Friday 14 July 2017

பத்து நல்ல விஷயம் -

பத்து நல்ல விஷயம் -


ரொம்ப வேண்டியதில்லை. கொஞ்சமாக ஒரு பத்து நல்ல விஷயம் சொல்லட்டுமா? கட்டாயம் இதை கடைபிடித்தால் கைமேலே பலன். இதிலே ஒரு பரம ரகசியத்தை வெளியிடப்போகிறேன். அது என்ன தெரியுமா?

''இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்''

1. நமது தலையாய கடமை எது? கிடைத்த சந்தர்ப்பத்தை இழக்காமல் அடுத்தவருக்கு உதவு. காசு தான் கொடுக்கவேண்டும் என்றில்லை. சரீர உதவி தான் ச்லாக்கியமானது ஏனென்றால் எல்லோராலும் முடிந்தது. அடுத்தவனுக்கோ, தேசத்துக்கோ பணத்தால் மட்டுமில்லாமல் தேகத்தாலும் உழைப்பது கிருஷ்ணனுக்கு உங்களைப் பிடிக்க வைக்கும். இப்படி சேவை செய்யும்போது முதலில் நமது மனத்துக்கே திருப்தியை அளிப்பது தான் உள்ளே இருப்பவனின் திருப்தி என்று சொல்லவருகிறேன்.

2. உலகத்தின் மகா பெரும் விஞ்ஞான கூடத்தாலும், விஞ்ஞானியாலும் கூட உயிருள்ள ஒரு சிறு புல்லை உருவாக முடியாது. ஒரு கவளம் உண்ணும்போதும், ஒரு குவளை நீர் பருகும்போதும் அதை பகவானுக்கு அற்பணித்துவிட்டு பிறகு சாப்பிட்டால் அதன் ருசியே தனி. அதுவே ஔஷதம். எது சிறந்ததோ, எது உசத்தியோ, அது அவனால் தான் கிடைத்தது என்ற நன்றி ஈரம் நெஞ்சில் இருக்கவேண்டும்.

3. மற்ற உயிர்களிடம் அன்பு இல்லாத வாழ்க்கை வீண்.

4. பிறர்க்குதவா கருமியின் சொத்து பின்னால் குடும்ப நாசத்துக்கு தான் வழிகோலும். எத்தனை பெரிய சொத்துள்ளவர்கள், பணக்காரர்கள் கோர்ட் வாசலில். யாருக்கோ உண்மையாக போக வேண்டிய பணம் சம்பந்தமில்லா கருப்பு கோட்டுகளுக்கு பொய் சொல்லுவதற்காக போய்ச் சேரும். .
நாலா காரியங்களுக்கு தான தர்மங்கள் கொடுத்துக்கொண்டே இருப்பவன் குடும்பம் க்ஷேமமாகவே இருக்கிறதே.

5. செய்வதையும் இரண்டாம் பேருக்கு சொல்லாமல் தெரியாமல் செய்பவன் புகழ் தானே வெளியே வரும். விளம்பரம் செய்து உதவி செய்வது உதவி செய்த பலனை சாப்பிட்டுவிடும்.

6. நடந்ததை மறந்துவிடு. கொட்டின பால் குடம் புகாது. நல்லது கெட்டது புரிந்து செயல்படு. கிருஷ்ணன் இருக்கிறான் வழிகாட்ட. அவன் சொல்படி தான் எல்லாமே நடக்கிறது, நடக்கும்.

7. கொடுத்த வாழ்நாள் நமக்கு இவ்வளவு போதும் உனக்கு என்று எண்ணிக் கொடுத்திருக்கிறான். ஒரு வினாடியும் வீணாக்காதே. கொடுத்தவன் உன்னை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறான். அவனது கையாளாக இருக்கவே , நம்மை பிறர்க்குதவ நியமித்திருக்கிறானே. பொதுப்பணத்தை தனக்காக ஒதுக்கி விடுவது அரசியலோடு போகட்டும். ஆன்மீகத்தில் வேண்டாம். நேரம், சரீர சேவை தான் இங்கு பொதுப்பணம்.

8. நமக்கு என்று நியமிக்கப்பட்ட கடமைகளை அன்றாடம் நிறைவேற்றவேண்டும். அதை பகவானிடம் பக்தியோடு செய்யவேண்டும். தக்க பலனை கொடுக்கும்..

9. உனக்கிட்ட கடமையை நீ பலன் கருதாமல் செய்தாலே உனக்கு அவன் தன் பக்கத்தில் ஒரு இடம் காலி செய்து வைத்து இருக்கிறான் என்பது நிச்சயம்.. .

10. இறைவன் இருக்கிறான் எங்கும் எப்போதும். அவனன்றி ஓர் அணுவும் அசையாது, என்கிற ஞானமே சகல துன்பத்திலிருந்தும் விடுதலை அளிக்கும். வாழ்க்கையில் வரும் கஷ்டங்கள் நிரந்தரம் இல்லை, இலையின் மேல் பனித்துளி, ஆதவனின் ஒளியில் அகல்வது.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...