Thursday 11 October 2018

சனாதன தர்மம்

                                                                 சனாதன தர்மம்

 அடுத்து, பித்ரு யக்ஞம் என்ற இந்த வழிபாடு, அனைவராலும், மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யப்படுகின்றது.
இந்த, சிரார்த்தம் (திதி), மற்றும் தர்பணத்தை ஒவ்வொரு குடும்பத்தாரும் செய்ய விரும்புவது அவர்களது பெற்றோர்கள் நற்கதியை அடைய வேண்டும், அவர்களது ஆசிர்வாதம் இவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற சுய நல எண்ணமும் காரணம் ஆகும். இருப்பினும், இந்த சுய நலத்தின் வாயிலாக, பித்ருக்களுக்கு படையல் போட்டு வழிபட்ட உணவை, காகம், பசு போன்ற ஜீவர்களுக்கு கொடுப்பதின் மூலமாக, அது பொது நலமாக மாறியும் விடுகின்றது.

பித்ருக்கள் என்றால் நம் முன்னோர்கள் என்று பொருள். அவர்கள் இந்த உடலை விட்டு இறந்து இறைவனடி சேராதவர்கள் ஆகின்றார்கள். ஆம்!. ஒரு ஜீவன் இறைவனடி சேர்ந்து விட்டால், அது மீண்டும் பிறப்பிற்கு வராது.
இந்த பித்ருக்களான நம் முன்னோர்கள் பித்ரு லோகத்திலோ, அல்லது வேறு லோகங்களிலோ விடுதலை அடைய முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் தங்களுக்கு கிடைத்த அரிதான மானிடப் பிறவியை சரியாகப் பயன் படுத்தி பரமா(ஆ)த்மாவை அறியாமல், தேகத்தை விட்டவர்கள் ஆவார்கள்.
அவர்கள் தெய்வங்கள் என்று நம்மால் அழைக்கப்பட்டாலும், உண்மையில் அவர்கள் தெய்வமாக ஆகிவிடவில்லை. அவர்கள் தெற்கிலே உள்ள பித்ரு லோகத்தில் இருந்து வடக்கே உள்ள பிரம்ம லோகத்திற்கு கொண்டுவந்து அங்கு கிரம முக்தியை அடைய வைக்கும் முயற்சிதான் நாம் அவர்களுக்கு செய்கின்ற தர்பணம், சிரார்த்தம் மற்றும் திதி போன்றவைகளாகும்.
இந்த முன்னோர்களின் பித்ருக்கடன் என்ற காரியத்தின் மூலமாக, நாம் அவர்களுக்கு நன்றிக் கடனை திருப்பி செலுத்துகின்றோம்.
எப்படியென்றால், உடல் கிடைக்க காரணமான தந்தையிடமிருந்து அணுவாக வெளிப்பட்டு, அந்த உடலை பாதுகாப்பாக, பேணிக்காத்து வெளியே கொண்டு வரும் வரை நாம் தாயின் வயிற்றில் இருந்து கொண்டு, அவர்கள் உண்ணும் உணவு, நீர், காற்று என்று அனைத்திலும் அவருடன் பங்கிட்டு இந்த உடலை 10 மாதங்கள் பாதுகாப்பாக தாயிடமிருந்து வெளியே கொண்டு வந்து இருக்கின்றோம்.
இவ்வாறு உடல் எடுத்து இந்த பூமிக்கு வர பெற்றோர் உதவி புரிந்துள்ளனர்.
அதனால்தான் நாம் பிறக்க முடிந்தது.
இவ்வாறு அவர்களுக்கு கடன் பட்டுள்ளோம்.
அதனால் அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அவர்களை நாம் பேணிக்காத்து, பாதுகாப்பாக, அவர்கள் நம்மை அரவணைத்து வளர்த்தது போன்றே, நாமும் அவர்களை அரவணைத்து, ஆதரித்து, அவர்கள் இந்த உடலை விட்டு விட்டு சென்ற பிறகும் நன்றிக்கடன் பட்டவர்களாகவே இல்லறத்தானின் கடமைகளில் ஒன்றாக இந்த “பித்ருக்கடன்” செய்கின்றோம்.
பித்ருக்கள் வழிபாடு என்பது, அவர்களை நினைத்து அடையாளப்படுத்தும் வகையில், அவர் பெயரால், மற்ற ஜீவராசிகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் சிறந்த உணவும், புத்தாடையும் கொடுத்து உதவுதல் ஆகும்.
