Saturday 13 October 2018

நவராத்திரி நாயகி சரஸ்வதி*

                                                   நவராத்திரி நாயகி சரஸ்வதி*

 *சரஸ்வதி:* புராணங்களில் பிரம்மாவின் மனைவி எனக் கூறப்படும் இவளைப் படைத்தவனே பிரம்மா தான் என்றும், பிரம்மாவின் உடலில் இருந்து இவள் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இவளின் மற்ற பெயர்கள், சாவித்திரி, காயத்திரி, பிராமணி ஆகியன. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு உருவம் எடுத்துப் பூஜிக்கப் படுகின்றாள். ரிக் வேதம் சரஸ்வதி ஸூக்தத்தில் உலகின் ஆதி காரணி என இவளைப் போற்றுகிறது.
சரஸ்வதி வடிவங்கள் தாராபூஜையில் வழிபடப் படுகின்றன. எட்டுவிதமான சரஸ்வதி வடிவங்களை வழிபடுகின்றனர். அவை வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா(சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியன. கட சரஸ்வதியை வழிபட்டு தண்டி மகாகவியும், சித்ரேஸ்வரியை வழிபட்டு சாலிவாகன மன்னனும், சியாமளாவாக வழிபட்டு காளிதாசனும் பெருமை பெற்றிருக்கின்றனர் என்று சரஸ்வதி மஹாத்மியம் சொல்லுகிறது.
இவளே சரஸ்வதி என்னும் நதியாகவும் ஓடினாள். சரஸ் என்னும் பெயருக்குத் தடையில்லாமல் தெரியும் ஒளி என்றும் அர்த்தம் உண்டு. கலைகளைத் தடையின்றிப் பிரவாஹிக்கச் செய்யும் சக்தியும் இவளிடம் இருப்பதாலேயே சரஸ்வதி என்னும் பெயர் உண்டாயிற்று. இவள் நதியாக ஓடியதற்கு ஒரு காரணம் உண்டு. ததீசி முனிவரிடம் தேவர்களின் ஆயுதங்கள் கொடுத்து வைக்கப் பட்டிருந்தன. நீண்ட காலம் தேவாசுர யுத்தம் நடைபெற்று வந்த சமயம் அது. தேவர்கள் தோற்றுப் போகும் சமயமாக இருந்தது. வலிமையும், சக்தியும் வாய்ந்த பல ஆயுதங்களையும் அசுரர்களிடம் இழக்க மனமில்லாத தேவர்கள் ததீசி முனிவரிடம் ஆயுதங்களைக் கொடுத்து வைக்க அவரும் மறைத்து வைக்கிறார்.
காலதேச வர்த்தமான மாற்றங்களால் தேவர்களும் மறைந்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட அவர்களும் அசுரர்கள் கண்களில் படாமல் மறைந்தே வாழ்கின்றனர். அப்போது விருத்தாசுரன் தேவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட அவனோடு போர் செய்யும் கட்டாயத்தின் பேரில் தேவர்கள் வெளியே வந்தாகவேண்டி இருக்கிறது.
வந்த தேவர்கள் தங்கள் ஆயுதங்களை ததீசி முனிவரிடம் கேட்க, நீண்ட நெடுநாட்கள் அவர்கள் வராத காரணத்தால் ஆயுதங்களைக் கரைத்துக் குடித்துவிட்டதாய்ச் சொல்லுகின்றார் ததீசி முனிவர். ஆயுதங்கள் இல்லாமல் தவித்த தேவர்களின் நிலை கண்ட முனிவர் தம் உயிரைப் பிராணத்தியாகம் செய்து, தன் முதுகெலும்பில் இருந்து தேவேந்திரன் ஆயுதம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறார்.
தானே தன் உயிரைப் போக்கிக் கொள்ளும் வல்லமை கொண்ட மகரிஷியாதலால் அவ்வண்ணமே தன் உயிரையும் போக்கிக் கொள்ளுகிறார். அவருடைய எலும்பில் இருந்து வஜ்ராயுதம் செய்யப் பட்டு இந்திரனுக்கு முக்கிய ஆயுதமாகிறது. இங்கே ரிஷியின் மனைவி ப்ராதி பூரண கர்ப்பிணி. தன் கணவன் தன் உயிரைப் போக்கிக் கொண்ட தகவல் அறிந்த அவள் தானும் உடன்கட்டை ஏற முடிவெடுக்கிறாள்.
