெட்டப்பட்டிருக்கு. அதைப் பாத்ததும் இந்தத் திருப்புகழுக்கு விளக்கம் எழுதலாம்னு முடிவு பண்ணேன்.
ரொம்பவே சின்னப் பாட்டுதான். நாலே வரிகள்.
வசனமிக வேற்றி மறவாதே மனதுதுய ராற்றி யுழலாதே
இசைபயில் சடாட்சர மதனாலே இகபரசௌ பாக்ய மருள்வாயே
பசுபதிசி வாக்ய முணர்வோனே பழனிமலை வீற்ற ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி மிகவாழ அமரர்சிறை மீட்ட பெருமாளே
இந்த வரிகளைச் சீர் பிரிச்சு எளிமையான பொருளைப் பாக்கலாம். அதுக்கு முன்னாடி பழனி பற்றி ஒரு சின்ன அறிமுகம்.
avinankudi_moolavarஅறுபடை(ஆற்றுப்படை) வீடுகள் வரிசைல பழனி மலையும் இப்போ மூன்றாம் படை வீடா இருக்கு. ஆனால் நக்கீரர் ஆற்றுப்படுத்திய மூன்றாம் வீடு எதுன்னு பாத்தா… அது ஆவினன்குடி. அது வேற எங்கயோ இல்ல. பழனிமலை அடிவாரத்துல இருக்கும் ஊர்தான் ஆவினன்குடி. இன்னைக்கு ஒரு திரு சேர்ந்து திருவாவினன்குடி ஆயிருச்சு.
அதென்ன ஆவினன்குடி? ஆவி குடியிருக்கும் ஆவினன்குடின்னு சீர்காழி பாடியதுதான் நினைவுக்கு வருது. (கேட்டதில்லைன்னா இங்க போய்க் கேட்டுருங்க)
ஆவினன்குடிப் பெயர்க்காரணம் தெரியனும்னா அதுக்கு முன்னாடி வையாவி கோப்பெரும் பேகன் பத்தித் தெரியனும். பெரிய பேரா இருக்குல்ல? மயிலுக்குப் போர்வை தந்த பேகன்னு சொன்னா சட்டுன்னு தெரிஞ்சிரும். கடையெழு வள்ளல்களில் பேகனும் ஒருவன். இந்தப் பேகன் பிறந்த குடிக்குப் பெயர் ஆவியர்குடி. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி.
இப்படிப்பட்ட ஆவினன்குடியைத்தான் மூன்றாம் படைவீடுன்னு சொல்றாரு நக்கீரர். மலையடி ஊர்ல இப்பவும் ஒரு கோயில் இருக்கு. அதுதான் நக்கீரர் பாடிய ஆவினன்குடிக் கோயில்னு ஒரு கருத்து.
ஊர் அதே ஊர்தான்னாலும் கோயில் அதே கோயில்தானாங்குறதுல எனக்குக் கொஞ்சம் ஐயம்.
ஏன்னா.. நக்கீரர் பாடும் போது “தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்” அப்படின்னு சொல்றாரு.
அதாவது ”வருத்தமே இல்லாத மனைவியாகிய வள்ளியோடு சிலநாட்கள் ஆவினன்குடியில் இயங்கியவனே” என்று முருகனைப் பாடுகிறார்.
திருவாவினன்குடிக் கோயில்ல முருகன் குழந்தைவேலனாகத்தான் இருக்கிறான். சிவன்மலை கோயில் போலவோ வேளிமலையாகிய குமாரகோயில் போலவோ வள்ளி அருகில் இல்லை. அதனால்தான் அந்தச் சந்தேகம்.
நக்கீரருக்குப் பின்னால் வந்த போகர் உருவாக்கிய கோயில்தான் மலை மேல் ஆண்டிக்கோலத்தில் இருக்கும் பழனியாண்டவன் கோயில். அந்தக் கோயிலை ஏழாம் நூற்றாண்டில் சேரமான் பெருமான் எடுத்துக் கட்டியதாகவும் சொல்கிறார்கள். ஒருவேளை அதனாலதான் முருகன் மேற்கே சேரநாட்டைப் பாத்து நிற்கிறானோ?
சரி.. திருப்புகழுக்கு வருவோம். அருணகிரிகாலத்துல ஆவினன்குடி பழனிமலை அடிவாரம் எல்லாம் ஒன்னாக் கலந்து பழனி ஆயிருச்சு. கிட்டத்தட்ட 96 திருப்புகழ் பாட்டுகள் பழனிமலைக்குக் கெடைச்சிருக்கு. அதுல சில பாட்டுகள் திருவாவினன்குடிப் பாட்டுகள். பின்னாளில் தொகுக்கும் போது எல்லாத்தையும் பழனின்னு தொகுத்துட்டாங்க.
அபகார நிந்தை பட்டு உழலாதே” திருப்புகழ் திருவாவினன்குடித் திருப்புகழ்கள்ளயே ரொம்பப் பிரபலமானது. இந்தத் திருப்புகழ்ல தனக்கு முருகன் திருவாவினன்குடில ஜபமாலை கொடுத்ததைச் சொல்றாரு. “ஜெபமாலை தந்த சற்குருநாதா, திருவாவினன்குடிப் பெருமாளே”ன்னு அருணகிரி தெளிவாப் பாடியிருக்கிறதால ஜெபமாலை கெடைச்சது பழனிமலைல இல்ல, கீழ இருக்கும் திருவாவினன்குடியில்னு தெரிஞ்சிக்கலாம்.