இதனையே சாஸ்திரம் “அறம்” என்று கூறுகின்றது.
இந்த அறச்செயல்கள் இன்றும் நம் பெரும்பாலனவர்களின் இல்லங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள்தாம்.
தென்புலத்தார் நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களின் அருள்பார்வை நம்மை வாழவைக்கும், அவர்களையும் வீடுபேறு அடைய வழிவகுக்கும் என்பதும் உண்மை.
நாம், நம்முடைய வாழ்க்கை முறையில் நம்முடைய முன்னோர்களை என்றும் மறப்பதில்லை. எனவேதான் வள்ளுவரும் தென்புலத்தாரை முதலில் வைத்துப் பாடினார்.
“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”.
– திருக்குறள்.
இந்த குறளின் வாயிலாக திருவள்ளுவரும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சாஸ்திரத்தின் உண்மைத் தன்மையை அறிந்து, பித்ரு, ரிஷி, தேவ, நர, பூத, என்ற ஐந்து வழிபடும் முறைகளை தனது குறட்பாவின் வாயிலாக இந்த மக்களுக்காக வெளிப்படுத்தியிருக்கின்றார்.
தங்களுடைய குடும்பத்தில் இறந்தவர்களுக்கும், குலதெய்வத்திற்கும், ரிஷிகளுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் தனக்கும் என இந்த ஐந்து இடங்களிலும் செய்யப்படும் நெறிச் செயல்களைப் போற்றுதல் சிறப்பான இல்வாழ்க்கையாகும் என்பது இக்குறளின் கருத்து.
நம்மிடையே வாழ்ந்து மறைந்தோரை, குறிப்பாக, நமக்கு மிகவும் நெருங்கியவர்களும், அன்பிற்குரியவர்களும், இறந்த நாளில் அவர்களை நினைந்து வழிபடுதலாகும்.
இது தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினையாகும்.
இந்த அறச்செயல்களின் வாயிலாகவே, அந்த பரம் பொருளை அறிந்து, இன்பத்துடன் என்றும் நிலைத்திருக்க “பிறவாமை” என்ற வீடுபேறு கிடைக்கின்றது.
இதனை, அறம், பொருள், இன்பம், வீடு என்ற முறையில் மனிதனின் இலட்சியம் (புருஷார்த்தம்) என்கின்றது சாஸ்திரம்.
இந்த பித்ருக்களுக்கு செய்கின்ற கடனை, இல்லறத்தான் கடன் பட்டு செய்ய வேண்டிய அவசியம் இல்லை, இதனால், மேலும், இல்லறத்தானில் இன்னல்கள் அதிகமாகிவிடும் என்ற கோணத்தில் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த சுவாமி தயானந்த சரஸ்வதி குறிப்பிடுகின்றார்.
இறந்த மனிதன் அல்லது மிருகம் தன்னுடைய பரு உடலில் அனுபவிக்கும் புலன் இன்பங்களான உணவு உண்பது, தூங்குவது, மல, ஜலம் கழிப்பது, புணர்ச்சியில் ஈடுபடுவது போன்ற அனைத்து செயல் இன்பங்களையும், அந்த மனிதன் இறந்த பிறகு அவனுக்கு ஸ்தூல உடல் இல்லாத காரணத்தினால் அனுபவம் பெற முடியாது.
அப்படி ஸ்தூல உடல் அற்ற, இறந்த ஒருவனுக்கு என்னதான் படையல் போட்டு, வகை வகையான வடை, பாயாசங்களோடு, பதார்த்தங்களை செய்து படத்தின் முன்போ, சிலைகளின் முன்போ படைக்கப்பட்டால், அவைகளுக்கு ஸ்தூல உடல் இல்லாததினால் இவைகளை ஏற்க முடியாது.
இதை அறிந்து, உயிருடன் இருக்கின்ற பொழுதே அவர்களை நன்றாக கவனித்துக் கொள்வது சிறப்பு.
