ஆபிரகாம்லிங்கன் தன் மகனின் ஆசியருக்கு எழுதிய கடிதம்.
அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்க மாட்டார்கள் என அவனுக்குச் சொல்லித் தாருங்கள். ஆனால் பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக் கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு தெரிவியுங்கள்.
பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப் போவது கோழைத்தனம் என புரிய வையுங்கள்.
புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். அதேவேளை இயற்கையின் ஈடில்லா அதிசயத்தை ரசிக்கவும் கற்றுக்கொடுங்கள்.
சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்கக் கற்றுத் தாருங்கள்.
ஏமாற்றுவதை விடவும் தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும் கூட, சுய சிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க கற்றுக் கொடுங்கள்.
மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக் குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.
அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவி சாய்க்க வேண்டும் என அறிவுறுத்துங்கள்.எனினும் உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்கக் கற்றுக் கொடுங்கள்.
போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், வெற்றுப் புகழுரைகளைக் கண்டால் எச்சரிக்கையாக இருக்க பயிற்சி கொடுங்கள்.
அவனைக் கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களைச் சார்ந்திருக்கச் செய்ய வேண்டாம். சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மௌனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.
இது மிகப்பெரிய பட்டியல்தான். இதில் உங்களுக்குச் சாத்தியமானதை எல்லாம் கற்றுக் கொடுங்கள். அவன் மிக நல்லவன்.
என் அன்பு மகன்.
இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கன்.

No comments:
Post a Comment