Thursday 22 August 2019

மிருத்துஞ்ஜய மந்திரம் உச்சாடனம் செய்து வந்தால் ஆயுள் அதிகரிக்கும்

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

கேள்வி - மிருத்துஞ்ஜய மந்திரம் உச்சாடனம் செய்து வந்தால் ஆயுள் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் மந்திரம் சொல்கின்ற பிராமணரும் இறந்து போகிறார் மந்திரத்தைக் கேட்பவனும் இறந்து போகிறான் இதை உச்சாடனம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும் என்று சொல்பவனும் இறந்து போகிறான். இதில் நம்பிக்கைக்குரிய அம்சம் என்ன இருக்கிறது? எனினும் இந்த அப்பாவி மனிதர்கள் நம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது பற்றி தாங்கள் என்ன சொல்கிறிர்கள்?
இராம் மனோகர் - பிறப்பும் இறப்பும் இயற்கையின் மாறாத திட்டமாகும். அது யாருக்காகவும் எப்பொழுதும் மாறுவதில்லை. மனிதனைப் பொருத்த வரை தவறான பழக்க வழக்கங்களினால் விரைவில் மரணம் அடைபவர்களும் உண்டு, ஒழுக்கத்தால் நிறைந்து, நீள் ஆயுள் பெற்று உய்வடைந்தவர்களும் உண்டு. ஆகவே ஒழுக்கம் மனிதனுக்கு அவசியம் என்பதே முக்கியமான கோட்பாடாக இருக்கிறது. இதற்கிடையே மனிதன் ஆரோக்கியமாகவும், அறிவுள்ளவனாகவும், நீள் ஆயுள் பெற்றும் வாழ்வதற்கு அறிவார்ந்த ஞானிகளால் சில யுக்திகளும் வடிவமைத்துத் தரப்பட்டுள்ளன.
அவை மந்திர, தந்திர, யந்திர, ஔஷத என்கிற முறைகளைக் கொண்டவை. அதில் இந்த மிருத்யுஞ்ஜய மந்திரம் என்பது எம பயத்தைப் போக்கும் மந்திரமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதாகப்பட்டது மரணத்தை வெல்லும் ஒரு யுக்தி. எமன் மூலம் மரணத்தை அடைந்தவர் மீண்டும் ஜனிப்பார் என்றும், மந்திர சித்தியால் மரணத்தை வென்றவர் முக்தியடைவார் என்பதும் கோட்பாடு. அது எப்படி சாத்தியம் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால், ஞானிகள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையோடு முயற்சி செய்தால் பலன் நிச்சயம் என்பது எனது உறுதியான நிலைப்பாடாகும்.
நம்பிக்கை இருக்கிறவர்கள் முயற்சி செய்கிறார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் புறக்கணித்து விட்டு வேறு வேலையை பார்க்கப் போய் விடுகிறார்கள். ஆனால், நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள் !!! ஆக உங்களிடத்தில் அவநம்பிக்கை இருக்கிறது என்பது தெளிவு. நம்பலாமா ? வேண்டாமா ? இது உண்மையா ? பொய்யா ? இதுதான் உங்கள் நிலை. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் ! உள்ளார்ந்த அனுபவங்களை மற்றவர்களின் விளக்கங்களினால் அடைந்து விட முடியாது. சுய முயற்சி அவசியம். எனினும் என்னிடம் கேள்வி என்று வந்து விட்டதால் விளக்க வேண்டிய அவசியம் வந்து விடுகிறது. எனவே எனது சிற்றறிவுக்குத் தகுந்தவாறு விளக்க முயற்சி செய்கிறேன்.
சிவபெருமானின் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எடுத்துக் கொண்டால் அதில் 33 எழுத்துக்கள் உள்ளன. இந்த 33 எழுத்துக்களிலும் உள்ள சக்திகளும் சிவத்தோடு சேர்ந்து நம் உடலில் 33 இடங்களில் நின்று இயங்கி வருவதாக வசிஷ்ட மகரிஷி கூறுகிறார். இந்த மந்திரத்தை ஜபம் செய்யும் போது அந்த சக்திமையங்கள் விழிப்படைந்து பிரபஞ்சத்திலிருந்து அந்த சக்திகளைத் தடையின்றி ஈர்த்து ஜீவனை பலமுள்ளவனாகவும், ஆயுள் உள்ளவனாகவும் ஆக்கி காக்கிறது. மரணத்தை வெல்லும் மந்திரமாக மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லப்படுகிறது.
