Monday, 19 January 2026

வெண்கல குரலோன் அவர்சீர்காழி கோவிந்த ராஜன், திருஞானசம்பந்தர் அவதரித்த அதே ஊரில் பிறந்தவர்

 சுமார் ஐம்பத்தைந்து வயதில் அவர் காலமான பொழுது இந்து தமிழர் மனம் உடைந்துதான் போனது, 30 ஆண்டுகளாக பழைய இந்துபாரம்பரிய குரலாக ஒலித்த அந்த வெண்கல குரலை ஆலய மணி சாயலை இனி எக்குரல் நிரப்பும் என கவலை கொண்டார்கள்

அக்குரல் தனித்துவமானது என்பதையும் ஏதோ பழைய சிவனடியாரின் தொடர்ச்சி என்றும் தன் கர்மாவினை பாடி முடித்து சென்ற பிறவி என்பதையும் அறிந்தபின் அமைதி கொண்டார்கள்
இந்து ஞானமதத்தின் தூண்களெல்லாம் சரியான காலத்துக்கு வருபவை , மிக நீண்ட நாட்கள் தாங்குமாறு பலத்த ஏற்பாடுகளை செய்துவிட்டு செல்பவை, மீண்டும் தேவைபடும்பொழுது மறுபடியும் வருபவை
அப்படி காலத்தால் வந்த வெண்கல குரலோன் அவர்

