Saturday, 24 January 2026

கேள்வி - ராம நாமத்தை உச்சரித்தால் பலன் கிடைக்குமா ?


 கேள்வி - ராம நாமத்தை உச்சரித்தால் பலன் கிடைக்குமா ?

இராம் மனோகர் - தியாகராஜர் கிட்டத்தட்ட நூறு கோடி முறை இராம நாமத்தை உச்சரித்தார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் வாழ்நாளில் அவர் வேறு எதுவும் பேசியிருக்கவே மாட்டாரோ என்று எண்ணி வியந்திருக்கிறேன். அவரது வாழ்க்கை வரலாறைப் படித்துப் பாருங்கள். இராம நாமத்திற்கு மகிமை உண்டா என்பது அப்போது புரியும். அல்லது ஒரு இலட்சம் முறை உரு ஏற்றிதான் பாருங்களேன் !!! யாரும் பணம் கேட்கப் போவதில்லை.
கேள்வி - யோக சாதனங்களை மேற்கொள்வது அல்லது சாஸ்திரங்களை கடைபிடிப்பது எது எளிய முறையாக இருக்கும் ?
இராம் மனோகர் - அது உங்கள் மனப்பாங்கைப் பொருத்துதான் அமைகிறது. உங்கள் மனதில் சத்துவ குணம் மேலோங்கியிருந்தால் உங்களுக்கு இரண்டுமே எளியதுதான். அல்லாத பட்சத்தில் முதலில் உங்கள் குணநலன்களை மாற்றியமைத்துக் கொண்டு, பிறகு ஏதேனும் ஒரு வழியைப் பின்பற்றலாம்.
கேள்வி - நான் யோக சாதனத்தை கடைபிடிக்கிறேன் எனினும் என் மனதில் காமம், கோபம், வெறுப்பு போன்ற தீய குணங்கள் குறைந்த மாதிரியே தெரியவில்லை. என் முயற்சியில்தான் தவறா அல்லது இப்படித்தான் காலதாமதமாகுமா ?
இராம் மனோகர் - இதற்கு காலக் கெடுவெல்லாம் சொல்ல முடியாது. நிலம் பண்படும் வரை உழைக்க வேண்டும். பிறகு விதை போட வேண்டும், நீர் பாய்ச்ச வேண்டும், களை பிடுங்க வேண்டும், பயிர்களை பாதுகாக்க வேண்டும், தக்க சமயத்தில் அறுவடை செய்ய வேண்டும். இதுவும் அது போன்ற ஒரு முயற்சிதான். ஆனால், நிலம் பண்படுவது என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயமாகும். நிலம் பக்குவமாக இருந்து விட்டால், பயிர் விரைவாக செழித்து வளரும் என்பதில் ஐயமில்லை. எனவே யோக சாதனங்களைக் கடைபிடிப்பதோடு கூட நம் குணநலன்களை செம்மைப்படுத்தவும் நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
கேள்வி - நான் சிவனை இஷ்ட தெய்வமாக வணங்குகிறேன். எந்த மந்திரத்தை ஜெபிக்கலாம் ?
இராம் மனோகர் - கங்கைக் கரையில் போய் நின்று கொண்டு எந்தக் குளத்தில் குளிக்கலாம் என்று கேட்பது போல இருக்கிறது. ஐந்தெழுத்து மந்திரத்தை விடச் சிறந்த மந்திரம் என்ன இருக்கிறது ?
கேள்வி - அப்படியானால் ஓம் நமோ நாறாயணாய என்கிற எட்டெழுத்து மந்திரம் சிறந்தது இல்லையா ?
இராம் மனோகர் - நீங்கள் சிவனை இஷ்ட தெய்வமாக வணங்குவதால் உங்களுக்கு ஐந்தெழுத்து மந்திரம் சிறந்தது என்று சொல்லப்பட்டது. அவரவர்களுக்கென்று மந்திரங்களும், தோத்திரங்களும், வழிபாட்டு முறைகளும் உள்ளன. அவரவர்களுக்கு அவரவர்களுடைய வழி முறைகளே உயர்ந்தது.
கேள்வி - துன்பங்களிலிருந்து விடுபடுவதெவ்வாறு ?
இராம் மனோகர் - காரணத்தை ஆராய்ந்து தெளிய வேண்டும். இறைவனையோ, சக மனிதர்களையோ காரணம் சொல்லும் மனோபாவத்தை ஒழிக்க வேண்டும். ஒரு காரியத்தைச் செய்யப் புகுவதற்கு முன் ஆராய்ந்து செயல்பட வேண்டும். தவறானவை என்று ஒதுக்கப்பட்ட செயல்களைச் செய்வதால்தான் மிகுதியான துன்பம் வருகின்றது.