த்ரியம்பகம் என்ற சொல்லுக்கு பல்வேறு கருத்துக்களை நம் முன்னோர்கள் முன் வைக்கிறார்கள். முக்கண் என்பார்கள். அதாவது வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், நெற்றிக்கண் அக்னி. இதுவே யோகநிலையில் சூரிய கலை, சந்திர கலை, சுழுமுனை அதாவது அக்னி கலை எனப்படுகிறது. மூன்று சக்திகளையும் (இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்தி) உடையவர் என்பதால் த்ரியம்பகன் . சத்துவம், இராஜஸம், தாமஸம் என்ற முக்குணங்களைக் கொண்டு ஜீவனில் நிலைப்பதால் முக்குணங்களை முக்கண்ணாக உடையவர் என்பர் சிலர்.
வேதாந்தம் சித்தம், அஹங்காரம், புத்தி மூன்றையும் முக்கண்ணாகக் குறிப்பிடுகின்றது. இப்படி பல் வேறு கருத்துக்களையும் கூர்ந்து கவனித்தால், எல்லா கருத்துக்களும் யோக நிலையில் மேன்மையடையும் விஷயங்களைக் குறித்தே சொல்லப்பட்டிருப்பது புரியும். ம்ருத்யு என்றால் அஞ்ஞானம். அஞ்ஞானத்தை நீக்கி சம்சார பந்தத்திலிருந்து ஜீவனை ரட்ஷிக்கும் மந்திரம். இதுவே மரணத்தை வெல்லும் மந்திரம். இந்த மந்திரத்தை இலட்சம் தடவை உச்சாடனம் செய்ய வைத்து யாகம் செய்தால் நூறு வயதைத் தாண்டி வாழலாம் என்றும், சாகக் கிடப்பவர் பிழைத்து விடுவார் என்றும் சிலர் நினைக்கிறார்கள். அது அவ்வாறல்ல. பணம் பறிப்பவர்கள் சொல்லும் கட்டுக் கதை அது.
எவர் ஒருவர் தனக்குத் தானே அந்த மந்திரத்தின் பொருள் உணர்ந்து இடைவிடாது மனதில் உச்சரித்துக் கொண்டிருக்கிறாரோ, அவர்தம் சக்தி மையங்கள் விழிப்படைந்து ஆதாரச் சக்கரங்கள் தூய்மை பெற்று, சுழு முனையாகிய மூன்றாவது கண் திறந்து, அதாவது ஞானம் பெற்று பிறப்பில்லாத நிலையை அடைவார். அதாவது மரணத்தை வெல்வார்.
இந்த மந்திரமானது
''த்ர்யம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |
உர்வாருக மிவ பந்தனாத்
ம்ருத்யோர் முக்ஷீயமா அம்ருதாத் ||''
பந்தத்தை நீக்கி மரணத்தை வெல்லும் நிலையைத் தரும் மந்திரம். இடைவிடாது இந்த மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு குண்டலினியானவள் விழிப்படைந்து ஆறு ஆதாரங்களையும் சுலபமாகக் கடந்து சஹஸ்ராரத்தை அடைவாள். அதற்குத் தோதாக எல்லா சக்தி மையங்களும், ஆறு ஆதாரங்களும் தூய்மையடைந்து சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். எனவே ப்ரபஞ்ச சக்தியோடு தொடர்பு ஏற்பட்டு குண்டலினியைத் தாங்கும் வலிமை தேகம் பெற்று விடும். இப்போது இந்த மந்திரத்திலுள்ள எந்தெந்த வார்த்தைகளை உச்சரிக்கும் போது எந்தெந்த சக்கரங்களில் உள்ள சக்திகள் சிறப்பாக இயங்கும் என்பதையும், அந்த சக்திகளோடு கூடிய சிவனின் பெயர்களையும் காண்போம்.
த்ர்யம்பகம் - பூதசக்தி ஸஹித பவேச போதகர் - மூலாதாரச் சக்கரம்.
யஜாமஹே - சர்வாணீ சக்தி ஸஹித சர்வேச போதகர் - சுவாதிஷ்டானம்.
ஸுகந்திம் - விரூபா சக்தி ஸஹித ருத்ரேச போதகர் - மணிபூரகம்.
புஷ்டிவர்த்தனம் - வம்ச வர்த்தினி சக்தி ஸஹித புருஷவரதேச போதகர் - அநாஹதம்.
உருவாருகமிவ - உக்ரா சக்தி ஸஹித உக்ரேச போதகர் - விசுத்தி.
பந்தனாத் - மானவதீ சக்தி ஸஹித மஹாதேவேச போதகர் - ஆக்ஞா.
ம்ருத்யோர்முக்ஷீய - பத்ரகாளி சக்தி ஸஹித பீமேச போதகர் - சகஸ்ராரம்.
மாஅம்ருதாத் - ஈசானி சக்தி ஸஹித ஈசானேச போதகர் - சகஸ்ராரம்.
சக்தியை வளர்த்து ஜீவனை அமிர்தமயாக ஆக்கி முக்தி நிலைக்கு கொண்டு சேர்க்கும் தாரக மந்திரம். பக்தியோடு உச்சரிப்பவர்கள் எளிதில் காரியம் சித்தியாகும். இந்த விளக்கங்களெல்லாம் அறிவைப் பேரறிவு நிலைக்குக் கொண்டு செல்ல முனைபவர்களுக்காகவே சொல்லப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...