இறந்த பின்பு அவரது நினைவாக மற்றவர்களுக்கு உணவு, உடைகளை தானமாக கொடுக்கின்ற அறச்செயல்களினால், அந்த இறந்தவர்களின் ஆத்மாவிற்கு சாந்தியையும், சந்தோசத்தையும் கொடுத்து, இந்த புண்ணிய பலன்களை அவர்களுக்கு எள்ளு நீரினால் தாரை வார்த்து கொடுத்து, அவர்களை வீடுபேறு பெறும் நிமித்தம், பிரம்ம லோகத்திற்கோ, அல்லது இந்த பூலோகத்தில், மீண்டும் மனிதப் பிறவி கிடைத்து, அறிவை அறிந்து தப்பித்துக்கொள்ளச் செய்வதற்கோ, உண்டான ஒரு வழிமுறை என்பது மட்டுமே உண்மையாகும்.
அதை விடுத்து, இறந்துபோன பித்ருக்கள் திதி அன்று பூமிக்கு வந்து, உணவு உண்பார்கள் என்று எதிர்பார்த்து, இந்த தர்பணத்தைச் செய்கின்றேன் எனக் கூறிக்கொண்டு, படத்தின் முன்பு படையலைப் போட்டு, அத்தனை உணவு வகைளையும் தங்கள் குடும்பத்தாருடன் உட்கார்ந்து, தாங்களே ஒரு பிடி பிடித்து, அனைத்தையும் உண்டு விடுவதல்ல இந்த பித்ருக்கடன் என்பது.
பெற்றோர்கள் உயிருடன் இருக்கின்ற பொழுது உண்ண உணவும், உடுக்க உடையும் கொடுத்து, அவர்கள் மனம் கோணாமல் பார்த்துக் கொண்டால் மட்டுமே, அவர்கள் இறந்த பிறகு, அதன் பயனாக, இவர்கள் சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். அவர்களின் ஆசிர்வாதமும் இவர்களுக்கு கிடைக்கும்.
வழிபாட்டின் நோக்கத்தை, நன்றாக புரிந்து கொண்டு, நல் வாழ்க்கை வாழ முற்படவேண்டும். சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று வகுத்துக் கொண்டு, அதன் பிடியில், அதன் உண்மைத் தன்மை தெரியாமல், குருட்டுத் தனமாக செய்வது என்பது பலனற்ற செயலாக முடியும்.
உதாரணமாக,
ஒரு யானையால் உண்ணும் உணவின் அளவிற்கு, ஒரு எறும்பினால் உண்ண வயிறு கிடையாது, அதுப்போல, உடலே இல்லாத நம் தாத்தா, பாட்டிகள் திதி தினத்தன்று எப்படி வந்து இவர்கள் படைக்கும் படையல் உணவை உண்ண முடியும்?.
சிலர் “காகா” வடிவில் வந்து உணவை எடுத்துச் செல்கின்றனர் என்று கூறுவது, நாம் நம் முன்னோர்களை, சிறு மதி படைத்த பறவையுடன் ஒப்பிடுவதற்குச் சமம்.
அதனால், நம் வீட்டுப் பெரியவர்களான முன்னோர்களை, சாதாரண பறவையாக, அதுவும் காகாவாக பாவித்து, அவர்களை அவமதிப்பதாகும்.
ஆனால், இந்த காகா, குருவி, நாய், பூனை, பசு போன்ற மற்ற ஜீவன்களுக்கு இந்த மனிதன் கொடுக்கின்ற உணவுகளினால், அவைகள் பசியாறி, திருப்தியடைந்து, தன்னுடைய அன்பை இவனிடம் வெளிக்காட்டும்.
இந்த அன்பின் வெளிப்பாடே, “அன்பேசிவம்” என்ற தகுதிக்கு அவனை உயர்த்தி, அனைத்து உயிர்களிலும் இறைவனைக் காணும் மனம் உண்டாகி, அந்த தெள்ளத் தெளிந்த மனதைக் கொண்டு, அவனது உள்ளத்தில் “சீவன் சிவலிங்கம்” என்று இறைவனைக் காணும் உயர்ந்த நிலை உண்டாகும்.
இது போன்ற அறச் செயல்களினால், இந்த பாமர மனிதனிடம் அன்பு எதிர்பார்த்த அளவிற்கு உயர்வடையவில்லை என்றாலும், இவன் செய்த, இந்த நற்செயலினால், புண்ணிய பலன்கள் உண்டாகி, இவனது முன்னோர்களுக்கும், இவனுக்கும் அமைதியும், ஆனந்தமும் உண்டாகும்.
இந்த அமைதியும், ஆனந்தமும் வேண்டித்தானே அத்தனை ஜீவர்களும் எதை எதையோ இறைவனிடம் வேண்டிக் கொண்டு அலைந்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தொடரும்... 🙏

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...