சீர்காழி கோவிந்த ராஜன், திருஞானசம்பந்தர் அவதரித்த அதே ஊரில் பிறந்தவர்
ஆரம்பகல்வியினை அங்குள்ள வாணிவிலாஸ் பள்ளியில் படித்தார், அவர் மனமோ படிப்பதை விட பாடுவதை விரும்பிற்று, தேவி நாடக சபாவில் சேர்ந்தார். அந்த குரல்வளமும் நடிப்பழகும் அவரை நாடக உலகுக்கு இழுத்து வந்தது
இப்பொழுது சின்னதிரை நடிகர்கள் பெரியதிரைக்கு வருவது போல நாடகத்தில் முத்திரை பதித்தவர்களே பெரிய திரைக்கு வரும் காலம் அது, இதனால் சேலம் மார்டன் நாடக சபாவில் சேர்ந்திருந்தார்
அங்குதான் அந்த கோவிந்தராஜன் தன் ஊர் பெயரி சீர்காழி கோவிந்தராஜன் என்றானார், அப்பொழுது வயது அவருக்கு 7
அந்த 1940களில் அவர் இசைகற்க ஆர்வம் கொண்டிருந்தார் சென்னைக்கு வந்து முறையான இசைபயின்றார்
எல்லா திறமைசாலியினையும் ஒருவன் காலத்தால் கைதூக்கிவிட வருவான், தெய்வத்தின் திட்டம்
அப்படித்தான் விதிக்கபட்டு இயக்கும், கோவிந்தராஜனுக்கும் ஒருவர் வந்தார் அவர் பெயர் பி.எஸ் செட்டியார்
கோவிந்தராஜன் மிகபெரிய பாடகனாக வருவான் என அவர்தான் முதலில் கருதி உற்சாகபடுத்தினார், அவர்தான் சென்னை தமிழிசை கல்லூரியில் இவரை சேர்த்தும் விட்டார்.
14 வயதிலே அங்கு பாடல் பயில தொடங்கினார் கோவிந்தராஜன்
கோவிந்தராஜன் அங்குதான் பட்டை தீட்டபட்டு "இசைமாமணி" என்றும் "சங்கீத வித்வான்" என பட்டமும் பெற்றார், இந்த பெருமையினை அடையும் பொழுது அவருக்கு வயது 15
அந்த வயதில் அவரின் பாடலை ஒரு புல்லாங்குழல் வித்வான் கவனித்தார் அவர் பெயர திருப்பாம்புரம் சுவாமிநாதபிள்ளை
கோவிந்தராஜனின் பாடல் சுருதி சுத்தம், சாரீர வளம், பாவம், ஈடுபாடு, உற்சாகம் போன்ற இசையின் அனைத்து அம்சங்களும் நிறைந்து இருந்ததை அவர் உணர்ந்தார்.
இன்னும் பாடலைப் பாடும் போது வல்லினம், மெல்லினம் அறிந்து பாடுதல், பக்கவாத்தியங்களுக்கு மேல் அவரின் குரல் ரீங்காரம் செய்த முறைமை ஆகியவற்றில் மலைத்து போய் கோவிந்த ராஜனை தன் மகனாகவே தத்தெடுத்து கொண்டார்
கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார் கோவிந்த ராஜன்.
இவரின் தீரா புகழுக்கும் இதர பெருமைகளுக்கும் அழியா பக்திபாடல்கள் இவரை தேடிவந்ததற்கும் ஒரு பெரிய காரணமிருந்தது, அது இவர் காட்டிய தமிழ்மொழி பற்றுமிக்க உறுதி
பொருள் தெரியாத தெலுங்கு கீர்த்தனைகளை விட பொருளும் அழகும் மிக்க தமிழ் பாடல்களை பாடினால் மக்களுக்கும் புரியும் தனக்கும் ரசித்து உருகிபாடமுடியும் என்பதில் உறுதியாய் இருந்தார், அந்நாளில் பாகவதரும் பண்டிதர்களும் சாஸ்திரம் சம்பிரதாயம் என தெலுங்கு கீர்த்தனைகளில் மூழ்கி இருக்க அதை உடைத்து வெளிவந்தார் கோவிந்த ராஜன்
அவரின் மேடை சாம்ராஜ்யம் ஆரம்பமாயிற்று, அழகிய தமிழ்பக்தி பாடல்கள் ஆலயமணிபோல் அவரின் கணீரென்ற வெண்கல குரலில் ஒலிக்க ஆரம்பித்தது
அவர் பாட ஆரம்பித்தால் ஒலிபெருக்கியும் வேண்டாம், ஒரு கருவியும் வேண்டாம் அந்த வெண்கலகுரல் அப்படி கூட்டத்தை கட்டி போட்டது
மெல்ல சினிமாவிலும் பாட தொடங்கினார் கோவிந்தராஜன், தியாகராஜ பாகவதர் போன்றோரின் பல பாடல்களை பாடியபடி அறிமுகமானார்
அந்தகாலகட்டத்தில் கோவிந்த ராஜனின் குரலுக்கு பெரும் வரவேற்பு இருந்தது, பாரதியார் பாடல்கள் முதல் பக்திபாடல்கள் வரை அவர் தன் விஷேஷ வெண்கல குரலில் அசத்தினார்
எல்லா ஆலயம் கடைகள் வீடுகளிலும் அதிகாலையில் அவர்குரலாலே விடிந்தது
1949ல் அன்றைய கவர்ணர் ஜெனரல் ராஜாஜி இவரை விஷேஷமாக கவுரவித்து தமிழக மக்களை கட்டிபோடும் வெண்கலகுரலோன் என வாழ்த்தினார்