நம்ம மனசுல ஒரு சின்னச் சலனம் வந்துருச்சுன்னா… அது கொஞ்சம் கொஞ்சமாப் பெருகி மனசு முழுக்க நெறஞ்சிரும். ஒரு சொட்டுத் தயிர் ஒரு சொம்புப் பாலைத் தயிரா மாத்துற மாதிரி மனசு முழுக்க வருத்தம் நெறைஞ்சு, வேற யோசனையே ஓடாது. அதுக்குள்ளயே சுத்திக்கிட்டிருக்கும். அதுல இருந்து வெளிய வந்துட்டோம்னா தப்பிச்சோம். இல்லாட்டி அவ்வளவுதான். சில நேரங்கள்ள தூக்கமே வராது. மனசு யோசிச்சுக் கொழப்பிக்கிட்டே இருக்கும். கடைசியா எப்பத் தூங்கினோம்னே தெரியாமத் தூங்கீருப்போம்.
அப்படித் தூங்கி முழிச்ச பிறகு மனசு மாறிடுச்சுன்னா நீங்க பொழச்சீங்க. உங்க மனநிலை தெளிவா இருக்குன்னு பொருள். சிலருக்கு ரெண்டு மூனு நாளாகும்.  அதுவும் பிரச்சனையில்லை. அதுக்குள்ளயே மாட்டிக்கிட்டு வெளிய வரமுடியாத நிலைதான் ரொம்பப் பரிதாபமான நிலை.
நல்லாக் கவனிச்சா.. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.. ஒரு குறிப்பிட்ட சில விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்றதையோ/சொல்றதையோ பாத்திருக்கலாம்.
அப்படிப்பட்ட நிலையைத்தான் “மனது துயர் ஆற்றி உழலாதே”ன்னு இந்தத் திருப்புகழ்ல அருணகிரி சொல்றாரு. அப்படி மனசு குழம்பிப் போகாம தெளிவா இருக்க என்ன செய்யனும்?
வசனம் மிக ஏற்றி மறவாதே – திரும்பத் திரும்ப முருகனுடைய திருப்பெயரைச் சொல்லிச் சொல்லி மறக்காம இருக்கனும்.
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக”ன்னு சங்க இலக்கியம் சொல்லுது. அந்த முருகனுடைய பெயரை மறக்காமல் நினைப்பதால நம்முடைய மனவளம் காப்பாற்றப்படும்.
வசனம் மிக ஏற்றி மறவாதே
மனது துயர் ஆற்றி உழலாதே
வள்ளுவர் இவ்வுலகம் அவ்வுலகம்னு ரெண்டு உலகங்களைச் சொல்றாரு. பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை. அருள் இலார்க்கு அவ்வுலகம் இல்லை. அப்போ இருக்கும் வரைக்கும் பொருள் வேணும். போறப்போ அதையெல்லாம் விட்டுட்டு அருளை மட்டும் எடுத்துக்கிட்டுப் போகனும். இந்தப் பொருள் அருள் ரெண்டும் வேணுமே? என்ன செய்றது?
இசை பயில் சடாட்சரம் அதனாலே
இகபர சௌபாக்யம் அருள்வாயே
இசையோடு முருகனுடைய ஆறெழுத்து மந்திரத்தை ஓதினால் இந்த உலகத்துக்குத் தேவையான பொருளும் அந்த உலகத்துக்குத் தேவையான அருளும் நல்ல வழியில் நமக்குக் கிடைக்கும்.
திருப்புகழின் ஒரு பகுதி பலனைச் சொல்லும். இன்னொரு பகுதி முருகனைப் புகழும். இதுல முருகனைப் புகழும் இரண்டாம் பகுதி என்னன்னு பாக்கலாம்.
பசுபதி சிவாக்யம் உணர்வோனே
பழனிமலை வீற்று அருளும் வேலா
பசுக்களாகிய உலக உயிர்களின் தலைவனாகிய சிவனின் திருமொழிகளை எல்லாம் முற்றிலும் உணர்ந்தவனே! பழனிமலையில் வீற்றிருந்து அருளும் வேலனே!
பழனிமலை மேல முருகன் “வீற்று” இருக்கலையே! ”நின்று” தானே இருக்காருன்னு தோணுதா? திருவாவினன்குடிக் கோயில்ல முருகன் “வீற்று” தான் இருக்கிறான். அதுனால இது திருவாவினன்குடித் திருப்புகழ்னும் சொல்லலாம். வீற்று என்பதற்கு நிலைத்து என்று பொருள் எடுத்திக்கிட்டா, பழனிமலையில் நிலைத்திருந்து அருள்கின்றவனே என்றும் எடுத்துக்கலாம். ரெண்டுமே பொருத்தம் தான்.
அசுரர் கிளை வாட்டி மிக வாழ
அமரர் சிறை மீட்ட பெருமாளே
அசுரர்களை அழித்து அமரர்களைச் சிறை மீட்ட பெருமாளே! இது எளிமையாப் புரியுது.
இப்போ மொத்தப் பாட்டையும் படிச்சா, இன்னும் எளிமையாப் புரியும்.
வசனமிக வேற்றி மறவாதே
…….மனதுதுய ராற்றி யுழலாதே
இசைபயில் சடாட்சர மதனாலே
…….இகபரசௌ பாக்ய மருள்வாயே
பசுபதிசி வாக்ய முணர்வோனே
……..பழனிமலை வீற்ற ருளும்வேலா
அசுரர்கிளை வாட்டி மிகவாழ
……..அமரர்சிறை மீட்ட பெருமாளே

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...