ஆனால் தன் வயிற்றில் வளரும் சிசுவுக்கு எந்தவிதமான ஹானியும் ஏற்படக் கூடாது என முடிவு செய்து தன் தவ வலிமையாலும், தன் பதிவ்ரதா வலிமையாலும் அந்தச் சிசுவை வெளியே எடுத்து வனதேவதைகளையும், வன மூலிகைச் செடி,கொடிகளையும், இன்னும் நதிகள், மலைகள், மற்றத் தாவரங்கள் போன்ற வனவளங்களை வேண்டிக் கொண்டு அங்கிருந்த பெரிய அரசமரத்திடமும் வேண்டிக் கொண்டு அந்தச் சிசுவை அங்கே விடுகிறாள். அதன் பின்னர் அவள் உடன்கட்டை ஏறித் தன் உயிரைத் தானும் போக்கிக் கொள்கிறாள். அரசமரம் வளர்த்த சிறுவன் பிப்பலாதன் என்னும் பெயருடன் வளர்ந்துவந்தான்
வளர, வளர அவனுக்குத் தேவர்களுக்கு உதவி செய்யவேண்டித் தன் தந்தையும், தந்தையுடன் தாய் உடன்கட்டை ஏறினதும் தெரியவருகிறது. தேவர்களிடம் விரோத பாவம் மேலிட அவன் தேவர்களைப் பழிவாங்க நினைக்கிறான். பிரம்மாவின் அருள் பெற்று ஈசனைக் குறித்துத் தவம் செய்கின்றான்.
தேவாதிதேவர்களை அழிக்கவேண்டிய ஆற்றலைத் தருமாறு ஈசனிடம் வேண்டுகிறான். அவனுடைய பலத்தைச் சோதிக்க எண்ணிய ஈசனோ, தன் நெற்றிக்கண்ணைத் தான் திறக்கப் போவதாயும், அதைத் தாங்கும் வல்லமை அவனுக்கிருந்தால் கேட்ட வரம் தானாகவே கிட்டும் என்றும் சொல்லுகின்றார் நெற்றிக்கண்ணின் வல்லமை தாங்காமல் மீண்டும் தவம் செய்கிறான் பிப்பலாதன்.
இம்மாதிரி இன்னும் இருமுறைகள் அவனைச் சோதித்துவிட்டு தன் நெற்றிக்கண்ணை அவனையே திறக்கச் சொல்லுகிறார் ஈசன். பிப்பலாதனும் நெற்றிக்கண்ணைத் திறக்கிறான். இவனையும் ஈசனின் ஓர் அவதாரம் எனக் கருதுவோர் உண்டு.
நெற்றிக் கண் திறந்ததும், அதிலிருந்து உக்கிரமான வெப்பத்துடன் கூடிய ஒரு தீக்கொழுந்து தோன்ற அதைப்பிப்பலாதனிடம் கொடுத்து இந்தத் தீக்கொழுந்து அனைத்து உலகையும் அழிக்கவல்லது என்றும் சொல்லுகிறார். பிப்பலாதனும் தேவர்களைத் துரத்துகிறான். தேவர்கள் பிரம்மாவைச் சரணடைகின்றனர்.
தேவர்களை அழிக்கக் காத்திருந்த பிப்பலாதனுக்கு வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளையும், ஜனனம், மரணம் ஆகியவற்றையும் பற்றிய தத்துவங்களை விரிவாக எடுத்துரைத்தார் பிரம்மன். மேலும் சொன்னார்: தேவர்களின் நன்மைக்காக வேண்டி உன் தந்தை தானாகவே மனம் விரும்பி உயிர் துறந்தார். நீயானால் தேவர்களை அழிக்கக் கிளம்பியுள்ளாய். இதோ புஷ்பக விமானத்தில் உன் தந்தையை இங்கே வருவிக்கிறேன். நீயே கேட்டுக் கொள். என்று கூறிவிட்டு ததீசி முனிவரையும், அவர் மனைவியையும் அங்கே வரவழைக்க உண்மை தெரிந்த பிப்பலாதன் மனம் அமைதி அடைகிறது.