கேள்வி - நல்லது செய்தாலும் துன்பம் வருகின்றதே ?
இராம் மனோகர் - முதலில் எது நல்லது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது சிறப்பு ? நல்லதேயானாலும் எதன் பொருட்டு, யாருக்கு செய்கிறோம், இதன் விளைவு என்னவாக இருக்கும் என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்துப் பிறகு செய்வதுதான் சரியான செயல் முறையாகும். துன்பமே நேர்ந்தாலும் பரவாயில்லை, நான் நன்மையை மட்டுமே செய்வேன் என்று செயல்படுவபவர்களும் உண்டு. அது தியாக மனப்பான்மையின் வெளிப்பாடு. பொதுவாகத் துன்பமே இல்லாத வாழ்க்கையென்பது இல்லை. துன்பம் மிகுதியாக நேராமல் தற்காத்துக் கொள்ளலாம் அவ்வளவுதான்.
கேள்வி - நடப்பது நடந்தே தீரும் என்கிறார்கள். பிறகு இலக்குகளை தீர்மானித்து செயல்படுவதால் என்ன பயனிருக்கிறது ?
இராம் மனோகர் - நடப்பது நடந்தே தீரும் என்கிற வாக்கியத்தை நாம் தவறாகப் புரிந்து கொள்கிறோம். நாம் எதை இச்சிக்கின்றோமோ, எதை தீர்மானிக்கின்றோமோ, எதை நோக்கி நகர்கின்றோமோ அது, அந்தக் காரியம் நம் முயற்சி மற்றும் திறமையை பொருத்து நடக்கும் என்பதைதான் நடப்பது நடந்தே தீரும் என்கிறார்கள். ஒரு இலக்கு தீர்மானிக்கப்பட்டு ,அம்பை எய்து விட்டால் அதைத் தடுக்க முடியாது. அம்பு இலக்கை தாக்கலாம், அல்லது தவறிப் போகலாம். அது நம் திறமையைப் பொருத்தது. ஆனால், அது நடந்தே தீரும்.
கேள்வி - யாரோ செய்த செயல்களுக்குக் கூட நாங்கள் துன்பமடைகின்றோமே இதை எப்படி எடுத்துக் கொள்வது ?
இராம் மனோகர் - சார்பு வாழ்க்கையின் மிகப் பெரிய சிக்கல் இது. நாம் சார்ந்திருக்கிற கூட்டத்தின் அல்லது தனிமனிதனின் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் நம்மையும் பாதிக்கவே செய்யும். தலைமுறை தாண்டி கூட பாதிப்புகள் தொடர்வதுமுண்டு. அதிலிருந்து மீள வேண்டுமென்றால், நம் மொத்த நடைமுறை வாழ்க்கை முறையையும், இடத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும். இது ஒரு முயற்சிதான். இதற்கும் கூட சற்று கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால், மாற்றம் ஏற்படும் என்பது உறுதி.
கேள்வி - வாய்ப்பை தவற விடாதே என்கிறார்கள். நமக்கான வாய்ப்பு இதுதான் என்று எப்படி தெரிந்து கொள்வது ?
இராம் மனோகர் - கொக்கு கதையில் சொல்வது போல பெரிய மீனுக்காகக் காத்திருக்கும் பொழுது, பெரிய மீனே வரா விட்டால் என்ன செய்வது ? கிடைக்கின்ற வாய்ப்புகள் ஒன்றையும் நழுவ விடாமல் செயல்படுத்தும் பொழுது, அதில் உங்களுக்கான வாய்ப்பு உங்களை உயர்த்தி விடுமேயல்லாது, இதுதான் நமக்கான வாய்ப்பு என்று முன்கூட்டியே பிரித்தறிவது கடினம். நாம் தவற விடும் வாய்ப்புகளில் நமக்கான வாய்ப்பும் இருக்க வாய்ப்பிருக்கிறதல்லவா !!? என்னைப் பொருத்த வரை #இந்த_வாழ்க்கையின்_ஒவ்வொரு_நொடியும்_நமக்கான _வாய்ப்புதான்.
கேள்வி - அத்தனைக்கும் ஆசைப்படலாமா ஐயா ?