அந்த 16 வயதிலே ராஜாஜி கையால் விருதுவாங்கியபின் சீர்காழி கோவிந்தராஜனின் இசைபயணம் அசுரவேகத்தில் இருந்தது
காலத்தால் அழியா பாடல்களை பாடினார் கோவிந்த ராஜன், “தேவன் கோவில் மணியோசை”, “உள்ளத்தில் நல்ல உள்ளம்”, “திருப்பதி மலை வாழும் வெங்கடேசா” போன்றவை கிளாசிக் ரகம்
"விநாயகனே வினை தீர்ப்பவனே" என்ற அந்த பாடலுக்கு விநாயகரே ஓடிவருவார் அவ்வளவு அழகு
"“திருச்செந்தூரில் கடலோரத்தில்” என பாடிய அந்த பாடல் இன்றல்ல நேற்றல்ல எக்காலமும் முருகனுக்கு அவர் தன் குரலால் செய்த அணிகலன்
""ஆயிரம் கரங்கள் நீட்டி" என்பது எக்காலமும் சூரிய நமஸ்காரத்துக்கு பொருத்தமான குரலும் பாடலுமாகும்
கண்ணனின் கீதையினை "மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா" என அவர் பாடியது தமிழக பாடல்களின் மாபெரும் தத்துவபாடல்
பாரதியாரின் "வெள்ளி பனிமலையின் மேலுலவுவோம்" என்பதை சீர்காழியினை விட யார் அவ்வளவு தேசபற்றோடு பாடமுடியும்?
சிறந்த நடிகரான கோவிந்த ராஜன் பல படங்களில் நடித்திருந்தார். இராஜராஜ சோழன் படத்தில் நம்பியாண்டார் நம்பியாக வந்த அவரை மறக்க முடியாது.
அகத்திய மாமுனி வேடங்களில் கன கச்சிதமாக பொருந்தி "அகத்தியர்" எனும்படத்திலும் இன்னும் பல படங்களிலும் வந்து சென்றதெல்லாம் அவர் ஒருவருக்கே சாத்தியம்
கணீர் குரலும் குள்ள வடிவமும் முகமெல்லாம் ஒரு தெய்வீக கலையும் கொண்டு அப்படியே அகத்தியரை நம் கண்முன் நிறுத்தினார்
1945 முதல் 1975 வரை அவர் ஆற்றிய சேவை ஈடில்லாதது, அந்த வெண்கல குரல் 45 வயதில் ஒலிக்கும் பொழுது சென்னை பகலைகழகத்தில் கவுரவ பேராசிரியர் எனும் பதவியினை பெற்றும் கொடுத்தது
50ம் வயதில் பல்கலைகழமெல்லாம் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தன.
அவரின் அழியா பாடல்களெல்லாம் "“இசைமணியின் பக்தி மாமாலை” என இரண்டு பாகமாக வெளிவந்தன‌
முருகன் மீதும், திருப்பதி வெங்கடேசப் பெருமாள், அபிராமியின் மீது அந்தாதியும் பாடியுள்ளார, மிக உருக்கமான பாடல்கள் அவை.
அவர் தமிழ்பாடல்களுக்கும் தெய்வ பாடல்களுக்கும் கொடுத்த முக்கியத்துவம் காரணமாக நிகழ்வுகள் அரசு சார்பில் நடைபெறும் பொழுது நிகழ்ச்சிகளில் சீர்காழி தான் இறைவணக்கம் மற்றும் வாழ்த்துப் பாடல் பாடுவது வழக்கமாக இருந்தது.
ஆம் ஆலயத்திலும் அரசமேடைகளிலும் ஒருசேர ஒலித்த குரலுக்கு சொந்தக்காரர் அவர்.
எல்லா தமிழரையும் தமிழக ஆலயங்களையும் கட்டிபோட்ட கலைஞர்கள் யாரும் நெடுநாள் வாழ்ந்ததில்லை எனும் தமிழக சாபதுக்கு அவரும் தப்பவில்லை, அவர் மறையும் பொழுது வயது 55.
ஆனால் அந்த 55 வயதுக்குமேலும் அவர் பாட ஏதும் மீதமில்லை என்ற அளவில் பாடிவிட்டு சென்றதில் அவரின் சாதனை அடங்கி இருகின்றது.
தமிழகம் மறக்கவே முடியாத, ஆண்மை மிக்க அந்த வெண்கல குரலோனுக்கு, ஆலய மணியாக இன்றும் முழங்கும் அந்த ஆலய பாடகனுக்கு இன்று பிறந்த நாள்
ஆன்மைமிக்க குரல் அவருடையது என்பதை நம்முன் நிரூபிக்கவே இக்கால பாடகர்களெல்லாம் பாடிகொண்டிருக்கின்றார்கள்
திருசெந்தூர் கடலில் அலை வீசும் காலம் வரை அவன் புகழ் அவனியில் நிலைத்திருக்கும்

No comments:

Post a Comment

நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்!

 நாம் தவிர்க்க வேண்டிய 8 மன விஷங்கள்! நமது மன அமைதியையும் மகிழ்ச்சியையும் நாமே அறியாமல் அழிக்கும் 8 நச்சு எண்ணங்கள் என்னென்ன என்று தெரிந்துக...