ஆனால் இந்தத் தீக்கொழுந்தை என்ன செய்வது? அதை எப்படி அழிப்பது? ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். அப்போது ஈசனால் எழுப்பப் பட்ட அந்த அக்னியே குரலெடுத்துச் சொன்னது:என்னை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து சமுத்திரத்தில் விட்டுவிடுங்கள். நான் சமுத்திரத்தின் உள்ளே சென்று விடுகின்றேன். வடவாமுகாக்கினியாய் அங்கேயே இருப்பேன். உங்களை எல்லாம் அழிக்க மாட்டேன், எனக்கு வேண்டிய இரைகள் அங்கேயே கிடைக்கும். எனச் சொல்ல அவ்வாறே முடிவு செய்யப் பட்டது.
சரஸ்வதிக்கு உகந்த நைவேத்யம்
சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜெப மாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர்.மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர் குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடா மகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் கொண்டுள்ளனர்
கொண்டைக் கடலை உயிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இல்லையென்றால், அவரது உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குரு பார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர்.
இறைவனுக்கு அணிவிக்க வேண்டிய வஸ்திரங்கள்
ஆடையை நாம் இறைவனுக்குச் சூட்டி வழிபடும்போது, அவனது திருவருள் கிடைக்கப் பெற்று பாவங்கள் நீங்கி மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம்.சிவன், திருமாலுக்குத் தூய வெண்மை நிறமுடைய பட்டாடை, அம்பாளுக்கு சிவப்பு, நீலம் மற்றும் பச்சை நிறப் புடவைகளைச் சூட்டி வழிபட்டால் சிறக்கலாம். நாட்டில் தவறாமல் மழை பெய்து, செழிப்பு ஏற்படவும் இறைவனுக்கு ஆடை அணிவிக்க வேண்டும்.
ஏழை மக்களால் இறைவனுக்கு காணிக்கை ஏதும் படைக்க முடிய வில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். இந்த ஆதங்கத்தை மனதைவிட்டு முதலில் ஒழிக்க வேண்டும். இதை ஒழித்தாலே செல்வ வளம் பெருகி விடும் என்பது நம்பிக்கை. ஆண்டவனை வணங்க உதிரிப்பூவும், தண்ணீரும் போதும்.
இதைக் கோயிலில் கொண்டு கொடுத்தாலே இறைவனின் அருள் கிடைத்துவிடும். வீட்டில் சுவாமியை வணங்கும் போதும் மிகப்பெரிய படையலைப் படைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. படங்களில் பெரிய மாலைகளை மாட்ட வேண்டும் என எண்ண வேண்டாம்.
சிறிது பூவைத் தூவி, தண்ணீரை படத்தின் கீழே லேசாக தெளித்தாலே போதும். இறைவன் அன்பை மட்டுமே விரும்புகிறான். நமது பொருட்கள் அவனுக்குத் தேவைப்படுவதில்லை. பூவைக் கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்து,எமனையே வென்றவன் மார்க்கண்டேயன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
கல்வி தெய்வமான சரஸ்வதியின் பொருள்
சரஸ் என்றால் பொய்கை . வதி என்றால் வாழ்பவள். சரஸ்வதி என்றால் மனம் என்னும் பொய்கையில் வாழ்பவள் என்பது பொருள். இவளை கலைமகள், நாமகள், பாரதி, வாணி, இசைமடந்தை, ஞானவடிவு, பனுவலாட்டி, பிராஹ்மி, பூரவாஹினி, அயன்மனைவி, வெண்தாமரையாள், சாவித்திரி வாக்தேவி என்ற பெயர்கள் சூட்டியும் அழைப்பர்.
கல்விவளம் தரும் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாத்துகிறார்கள். அதுபோல சரஸ்வதிக்கு வெண்தாமரை மலர் மாலை ஏற்றது. வெண்ணிறத்தில் உள்ள மல்லிகை, முல்லையும் அணியலாம்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...