இராம் மனோகர் - பழைய கேள்வி. பல ஆண்டுகளுக்கு முன் இதற்கு என்ன பதில் சொல்லியிருப்போம் என்று யோசித்துப் பார்க்கிறேன். ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. இங்கு நாம் வாழும் உலகாய வாழ்வில் நாம் கொள்ளும் விருப்பங்களே ஆசைகளாகும். அது அதிகமாகும் போது பேராசையாகும். ஆனால், ஒரு விஷயத்தை நாம் கவனித்தோமானால் எந்தவித விருப்பமுமில்லாமல், எந்த வித இச்சையும் இல்லாமல் இங்கே வாழ முடியாது. நமது அத்தியாவசியத் தேவை மீது கூட நாம் விருப்பப்படாமல் அவற்றை அடைய முடியாது. எனவேதான் ஒரு சிலர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆசைப்படு, பிறகு அடைந்தால் சலித்துப் போகும், அடையா விட்டாலோ புளித்துப் போகும் என்பார்கள். ஆனால், அது சரியான தீர்வாகாது.
இதனால் உடல், மனம் கெட்டுப் போவதுடன், ஆசைப்பட்டதையெல்லாம் அடைய வேண்டும் என்கிற வெறி உருவாகி நம் வாழ்வை சீரழித்து விடும். அடைந்தாலும் மேலும் மேலும் அடைய வேண்டும் என்கிற நிலை ஏற்படும், அடையா விட்டாலோ அதை அடைவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற சூழலுக்கு ஆளாகி விடக் கூடும். இடை விடாது பலவிதமான ஆசைகளின் வயப்பட்ட மனிதனுக்கு அமைதியே இருக்காது. அவன் மனதில் கவலை நிரந்தரமாகக் குடி கொண்டு விடும். ஆசை என்பது உடலுக்குள் இருக்கும் நெருப்பைப் போன்றது. அது நம் நல்லுணர்வுகளைப் பொசுக்கிவிடும். இதைச் சொன்னவர்கள் அற்ப விஷயங்களுக்கு ஆசைப்படாதே, யாவுமாக விளங்கும் பரம்பொருள் மீது ஆசைப்படு என்று சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
கேள்வி - ஒரு மனிதனுக்குத் தேவையான திறமை என்று எதைக் கூறுகிறீர்கள் ?
இராம் மனோகர் - பொதுவாக உடல் வலிமை பெற்றவர்களை திறமையானவர்கள் என்று நாம் நினைக்கிறோம். அது தவறு. திறமை என்பது உடல் வலிமையால் மட்டும் வந்து விடுவதல்ல. மனம் வலிமையாக, நுட்பமாக இருக்க வேண்டும். என்னைப் பொருத்த வரை ஒரு மனிதனிடத்தில் எத்தனை திறமையிருந்தாலும், குறிப்பை உணர்தல் என்கிற திறமையில்லையெனில் எல்லாம் வீண் என்றுதான் கருதுகின்றேன். எதிரே இருப்பவருடைய முகபாவம், கண்கள், உடலசைவு இவற்றை வைத்து அவருடைய மனோபாவத்தை அறிந்து கொள்வதுதான் குறிப்பறிதல்.
சமீபத்தில் ஒரு காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளின் பள்ளிக்குப் போயிருந்தேன். அவர்களது குறிப்பறிதல் திறனைக் கண்டு வியந்து போனேன். அங்கிருந்த ஆசிரியர்களிடத்தும், பிள்ளைகளிடத்தும் இந்தத் திறன் அவர்களுடைய இயல்பாகவே ஆகியிருந்ததைக் கண்ணுற்றேன்.
என்பார் வள்ளுவப் பொருந்தகை. எனவே குறிப்பறிதல் என்கிற திறமைதான் மனதனுக்கு மிகவும் தேவையான ஒன்று. இந்தத் திறமை மட்டும் இருந்து விட்டால், மனிதன் தன் வாழ்வில் அனைத்து வகையிலும் மேன்மையடைவது திண்ணம்.

No comments:

Post a Comment

*கல்யாணமாம் கல்யாணம்*

 *கல்யாணமாம் கல்யாணம்* முப்பது வருஷத்துக்கு முன்னால ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா... ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்ட...